Translate

4/05/2010

அனாதைப் பிணங்கள்

அநாதை பிணங்கள் எங்கெல்லாம் கிடைக்குமோ அங்கே சென்று அந்த பிணத்தை வாங்கி அல்லது எடுத்து வந்து பிணத்தின் எலும்புகள் எரிந்துவிடாமல் தீ மூட்டி பின்னர் அடுத்தநாள் எரிந்த பிணத்தின் எலும்புகளை எடுத்து ஒரு சணல் கோணியில் சேமித்து எடுத்து வந்து ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு கிடங்கில் சேமித்து பின்னர் வண்டியிலேற்றி வியாபாரம் செய்து வந்தான் ஒருவன். எலும்பை வாங்கிச் செல்லுபவரால் அதிலிருந்து என்ன செய்ய முடியும் என்பது அதிக நாட்களாகவே எனக்குள் எழுந்துவந்த கேள்வியாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் என் வீட்டிலிருந்த எண்பத்துமூன்று வயதான தாயாரை விடாத ஜுரம் பிடித்து ஆட்டியது, மருத்துவரிடம் கூட்டிச் சென்றபோது பலவித பரிசோதனைகளை செய்து தாயாருக்கு வயது முதிர்ந்த நிலையால் புற்றுநோய் ஏற்ப்பட்டு அதன் கடைசி பகுதியில் அவர் தற்போது இருப்பதாகவும் மருத்துவம் செய்வதனால் பலன் ஒன்றும் இல்லை என்று மருத்துவர் தெரிவித்த போது அடைந்த துயருக்கு அளவே கிடையாது, தாயார் ஜுரத்தில் தவிப்பதை பார்க்க இயலாத நிலையில் மருத்துவம் பார்க்கும் வழியும் இன்றி என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தபோது அடுத்த வீட்டுகாரர் கொடுத்த தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது அது ஒரு சமூக சேவகியின் அலுவலகம் என்பது தெரிந்தது, அவரிடம் தாயாரின் நிலையை எடுத்து சொன்ன போது அவர் கொடுத்த மற்றொரு தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டபோது அது ஒரு இலவச புற்றுநோய் காப்பகம் என்றும் அங்கு நேரில் நோய் தாக்கியவரை கொண்டு சென்றால் அவரது நிலையை பார்த்து அங்கே அவரை சேர்த்துக்கொண்டு மருத்துவம் இலவசமாக வழங்கப்படும் என்பதும் தெரிந்துகொள்ள முடிந்தது.

தாயாரை அழைத்துக்கொண்டு அந்த புற்றுநோய் காப்பகத்திற்கு சென்ற போது அது ஊரின் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருந்ததால் வெகுநேரம் பயணிக்க வேண்டியதாகியது, அங்கு சென்ற போது அமைதியான சூழல் நம்மை வரவேற்றது, நமக்கு லேசான ஆச்சரியம் ஏற்பட்டது, ஏனென்றால் அங்கு நிலவிய சுகாதாரமும் இலவச சிகிச்சையும்தான். வெள்ளை உடையணிந்த கன்யாஸ்த்ரீஒருவர் படிவம் ஒன்றை கொடுத்து அதில் கேட்டிருக்கும் விவரங்களை பூர்த்தி செய்து தருமாறு சொன்னார், நோயாளியின் விவரங்களை பூர்த்தி செய்தபோது அதில் இறுதியாக ஒரு கேள்வி இருந்தது, அங்கு நாம் நோயாளியை சேர்த்தால் அவர்கள் நோயாளிக்கு கொடுக்கும் மருந்துகளையும் நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுகிறோம் என்பதுதான்.

அவற்றை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு கொடுத்தபோது கட்டில் ஒன்றை நோயாளிக்கு ஏற்பாடு செய்து அதில் அவரை படுக்க வைத்து உணவு மருந்து கொடுத்து கவனித்துகொள்ளுகிரார்கள், வேண்டுமானால் நாமும் நோயாளியுடனிருந்து அவரை கவனித்துக் கொள்வதற்கு அனுமதி உண்டு. ஆனால் அங்கு சேர்க்கப்படும் நோயாளிகள் அத்தனை பேரும் புற்றுநோயின் எல்லையில் இருப்பவர்கள் என்பதால் உடனிருந்து கவனித்துக்கொள்வதற்க்கு பெரும்பாலும் யாரும் தங்குவதில்லை.

காலை மதியம் இரவு உணவு என்பது நோயாளிகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது, அங்கு அனுமதிக்கப்பட்டபின் தாயாருக்கு விடாமல் அடித்துக் கொண்டிருந்த ஜுரம் நின்று போனது, அவர்கள் என்ன மருந்து கொண்டுக்கின்றனர் என்பது தெரியவில்லை. புற்று நோயால் இறக்கும் ஒவ்வொரு நோயாளியும் தனது கடைசி நிமிடம் வரை துன்புறாமல் அமைதியாக இறக்கவேண்டும் என்பது காப்பகம் நடத்துவதன் நோக்கம் என்று சொல்லப்படுகிறது. அந்த காப்பகத்திற்கு கொண்டு வரப்படும் நோயாளிகள் அதிக பட்சம் ஒருமாதம் இரண்டு மாதம் உயிர் வாழ்ந்தால் அதிகம், சிலர் மூன்று மாதங்கள் ஆறுமாதங்கள் கூட நன்றாக சாப்பிட்டு உயிர் வாழ்ந்து இறந்து போவதுண்ட்ரென்று கேள்விப்பட்டோம்.

பெரும்பாலான நோயாளிகளின் இறுதிச் சடங்குகளை அவர்களே செய்வதால் காப்பகத்தின் பின் புறம் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடம் உள்ளது, காலையும் மாலையும் ஜெபம் பாட்டு [ரோமன் கத்தோலிக்க கிறிஸ்த்தவர்களின் முறைப்படி] தவறாமல் நடத்தப்படுகிறது. கன்யாஸ்திரீகள் மட்டுமே அங்கு உள்ளனர் பாதிரியார் வந்து போவதுண்டு, மருத்துவர் வாரம் இருமுறையோ தேவைப்படும்போதோ வந்து செல்வதாக கூறப்படுகிறது. சமூக சேவகிகள் அங்கு வருவதில்லையென்றாலும் அவர்கள் மூலம் அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் உண்டு.

தாயாரை அங்கு அனுமதித்தப் பின்பு நான் அங்கு சென்று அவர்களை பார்த்து வருவது வழக்கமாகியது, அப்போது அங்குள்ள மற்ற நோயாளிகளையும் பார்க்க நேரும் போது அவர்களைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் என்னுள் எழுவதுண்டு,
தாயார் படுத்திருந்த கட்டில் இருந்த அறையில் மொத்தம் நான்கு கட்டில்கள் அவற்றில் தாயாரின் படுக்கையின் அடுத்த கட்டிலில் இருந்த பெண்ணுக்கு சுமார் நாற்ப்பது வயதிருக்கும், நுரையீரலில் புற்றுநோய் அவர் சுவாசிக்க மிகவும் அவதியுற்றுவந்தார். அவரது வீட்டார் அடிக்கடி அவரை பார்ப்பதற்கு வந்து சென்றனர். தாலிக்கயிருகள் செய்வது அவர்களது குடும்பத்தொழிலாம், அதற்காக பெரிய பாத்திரங்களில் மஞ்சள் போன்ற பொடியை தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கொதிக்கும் நீரில் கொட்டி கயிறுகளை போட்டு ஊறவைப்பாராம், அந்த கெமிகல் துகள்கள் அவர் சுவாசிக்கும்போது நுரையீரலை தாக்கியிருக்ககூடும் என்று நான் என் மனதிற்குள் நினைத்துகொண்டேன்.

அவரை கவனித்துக்கொள்ளும் அவரது உறவினரின் மூலம் நான் அறிந்து கொண்ட தகவல்கள், யாராவது வேலைக்காரர்களை வைத்து ஏன் அந்த கலவையை உண்டாக்கியிருக்கக் கூடாது என்று நான் அந்த பெண்ணிடம் கேட்டேன் அதற்கு அந்த பெண்சொன்ன பதில் நமது நாட்டில் கலாச்சாரம் என்ற பெயரில் நடக்கும் அறியாமைகளை எண்ணி என்னை வேதனையடைய வைத்தது, சுமங்கலி பெண் அதிலும் அந்த குடும்பத்திற்கு வந்த லட்சுமிதான் அந்த கலவையை கலக்க வேண்டும் என்று சொன்னார்.

ஒரு வாரத்திற்குப் பின்னர் நான் அங்கு சென்ற போது அவரது கட்டில் காலியாகிவிட்டிருந்தது, அடுத்தவர் ஐயங்கார் வகுப்பைச் சேர்ந்த எண்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டி, அவரது சொந்த ஊர் தென் தமிழகம் என்று சொன்னார், அவரிடம் அவரைப்பற்றி விசாரித்தபோது அவரது மகன் ஆஸ்த்ரேலியாவில் மனைவி பிள்ளைகளுடன் வசதியாக வாழ்வதாக சொன்னார், அவரது கணவர் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் சொத்துகள் நிறைய இருந்ததால் அவற்றின் மூலம் தனது மகனை நன்றாக படிக்கவைத்ததாகவும் ஒரு மகளை திருமணம் செய்த ஒருசில ஆண்டுகளில் அவரது மருமகன் சொத்துக்களை தன் பெயருக்கு எழுதி தரும்படி வற்புறுத்தி மகளை தொல்லை கொடுத்து வந்ததால் மகளும் அவளது இரண்டு பெண் குழந்தைகளுடன் தன்னுடன் வந்து தங்கிவிட்டதாகவும் சொன்னார்.

கர்பப்பையை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னார் ஆனால் அவரது உடன் படித்த மருத்துவர் சென்னையில் இருக்கிறார் அவரை போய் பார்க்கச் சொல்லி சென்னைக்கு அனுப்பிவிட்டார், சென்னையில் பெண்மருத்துவரை சந்தித்தபோது அவர் ஆபரேஷன் வேண்டாம் என்று சொல்லி புற்றுநோய் காப்பகத்திற்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டதாக சொன்னார். தனது மகளுடன் அந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து ஒரு மாதம் இருக்கும் என்றும் தனது மகள் வந்து தன்னை பார்க்க இயலாது என்றும் சொன்னார்.

அடுத்தமுறை மருத்துவமனைக்கு சென்ற போது அந்த பாட்டியின் முகத்தில் மாறுதல் தெரிந்தது, அவரிடம் பேசுவதற்கு சென்ற போது அந்த பாட்டி சொன்னார், அவரது காதில் அணிந்திருந்த வைர தோடுகளை கன்யாஸ்திரீ அவிழ்த்து எடுத்துவிட்டார், எதற்கு அவிழ்த்து விட்டார் என்று நான் கேட்டேன், நான் உட்பட மற்றவர்கள் யாராவது அவரிடம் நெருங்கி பேசும்போது அதை அவிழ்த்து எடுத்துச் சென்றுவிடக் கூடும் என்று அந்த பாட்டியிடம் சொனார்களாம், அந்த பாட்டியை அங்கு சேர்த்த மருத்துவரோ மகளோ வந்தால் அவர்களிடம் அந்த தோடுகளை கொடுத்துவிடபோவதாக சொன்னார்கள் என்று என்னிடம் சொன்னார்.

ஏற்கனவே அப்படிப்பட்ட திருடர்கள் அங்கே வந்திருக்கக் கூடும் என்று அப்போதுதான் எனக்கு தோன்றியது. அடுத்ததாக படுத்திருந்த ஒரு எலும்புகூடு ஆணா பெண்ணா என்று கூட சொல்ல இயலாத அளவிற்கு இருந்த உருவம், விசாரித்த போது அந்த பெண் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த டாப் ராங்கர், படிப்பில் எப்போதுமே முதலிடமாம் கஞ்சி மருந்து போன்றவற்றை வேறு வழியாக குழாய் மூலம் ஊற்றுகின்றனர். அவரது பெற்றோருக்கு முதல் குழந்தை, கடந்த ஒரு வருடமாக அவரது உடல் நிலையில் பல இன்னல்கள் ஏற்பட்டு இறுதியில் அந்த நிலைக்கு வந்துவிட்டதாக கேள்விபட்டேன்.

தாயாரை அங்கு சேர்த்த இருபது நாட்களில் அவரது கண்கள் திறக்கவே இல்லை, நாம் அவரை பார்க்க போவது அவருக்கு தெரிகிறதா என்பதைக் கூட தெரிந்துகொள்ள இயலவில்லை. தாயார் பூமியில் வாழும் கடைசி நாட்கள் அவை என்பதும் மருத்துவர் குறித்துக்கொடுத்த தேதி நெருங்குவதும் நினைவில் இல்லாமல் போனது ஏனோ தெரியவில்லை, ஒரு நாள் வீட்டிற்க்கு செய்தி வந்தது அம்மா இறந்து போனார் என்று. அவரது உடலை எடுத்துவந்து நல்லடக்கம் செய்தாகியது.

புற்றுநோய் காப்பகத்தின் பின்புறமிருந்த சிறிய இடத்தில் எத்தனை பிணங்களை புதைக்க முடியும், கன்யாஸ்த்ரீகள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள், யாருக்கும் தமிழ் தெரியவில்லை, எனக்குத் தெரிந்த ஒரு ரோமன் கத்தோலிக்கர் என் தாயாரை பார்க்கச் சென்றிருந்த போது அவர்களது கத்தோலிக்கப் பிரிவைப் பற்றிய விவரங்களை விசாரித்திருக்கிறார், அவர்கள் கூறும் பிரிவு என்று ஒரு பிரிவு கத்தோலிக்கர்களில் கிடையவே கிடையாது என்று என்னிடம் சொன்னது எனக்கு நினைவிற்கு வந்தது. அப்படி என்றால் அவர்கள் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்களா, எதற்காக வேஷம் போட்டுக் கொண்டு காப்பகம் நடத்த வேண்டும், வெளிநாடு வாழ் இந்திய பணக்காரர்கள் பலர் நன்கொடை அளிப்பதாக அங்கிருக்கும் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாரிசுகள் இல்லாத சில வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது சொத்து அல்லது பணத்தை அந்த காப்பகம் நடத்துவதற்க்கென்று கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

யாரோ சிலருக்கு காப்பகத்தின் மூலம் வருமானம் கிடைக்கக்கூடும் என்ற சந்தேகம் தோன்றுகிறது, அது மட்டுமில்லாமல் நிராகரிக்கப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட சில புற்றுநோய்க்கான மருந்துகளை அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு கொடுக்கக் கூடும் என்ற சந்தேகமும் உள்ளது, புற்று நோய்க்கு கண்டு பிடிக்கப்படும் சில புதிய மருந்துகளை அங்கு வரும் நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை செய்யும் வாய்ப்புகளும் உண்டு. எலும்புகள் தேவைப்படும் வியாபாரிகளுக்கு விற்கவும் வாய்புகள் அதிகம் உண்டு. தாயாருக்கு தனது கடைசி சில நாட்கள் புகலிடம் கொடுத்த காப்பகத்தை குறை சொல்வது நியாயம் இல்லை ஆனால் வீட்டிலும் மருத்துவ மனையிலும் வைத்து கவனிக்க இயலாமல் போனதும் வேறு வழியின்றி காப்பகத்திற்கு கொண்டு செல்லும் நிலை ஏற்ப்பட்டது, தாயாருக்கு தேவைப்படும் போது குடிக்க தண்ணீர் கொடுப்பதற்கு அங்கே உதவிக்கு யாரும் இல்லாமல் 'தண்ணீ தண்ணீ ' என்று அவர்கள் தவித்துகொண்டிருந்த சமயம் சரியாக நான் அங்கு சென்றேன்,

இன்று நினைத்தாலும் மனம் உடையும் வேதனைகள் நீங்காத நினைவுகளாய் நின்று என் மரணம்வரை வேதனை செய்யும்.