Translate

2/16/2010

எளிய நடைபோதும் காமத்தை வாசகர் மீது திணிக்காதீர்கள்

பல எழுத்தாளர்களின் வசீகர எழுத்துகளால் கவரப்பட்டு எனது மானசீக குருக்களாக அவர்களை ஏற்றுக் கொண்டுள்ளேன், அவர்களது படைப்புகள் என்னையும் எழுத வைத்துள்ளது என்பது உண்மை, அந்த வரிசையில் திருவள்ளுவர், அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் சுரதா, பாரதிதாசனார், பாரதியார், அகிலன், கல்கி, கண்ணதாசன், லக்ஷ்மி, சுஜாதா, வாஸந்தி, வைரமுத்து, இன்னும் பலர்.

இவர்களின் எழுத்தாற்றலின் அருமையை பற்றி ஓரிரு வரிகளில் விளக்குவது இயலாத காரியம், ஒவ்வொருவரிடமும் காணப்படும் எழுத்தின் சாமர்த்தியம், இடத்திற்கேற்ப அவற்றை கையாளும் விதமும் என்னை போன்ற பல கோடி வாசகர்களை கவர்ந்திருப்பது மறுக்க முடியாத உண்மை, இவரைப்போல என்னால் பாட முடியும் இவரைப்போல என்னால் பேச முடியும் இவரைப்போல என்னால் நடித்துக் காண்பிக்க முடியும் என்று செய்து காண்பித்தவர் உண்டு, ஆனால் இவர்களைப் போல எழுதிக் காண்பிக்கிறேன் என்று இதுவரை ஒருவராலும் செய்து காண்பிக்க முடியாதபடி தனித்துவம் பெற்ற எழுத்துக்கு சொந்தகாரர்கள் இவர்கள்.

இதுவரையில் எழுதப்பட்டுள்ள அத்தனை இலக்கிய நூல்களும் அப்படிப்பட்டவைதான் என்பதில் இருவேறு கருத்து இல்லை, ஆனால் நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பல எழுத்தாளர்களை பற்றி எண்ணும்போது இவற்றின் சிறப்பு வேறுபடுவது உண்மை. வருங்கால எழுத்துக்கள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் போது புதுமை என்கின்ற பெயரில் விளங்கிக் கொள்ள இயலாத வகையில் எழுதுவதும், கொச்சைபடுத்தப் படுவதும்தான் புதுமை என்ற நிலைக்கு வருங்கால இலக்கியம் அமைந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

விரசமாக எழுதுவது என்பது பழம் நூல்களில் இல்லாமல் இல்லை என்றாலும் அதில் விரசம் வெளிப்படையாகத் தெரிவது இல்லை, ஆண் பெணின் லௌகீக வாழ்க்கையைப்பற்றிய குறிப்புகள் பழைய நூல்களில் ஏராளமாக இருப்பினும் அவற்றை படிப்பவரின் காம உணர்ச்சிகளை உசுப்பி விடுகின்ற விரசம் அவற்றில் இல்லை. காமம் என்பதும் மனிதனின் உணர்ச்சிகளில் ஒன்றுதானே அதற்க்கு மட்டும் எதற்கு ஒளிவு மறைவு என்று நினைத்து, புதுமையை புகுத்துகிறோம் என்ற வகையில் எழுத்துக்கள் எழுதப்படுமாயின், அது காமத்தை கிளருமே தவிர காமத்தின் இயல்புநிலைக்கு நம்மை பழக்கபடுத்திக் கொள்ள இடம் கொடுக்காது.

காமம்
இல்லாத காதல் இல்லையென்பது சிலரது கருத்து, காமத்தை மீறிய உன்னத காதல்கள் உண்டென்பதை மறுக்க முடியுமா, இன்றைய கதைகளை வாசிக்கின்ற வாசகர்களுக்கு அவற்றை விளங்கிக்கொள்ள முடிகிறதா என்பது சந்தேகம், அப்படி எழுதுவதே புதுமை என்றால் எங்கே சென்று முட்டிகொள்வது. சாதாரண வாசகர்களும் புரிந்துக்கொள்ள முடிந்த எளிய தமிழில் சாதாரண கருவாக இருந்தாலும் அதை சொல்லும் விதத்தில் தானே ஒரு நல்ல எழுத்தாளனை வாசகன் அடையாளம் கண்டுகொள்ள முடியும்,

இருபது வரிகளில் கதை சொல்லி கைதட்டல் வாங்க நினைப்பது புதுமை என்றால், அதற்க்கு மேலே எழுத தெரியவில்லை என்று அர்த்தம் கொள்வதா, அல்லது புதுமை என்று பெருமைபட்டுக் கொள்வதா, புதுமை என்னும் பெயரில் குழப்புவதும், புதுமை என்ற பெயரில் இருபதுவரிகளில் கதை எழுதுவதும், காமத்தை உள்ளதை உள்ளபடி எழுதுகிறேன் என்று எழுதி வாசகரின் காம உணர்வுகளுக்கு துணை போவதும் புதுமை என்றால், அப்படிப்பட்ட எழுத்தை புறக்கணிப்பதை தவிர செய்வதற்கு வேறு ஒன்றும் இல்லை.

மரபுக் கவிதைகளைவிட நான் புதிய கவிதைகளையே அதிகம் விரும்புகிறேன், இதற்க்குக் கரணம் இலக்கணம் அறியாதவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் அழகாக சொல்லும் கருத்தினை எளிய நடையில் சொல்வதால்தான், உடல் உறவுகளைப் பற்றி எழுதுவதில் தவறொன்றும் இல்லை, ஆனால் அதுவே எழுத்தாகிவிடும் போது கதையோ கவிதையோ ரசிக்க இயலாமல் எழுதுபவர் காமத்தை தூண்ட முனைவதை ஏற்றுக்கொள்ள இயலுவதில்லை. காமம் என்பதை கதைகளினூடேயும் கவிதையின் மூலமும் துண்டப்படுவதை நான் எதிர்கின்றேன்.

எனக்கு சிறுகதை எழுத கற்று தந்த அல்லது உக்கம் கொடுத்த என் மானசீக ஆசானின் கதைகள் கட்டுரைகள் மற்றும் சிறுகதைகளை படித்தால் போதும் என் எழுதுகோல் தானே எழுதத் துவங்கிவிடும். என் சிறுகதைகள் அத்தனையையும் நான் சமர்ப்பிப்பது என் மானசீக ஆசானுக்கே.