Translate

5/05/2010

இது ஒரு தொடர் கதை !!!!

காலாவதியான மருந்து மாத்திரைகளை விற்ற கும்பலை பிடிக்கும் நடவடிக்கையும் விசாரணையும் சூடு அடங்குவதற்குள் காலாவதியான உணவுப்பொருட்களை விற்ற வியாபாரிகளை பிடிக்கும் பரபரப்பில் மூழ்கத்துவங்கியுள்ளது காவல் துறையும் மற்ற அதிகாரிகளும், திடீரென்று வருமான வரித்துறை நடத்தும் அதிரடி நடவடிக்கைகளைப் போல காலாவதியான பொருட்களின் மீது தற்போது கவனம் ஈர்க்கப்பட்டிருப்பது மிகவும் அவசியமான ஒன்று தான் என்பதில் இதில் சம்பந்தபட்டிருக்கும் கும்பலைத்தவிர வேறு யாருக்கும் மாற்று கருத்துகள் இருக்க வாய்ப்பு இல்லை,

ஆனால் தரக்கட்டுபாடு, வருமான வரித்துறை போன்ற மிக முக்கிய இலாகாக்கள் மற்றும் அதில் பணியாற்றும் அதிகாரிகள் மற்ற உழியர்கள் இதுவரையில் பணி புரிந்தார்களா அல்லது லஞ்சம் வாங்கிக் கொண்டு வேறு ஸ்தாபனங்களை நடத்திக்கொண்டு அல்லது சம்பளம் கிம்பளம் எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டிருந்தார்களா, அப்படியென்றால் அந்த இலாக்காக்களும் அதன் உழியர்களுக்கும் இதுநாள் வரையில் அரசு கொடுத்துவந்த சம்பளம் வீணானதுதான் மிச்சம்,

இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஊழியர்களும் வேலையிலிருந்து நீக்கப்படுவார்களா அல்லது சட்டத்திலுள்ள ஓட்டைகளைக் கொண்டும் இதுநாள் வரையில் சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கும் பணபலத்தைக் கொண்டு முன் ஜாமீன், ஜனாதிபதியிடம் கருணை மனு, நன்னடத்தை என்ற பெயர்களில் அதிக பட்ச தண்டனையிலிருந்து குறைந்த பட்ச தண்டனைக்கு மாற்றி திரும்பவும் வெளியே வந்து தாங்கள் சம்பாதித்து சேர்த்திருக்கும் பினாமி சொத்துகளில் சுகம் அனுபவிக்கப்போகிறார்களா. இப்படி நடப்பது நமது நாட்டில் வழக்கமான ஒன்றுதானே.

பல அரசு இலாகாக்கள் இப்படித்தான் இயங்கி வருகிறது, இதற்க்கு சான்றாகத்தான் சமீபகாலமாக பிடிபட்டு வருகின்றவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது, பரபரப்பை ஏற்ப்படுத்தி வரும் இந்த திடீர் நடவடிக்கைகள், செய்திகள் மக்களால் மறக்கப் பட்டபின் மறுபடியும் திருடர்களின்
புதிய சாகசங்கள் தலை தூக்கும், இது ஒரு தொடர்கதை தானே தவிர சிறுகதையாக இருக்க வாய்ப்புகள் குறைவு.