Translate

3/08/2010

பெண்ணின் உண்மை நிலை என்ன?

இன்றைக்கு பெண்கள் மிகுந்த முன்னேற்றம் கண்டிருப்பதாக சிலர் சொல்லி கொள்வது, பெண் தன் உரிமையை தான் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றவர் கொடுப்பதில் இல்லை என்றும் சொல்லி கொள்கின்றனர். பெண்களை சக மனித இனமாக பார்க்கும் பெரிய மனதுடையோர் மட்டுமே இப்படி சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள், இவர்களின் மொத்த விழுக்காடு எவ்வளவு என்று கணக்கெடுப்பு ஒன்றை நடத்திப்பாருங்கள் அப்போது பெண்களின் இன்றைய உண்மை நிலை என்ன என்பது விளங்கும்.

பெண் என்பவளை தெய்வமாக பார்க்கும் தேசத்தில் பெண்ணுக்கெதிரான பல வன்முறைச் செயல்களும், ஈவ் டீசிங், வரதட்சிணைக் கொடுமைகளும் நடந்துக் கொண்டு இருக்கிறது, நதியை பெண் தெய்வமென்போம், தாயை தெய்வமென்போம், தேசத்தை கூட பெண் தெய்வமென்கிறோம், ஆனால் பெண்ணை மட்டும் ஏன் சக மனுஷியாகக் கூட ஏற்க மறுக்கிறோம்?, போகப் பொருளாக்கி மகிழ்வுறுகிறோம், வேசியாக்கி உறவு கொள்கின்றோம், பிள்ளை பேற்றின் கருவியாக்கி பூரித்துப்போகிறோம்.

சம உரிமைகளைப் பற்றி பேச்சு அளவில் மட்டுமே நிற்கின்ற சுதந்திரம், 33% இட ஒதுக்கீடு கொடுக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது கேள்விக்குறியே. ஆணைபோன்று பெண் உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொண்டு தெருவில் நடக்க முடியுமா, பெண்போலீசுக்கு துணைக்கு ஆண் போலீசு தேவைப்படுகிறதே பிறகென்ன சம உரிமை என்று கேட்க்கும் மேதாவிகள் நிறைந்து கிடக்கும் நாட்டில் பெண்ணுரிமையைப் பற்றி பேசுவது அநாகரீகம்.

தற்காப்பு கலைகளை கற்று கொடுத்தால் பெண்ணுக்கு பாதுகாப்பு என்று நம்மை எச்சரிக்கை செய்வது எது?, நகையணிந்து தனியே வீதியில் செல்லாதே, ஆணைப் போன்ற உடை அணியாதே, ஆண்களை கவரும் வண்ணம் உடையணியாதே, இருட்டில் தனியாக வீதியில் நடக்க இயலாத சூழல், குறித்த நேரம் தவறி தாமதித்து வீட்டிற்கு திரும்பாதே. இத்தனை கட்டுபாடுகள் பெண்ணிற்கு உள்ளது எதனாலே?

இன்னும் நாம் ஆதிகால மனிதர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதற்கு இவற்றைவிட என்ன சான்று வேண்டும். நாகரீகம் என்பதின் அர்த்தம் நமது அகராதியில் வேறாக உள்ளதே அதன் காரணம் என்ன?, படித்ததினால் நாம் எவற்றை கற்றுக் கொண்டோம்? எதற்காக படித்தோம், வேலைக்கு சென்று கோடிகளை புழங்குவதற்கு மட்டும் தானா, படிப்பறிவு நம் சமுதாயத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்ப்படுத்தி உள்ளதற்கு சான்றுகள் பங்களா அல்லது வீடு கார் நிலங்கள், வங்கியில் சேர்மானம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுதல் படிப்பினால் ஏற்படுகின்ற சமுதாய மாற்றம் என்று சொல்லிக் கொள்வோமா. சூரிய சந்திர கிரணங்களில் சாப்பிடாதே, குளித்து கோவிலுக்குச் சென்று கும்பிட்ட பிறகு சாப்பிடு, இப்படி பலவற்றை கடை பிடிக்கின்றோம், படித்ததினால் எதை கற்றுக்கொண்டோம்?

கற்றுகொண்டவற்றை ஏற்க மறுக்கின்றோம்? கடைபிடிக்க தவிர்க்க காரணம் என்ன, ஜீன் பான்ட்டும் டி ஷர்ட்டும் காலில் ஸ்போர்ட்ஸ் ஷூவும் அணிந்து கொண்டு அல்லது சூட்டும் கோட்டும் டையும் உடுத்திக்கொண்டு வெள்ளைக்காரனைப்போல ஆங்கிலம் பேசி அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவரை திருமணம் செய்துகொள்வதை நாம் நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பில் நிற்பதாக அர்த்தம் கொள்ளலாமா? வேறு எதைத்தான் நாகரீகம் என்று நாம் புரிந்து வைத்திருக்கின்றோம்?

காலப்போக்கில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படலாம் என்று இன்னும் பல நூற்றாண்டுகள் காத்திருங்கள் பெண்களே, சுதந்திரம் கிடைத்தாலும் கிடைக்கலாம்.