Translate

5/29/2010

சாணக்கிய தந்திரம்


ஏர் இந்திய விமானம் தரையிறங்கிய போது மங்களூருவில் மக்களை கொன்று குவித்த துயரச் செய்தி அடங்குவதற்குள் மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகளின் சதியில் நொறுங்கிய தொடர்வண்டியில் இறந்த அப்பாவி பொது மக்களின் துயரச் செய்தி என நெஞ்சை உருக்கும் சம்பவங்கள் கேட்பவர் மனதை ஆழ்ந்த வேதனையடையச் செய்கிறது.

ஏர் இந்திய விமானம் தரையிறங்கிய போது மோசமான ஓடுதளத்தினால் விமானம் நொறுங்கியதாக காரணம் கண்டறியபட்டுள்ளதை பயணிகளை ஏற்றிவரும் விமானம் தரையிரக்கப்படுவதற்க்கு முன்னரே ஆராய்ந்து கவனத்துடனும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்பட்டிருந்தால் இத்தகைய கொடூர உயிர்பலி நேர்ந்திருக்காது என்பதை நாம் இச்சம்பவத்தின் மூலம் அறிய முடிகிறது.

விபத்துக்குள்ளான ஏர் இந்திய விமானத்திலிருந்த சில பயணிகளின் பாஸ்போர்டுகள் போலி என்கிற திடுக்கிடும் தகவலும் நம்மை மேலும் எச்சரிக்கை செய்வதாகவே உள்ளது. போலி பாஸ்போர்டுகள் மூலம் தீவிரவாதிகளும் தேசத்துரோகிகளும் நாட்டினுள் நுழையா வண்ணம் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதும் இச்சம்பவத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கு எச்சரிக்கை செய்வதாகவே உள்ளது.


மாவோயிஸ்டுகளின் வெறித்தனத்திற்கு மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளது, மாவோயிஸ்டுகளோ நக்சல்களோ யாராக இருந்தாலும் அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு ஒருபோதும் அடிபணியக் கூடாது, மாறாக தீவிரவாதிகளையும் பொது மக்களை கொன்று குவிக்கும் நாசவேலை செய்யும் கும்பல்களையும் சுட்டு கொன்று அவர்களின் ஆதாரங்களையும் நிர்மூலம் செய்யாவிட்டால் அவர்கள் தங்களை மேதாவிகளாக எண்ணிக் கொண்டு நாட்டையும் பொது மக்களையும் ஈவு இரக்கமின்றி கொன்று குவிப்பதும் பொது சொத்துக்களை சேதபடுத்துவதும் குறையாது.

தக்க சமயத்தில் அவர்களின் அக்கிரம செயல்களை அரசு ஒடுக்கியாக வேண்டிய கட்டாயத்திற்குள் இருக்கிறது. மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதில் மத்திய அரசு சாணக்கிய தந்திரம் பயன்படுத்த வேண்டும், கொம்பும் உடையாமல் பாம்பையும் கொன்றாக வேண்டும் என்பது தான் அந்த சாணக்கிய தந்திரம்.

5/27/2010

இளையத் தலைமுறை

காதலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்களது படிப்பிற்கும் பெற்றோருக்கும் கொடுக்கத்தவரும் இளைய சமுதாயத்தினர் மீது பேராசிரியர் சுரேஷுக்கு எப்போதுமே தீராத வெறுப்பு, தனது ஒரே மகன் விக்ரமும் அவனுடைய நண்பர்கள் கூட்டமும் கூட இதே வகையைச் சார்ந்தவர்கள் தான், சுரேஷ் எப்போதும் தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை மீண்டும் ஞாபகப்படுத்தி பார்ப்பதுண்டு சுரேஷின் தகப்பனாருக்கு அரிசி மொத்த வியாபாரம், பள்ளி விடுமுறை நாட்களில், சமயம் கிடைக்கும்போதெல்லாம் தனது தகப்பனின் அரிசிமண்டிக்கு சென்று தகப்பனாருக்கு உதவி செய்ய முயலும் போதெல்லாம் அவனது தகப்பனார் 'இந்த வேலையெல்லாம் நீ கத்துகிட்டு வருங்காலத்துல கஷ்ட பட வேண்டாம், நிறைய படிச்சிட்டு பெரிய உத்தியோகம் பார்க்கணும்' என்று சொல்லுவார்.

பள்ளிக் காதலோ கல்லூரிக் காதலோ சுரேஷை பாதிக்கவில்லை, படிப்பில் படுகெட்டிக்காரன், அவனது நண்பன் ஆனந்தும் சுரேஷைப் போன்ற விருப்பு வெறுப்பு என்று எல்லா குணங்களிலும் மிகவும் ஒத்து போகும் நண்பன், இருவரும் சேர்ந்தே பள்ளி கல்லூரி படிப்பை முடித்தனர், வேலை கிடைத்த போது இருவருக்கும் வெவ்வேறு இடங்களில்
வேலை கிடைத்தது சந்தர்ப்பம் கிடைத்த போது அடிக்கடி சந்தித்தும் வந்தனர், சுரேஷ் வட நாட்டிலிருந்த பல்கலைகழகத்தில் வேலை மாற்றிக்கொண்டு சென்ற பின்னர் இருவரும் ஒருவரையொருவர் சந்திப்பது இயலாமல் போனது.

தன் மகனின் நான்கு வருட படிப்பு முடிந்தவுடன் தனது நண்பன் ஆனந்த் பணிபுரியும் கல்லூரிக்கு விண்ணப்பித்து பேராசிரியராக நியமனம் கிடைத்த பின் ஆனந்தை பார்த்து தானும் அதே கல்லூரியில் பணி புரியப் போகும் சந்தோஷத்தை தெரிவிப்பதற்கு நண்பனின் வீட்டிற்கு வந்தான் சுரேஷ். சுரேஷ் ஆனந்தின் வீட்டிற்கு வரும்போது வழியில் அதிக வருடங்கள் கழித்து சந்திக்கப் போகும் தனது உயிர் நண்பன் ஆனந்த் தன்னை கண்டதும் சந்தோஷத்தில் மகிழ்ந்து விடுவான் என்று நினைத்து கொண்டு அவனது வீட்டையடைந்தான், அச்சமயம் ஆனந்த் அவனது தோட்டத்திலிருந்த செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தான், ஆனந்தின் முகத்தி
ல் சோக இருள், சற்றும் சிரிப்பே இல்லாத வெளிறிய முகம் கண்ட போது உடல் நலமின்மையால் ஆனந்தின் முகம் மாருபட்டுள்ளதோ என்று நினைத்து உடல் நலமில்லையா என்றான் சுரேஷ். அதற்க்கு பதிலேதும் கூறாத நண்பனின் மௌனம் சுரேஷுக்கு வியப்பை கொடுத்தது.

தோட்டத்திலிருந்த நாற்காலிகளில் அமர்ந்த இருவருக்கும் ஆனந்தின் பழைய சமையற்காரன் முருகன் தேநீர் எடுத்து வந்தான், தேநீரை வைத்த முருகன் சுரேஷைப் பார்த்து 'ஐயா, சொவ்கியங்களா, வீட்ல எல்லாரும் சவுக்கியமா' என்றான், 'நாங்கள் சவுக்கியம் முருகா நீயும் உன் வீட்டாரும் சவுக்கியமா' என்று பதிலுக்கு விசாரித்தான் சுரேஷ். திரும்பிச் செல்ல இருந்த முருகனிடம் 'ஐயாவுக்கும் சேர்த்து இரவு சாப்பாடு தயார் பண்ணிடு முருகா' என்றான் ஆனந்த்.

இடைப்பட்ட காலத்தில் ஆனந்தை சந்திக்க இயலாமல் போனதன் விவரத்தை ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தான் சுரேஷ், இருட்ட ஆரம்பித்தது விளக்குகளை போட்டுவிட்டு
இருவரும் வீட்டினுள்ளே சென்றனர், 'ஆமா, நான் வந்ததிலேர்ந்து சிஸ்டரையும் சுபாவையும் காணமே எங்காவது வெளில போயிருக்காங்களா' என்றான் சுரேஷ். 'வா' என்று சுரேஷை பார்த்து சொல்லிவிட்டு வீட்டினுள்ளிருந்த மாடிப்படிகளில் ஆனந்த் ஏற அவனை பின்தொடர்ந்தான் சுரேஷ்,

ஆனந்த் சுரேஷுடன் தனது இளமைக்கால நினைவுகளைப் பற்றி பேசும் போது தன் மனைவி சொரணாவையும் அழைத்து உட்கார வைத்து கேட்கச் சொல்லுவான், ஆனந்தின் மனைவி சொர்ணா நன்கு படித்தவர், தங்களது ஒரே மகள் சுபாவை வளர்ப்பதற்காக வேலைக்கு செல்லாமல் மகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தனர், சுபா படிப்பில் ஆனந்தைப் போலவும் சொர்ணவைப்
போலவும் படு கெட்டிக்காரி. சுரேஷுடன் விளையாட்டாக பேசும்போதெல்லாம் 'நம்ம ரெண்டு பேரும் சம்பந்திகளாகிடலாண்டா' என்பான் ஆனந்த். மாடியிலிருந்த ஒரு படுக்கையறை சுபாவினுடையது மற்றது கணவனும் மனைவியும் உபயோகிப்பது, சுபாவின் படுக்கையறையின் கதவு பூட்டபட்டிருந்தது, அடுத்த படுக்கையறையில் ஆனந்தின் மனைவி கட்டிலில் படுத்திருந்தார்,

சுரேஷ் ஆனந்தின் காதுகளுக்கு மட்டும் கேட்க்கும் படி மெல்லிய குரலில் 'சிஸ்டருக்கு உடம்பு சரியில்லையா' என்றான், 'மெதுவா ஏண்டா பேசறே சத்தமா பேசினாக் கூட அவள் எழுந்துக்க மாட்டாடா' என்றான் அழுகையுடன் ஆனந்த், ஆனந்தின் தோள்களை தன் மீது இழுத்து அணைத்துக் கொண்டு ஏண்டா என்னடா ஆச்சு சிஸ்டருக்கு என்றான் சுரேஷ், சுரேஷின் குரலில் தடுமாற்றம். ஆனந்த்
பதில் சொல்லவே இயலாமல் குமுறி அழுதான், அவனை மேலும் வருத்தப்பட வைப்பதற்கு பிடிக்காமல் மீண்டும் மாடியை விட்டு இருவரும் கீழே வந்தனர்.

இரவு உணவை முடித்துவிட்டு இருவரும் படுக்கைக்குச் சென்றனர், அடுத்த நாள் காலை எழுந்த போது படுக்கையில் ஆனந்தைக் காணவில்லை, முருகன் ஓடிவந்தான், 'ஐயா டவல் இந்தாங்க சோப்பு குளியலறையில வச்சிருக்கேன்' என்றான்,
முருகனிடம் 'எங்கே ஆனந்த்' என்று கேட்டான் சுரேஷ், 'ஐயா காலைல நடக்கபோயிட்டு வருவாருங்க ஐயா வர கொஞ்சம் நேரமாகும் குளிச்சிட்டு வந்து நீங்க காலை உணவை சாப்பிடுங்க' என்றான் முருகன். குளித்து வந்த போது மணி எட்டு ஆகிவிட்டிருந்தது, காலையுணவை முடித்து விட்டு 'என்ன முருகா சொர்ணா சிஸ்டருக்கு எப்படி இந்த நிலைமையாச்சு' என்றான்.

ஐயா உங்களுக்கு எதுவுமே சொல்லலையாங்க, நம்ம சின்னம்மா சுபா வெளிநாட்டுக்கு மேல் படிப்புக்கு போனது தெரியுமாங்க என்றான், இல்லை தெரியாதே என்றான் சுரேஷ், சின்னம்மா வெளிநாட்டுக்கு படிக்க போனாங்க அங்கே அவங்க கூட படிச்சுகிட்டிருந்த பையனோட கல்யாணம் பண்ணிக்கபோறேன்னு தன்னோட அப்பா அம்மாவுக்கு போன் செய்து தெரிவிச்சாங்க, உடனே இவங்க ரெண்டு பேரும் கெளம்பி சின்னம்மா இருந்த நாட்டுக்கு
அந்த பையன் யாரு என்னனு பார்க்கறதுக்கு போனாங்க, அங்கே போனப்போ சின்னம்மாவோட கூட படிச்சிக்கிட்டிருந்த சிலர் கிட்ட விசாரிச்சப்ப சின்னம்மாவும் அந்த பையனோடசேர்ந்து போதை பழக்கத்துக்கு அடிமையாகிடாங்கன்னு தெரிய வந்தது,

உடனே கிளம்பி இந்தியாவுக்கு போயிடலாம்முன்னு சின்னம்மாவை இவங்க ரெண்டு பேரும் வற்புறுத்தி இருக்காங்க, நான் வாழ்த்தாலும் செத்தாலும் அந்த பையனோடத்தான் இருப்பேன்னு சின்னம்மா பிடிவாதமா வெளி நாட்டுலேயே இருந்துட்டாங்க, இவங்க ரெண்டு பேரும் ஊருக்கு திரும்பிட்டாங்க, சில மாசங்களுக்கு அப்புறம் சின்னம்மா போதையில கார் ஓட்டிக்கிட்டு போயி விபத்துல இறந்துட்டாங்கன்னு செய்தி வந்தது, அப்போ அம்மாவுக்கு உடல் நிலை ரொம்ப மோசமா பாதிப்பு அடைஞ்சது, மருத்துவமனையில சேர்த்தாங்க, அங்கே இரண்டு மூணு மாசம் இருந்தாங்க வீட்டுக்கு அழைச்சுகிட்டு வந்தப்ப அம்மாவுக்கு நினைவே இல்ல, கோமாவுலேயே படுக்கையா கெடக்குறாங்க, உயிர் மட்டும் இருக்கு, ஐயா உடைஞ்சு போயிட்டாரு .......

தூரத்தில் கேட்டை திறந்து கொண்டு ஆனந்த் வீட்டினுள்ளே வருவது தெரிந்தது, என்ன முருகா ஐயாவுக்கு டிபன் சாப்பிட கொடுத்தியா என்றான் ஆனந்த், சுரேஷைப் பார்த்து நீயும் எங்க கல்லூரியில ஜாயின் பண்ண போறதா கேள்விபட்டேண்டா சுரேஷ், அதைச் சொல்லும் போது ஆனந்தின் கண்களில் லேசாக தெம்பு தெரிந்தது, நான் நெனைச்சது போல நம்ம சம்பதிங்களாக முடியாது உன்னோட பையனையும் மனைவியையும் கூட்டிட்டு அடிக்கடி நம்ம வீட்டுக்கு வந்துடுடா என்றான் ஆனந்த்.

ஆனந்தின் வீட்டைவிட்டு வெளியேறும் போது சுரேஷின் மனதில் சுமையும் சோகமும் நெஞ்சை நிறைத்திருந்தது.


5/14/2010

கண்ணன் என் காதலன்

ஆனந்திற்கும் உமாவிற்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டது, இரண்டு ஆண்டுகள் முடிந்தது போன்று இல்லாமல் மிகவும் நெருக்கத்துடனும் அன்யோன்யத்துடனும் இருந்து வந்தனர், உமாவின் அக்காள் கணவன் சுரேஷ் விற்பனை அதிகாரியாக தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வந்தான், அடிக்கடி வெளியூர் சென்று வருவது வழக்கம், ஒரு முறை பெங்களுருவிற்கு சென்றிருந்தபோது ஆனந்தை தற்ச்செயலாக ஒரு இளம் பெண்ணுடன் பார்த்தான், பார்த்தவுடன் சந்தேகம் எழவில்லை, அப்படியே சந்தேகம் ஏற்பட்டிருந்தாலும் அதை உடனடியாக தனது மனைவியிடம் தெரிவிக்கவேண்டாம் என்ற முடிவில் இருந்தான் சுரேஷ், அதற்க்கு காரணம் தனது மாமனார் உடல் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாலும் ஆனந்திற்கும் உமாவிற்கும் திருமணமாகி ஒருவருடம் மட்டுமே ஆகி இருந்ததால் குடும்பத்தில் கலவரங்களை உண்டாக்க சுரேஷ் விரும்பவில்லை.

ஆனால் இன்னொரு வருடமும் கடந்துவிட்ட நிலையில் மற்றொருநாள் சென்னையில் ஜனத்திரள் நிறைந்து கிடக்கும் ஒரு வீதியில் ஆனந்தையும் அதே இளம் பெண்ணையும் மறுபடியும் சேர்ந்து பார்த்த போது இதைப்பற்றி முதலில் ஆனந்திடம் விசாரிப்பதா தனது மனைவி மூலம் உமாவிற்கு தெரியப்படுத்துவதா என்ற கேள்வி அவனுள் எழுந்தது. சரியான முடிவிற்கு வர இயலாமல் அவர்களை பின் தொடர்வதென முடிவிற்கு வந்தான் சுரேஷ்.

ஆட்டோ ஒன்றில் ஏறிய இருவரையும் மற்றொரு ஆட்டோவில் பின்தொடர்ந்தான், அவர்கள் சென்ற ஆட்டோ அடையாற்றிலுள்ள ஒரு வீதியில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் எதிரில் சென்று நின்றது, வெளியே இறங்கிய இருவரும் ஒன்றாக அடுக்குமாடி குடியிருப்பினுள் சென்று மறைந்தனர். இவர்களை பற்றிய தகவல்களை எப்படி யாரிடம் கேட்டு தெரிந்துகொள்வதென்று தெரியாமல் சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தவன் அந்த அடுக்குமாடியிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த சற்று வயதான ஆள் ஒருவர் சற்று தொலைவில் நிருத்தபட்டிருக்கும் நடமாடும் துணிகளை சுருக்கம் நீக்கும் இரும்பு பெட்டியுடன் நின்றிருந்த இரண்டு சக்கர வண்டியை வந்தடைந்தார்.

அவரிடம் சென்று அடுக்குமாடியைப் பற்றிய விவரங்களை கேட்டறிய முற்பட்ட போது அந்த ஆள் சற்று கோபமடைந்தவராக சுரேஷை ஏற இறங்க பார்த்தார், சுரேஷுக்கு ஒரு நிமிடம் தனது அவசரத்தின் மீது வெட்கம் ஏற்ப்பட்டது, மறுபடியும் சில துணிகளை எடுத்துக்கொண்டு அந்த ஆள் வேறு ஒரு வீட்டை நோக்கி நடக்கலானார், அந்த இருசக்கர வண்டியின் அருகே உட்கார்ந்திருந்த வயதான பெண் சுரேஷை கவனிக்காதவள் போல் உட்கார்ந்திருந்தாள் அவள் வயதான ஆசாமியின் மனைவியாக இருக்ககூடும் என்று யோசித்த வண்ணம், அம்மா அந்த அப்பார்ட்மென்ட்ல இப்போ உள்ள போனாங்களே அவங்கள பத்தி ஏதாவது தெரிஞ்சா சொல்லமுடியுமா என்றான்.

கிழவி சிறிது நேரத்திற்குப் பின் சுரேஷை நிமிர்ந்து பார்த்துவிட்டு தெரியாது என்றாள். அடுத்தது என்ன செய்வது என யோசிக்க முடியாமல் அன்றைய அலுவலக பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புவதற்குள் எப்போதும் போல இரவு மணி பத்தை தாண்டிவிட்டிருந்தது. அவனுக்கு இரவு உணவு பரிமாறுவதற்கு வந்த அவன் மனைவியிடம் ஒரு முக்கிய விஷயம் உன்னிடம் சொல்ல வேண்டும் என்றான். முதலில் சாப்பிடுங்கள் பிறகு பேசலாம் என்று சொல்லிவிட்டு தானும் தட்டில் உணவை எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடத் துவங்கினாள் சுரேஷின் மனைவி சாரு.

ஒரு வருடத்திற்கு முன்னர் பெங்களுருவில்
தான் பார்த்த அதே பெண்ணுடன் இன்றும் ஆனந்தை சேர்த்து பார்த்தவற்றை ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான் சுரேஷ், இதை உமாவிடம் எப்படி சொல்லுவது, ஆனந்தும் உமாவும் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வருவதைப் பற்றி யாவரும் அறிந்திருக்கும் போது இது எப்படி சாத்தியம் என்பது போன்ற விவாதங்கள் இருவருக்கும் ஏற்ப்பட்டது. சுரேஷும் சாருவும் சேர்ந்து ஒரு முடிவிற்கு வந்தனர்.

அன்று ஞாயிற்று கிழமை மணி காலை ஒன்பது, அடையாற்றிலிருந்த அடுக்குமாடியில் எந்த வீட்டில் அந்த பெண் வசிக்கிறாள் அவள் பெயர் என்ன என்பது போன்ற விவரங்கள் ஏதும் தெரியாத நிலையில் ஒவ்வொரு வீடாகச்சென்று அழைப்புமணியை தட்டிவிட்டு வெளியே காத்திருந்தனர், முதல் மாடியில் மூன்றாவது வீட்டில் அதே பெண் கதவை திறந்தாள், லேசாக சாருவிடம் சமிஞை செய்தான் சுரேஷ். குடும்ப அட்டைகளை சரி பார்க்க வந்திருப்பதாக சொல்லிவிட்டு அவளது பெயர் கணவர் அல்லது பாதுகாப்பவர் பெயர் போன்ற விவரங்களை அவளிடம் விசாரித்த போது அந்த பெண் தனக்கு குடும்ப அட்டை பெங்களூருவில் இருப்பதாகவும் அதை முறைப்படி மாற்றிக்கொள்ள தேவைபட்டால் மாற்றிகொள்வதாகவும் தெரிவித்துவிட அவளது பெயரைக் கூட தெரிந்து கொள்வதற்கு இயலாமல் திரும்பிவிட்டனர் சுரேஷும் சாருவும்.

இத்தனை அழகியப் பெண் இவளுடன் ஆனந்திற்கு மறைவான தொடர்பு இருக்க வாய்ப்புகள் உண்டு என்று ஊகித்து வீடு திரும்பும் வழியில் உமாவின் வீட்டிற்கு சென்றனர். சாருவிற்கு உமாவையும் ஆனந்தையும் பார்த்த போது உள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த பெண் விவகாரம் அடிக்கடி நினைவில் வந்து இயல்பாக பேச விடாமல் தடுத்து தடுமாறச் செய்தது. உமா கொடுத்த காப்பியைமட்டும் அருந்திவிட்டு ஆனந்தின் எதிரே உமாவிடம் ரகசியத்தை சொல்ல இயலாமல் வீடு திரும்பினர்.

சுரேஷிற்கு மனதில் குழப்பம் இன்று எப்படியாவது அதை தீர்த்து விடுவது என்ற முடிவில் நேரே அடையாற்றிலிருந்த அடுக்குமாடி வீட்டை சென்றடைந்து மணியை அழுத்திவிட்டு காத்திருந்தான், அதே பெண் வந்து கதவைத் திறந்தாள், உங்களிடம் ஒரு முக்கிய விஷயம் விசாரிக்க வேண்டும் என்றான், உள்ளே வாங்களேன் என்றாள், உள்ளேச் சென்றவன் அதிர்ச்சியில் உறைந்து போனான், சுவற்றில் ஆனந்தும் அந்த பெண்ணும் கணவன் மனைவி போன்று நெருங்கி நிற்கும் புகைப்படங்கள்.

உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா என்றான், எடுத்த எடுப்பிலேயே அவசரம் தொனித்தது சுரேஷின் குரலில், என் பெயர் ஷீலா. திருமணமாகிவிட்டதா, இல்லை, புகைப் படங்களில் உங்களுடன் இருப்பது உங்கள் கணவரா அல்லது, கேட்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம், அதற்க்கு ஷீலா பரவாயில்லை, அவர் எனது நண்பர் என்றாள், உடனே சுரேஷ் புகைப்படத்தைப்பார்த்தால் அப்படித் தெரியவில்லையே என்றான்.

அவள் சற்றும் தாமதிக்காமல் நீங்கள் நினைப்பது போல்தான், அவர் என் காதலனும் கூட என்றாள், அதற்க்கு சுரேஷ் அவருக்கு திருமணமாகி மனைவி இருப்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா என்றான். தெரியுமே என்றாள் ஷீலா. அவர் மனைவிக்குத் தெரிந்தால் என்னவாகும் என்று தெரியுமா உங்களுக்கு என்றான் சுரேஷ். ஷீலா அதற்க்கு பதிலேதும் பேசவில்லை, கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியே வந்து நேரே ஆனந்தின் அலுவலகம் நோக்கி விரைந்தான்.

ஆனந்தின் அலுவலகத்தை அடைந்த போது ஆனந்த் சுரேஷை வரவேற்க்கதயாராக இருந்ததுபோல் இருந்தான், ஷீலா தொலைபேசியில் ஆனந்திடம் இதைப்பற்றி தெரிவித்திருக்க கூடும் என்று அனுமானித்தான் சுரேஷ். அலுவலகத்தின் வேறு பக்கத்தில் இருந்த விசிட்டர் அறையில் இருவரும் சென்று அமர்ந்தனர், ஷீலாவுடன் ஆனந்தை தான் பார்த்த எல்லா விவரத்தையும் கூறி உமாவின் வாழ்க்கை பிரச்சினையை தட்டி கேட்க
தான் இருப்பதாக எச்சரிக்கை செய்தான், ஆனந்த் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். அலுவலகத்தில் சொந்த பிரச்சினைகளைப் பற்றி பேச தான் விரும்பவில்லை என்று சொல்லி சுரேஷை திருப்பி அனுப்பி விட்டான்.

தனது மனைவி சாருவிடம் கலந்தாலோசித்து, பிரச்சினையை
உமாவிடமே விட்டுவிடுவது நல்லது என்று இருவரும் கைபேசியில் உமாவிடம் நடந்தவற்றைப் பற்றி விவரமாக சொல்லி ஆனந்திடம் பொறுமையாக விசாரிக்கச் சொன்னார்கள். உமாவிற்கு ஆச்சரியம், ஷீலா என்ற பெண்ணுடன் ஆனந்திற்கு உறவு இருப்பதற்கு வாய்ப்பே இருக்க முடியாது என்று உறுதியாக நம்பினாள். ஆனந்த் அன்று வீட்டிற்கு வந்து இரவு சாப்பிட்டு முடித்த பின் ஷீலாவைப்பற்றி விசாரித்தாள் உமா. ஆனந்த் உமாவிடம் தன் மீது சந்தேகம் உள்ளதா தான் அப்படியொரு பெண்ணிடம் பழகும் குணம் உள்ளவனா என்று கேட்டான். இதுவரையில் ஆனந்தை தான் முழுமையாக நம்பி வந்ததாகவும் சொன்னாள் உமா, தனது வாழ்க்கையில் எதையும் உமாவிடம் மறைத்ததே கிடையாது என்று சொன்னான் ஆனந்த்.

அப்படியென்றால் தனது அக்காவும் அவளது கணவனும் பார்த்த ஷீலா என்ற பெண் யார் என்று கேட்டாள் உமா. தன்னுடன் ஒன்றாக படித்த தனது பால்ய வயது முதல் தனக்கு மிகவும் நெருங்கிய சிநேகிதன் கண்ணன் என்றான் ஆனந்த்.

5/13/2010

குர்காக்கள், கங்காணிகள்

இரவு நேரங்களில் வீடுகளின் வாசலிலிருக்கும் கேட்டை கொம்பினால் தட்டிவிட்டுச் செல்லும் குர்காக்களை பற்றி யாவரும் அறிந்திருக்கிறோம் ஆனால் அப்படி அவர்கள் தெருத் தெருவாக தட்டி விட்டு செல்வதால் திருடனோ மற்ற சமூக விரோதிகளோ வீடுகளில் திருட வருவதில்லையா என்று கேட்டால் அது எப்படி ஒரு கொம்பின் உதவியுடன் திருடனை குர்க்காவால் பிடிக்க முடியும் என்று பதில் சொல்லிவிடலாம், அப்படியென்றால் குர்காக்கள் ஏன் இரவில் தெருதெருவாக அலைய வேண்டும் என்ற கேள்வி மிஞ்சும்.

எனக்கு கிடைத்த செவி வழி செய்தி, இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்ச்சியில் இருந்த சமயத்தில் அண்டை நாடான நேபாளத்திலிருந்து வந்த குர்காக்கள் இந்தியர்களுடன் இணைந்து
ஆங்கிலேயரிடம் போராடி நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து விடுவிக்க பெரிதும் உதவியதாகவும் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் சென்ற பின்பு, அவர்கள் பெரும்பாலானோர் படித்திராமல் இருப்பதால் காவலர் வேலையை செய்து பிழைப்பு நடத்த உரிமை கொடுக்கப்பட்டதாகவும், அவர்கள் தங்களது வேலையை பொறுப்புடன் செய்வதால் அவர்களை தொடர்ந்து அவ்வேலைகளில் அமர்த்தப்பட்டதாக தகவல் சொல்லி கேட்டிருக்கிறேன்.

ஆனால் சில திருடர்களும் சில போலீஸ்காரர்களுக்கும் சில சமயங்களில் இவர்க
ள் உதவிகரமாக இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது, எது எப்படி இருந்தாலும் இந்த குர்காக்கள் இரவில் தட்டிவிட்டு செல்வதனால் திருடர்களும் சமுதாய விரோதிகளும் இரவில் நடமாடாமல் இல்லை என்பது உறுதி. ஒவ்வொரு வட்டாரத்திலும் போலீசுக்கு கங்காணிகள் இருப்பதால் எங்கு என்ன நடக்கிறது என்கின்ற தகவல்கள் போலீசுக்கு கிடைத்துவிடுவதற்க்கு உதவியாக இருந்துவிடும். கங்காணிகளை எளிதில் கண்டுபிடித்து விட முடிகிறது, இதனால் இடம் விட்டு இடம் புதிதாய் வருகின்ற சமூக விரோதிகளும் திருடர்களும் மட்டுமே கங்காணிகள் யாரென்று அறியாமல் போக வழியுண்டு, ஏனையோர் குறிப்பாக சமூகவிரோதிகள், திருடர்கள், தவறான முறையில் நடந்து கொள்ள சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பவர்கள் இந்த கங்காணிகளையும் விரைவிலேயே இனம் கண்டுகொள்கின்றனர் என்பது நமக்கு நன்கு புரிகிறது.

சந்தேகத்துக்குரியவர்களின் நடமாட்டமென்பது சகஜமாகிவருகின்ற சூழல் தற்போது எங்கும் காணப்படுகிறது, சந்தேகத்திற்க்குரியவர்கள் தங்களை யாரும் இனம் கண்டு கொள்ளாமல் இருக்க எடுத்துக் கொள்ளும் முயற்ச்சிகளும் ஏராளம். குர்காவின் எதிரிலேயே ஒருவன் ஒரு வீட்டின் சுவற்றின் மீது ஏறி குதித்தாலும் கூட குர்க்காவால் ஒன்றும் செய்ய இயலாமல் பார்க்காதவன் போல நடந்து போய்விடதான் செய்வான். கங்காணிகள் எவற்றைப் பற்றி விவரம் சேகரிப்பார்கள் என்பது நமக்கு தெரிவதற்கில்லை, என்றாலும் அந்தந்த வட்டாரத்தில் இருக்கும் சமூக விரோதிகளுக்கு நிச்சயமாக அங்குள்ள
கங்காணி யாரென்பதும் தெரிந்துதான் உள்ளது, இதனால் பல குற்றங்கள் நடப்பதை தவிர்க்க இயலாமல் போய்விடுகிறது.