Translate

6/04/2010

எண்பத்தேழு வயது தலைவர் வாழ்க !!

எண்பத்தேழு வயதை கழித்த தலைவரின் பிறந்தநாளில் சிறிய வாழ்த்துரை எழுத எண்ணியிருந்தேன், வலையுலக போரின் கடும் தாக்குதல்களில் ஒவ்வொரு பதிவரும் தங்களது எண்ணங்களை கருத்துகளை பதிவு செய்தபோது எனது பாதிப்பும் எனக்கு நினைவிற்கு வந்துவிட தலைவரை வாழ்த்தி எழுத இணையதளத்தை திறந்துவிட்டு சக பெண்பதிவரின் வேதனையில் பங்கெடுத்துக் கொள்ளாமல் விட்டுச்செல்வது நேர்மையாக தோன்றாததால் எனக்கேற்பட்ட சிறு காயத்தையும் நினைவு கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

சிலருக்கு பிடித்தது பலருக்கு பிடிக்காமல் போகலாம் பலருக்கு பிடித்தது சிலருக்கு பிடிக்காமல் போகலாம், அந்த சிலர் ஒரு குடும்பமே இந்தியாவை ஆள வேண்டுமா என்று போர் கொடி உயர்த்துகிறது ஒரு பக்கம், அதே போர் கொடியை தமிழகத்திலும் அக்னி நட்சத்திர சூட்டைவிட பன்மடங்கு சூட்டுடன் தமிழகத்தை ஒரு குடும்பமே பிடித்து கொண்டுவிட்டது என்று ஏக்கப் பெருமூச்சு விட்டு கொதிப்படைகிறது ஒரு கூட்டம். தற்போது திரு மு.. அழகிரியின் அரசியல் பிரவேசம் பலரின் வாயை மொத்தமாக மூட வைத்திருக்கின்றது.

பாரதியார் சொல்வது போல சில சமயங்களில் ரௌத்திரமும் அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது. நாம் நாயைக் கண்டு ஓடிக்கொண்டு இருந்தால் நாய் நம்மை துரத்திக் கொண்டே இருக்குமாம், ஓடுபவர் நின்று திரும்பினால் நாய் திருப்பிக்கொண்டு ஓடுமாம். அரசியலில் கூட திரு அழகிரியை, ஸ்டாலினைப் போன்றவர்கள் (சில) பல சமயங்களில் தேவைப்படுகின்றனர். தலைவரைப் போல சொற்களால் பதில் கொடுத்து அரசியல் நடத்தி வந்த காலம் மாறி கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்ற வகையில் எதிரிகளை சரிகட்ட 'அஞ்சா நெஞ்சன்' என்று தலைவரால் வர்ணிக்கப்படும் திரு அழகிரியின் அரசியல் பிரவேசம் தலைவரின் அரசியல் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை என்று அந்தகாலத்தில் சொல்லுவார்கள் அந்த பழமொழி இந்த காலத்திற்கு துளியும் பொருந்துவதில்லை, இது தலைவர் கருணாநிதியின் பிள்ளைகளுக்கு என்று மட்டும் இல்லாமல் எல்லா வீடுகளிலும் பிள்ளைகள் தாய் தகப்பனின் குணங்களை போல தற்போது இருப்பதில்லை, உலகில் தட்ப வெட்ப்பம் மாறிவிட்டது, சூரியனின் ஒளியில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது, மழை பெய்வதில் மாற்றம் ஏற்பட்டு வருகிறதைப் போல தாய் தகப்பன் பிள்ளைகளின் குணங்களிலும் கூட அசர வைக்கும் மாற்றங்களை காண முடிகிறது, இதுவும் இயற்கையின் அதிசயமே.

எண்பத்தேழு வயது தலைவரை வாழ்த்த எமக்கு வயதில்லை, கவிதை ஒன்று எழுத நினைத்தேன் பதிவுலக பிரச்சினைக்கு பதில் எழுதுவதில் கவனத்தையும் கிடைத்த சிறிது நேரத்தையும் கழித்து விட்டதால் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை எழுத இயலாமல் போனது. இனிவரும் காலங்களில் தலைவர் முதலமைச்சராக பதவியில் இல்லாமல் போனாலும் சிறந்த அரசியல் ஆலோசகராக இருந்து தமிழகத்தின் நலத் திட்டங்கள் அனைத்தையும் செயலாக்கத்தில் துணைபுரிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். உடல், மன எல்லா நலமும் பெற்று பல ஆண்டுகள் வாழ மனமுவந்து வாழ்த்துகிறேன்.