Translate

6/03/2010

முதல் ஓட்டு

முதல் முதலாக ஓட்டு போட போகிறோம் என்பதில் அமுதாவிற்கு அன்று அளவில்லா பெருமிதம், அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் பலரும் கட்சிகளைப்பற்றி மாற்றி மாற்றி வர்ணித்துக் கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது, அமுதாவுடன் பணியாற்றும் பெண் ஊழியர் சுகன்யா, அமுதாவைவிட பனிரெண்டு வயது மூத்தவர் அவர் வீட்டில் மாமியார் மாமனார் என்று எல்லோருமே பக்த்தர்கள் அதனால் அப்பகுதியில் வேட்பாளராக நிற்கும் இந்துமதத்தை ஆதரிக்கும் ஆதரவாளருக்குத்தான் ஓட்டு போடுவார்களாம், அவரது கணவரையும் மருமகளையும் கூட அவருக்கே ஓட்டுப்போடச் சொல்லி வற்புறுத்துவது வழக்கமாம். ஆனால் அந்த சுகன்யாவும் அவரது கணவரும் இரட்டை இலைக்கு ஓட்டுபோடும் வழக்கமாம், அதற்க்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் கூட ரசிக்கும்படியாக இருந்தது,

அவர்களுக்குத் திருமணமாகி முதன்முதலில் திரைப்படம் பார்க்க சென்றபோது கமலின் நாயகன் வெளியாகி இருந்ததாம் அதை பார்ப்பதற்காக இருவரும் கிளம்பிகொண்டிருந்த சமயம் கணவனின் அக்காள் தனது தம்பியிடம் சினிமாவுக்கு போறியா என்று கேட்டாளாம், ஆமாம் என்று சொன்ன தம்பியை எந்த திரைப்படம் பார்க்கப் போகிறாய் என்று கேட்டார்களாம், வீட்டருகிலிருந்த திரையரங்கில் புதிதாக வந்திருக்கும் நாயகன் திரைப்படம் பார்க்கப்போகிறோம் என்றாராம் சுகன்யாவின் கணவர். அதற்க்கு அவரது அக்காளும் அப்போது அங்கு வந்த கணவரின் தாயாரும் ஒன்றாக சேர்ந்துகொண்டு திருமணமாகி முதன் முதலில் பார்க்கப்போகிற திரைப்படம் அந்த திரைப்படத்தில் கமலின் மனைவி இறந்துவிடுவார் அதுமட்டுமில்லாமல் கமல் கடவுள் நம்பிக்கையற்றவ
ர் அதனால் அந்த திரைப்படத்தை போய் பார்க்கவேண்டாம் மற்றொரு திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பழையத் திரைப்படமாக இருந்தாலும் பரவாயில்லை முதன் முதலில் அதைப் பாரத்துவிட்டு வேறு ஒருநாள் நாயகன் திரைப்படத்தை பாருங்கள் என்றார்கள் என்று அந்தப் பெண் சுவாரசியமான தனது அனுபவங்களைச் சொல்லி, எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தில் தான் எங்களுக்கு திருமணமும் ஆனது என்பதால் எம்.ஜி.ஆருக்கு நாங்கள் ஓட்டுப் போடுகிறோம் என்று வினோதமான ஓட்டுபோடும் காரணத்தை அமுதாவிடம் கூறினாள் சுகன்யா.

அந்தப் பெண் சொன்ன
வினோதமான காரணங்களை கேட்டுகொண்டே அன்றைய அலுவலக வேலைகளை முடித்துவிட்டு அடுத்தநாள் ஓட்டு பதிவு செய்வதற்காக கிளம்பிக் கொண்டிருந்த அமுதாவிடம் அவளது தகப்பனார், 'முதல்முதலாக ஓட்டுப்போடப் போற காங்கிரஸ் கட்ச்சிக்கு போடு அவங்கதான் பழமையான கட்சி, நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்க அரும்பாடு பட்டவங்க உருவாக்கினகட்சி' என்றார். அமுதாவிற்கு ஆச்சரியம் தனது தகப்பனார் எதிலும் தன் விருப்பத்தையே மதிப்பவர் ஓட்டு போடுவதில் மட்டும் எதற்கு இப்படி குறுக்கிடுகிறார் என்று யோசித்தாள்.

அமுதா கிளம்புவதற்குள் அவளது அக்காளும் அம்மாவும் கிளம்பிவிட்டனர், வீட்டைவிட்டு வெளியேறி ஓட்டுச் சாவடியை நோக்கி மூவரும் நடந்து கொண்டிருந்தனர், வழியில் அமுதாவின் அம்மா அமுதாவிடம் 'முதன் முதலில் ஓட்டுப் போட போறே ரெட்டையிலை சின்னத்துல போடு, பாவம் அந்த அம்மா கணவனும் இல்லாம எம்.ஜி.ஆறும் இல்லாம அவதி பட்டுகிட்டு இருக்காங்க நாம பொம்பளைங்க தான் அவங்களுக்கு ஆதரவு குடுக்கணும் மறந்துடாத' என்று தாழ்ந்த குரலில் தன் இருமகள்களிடமும் சொன்னார்.

ஓட்டுச்சாவடியை அடைந்து பெண்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்த போது அமுதாவின் அக்காள் அமுதாவின் காதில் 'விஜயகாந்த் என்ன மாதிரி கதைகள தேர்ந்தெடுத்து நடிக்கிறாரு பார்த்திருக்கோமில்ல, அவர் கையில ஆட்சி கெடைச்சாதான் நமக்கெல்லாம் நல்லது நடக்கும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வயசாகிப் போச்சு அவங்களுக்கு விஜயகாந்த பத்தி ஒண்ணும் தெரியாம யார் யாருக்கோ ஓட்டு போட சொல்றாங்க நம்மல்லாம் இந்த காலத்துல இருக்கோம் நமக்குத்தான் அவங்கள விட புதுசா விஷயங்க நிறைய தெரிஞ்சிருக்கு, நியாபகம் வெச்சுக்கோ' என்றாள் அமுதாவின் அக்காள்.

பெண்கள் வரிசை வேகமாக நகர்ந்து கொண்டே இருந்தது அமுதாவின் கையிலிருந்த கைபேசியில் அவளுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த நண்பன் குறுஞ்செய்தியில் 'தி.மு.காவுக்கு ஓட்டு போடு அவங்க ஆட்ச்சியில இருந்தாதான் தமிழ் வாழும் நலத்திட்டம் அமலுக்கு வரும், நம்மைப்போல பின்தங்கி இருக்கிறவங்களுக்கு முகவரி கிடைக்கும்' என்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான். மர நிழலில் வரிசையில் நின்றிருந்தாலும் காலை பத்துமணி வெயல் சூட்டில் தோல் பியிந்துவிடுவது போல் இருந்தது அமுதாவிற்கு, ஒரு வழியாக மூவரும் ஊடுச்சாவடியினுள்ளே சென்று தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர்.

முதன்முதலாக அமுதா யாருக்கு ஓட்டுப் போட்டாள், மிக நீண்ட பட்டியலில் எத்தனை சின்னங்கள், வெயலில் நின்றுவிட்டு சாவடிக்குள் சென்று காகிதத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த சின்னங்களை பார்க்கும்போது ஒன்றுமே தெரியாதது போன்று ஒருகணம் கண்கள் இருட்டி விட்டது, இத்தனை வெயல் அடித்தாலும் மர நிழலிலாவது நின்று காத்திருக்க முடிகிறது, குடிநீர் இல்லாவிட்டாலும் கூட இரவில் சாலையோரம் பிச்சைகாரர்களும் வழிபோக்கர்களும் உறங்க முடிகிறது, நடுவானில் ஏறெடுத்து பார்க்க இயலாத அளவிற்கு ஒளிக்கதிர்களை பரப்பிக்கொண்டு சுட்டெரிக்கும் சூரியன், காலையில் உதிக்கும் போது விடியலை உணரச் செய்யும் உதய சூரியன், எல்லாவற்றிற்கும் காரணமானவன் சூரியன், சூரியனைப்போன்ற பிரகாசம் தம் வாழ்வில் பெறுவதற்கு நல்ல சகுனம் உதிக்கின்ற சூரியனாகவே இருக்கட்டுமே என்று எண்ணி உதய சூரியனின் மீது தனது முதல் ஓட்டை பதிவு செய்துவிட்டு ஓட்டுச்சாவடியை விட்டு வெளியே வந்தாள் அமுதா.