Translate

6/30/2010

ரகசியம்

புதிய தனி வீடு என்பது சுகந்திக்கு கனவாகவே இருந்து வந்தது, முப்பது வருட தாம்பத்யத்திற்க்குப் பின் கனவு இல்லம் உண்மையாகியத்தில் அவளுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. ஆனால் அந்த மகிழ்ச்சியை குலைத்து விடுவது போன்ற செயல் ஒன்று நடந்து முடிந்தது, வீட்டை பூட்டிவிட்டு இரண்டு மணிநேரம் கழித்து திரும்பி வந்து பூட்டைத் திறக்க இருந்த போது கதவிலிருந்த பூட்டைக் காணவில்லை தாழ்ப்பாள் உருகுலைந்து காணப்பட்டது, ஏதோ விபரீதம் நடந்திருப்பதை அறிந்து வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையிலிருந்த பீரோ திறந்து கிடக்க அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிகள் சிதறிக்கிடந்தது.

காவல்துறையில் உயர்ந்த பதவியிலிருக்கும் அவளது கணவனுக்கு கைபேசியில் அழைத்து நடந்தவற்றை சொன்னபோது, சுகந்தியின் குரலில் நடுக்கம், படபடப்பு. அவள் கணவன், பீரோவில் விலையுயர்ந்த பொருள், பணமும் ஒன்றும் வீட்டில் வைப்பதில்லையே பிறகு ஏன் இத்தனை பதட்டப்படுகிறாய் முதலில் அசுவாசப்படுத்திக்கொள் என்றார். இல்லை உடனே இதை பதிவு செய்து கைரேகை எடுக்கவும் மோப்ப நாய் அனுப்பவும் ஏற்பாடு செய்யுங்கள் என்றாள் சுகந்தி. பீரோவில் என்ன பொருள் காணாமல் போனது என்று கேட்டால் என்ன சொல்ல முடியும், முதலில் நீ உன்னை அசுவாசப்படுத்திக் கொள் என்றார்.

என்னை என்னால் அசுவாசப்படுத்திக் கொள்வதற்கு முடியவில்லை உடனே ஆட்களை அனுப்புங்கள், என் தலையே வெடித்துச் சிதறிவிடும் போல இருக்கிறது என்றாள் சுகந்தி பிடிவாதமாக. ஆட்களை அனுப்புவது என்பதைவிட அவர்களிடம் என்னவென்று புகார் கொடுக்கப் போகிறோம் என்பதையும் நாம் தயாராக வைத்திருக்கவேண்டும் அல்லவா என்றார், என்னோட செயின் அழகிய டாலருடன் வைத்திருந்தது காணவில்லை, அதனுடன் அந்த சிறிய ஆர் என்கிற ஆங்கில எழுத்து போட்டிருந்த மோதிரமும் காணவில்லை. இதற்க்கு போலீசை அங்கே அனுப்பினால் என் மானம் தான் போகும் பேசாமல் இரு, ஒரு புகார் மனு எழுதி கொடுத்து வைக்கிறேன், வேறு இடங்களில் திருடு போன நகைகளை கைப்பற்றும் போது இந்த இரண்டும் கிடைத்தால் அப்போது நமக்குத் திரும்ப கிடைக்க அங்குள்ள காவல்துறையின் அதிகாரியிடம் நான் சொல்லிவைக்கிறேன், முதலில் உன்னை அசுவாசப்படுத்திக்கொள் என்றார் அவள் கணவர்.

நகைத் திருடர்கள் பிடிபடும்போது கிடைக்கும் நகைகளில் அந்த செயினும் மோதிரமும் கிடைக்கவில்லை, வருடங்கள் கடந்தது, சுகந்தி எப்போதும் அவள் கணவனை நச்சரித்துக் கொண்டிருந்தாள், வீட்டிற்கு வந்து செல்கின்ற காவல்துறையைச் சார்ந்த நண்பர்கள் ஒருவர் விடாமல் காணாமல் போன செயினையும் மோதிரத்தையும் பற்றி சொல்லிக்கொண்டிருப்பது வழக்கமாகி போனது, ஒருமுறை விஷச் சாராயம் காய்ச்சி விற்ற கும்பலை பிடித்துவந்து காவலில் வைத்திருந்தனர், காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவன் கழுத்தில் அதே சங்கிலி இருப்பதை கவனித்ததாக ஒரு போலீஸ்காரர் சுகந்தியின் கணவருக்கு தகவல் தெரிவிக்க அங்குவந்த சுகந்தியின் கணவருக்கு அந்த செயின் காண்பிக்கப்பட்டது, அதே செயின்,

செயினை அணிந்திருந்தவனை அழைத்து வரச் சொல்லி அந்த செயின் எங்கே எப்படிக் கிடைத்தது என்று விசாரணை செய்தபோது, கள்ளச் சாராயம் விற்றபோது காசு கொடுக்காமல் குடித்துவிட்டு தப்பிக்க முயன்ற ஒருவனிடமிருந்து கிடைத்ததாக சொன்னான், அவனிடமிருந்து செயினை வாங்கிச் சென்று மனைவி சுகந்தியிடம் கொடுத்தபோது அவளுக்கு சந்தோசம் பெருகவில்லை, ஆர் என்ற ஆங்கில எழுத்துப் பதித்த மோதிரம் இன்னும் கிடைக்கவில்லையே என்ற குறைதான். மோதிரத்தை எங்கே போய் தேட என்று அலுத்துக் கொண்டார் அவள் கணவர்.

ஆனால் கோவில் உண்டியலை உடைத்து திருடிய திருடனை பிடித்த போது அந்த உண்டியலில் இருந்த ஆபரணங்களும் கைப்பற்றப்பட்டது அத்துடன் அந்த ஆங்கில ஆர் எழுத்து பொறித்திருந்த மோதிரமும் கிடைத்துவிட்டது, மோதிரத்தை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்துச் சென்றார் காவலாளர். செயினை அடையாளம் காட்டிய போலீஸ்காரர் மோதிரம் கண்டு பிடித்த போலீஸ்காரரிடம் அந்த செயினு தங்கமில்லையாம் அவனுக்கு தெரியாமல் அதை வைக்க மார்வாடி கடைக்கு கொண்டு போனபோதுதான் அந்த செயினு ஐம்பொன்னு செய்ததுன்னு தெரிஞ்சுச்சாம், அந்த கள்ளச் சாராயம் வித்தவன் சொன்னான் என்றார், மோதிரத்தை கண்டு பிடித்துக் கொடுத்த போலீஸ்காரர் பதிலுக்கு கோவில் உண்டியலத் திருடியவனும் அதத்தான் சொன்னான் என்றார்.
மோதிரமும் செயினும் கிடைத்த மகிழ்ச்சி சுகந்திக்கு, பள்ளியிறுதி ஆண்டில் பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்த போது பள்ளியில் பணி புரிந்த அவளது கணக்கு வாத்தியார் அவளுக்கு கொடுத்த நினைவுப் பரிசு ஆர் மோதிரம், இளங்கலை படித்தப் பின் காவல்துறையில் பணி செய்ய வேண்டுமென்று விரும்பி பரீட்சை எழுதி வெற்றிபெற்று அதிகாரியாக பணி நியமனம் கிடைத்ததற்கு அதே வாத்தியார் கொடுத்த இரண்டாவது பரிசு செயின், நமது திருமண நிச்சயதார்த்ததிற்க்குதான் உனக்கு தங்கத்தில் போடுவேன் என்று சுகந்தியிடம் சொன்ன அந்த ராசா என்கிற ராஜராஜன் வாத்தியார் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது விபத்தில் காலமான விவரங்கள் சுகந்தியைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

6/29/2010

மன வலி என்பது தொடரும் கதை

வயது கூடும் போது அதனுடன் தனிமையும் வெறுமையும் இணைந்து கொண்டால் பழைய சம்பவங்களை அசைப் போட வைக்கும் என்பது புதிய அனுபவம். அப்போது பள்ளியின் இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்த சமயம், புதியதாக தைத்த பாவாடைச் சட்டையை அணிந்து கொண்டு கோவிலுக்குச் சென்றேன், அந்த வயதில் புதிய உடைகள் அணிவது என்றாலே மனதிற்கு மகிழ்ச்சிதான், கோவிலுக்குச் செல்லும் வழியும் பள்ளிக்குச் செல்லும் வழியும் ஒன்றுதான், பலத் தெருக்களைத் கடந்து செல்லும் போது வழியில் இருக்கும் எனது வகுப்பில் படிக்கும் மாணவிகளின் வீடுகளை கடந்து செல்ல வேண்டும், அவர்கள் வீட்டைக் கடக்கும் போது அவர்கள் யாருமே வீட்டின் வெளியே இல்லை.

ஆனால் ஒரு வாரம் கடந்த பின் என் வகுப்புத் தோழி என்னிடம் சொன்னாள் நம் வகுப்பில் படிக்கும் விஜயா கடந்த வாரம் நீ புதிய உடை அணிந்து செல்வதை கவனித்தாளாம், நீ அணிந்து சென்ற அதே நிறம் அதே போன்ற உடை அவளிடமும் இருக்கிறதாம், வறுமையில் இருக்கும் இவளுக்கு இந்த உடை எப்படிக் கிடைத்திருக்கும், யாரேனும் துவைத்து உலர்த்துவதற்க்காக வெளியே கொடியில் போட்டிருப்பார்கள் அதை இவள் அம்மா அல்லது இவள் திருடி இருக்கக் கூடும் என்று சொன்னதாக என்னிடம் கூறினாள். அதைக் கேட்ட போது என் மனம் வலித்தது. ஆனால் ஏன் என்னைப் பற்றி இழிவாக அப்படிப் பேசினாய் என்று நான் அவளிடமும் என் பெற்றோரிடமும் சொல்லவில்லை.

ஒரு முறை நான் மதிய உணவு எடுத்து போகாமலேயே பள்ளிக்கு சென்று விட்டேன், என் அப்பா எனது மதிய உணவை எடுத்து வந்து என்னிடம் கொடுப்பதற்குள் எல்லோரும் மதிய உணவு சாப்பிட்டு முடித்துவிட்டனர், இன்னும் நிறைய சமயம் இருக்கிறது உணவை சாப்பிடு என்று என் அப்பா என்னை வற்ப்புருத்தினார், சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த என் வகுப்பில் படிக்கும் மாணவிகளில் ஒரு குழுவினரில் ஒரு மாணவி மட்டும் கிண்டலடித்து சத்தமிட்டு கைதட்டி என்னையும் என் அப்பாவையும் பார்த்து கேலி செய்தாள், இப்போது சாப்பிட ஒன்றும் வேண்டாம் மாலை வீட்டிற்கு வந்த பின் சாப்பிடுகிறேன் என்று சொல்லி என் அப்பாவையும் உணவையும் திருப்பி அனுப்பி விட்டேன். என் பசியை விட அத்தனை தூரம் வெயலில் காலில் செருப்பில்லாமல் தானும் சாப்பிடாமல் என் பசியை தீர்க்க என் அப்பா எடுத்து வந்த உணவை சாப்பிடாமல் திருப்பி அனுப்பிவிட நேர்ந்ததே என்று எண்ணி என் மனம் மிகவும் வலித்தது.

பள்ளியில் பாட புத்தகங்களுக்கான பணம் கட்ட பணமில்லாமல் என் அப்பா எனது தலைமை ஆசிரியரை அணுகிய போது என் தலைமையாசிரியர் விளையாட்டு மைதானத்திலிருந்த இரும்பு குழாய்களுக்கு வர்ணம் பூசச் சொல்லி அதற்க்கு கூலியை நிர்ணயித்து அந்த கூலியை புத்தக கட்டணமாக செலுத்தியப் போது என் மனம் வலித்தது. இருக்கும் சிறிதளவு உணவைக் கூட என்னை சாப்பிடச் சொல்லிவிட்டு பட்டினியாய் உறங்கிய என் தாய் எதற்காவது கண்ணீர் விட நேரும் போது என் மனம் வலித்தது. செல்வச் செழிப்பில் பிறந்து வளர்ந்த என் பெற்றோர் எனக்காக என் சுகத்தை மட்டுமே தங்கள் சுகமாக வறுமையிலும் என்னை மகாராணியாக வைத்திருந்ததை நினைக்கையில் என் மனம் வலித்தது.

என் வகுப்பில் இரண்டு ராதாக்கள் அதில் ஒருத்தி என் வீட்டருகில் இருந்தாள் அவள் என் தோழி. மற்றொரு ராதா என் வகுப்பில் உடன் படித்தாள் நாங்கள் ஒருமுறை பேசியது கூட இல்லை, இருவரும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள், எனக்கு அறிமுகமே இல்லாத ராதா கூலி வேலைபார்க்கும் படிப்பறிவு இல்லாத யாரோ ஒரு நபருடன் வீட்டை விட்டு ஓடிப்போன போது அவளது உறவினர்கள் என் வீட்டைத் தேடிக்கொண்டு வந்து என்னை அடிக்காதக் குறையாக (அப்போது என் பெற்றோர் வீட்டில் இல்லை) அவள் யாருடன் எங்கே போனாள் என்று விசாரித்த போது என் மனம் வலித்தது.

என் வீட்டருகிலிருந்த ஒரு பணக்கார பெண்மணி அடிக்கடி என்னை உதவிக்கு கூப்பிடுவார், அப்படி ஒருநாள் அவர் என்னை கூப்பிட்ட போது அவர் வீட்டிற்கு வந்திருந்த அவரது திருமணமாகிய மகளின் காதணி காணாமல் போனது நான் தான் எடுத்திருக்க முடியும் என்று சொல்லி என்னிடம் விசாரித்ததும் வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்த போது என் மனம் வலித்தது, இரண்டு நாட்களில் அந்த காதணி அவரது வீட்டில் வேலை பார்த்தப் பெண் எடுத்திருந்தது தெரிய வந்ததும் அவள் அதை திருப்பிக் கொடுத்த போதும் என் மனம் மேலும் வலித்தது.

எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல் தான் மாறாதா.

மன வலி தீராதது...... ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு விதமான மன வலிகள், மன வலி என்பது மனிதனின் உயிர் உள்ளளவும் நிழலைப் போலத் தொடரும், எந்த ரூபத்திலாவது மனிதனை துரத்திக் கொண்டே தான் இருக்கும் மன வலி என்பது மனிதனால் மனிதனுக்கு ஏற்ப்படும் ஓயாத ஒழியாத தொடரும் கதை........

6/28/2010

ஈ.சி. ஆர். பக்கம் போனால்

சில வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது, சில சம்பவங்களை நாம் மறக்க நினைத்தாலும் அது நம்மை மறக்காது போலும் அந்த வகையில் இந்த சம்பவத்தைப் பற்றி இப்போது நினைத்தாலும் எனக்குள் ஏற்ப்படுகின்ற உணர்விற்கு என்ன பெயரிடுவதென்பது இன்றுவரை விளங்காத ஒன்று. நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது நானும் எனது கல்லூரி தோழிகள் சிலரும் சில வகுப்புகளை புறக்கணிப்பதாக எண்ணிக்கொண்டு அருகிலிருந்த பாம்புப்பண்ணை, காந்தி பூங்கா, குழந்தைகள் பூங்கா என்று போய் உட்கார்ந்து அரட்டை அடிப்போம் அல்லது ஏதேனும் எழுத படிக்க தேவை இருந்தால் அதில் மும்முரமாக செயல்படுவோம், தப்பித்தவறிக் கூட அந்த பகுதியைத் தவிர வேறு பகுதிகளுக்கு போகமாட்டோம். எங்கள் வீட்டருகிலிருந்த ஒரு பெண்ணை அங்கிருந்த இளம் வயதுக்காரர்கள் 'காந்தி மண்டபம்' என்று கேலி செய்வதை நான் பல முறை பார்த்ததுண்டு, அதன் காரணம் அப்போது எனக்குத் தெரியாமலிருந்தது. என் அப்பாவிற்கு நாங்கள் அந்த பகுதிக்குச் செல்வதை சொல்லியிருந்தேன், அதனால் என் அப்பா தனியாக எலியட்ஸ் பீச் பக்கம் போகாதீர்கள், காந்தி மண்டபத்திலிருந்து இருட்டுவதற்கு முன்பே கிளம்பி விடுங்கள் என்று சொன்னார்,

அதற்க்குக் காரணம் காதல் ஜோடிகள் தனியே அந்த பகுதிகளுக்குச் செல்வதால் சமூக விரோதிகள் அவர்களை பின் தொடர்ந்து போய் பையனை அடித்துப் போட்டுவிட்டு பெண்ணை கற்பழித்து கொன்று விடுவதாகச் சொன்னார். இதனால் அப்பகுதி பாதுகாப்பற்றதாக கருதப்படுவதாக எச்சரித்திருந்தார். நான் கல்லூரியில் இளம்கலை முடித்தப் பிறகும் கூட சென்னையின் வேறு பகுதிகளுக்கு போனது கிடையாது, செக்கு மாடுகளைப்போல வீட்டை விட்டால் அலுவலகம் அலுவலகத்தை விட்டால் வீடு என்றே இளமை முழுவதும் கழிந்தது, தென்மாவட்டங்களில் வசிப்பவர்கள் சென்னையில் வசிப்பவர்கள் கட்டுப்பாடு அற்றவர்கள் என்று சொல்ல கேட்டதுண்டு ஆனால் என்னைப் போன்ற செக்குமாடுகள் தான் எனது தோழிகளும், சென்னையில் வசிப்பவர்கள் அல்லது சென்னைவாசிகள் என்றாலே நல்லொழுக்கம் அற்றவர்கள் என்று தென் மாவட்டங்களில் வசிப்பவர்கள் சொல்வதும் நினைப்பதும் இன்றுவரையில் தொடரும் இழிச்சொல்லாகவே இருப்பதைக் குறித்து என்னைப்போன்ற பலரும் கொதிப்படைவது இயற்கையே.


திருமணத்திற்குப் பின்னர் இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் சென்னை தான் எங்கள் இருப்பிடம். எனது நண்பர் ஒருவருக்கு முட்டுக்காட்டில் இருந்த நிறுவனமொன்றில் வேலை என்பதால் அவரது வீடும் அதையடுத்திருந்தது, அவருக்குத் திருமணமாகி முதல் குழந்தை பிரசவத்திற்காக அவரது மனைவியின் தாய் வீடு ஒரு குக்கிராமத்தில் இருப்பதால் அங்கு அனுப்பி பிரசவம் பார்க்க பிடிக்காமல் மனைவியின் தாயாரை உதவிக்கு அவரது வீட்டிற்கு அழைத்து வந்து அருகிலிருந்த மருத்துவமனையில் முதல் குழந்தை பிறந்தது, குழந்தை பிறந்த அடுத்தநாள் தொலைபேசியில் சந்தோஷ செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவரது குழந்தையையும் மனைவியையும் சென்று பார்த்துவிட்டு வருவதற்காக நான் வருவேன் என்று நண்பரிடம் நான் சொன்னவுடன், வேண்டாம் நான் உங்கள் வீட்டு பக்கம் வரும் சமயத்தில் ஒருநாள் குழந்தை மனைவி இருவரையும் அழைத்து வருகிறேன் என்றார்.

அவர் அப்படி சொன்னதற்கு நிறைய காரணங்கள் இருந்தது, முதலாவது காரணம் எனக்கு மருத்துவமனை விலாசத்தை கண்டு பிடித்து போவதற்குத் தெரியாது என்பதும், ஏற்க்கனவே ஒருமுறை அவரது புதிய மனைவியை பார்க்கச் சென்றிருந்த போது ஆட்டோவில் சென்று ஆட்டோக்காரன் அதிக பணம் என்னிடம் வசூலித்தது போன்ற காரணங்கள் இருந்தது. வீட்டின் வாசலில் நிற்கும் ஆட்டோவில் ஏறிக்கொண்டு போகலாம் என்று வீட்டை விட்டு வெளியே சென்று பார்த்தபோது அங்கே அந்த சமயத்தில் ஒரு ஆட்டோவும் இல்லாமல் இருந்ததால், நடந்து சென்று வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் வீதியில் நின்றிருந்த ஆட்டோக்காரரிடம் கிழக்கு கடற்க்கரை சாலைக்கு போக வேண்டும் என்று கூறியவுடன், ஏகப்பட்ட பணம் கேட்டார், அவர் கேட்ட பணத்திற்கு இமையமலைக்குச் சென்றுத் திரும்பிவிடலாம், அத்தோடு அவரது அடுத்தக் கேள்வி கிழக்குக் கடற்கரைச் சாலையில் எங்கு போகவேண்டும் என்பது.

எனக்கு மருத்துவமனையின் பெயர் உடனே நினைவிற்கு வராததால் அங்கே சென்றவுடன் சொல்கிறேன் என்று சொன்னபோது அவருக்கு என் மீது 'வேறுவிதமான' சந்தேகம் ஏற்ப்பட்டுவிட்டது என்பது அவர் பார்வையிலும் பேச்சிலும் தெரிந்தது. அதன் விவரம் எனக்கு அப்போது புரியவில்லை, கிழக்கு கடற்கரை சாலையை அடைந்த பின் எங்கே போக வேண்டும் என்று கேட்டார், நான் அங்கேயே இறங்கிக் கொள்வதாக சொல்லிவிட்டு பணத்தை கொடுத்த போது அந்த மனிதரின் பார்வையை என்னால் தாங்கவே முடியவில்லை. அப்போதெல்லாம் கைபேசிகள் கிடையாது, அருகிலிருந்த ஒரு கடைக்குச் சென்று தொலைபேசியில் என் நண்பருடன் தொடர்பு கொண்டு நான் அங்கு வந்திருப்பதை தெரிவித்து அந்த மருத்துவமனையின் பெயரை கேட்டபோது என் நண்பர் பதறிப்போனார்.

எதற்க்காக ஆட்டோவில் இந்த இடத்திற்க்கெல்லாம் தனியே வந்தீர்கள் என்னிடம் சொல்லியிருந்தால் நான் அங்கு வந்து அழைத்துச் செல்வேனே என்றார். என்னை அங்கேயே நிற்கும்படி கூறிவிட்டு சிறிது நேரத்தில் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த நண்பர் என்னை அவருடன் பின்னால் உட்கார்ந்து கொள்ளும்படி சொன்னார், நான் ஏற்றுக்கொள்ளவில்லை, இருசக்கர வாகனத்தை கஷ்டப்பட்டு தள்ளிக்கொண்டு என்னுடன் நடந்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் நண்பரிடம் ஆட்டோக்காரனின் பார்வையைப் பற்றியும் அவன் கேட்டத் தொகையை பற்றியும் சொன்னேன், அப்போது என் நண்பர் சொன்னத் தகவல் என்னை நிலை குலையச் செய்தது. சற்று தூரத்தில் தெரிந்த கருங்கல் மதிர்ச் சுவற்றைக் காண்பித்து அங்கே அது போன்ற பீச் ரெசார்ட் நிறைய இருப்பதாகவும் அங்கு வரும் பெண்களும் ஆண்களும் திருட்டுத்தனமாக உடலுறவுக் கொள்ள வருகின்றனர் என்றும் சொன்னார், அத்துடன் அந்தப் பகுதியில் கொள்ளைக் கொலைப் போன்ற சமூக விரோதச் செயல்கள் நடந்து வருவதாகவும் சொன்னார்.

சென்னையில் வசிப்பவர்களுக்கே சென்னையின் எந்த பகுதி எதற்குப் பெயர் போனது என்கின்ற இது போன்ற செய்திகள் தெரியாமலேயே இருந்துவிடுவதும் உண்டு என்பதற்கு இச்சம்பவமே சாட்சி, இதனால் அந்த பகுதிக்குத் தனியே செல்லும் பெண்களை தவறாக சந்தேகப்படும் நிலை இன்றுவரையில் நடைமுறையில் இருந்து வருகின்றது. பனை மரத்தடியிலிருந்து பாலைக் குடித்தாலும் கள் குடித்ததாக சொல்வார்களே அதைப் போன்றது. இன்றுவரையில் ஆட்டோக்காரர்களின் பார்வை என் மீது தவறாகத்தான் பதிந்திருக்கின்றதோ என்று கூட நான் நினைப்பதுண்டு. அதற்காக நான் என்ன பலகையில் எழுதி பறை சாற்றிக் கொள்ளவா முடியும்.

பெண்கள் இப்படியெல்லாம் கூட அவப் பெயர்களை சுமக்க வேண்டிய நிலை இருந்துவருவது வேதனைகுரியது, இத்தகைய நிலை பெண்களுக்கு இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் தான் தவிர்க்க இயலாத நிரந்தர தலை எழுத்து. தனியே வீட்டிலிருக்கும் பெண்ணைத் தேடிக்கொண்டு யாரேனும் வீடு தேடி வந்தாலும் கூட காண்பவருக்குத் தவறாகத்தான் தெரிகிறது, இதற்க்கெல்லாம் கவலைபட்டால் வாழ முடியாது என்று நினைப்பவர்கள் தான் இந்த காலத்துப் பெண்கள். பெண்ணைப்பற்றி அவதூறு கூறும் சமுதாயத்தை யார் மதிக்கப்போகின்றார்கள் என்று கேட்கிறது இன்றைய இளம் பெண்கள் சமுதாயம். போதிய படிப்பும் பணம் ஈட்ட வேலையும் இருக்கும் போது அடுத்தவரின் ஆதாரமற்ற இழிவு பேச்சுகளை தூசு தட்டுவது போல தட்டி விடப் பழகிக் கொண்டுள்ளது இன்றைய இளசுகள். வாழ்க இளம் சமுதாயம்.

6/27/2010

நகை

கார் வேகமாக சென்று கொண்டிருந்தது, வெயலின் தாக்கத்தினால் தண்ணீர் குடித்தும் தாகம் தீராமல் மீண்டும் மீண்டும் தாகம் எடுத்துகொண்டிருந்தது தேவகிக்கு, சாலையின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெட்டவெளி, அங்காங்கே ஒரு சில பனை மரங்களும் வேறு மரங்களும் மின்சார கம்பங்களும் வேகமாக பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஏதாவது சிறிய குக்கிராமங்கள் வந்த போது சிறிய தேநீர் கடைகளும் இன்னும் சிறிய கடைகளும் தென்பட்டது, ஓட்டுனர் பரமேஸ்வரன் வேலையில் சேர்ந்தபின்னர் முதல் முதலாக அவனுடன் சேர்ந்து மைசூரில் தங்கி படிக்கும் ஒரே மகளை பார்க்க சென்று கொண்டிருந்தாள் தேவகி, மாதம் ஒரு முறை தேவகி தனது மகளை பார்த்துவிட்டு வருவது வழக்கம்.

தேவகியின் பெயரில் பல சொந்த தொழில்கள் நடத்தி வந்தார் அவளது கணவர், கொள்ளை லாபம், சீக்கிரத்திலேயே அவர்களது அந்தஸ்த்து கோடீஸ்வரர்களாக மாற்றிவிட்டது, தேவகி சாதாரணமாக அணியும் மொத்த தங்க நகைகளின் மதிப்பு மட்டுமே சில பல கோடிகள் தேறும், அடிக்கடி கார் ஓட்டுனர்களை மாற்றிக்கொண்டு இருப்பது கணவன் மனைவியின் வழக்கம், அதிக பட்சம் ஆறு மாதங்களுக்கு ஒரு ஓட்டுனர் என்கின்ற கணக்கில் இதுவரையில் தேவகி மற்றும் அவளது கணவருக்கு ஓட்டுனர்களாக வேலை செய்தவர்களின் பட்டியல் மிகவும் நீண்டது.

தேவகி பரமேஸ்வரனை கூப்பிட்டு வழியில் இளநீர் விற்பவரை பார்த்தால் வண்டியை நிறுத்திவிட்டு குடிப்பதற்கு இளநீர் வாங்சொல்லி கட்டளை இட்டாள். பெங்களூருவை கார் நெருங்குகையில் நடுத்தர வயதில் ஒரு ஆண் இளநீர் விற்றுக் கொண்டிருந்தான், சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு இளநீர் வாங்கி வந்து தேவகியிடம் கொடுத்தான் பரமேஸ்வரன். ஓட்டுனர் தனது இருக்கையின் கீழே இருந்த தண்ணீர் நிரம்பிய குப்பியை எடுத்து குடித்தார். கைப்பையிலிருந்த நோட்டை எடுத்து இளநீருக்குக் பணத்தை கொடுத்துவிட்டு சில்லறையை வாங்கி கைப்பைக்குள் போட்ட பின்னர் கார் மறுபடியும் ஓடத் துவங்கியது.

பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் கார் ஓடிக்கொண்டிருந்தபோது சிறிது தொலைவில் வாகனங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தது காரை விட்டு இறங்கிய பரமேஸ்வரன் முன்னால் நின்றிருந்த கார் ஓட்டுனரிடம் எதனால் அந்த தேக்கநிலை என்பதை கேட்டறிந்தார், முன்னே சென்ற டாங்கர் லாரியும் சரக்கு எடுத்துச் சென்ற லாரியும் மோதிக்கொண்டதால் விபத்து ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது, மைசூருக்கு காரில் செல்வதற்கு வேற்று சாலை வழியை கேட்டறிந்து மாற்றுப்பாதையில் காரை ஓட்டிக்கொண்டிருந்த போது அந்த சாலை தார் போடாமல் யாரும் புழங்காமல் இருந்ததால் வண்டி துக்கியடித்துக்கொண்டு போனபோது திடீரென்று காரின் முன் சக்கரம் பழுதடைந்தது, ஓட்டுனர் பரமேஸ்வரன் காரைவிட்டு இறங்கி வேறு சக்கரத்தை மாற்றி போடுவதற்குள் முழுவதுமாக இருட்டி விட்டது.

திடீரென்று காரின் முன்புறம் வந்து நின்ற சிலர் கையசைத்து காரை நிற்க்கச் சொன்னதும் நிறுத்திய ஓட்டுனரிடம் கதவைத் திறக்கச் சொல்லி முரட்டுக் குரல்கள் ஓலமிட்டது, என்ன செய்வதென்று விளங்காத ஓட்டுனர் விழித்துகொண்டிருந்த போது காரின் முன் விளக்கை தட்டி உடைக்க முற்ப்பட்டனர் அந்த முரடர்கள், ஓட்டுனர் கதவைத் திறந்தவுடன் இரண்டு பேர் ஓட்டுனரின் கை கால்களை கயிறுகளால் கட்டி போட்டுவிட்டு பின்னால் உட்கார்ந்திருந்த தேவகியின் நகைகளை பணத்தை கேட்டனர், அவர்களிடம் கூரிய ஆயுதங்கள் இருப்பதை காரின் முன் விளக்கில் கண்ட தேவகி கொடுக்காவிட்டால் கொன்றுவிட்டு நகை பணத்தை எடுத்து போவார்கள் என்பதை அறிந்து எல்லா நகைகளையும் பணத்தையும் அவர்களிடம் கொடுத்துவிட்டாள்.

அடுத்தநாள் காலை பொழுது விடியும் சமயம் அரைகுறை வெளிச்சத்தில் பரமேஸ்வரனின் கைகால் கட்டுகளை அவிழ்த்துவிட்டு மீண்டும் காரை ஒட்டிக்கொண்டு மைசூர் வந்து சேர்ந்தனர். பரமேஸ்வரன் தேவகியிடம் அங்கிருந்த காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்கலாம் என்று சொன்ன போது தேவகி வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். மகளை பார்த்த பின் மறுபடியும் காரில் வீட்டை வந்தடைந்தாள் தேவகி. பரமேஸ்வரன் தேவகியின் வீட்டில் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டது.

ஒருநாள் காரின் உட்புறம் சுத்தம் செய்துக் கொண்டிருந்த பரமேஸ்வரன் கண்ணில் நல்ல கனமான தங்க நகை தென்பட்டது, இதை கொண்டுசென்று தேவகியிடம் கொடுப்பதா அல்லது அவர்களாகவே வந்து தேடும்போது கொடுப்பதா என்று யோசித்தபோது, அளவிற்கு அதிகமாக அவர்களிடம் இருப்பதால் தானோ நகையை கேழே விழும் அளவிற்கு அலட்சியமாக வைத்திருக்கின்றனர் என்று தோன்றியது, அதனால் அந்த நகையை திரும்ப கொடுக்காமலேயே பரமேஸ்வரன் தன்னிடமே வைத்துக் கொண்டார்.

தேவகியின் வீட்டின் ஓட்டுனர் வேலையிலிருந்து பரமேஸ்வரனை நீக்கி விட்டனர், பணத்திற்கு மிகவும் கஷ்டம் ஏற்படத் துவங்கியது, தேவகி வீட்டில் வேலை செய்தபோது கிடைத்த நகையின் நினைவு வந்தது. கடைக்கு எடுத்துச் சென்று அதன் எடையை அறிந்து விற்று பணமாக்க கடைக்காரரிடம் கொடுத்தபோது நகை வியாபாரி அந்த நகை தங்கமல்ல என்று கூறி திருப்பிக் கொடுத்துவிட்டார். அப்போதுதான் பரமேஸ்வரனுக்குப் புரிந்தது தேவகி திருடுபோன நகைகளையோ காணாமல் போன நகைகளையோ தேடுவதே கிடையாது ஏன் என்பது.

6/26/2010

குண்டக்கா மண்டக்கா

[சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதற்கு கற்பனையில் எழுதிய கதையை பலரும் விரும்பி படித்ததுடன் அதே போன்ற கதைகளை எழுதுமாறு கேட்டிருந்தனர் அந்த வரிசையில் இன்னுமொரு கற்பனை கதை இதோ]

பரம்பரை சொத்து ஓடு வேய்ந்த நாலுகட்டு வீடு, தோட்டத்தில் தென்னை மரங்கள் சுமார் பத்து தேறும், முருங்கைமரம் கொய்யாமரம் மாமரம் என்று மனிதனுக்குத் தேவையான அத்தனை மரம் செடி கொடிகளும் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் உண்டு, தினம் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை பயிரிட்டுகொள்வதுடன் விவசாயம் செய்து வயிற்றுப் பிழைப்பு நடத்தத் தேவையான பத்து ஏக்கர் விளைநிலமும் நீர் பாய்ச்சலுக்கு குறைவில்லாத கிணறும் மாடசாமிக்கு உண்டு. மாடசாமியுடன் பிறந்த சகோதரி ஒருத்தியை அடுத்திருந்த கிராமத்தில் பள்ளிக்கூட வாத்தியாருக்கு சிறிய வயதிலேயே திருமணம் செய்வித்தனர் அவரது பெற்றோர், திருமணமாகிய அடுத்த வருடத்தில் பதினான்கே வயதான மாடசாமியின் தமக்கை ஒரு பெண் குழந்தையை பெற்ற பின் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத கிராமம் என்பதால் ஜன்னி ஏற்ப்பட்டு இறந்து போனாள். தமக்கை இறந்த பின்னர் அவள் பெற்றெடுத்தப் பெண் குழந்தை அவர்களது வீட்டிலேயே வளர்ந்து வந்தது, அவளது பெயர் துளசி.

துளசி வயதிற்கு வந்தவுடன் மாடசாமிக்கு திருமணம் செய்து தங்கள் வீட்டோடு வைத்துக் கொண்டனர் மாடசாமியின் பெற்றோர். சிறிய வயதிலேயே திருமணம் நடந்தி வைத்ததால் மாடசாமிக்கும் துளசிக்கும் வருடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது, ஒவ்வொரு பிரசவத்தின் போதும் நகரத்திலிருந்த தனியார் பிரசவ மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பிரசவம் பார்த்துவந்தனர், ஆறாவது வருடமும் துளசிக்கு பெண் குழந்தையே பிறந்த போது மருத்துவர் இனிமேல் துளசியின் உடல் நிலை பிரசவத்தை தாங்காது என்று கூறிவிட்டனர். ஒரே ஒரு ஆண் குழந்தை வேண்டும் பிறகு குழந்தை வேண்டாம் என்று நினைத்து பல தெய்வங்களை வேண்டிக் கொண்ட பின் ஏழாவது பிரசவத்தில் ஒரு மகன் பிறந்தது ஆனால் துளசியை பறி கொடுக்க வேண்டியதாகிவிட்டது.

குழந்தைகளை வளர்க்கும் பொருப்பு மாடசாமியின் பெற்றோருக்கு இருந்து வந்தது, சில வருடங்களில் மாடசாமியின் முதல் பெண் பனிரெண்டு வயதுடையவளான போது மற்ற குழந்தைகளின் சில வேலைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை அவளிடம் கொடுத்தனர், மாடசாமியின் மகனுக்கு னது மனைவியின் நினைவாக துளசிராம் என்று பெயரிட்டனர். துளசிராமிற்கு ஓரளவு கருத்து தெரிய ஆரம்பித்த போது அவனது ஆறு அக்காள்களும் அவனை மிகவும் அன்புடனும் ஆசையுடனும் பாதுகாத்து வந்தனர்,

தனது அக்காள்களை அக்காள் என்று ஒருவரைக் கூப்பிட்டால் எல்லோரும் ஓடி வருவார்கள், இதை கவனித்த துளசியின் தாத்தா ஒவ்வொருவரது பெயரிலிருக்கும் முதல் எழுத்தைச் சொல்லி அதனுடன் அக்காவையும் சேர்த்து கூப்பிடச் சொல்லி கொடுத்தார், அதன்படி ஒவ்வொரு அக்காளையும் அவர்களது பெயரில் வருகின்ற முதல் எழுத்துடன் அக்காவை சேர்த்து கூப்பிட்டு வந்தனர். துளசியும் அவனது அக்காள்களும் பள்ளிக்குச் செல்லும் போதும் விளையாடுமிடங்களிலும் கூட அதே போன்று சொல்லி கூப்பிடுவது வழக்கமாகியது.

'கு'னாக்கா, 'மா'னாக்கா என்று குழந்தைகள் ஒருவரையொருவர் அழைத்ததை கண்ட அந்த கிராமத்து மக்கள் இதென்ன 'குனாக்கா' மானாக்கா' என்று கூப்பிடுகின்றீர்களே என்று சொல்லி கேலி செய்தனர். இச்சொல்லானது அந்த கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு வார்த்தையை சொல்லுமிடத்தில் வேறு வார்த்தைகளை மாற்றி குறிப்பிட்டு பேசும் போது அதைச் சுட்டி காண்பிப்பதற்கு 'குனக்க மானக்க என்று பேசாதே' என்று சொல்லி வந்தனர், பிறகு அச்சொல் மருவி நாளடைவில் 'குண்டக்க' மண்டக்க' என்று மாற்றி சொல்லப்பட்டது. இதன் உண்மை காரணத்தை அறியாவர்களும் இந்த சொல்லை உபயோகிக்க ஆரம்பித்த போது 'குண்டக்கா மண்டக்கா' என்று மாறிபோயிற்று.

6/25/2010

தத்ரூபம்

மோகனும் மீனாவும் திருமணமாகிய புதிய தம்பதிகள் ஆனால் மோகனுக்கு முடித்து கொடுக்கவேண்டிய வேலைகள் நிமித்தமாக இரவு பகலென்று பாராமல் உழைத்தாக வேண்டியிருந்தது, வெளிநாட்டு நிறுவனத்தில் வேலையென்பதால் பெரும்பாலும் மோகனுக்கு இரவு நேர வேலைகள் இருப்பது வழக்கம். மோகனின் மனைவி மீனா, இளம் வயது, நல்ல நிறம், காண்போரைக் கவரும் கவர்ச்சி, பேசும் கண்கள், மிதமான உயரம், மெல்லிய உடல் வாகு, கல்லூரியில் பொறியல் படித்து முடித்தவுடன் திருமணமும் முடிந்தது.

மீனாவை பார்ப்பவர்கள் கண்களை அகற்ற சிறிது அவகாசம் தேவைப்படும். மீனாவுடன் படித்த குமரனுக்கு மீனாவை அடையாமல் விட மனதில்லை, யாரிடமும் சிக்காமல் கல்லூரியை முடித்து வந்துவிட்டாலும் குமரன் அவளை துரத்துவது தொடர்கதையாகி வந்தது, மீனாவின் புகுந்த வீட்டின் விலாசத்தை எப்படியோ அறிந்து கொண்டு தவறாமல் தொலைபேசியில் பயமுறுத்துவது வாடிக்கையாகிப் போனது, அன்றும் அப்படித்தான் அவன் தொலைபேசியில் மீனாவிடம் 'உன் புருஷன் இன்னைக்கு இரவு வேலைக்குச் சென்றுவிட்டான், சரியாக இரவு பத்துமணிக்கு உன் வீட்டு வாசலில் வந்து கதவை தட்டுவேன், நீ திறந்தாகவேண்டும் திறக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை ஏற்க்கனவே சொல்லிவிட்டேன், நினைவில் வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

இரவு மணி பத்து, இடி மின்னல் பெருமழை ஓயாமல் அடித்துக்கொண்டிருந்தது, தெருவில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தது, சொன்னபடி மீனாவின் வீட்டின் வாயிலில் வந்து நின்ற குமரன் கால்களிலிருந்த செருப்பை கழற்றிவிட்டு கதவை லேசாக தட்டுவதற்கு கதவில் கையை வைத்தவுடன் கதவு திறந்து கிடப்பதை கவனித்தான் மீனாவின் புத்திசாலித்தனத்தை நினைத்து அவனுக்கு சிரிப்பு வந்தது, கதவை திறந்து ஒரு அடி உள்ளே வைத்தவன் திடுக்கிட்டு அங்கேயே நின்றுவிட்டான், லேசாக கைகள் இரண்டும் அவனையறியாமல் நடுங்கியது.

ரத்தவெள்ளத்தில் உயிரற்ற உடலாக கிடந்தாள் மீனா, அங்கே நின்று நேரம் கடத்துவது ஆபத்து என அவன் மனம் எச்சரித்தது, தனது கை ரேகைகள் எங்காவது எதிலாவது படிந்துவிடக் கூடும் என்ற பயத்தில், திரும்பி பார்க்காமல் அங்கிருந்து ஓட்டமும் நடையுமாய் அந்த வீட்டைவிட்டு வெளியேறினான், யாரேனும் தன்னை கவனித்தார்களா என்று ஒருமுறை சுற்றிலும் பார்த்தபோது மழை வெள்ளம் கால்வாய்களில் ஓடிக்கொண்டிருந்தது, வீதியில் யாரும் தென்படவில்லை.

முழுமூச்சாக ஓடி தெருவிலே வந்தபோது அவனை உரசிக்கொண்டு வந்த ஆட்டோவில் ஏறிக்கொண்டு ரயில் நிலையத்தை வந்தடைந்து தான் செல்ல வேண்டிய ரயில் தயாராக நின்றிருக்கவில்லை என்றாலும் தயாராக நின்றிருந்த ரயிலுக்கு சீட்டு வாங்கிக்கொண்டு வண்டியில் ஏறி உட்கார்ந்த பின்னர் பத்து நிமிட நேரம் கழித்து ரயில் கிளம்பியது, ரயிலில் உட்கார்ந்திருந்த பத்து நிமிடங்களும் உள்ளத்தினுள் படபடப்பு.

ஒருவழியாக ரயில் கிளம்பிய பின்னர் தான் அந்த ரயில் ஏதோ ஊருக்குப் போவதை அவனால் உணர முடிந்தது. கண்ணிலிருந்து நீங்காத மீனாவின் அந்த கரு விழிகள் அவனை மீண்டும் மீண்டும் நினைவில் வந்து பயமுறுத்தியது. யாரோ தனக்கு முன்னர் வந்து எதற்காகவோ மீனாவை குத்தி கொன்று போட்டுவிட்டு போயிருப்பதை நினைத்தாலே தப்பித்தோம் பிழைத்தோம் என்றாகிவிட்டது குமரனுக்கு.

கடியாரத்தில் மணி பத்து அறைக்கு ஒரு மணி அடித்தவுடன் மீனா மெதுவாக எழுந்தாள், அவள் திட்டமிட்டபடியே சிகப்பு பேனாவிற்கு உபயோகிக்கும் மையை தன் மீதும் தரையிலே சிறிதும் ஊற்றி கொண்ட பின் கதவை லேசாக திறந்து வைத்துவிட்டு குமரன் அங்கு வந்து போகும் வரை அசையாமல் பிணம் போல கிடந்து, பார்ப்பவரை சிந்தனை செய்யவிடாமல் துரத்தியடிக்க அவள் போட்ட திட்டம் வெற்றிகரமாக முடிந்தது, இனி குமரன் என்ற காமுகனின் போராட்டம் நீங்கியது என்ற நிம்மதி அடைந்தாள் மீனா.

6/23/2010

விருதுகள்

சமீபத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்ச்சியில் நடந்து முடிந்த சுப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியில் 'சூப்பர் சிங்கர் ஜூனியர்' என்ற பட்டத்துடன் இருபத்து ஐந்து லட்சம் மதிப்புள்ள வீடும் பரிசாக பெற்ற அல்கா என்கிற பெண்ணுக்கு இருந்த பாடல் திறைமைக்கேற்றப் பரிசு, அதையடுத்து விஜய் அவார்ட்ஸ் விழாவில் வழங்கப்பட்ட விருதுகள், செவாலியர் சிவாஜி விருது, விருதுகள் வழங்குவதால் கொடுப்பவரும் வாங்குபவர்களும் உற்சாகம் அடைகின்றனர் என்பது உண்மை என்றாலும், பார்த்து ரசித்த ரசிகர்கள் மகிழ்வுற்றதும் மறுக்க முடியாதது.

உலக செம்மொழி மாநாட்டில் கலைஞர் விருது பின்லாந்து நாட்டைச் சேர்ந்த அறிஞருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது, அல்பிரேட் நோபெல் அவர்களால் துவங்கப்பட்ட நோபெல் விருதுகள் உலக பிரபலம் வாய்ந்தவை, அமெரிக்காவின் மிக பழமையான விருதாக கருதப்படும் மெடல் அப் ஹானர் என்பது ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் விருதுகள், உலகில் பலவித சாதனைகளுக்கு பலப் பெயர்களில் விருதுகள் வழங்கப்படுகின்றது,

புக்கர் ப்ரைஸ் Booker Prize (literature), ஹுயூகோ அவார்ட் Hugo Award (Science Fictions) வேர்ல்ட் பிளேயர் அப் தி இயர் World Player of the Year (football) அகாடெமி அவார்ட் Academy Award ( foreign language film), பெஸ்ட் ரிலிஜன் இன் தி வேர்ல்ட் அவார்ட், Best Religion in the World Award (Religion) வேர்ல்ட் பெஸ்ட் ஏர்லைன் அவார்ட் World Best Airline Award, வேர்ல்ட்'ஸ் பெஸ்ட் ஏர்போர்ட் அவார்ட் World's Best Airport Award (air transport) இன்னும் எண்ணிலடங்கா விருதுகள்.

தமிழ் மொழி செம்மொழி அங்கீகாரம் அடைந்திருந்தாலும் பல தமிழர்களுக்கு தங்களது தாய் மொழி தமிழில் பேசினால் தங்களது தரம் குறைந்துவிடுவதாக எண்ணி வேறு மொழிகளில் உரையாடுவதென்பது பெருகிவரும் நிலை நிறைந்து காணப்படுகிறது, தமிழ் மொழி வளர்ச்சியை தடுக்க இத்தகைய செயல்களும் ஒரு காரணமாகி வருவது கண்கூடாக தெரிந்த நிலை. கொடியானது வளர வளர அதன் கிளைகள் தானே ஏதேனும் ஒரு பிடிப்பை பற்றிக்கொண்டு படர்ந்து வளர்ந்துவிடும் அதை போன்றே எந்த மொழியாக இருப்பினும் தானே தனது வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்வதும் இயற்க்கை, ஆனாலும் உரமிட்டு கொடி படர பந்தலிட்டு வளர்க்குபோது அதன் பலனையும் அதற்கேற்றார்போல கொடுக்கத் தவறுவதில்லை. பாரி வள்ளலைப் போல முல்லைக்கு தேர் கொடுக்கத் தேவை இல்லையென்றாலும் முல்லைக்கொடியை இடைஞ்சலெனக் கருதி வெட்டி எரியாமலிருந்தாலே போதும், தானே தனது பிடியை பிடித்துக்கொண்டு பூத்துக் குலுங்கி மணம் பரப்பும் தன்மைக்கொண்டது செம்மொழி.

பல மொழிகளை கற்றுக்கொள்ளக் கூடாது என்று சொல்பவன் முட்டாள், தன் தாய்மொழியை அறிந்தும் அறியாதது போல் மட்டம் தட்டுபவன் மூடன், மூடன் என்றால் முண்டம் மட்டுமே கொண்டு மூளையை உள்ளடக்கிய தலையை இழந்தவன் என்று பொருள். எதிகால தமிழ் உலகு மூடர்கள் நிறைந்ததா அல்லது முட்டாள்கள் நிறைந்ததா, செம்மொழி என்ற அடைமொழியை அடைகாக்க போகும் கோழிகளா அல்லது முட்டை இல்லாமலேயே அடை காக்கப் போகும் வெற்று கோழிகளா.

காண மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடியது போன்றதா, மொழியும் தாயும் ஒன்று என்பதால் மொழி தாய்மொழியானது இன்றைய நிலவரத்தில் தாய்களுக்கு கிடைக்கும் மரியாதையும் மதிப்பிற்க்கான அடையாளமாக எங்கும் நிறைந்துவரும் முதியோர் இல்லங்கள் இவற்றை பார்க்கும் போது தாய்க்கு ஏற்ப்பட்டிருக்கும் நிலை மொழிக்கும் தானா என்று எண்ண வைக்கின்றது, நரைத்த முடிகள் மறைந்த பின் நாட்டில் நிலவுமோ தாய்மொழிப் பற்று, செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈய்யப்படும் என்பது திரிந்து வயிற்றுக்கு உணவில்லாத போது ஏ.டி.எம். உடைக்கப்படும் என்றாகி, ஏன் இந்த கொலைவெறி என்று கேட்பவருக்கு தமிழ் தமிழ் என்று அரற்றிக் கொண்டிருகின்றீர்களே உங்கள் தமிழா எங்கள் வயிற்றுபசிக்கு உணவிட்டது, உங்கள் பாரதி சொன்னதைத்தான் நாங்கள் செய்தோம் என்பார்,

பாரதி கொடிய வறுமையில் கூட 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்று சொன்னாறேத் தவிர நீங்கள் செய்வதைப்போல கொலை கொள்ளை ஏ.டி.எம். உடைப்பு, மாதாக் கோவில், மாரியம்மன் கோவில் உண்டியல்களை உடைத்து திருடவில்லையே என்போமானால் ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றானே என்றார். அப்படியென்றால் வள்ளுவரையும் ஏனைய தமிழறிஞர்களையும் ஏன் விட்டு வைத்திருக்கின்றீர்கள் என்போம் நாம். ஆக திருவள்ளுவரும் பாரதியும் இளங்கோவையும் அவர்களது கொலை கொள்ளை ஜேப்படி முகமூடிதிருட்டு என்று இவற்றிற்க்குதான் மிகச் 'சரியாக' பயன்படுதுவரோ. வரும் காலங்களில் யார் தமிழை வாழ்விப்பார்? தமிழ் தானே வாழும் சக்திகொண்டதா?