Translate

4/15/2010

கல்விமுறை

மார்ச் மாதம் துவங்கி விட்டாலே பெற்றோர்களுக்கு குழந்தைகளை பரீட்சைக்கு தயார் செய்யும் பணி தொடங்கிவிடும், அடுத்த வகுப்பிற்கான பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், பள்ளி கட்டணம், சீருடை, காலணி, என்று வரிசையாய் காத்திருக்கும் செலவினங்களை எதிர்கொள்ளவும் தயாராகி விடவேண்டும். புதிதாய் பள்ளி கல்லூரிகளில் சேர்ப்பவர்களுக்கு கட்டிட நிதி என்ற பெருந்தொகையுடன் கல்விக்கட்டணம் இத்தியாதிகள் என ஒரேடியாய் செலவினங்கள் காத்துக்கிடப்பது வாடிக்கையான விஷயமாகி போனது.

பெற்றோருக்கு இவையெல்லாம் சிம்மசொப்பனம் என்றால் மாணவ மாணவியருக்கு அடுக்கடுக்காய் வினாவிடைகள், அத்தனையையும் படித்து சிறிய மூளைக்குள் புகுத்தி திணித்து மறந்து போகாமல் காத்து பரீட்சையன்று விடைத்தாளில் படித்ததை அப்படியே அச்சு மாறாமல் எழுதி 100 மதிப்பெண்களுக்கு எப்படியாவது 95 மதிப்பெண்களை வாங்கிவிட வேண்டுமென்று சிவன் பிள்ளையார் முருகர் பெருமாள் அனுமார் என்று வகைவகையான தெய்வங்களிடம் தினம் தினம் நெஞ்சுருகி பிரார்த்தனை செய்து ரிசல்ட் என்று சொல்லப்பட்டும் தேர்வு முடிவிற்காக பதைபதைப்புடன் காத்துக் கிடந்து நினைத்தபடியே 95 மதிப்பெண்கள் பெற்று மருத்துவக்கல்லூரியிலோ பொறியியல் கல்லூரியிலோ சேர்ந்து மறுபடியும் அதே முறையில் பாடங்கள் அத்தனையையும் மனப்பாடம் செய்து, தேர்வு எழுதி, தேர்ச்சிப் பெற்று ஏதோ ஓர் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலைக் கிடைக்கப் பெற்று,

பணி செய்யும் காலத்தில் தான் பள்ளியிலோ கல்லூரியிலோ படித்து மனப்பாடம் செய்து தேர்வு எழுதியதில் பத்து சதவிகிதமாவது தனது வேலைக்கு சம்பந்தமுள்ளதாக இருக்கிறதா, என்றால் கிடையவே கிடையாது. அப்படியென்றால் இத்தனை வருடங்கள் மனப்பாடம் செய்து கற்ற அத்தனைக் கல்வியிலிருந்து மாணவனோ மாணவியோ என்னதான் அடைய முடிகிறது. படித்த படிப்பறிவைக் கொண்டு என்னதான் செய்கிறார்கள்?

எழுதவும் படிக்கவும் சரளமாக ஆங்கிலம் பேசவும் கற்றுக் கொண்டாலே போதுமானதாக இருக்குமென்றால் எதற்காக இத்தனை வருடங்கள் பள்ளி, கல்லூரிக்குச் சென்று அத்தனை பாடங்களை படித்து 100க்கு 95 மதிப்பெண்கள் பெறவேண்டும்? கற்கும் கல்விக்கும் பொது வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்கிறதென்றால் அதைக்கொண்டு சமுதாயத்தில் படித்தவன் எதை சாதிக்க அல்லது செயல்படுத்த முடியும்? அல்லது செயல்படுத்திகொண்டிருக்கின்றனர்?

பாடத்திட்டங்களை மாற்றுவதனால் செயல்முறை கல்வி அல்லது தான் செய்யப்போகும் வேலைக்கு சம்பந்தமான கல்வி முறையை கற்பதனால் பயனடைய முடியாதா. தற்போது நடைமுறையில் இருந்து வரும் கல்விமுறையினால் மாணவர்களுக்கு வீண் சிரமாம் உள்ளது என்பதும் அதை எவ்வாறு மாற்றி அமைத்தால் தனி நபருக்கும் சமுதாயம் மற்றும் நாட்டிற்கும் பயனுள்ளதாக அமையும் என்று குழுக்கள் ஆலோசனைகள் செய்து முடிவிற்கு வர இயலவில்லையா அல்லது முடிவுகளை உடனுக்குடன் அமல் படுத்தி செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளதா.

தற்போதைய கல்விமுறையே போதுமானது என்று அரைத்த மாவையே இன்னும் எத்தனை காலங்கள் அரைத்துக்கொண்டிருப்பது இதனால் யாருக்கு பலன்? சமச்சீர் கல்வி என்பது மிகவும் அவசியமானது, இதில் பலனடைபவரைவிட கீழ்தட்டு மக்களின் பலதரப்பட்ட விழிப்புணர்வுக்கு அடிப்படைக் கல்வி என்பது இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.

தற்போது இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் கல்வித்திட்டம் நிச்சயம் மாற்றப்படவேண்டும், மாற்றம் என்பது தனி மனிதனுக்கும் சமுதாயம் மற்றும் நாட்டின் நலனுக்கும் எர்ப்புடையதாக இருக்க வேண்டும். மாணவர்களின் தற்போதைய மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறை நிச்சயம் மாறவேண்டும், மனப்பாடப்பகுதி என்பது தேவை ஆனால் எல்லா கேள்விகளுக்கும் மனப்பாடம் செய்து அதிகபட்ச மதிப்பெண்களை பெற்றால் தான் கல்லூரிகளில் இலவச அட்மிஷன் என்பதும் அதிகபட்ச்ச மதிப்பெண்கள் பெற்றவருக்கு முதலிடம் கொடுப்பது போன்ற அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்துவதனால் நிச்சயம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் படிப்புச்சுமை அறவே நீக்கப்படும், தகுதிகேற்ப அட்மிஷன் கொடுப்பதால் மாணவர்களின் திறமை வெளிக்கொணர வாய்ப்புகள் உருவாகும்.

ஜாதி அடிப்படையிலான சேர்க்கை நிச்சயம் தேவை அல்லது குறிப்பிட்ட சில வகுப்பினர் மட்டுமே எல்லாவகையிலும் நிரம்ப நேரிடும். பின்தங்கியவர் பின்தங்கியவராகவே இருந்துவிடும் அவலம் ஏற்ப்படும். எதிர்காலம் சிறக்க சிறந்த மாற்றங்கள் கல்விமுறையிலும் சேர்க்கை முறையிலும் நிச்சயம் தேவை.