Translate

2/24/2010

கதைகதையாம் காரணமாம்

நாய்களின் அழுகையைப் பற்றிய ஒரு கட்டுக்கதை சொல்லப்படுவது உண்டு. நாய்கள் அழுவதை ஊளையிடுகிறது என்று சொல்லுகிறார்கள், நாய்கள் அழுதால் யாராவது இறந்துவிடுவார்கள் என்று நம்புகின்றனர், அதுமட்டுமில்லாது கெட்ட ஆவிகளைப் பார்த்து நாய்கள் ஊளையிடுகின்றன என்றும் நம்புகின்றனர். பல ஆராய்ச்சிகள், அவைகளின் செயல்களுக்கான காரணங்களை பற்றிய பல புத்தகங்கள் உள்ளன, அவற்றில் நாய்கள் எப்போது எதற்காக அழும் என்பதைப்பற்றி விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது,

வீடுகளில்
வளர்க்கும் நாய்கள் அழுகின்ற போது அவைகள் பெரும்பாலும் கட்டி வைதிருப்பதனாலேயோ அல்லது அடைத்து வைத்திருப்பதனாலேயோ அழுது தனக்கு அதிலிருந்து விடுபட்டு வெளியே வருவதற்கு அவற்றின் உணர்வை பிறர் அறிந்து உதவுவதற்காக அவைகள் அழுகின்றன. நாய்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த இயற்கையில் அவைகளுக்கு கொடுக்கபட்டிருக்கும் செய்கைகளில் அழுவதும் ஒன்று. தெரு நாய்கள் அழுதாலும் அதற்க்குக் காரணம் அவை தனது தேவை ஏதோ ஒன்று பூர்த்தி பெறாமல் இருப்பதனாலோ, உபாதைகளிலானோ அழுகை மூலம் அவற்றை வெளிபடுத்துகிறது. ஆனால் பலர் நாய் அழுதால் தீமைக்கு அறிகுறி என்றும், பேய் மற்றும் அசுத்த ஆவிகளின் நடமாட்டத்தை உணர்த்துவதற்கு அழுவதாக புனைவு கதைகளை தலைமுறை தலைமுறையாக சொல்லிவருவது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் அவர்களின் அறியாமையை நினைத்து சிரிப்புத்தான் வருகிறது.சுவற்றில் காணப்படும் பல்லி சத்தமிட்டால் வீட்டிற்கு நல்லது அல்லது நினைக்கும் காரியம் நடக்கும் என்று நம்புகின்றனர், பல்லியை கெவுளி என்று குறிப்பிடுகின்றனர், 'கெவுளி வாக்கு பலிக்கும்' என்ற மற்றொரு நகைச்சுவையான நம்பிக்கையும் காலம் காலமாக இருந்து வருகிறது, சுவற்றிலிருக்கும் பல்லியை கடவுளின் அவதாரமாகவே நினைப்பவர்களும் ஏராளம் உண்டு, சுவற்றிலிருக்கும் பல்லிக்கு நாம் நினைக்கின்ற காரியம் நடக்குமா நடக்காத என்று முன்கூட்டியே அறிந்திருக்கும் வாய்ப்பு எங்கிருந்து கிடைக்கும் என்பதைப்பற்றி யாரும் யோசிப்பதே கிடையாது, காரணத்தை அறிந்து கொள்ள விரும்பாதவர்கள் காரியத்தை மட்டும் சிந்திக்காமல் நம்புவதை மூடத்தனம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்லுவது. பல்லி சாஸ்த்திரம் என்பது பல்லி ஒருவரின் உடலின் எந்த பாகத்தில் விழுகிறது என்பதைப்பற்றிய கணிப்பு என்று நம்பப்படுகிறது, காலம் காலமாக இருந்துவரும் ஒரு நம்பிக்கை, இது ஆதரமில்லாததாக இருந்தாலும் மக்கள் இதையும் நம்புகின்றனர்.

நான் வெளிநாட்டில் என் கணவருடன் இருந்த சமயத்தில் என் கணவருக்குத் தெரிந்த தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரின் குடும்பத்தினர் எங்களுடன் சிலகாலம் தங்கி இருந்தனர், அவருடைய மனைவி அதிகம் படிக்காதவர், அவர் சமையல் செய்யும் போது என்னிடம் சொல்வது, அவர்கள் ஊரில் சமையல் சுவையாக சமைப்பதற்கு பாம்பை கைகள் இரண்டிலும் வருடி அல்லது தொட்டிருக்கவேண்டும் என்பார், உயிரோடு இருக்கும் பாம்பை இரண்டு கைகளினாலும் தடவினால் தான் சமைக்கும் உணவு வகைகள் மிகவும் ருசியாக சமைக்கமுடியும் என்பார். அவர்கள் ஊரில் எல்லோருமே அதை நம்புவதாகவும் சொல்லுவார். எனக்கு அவரின் நம்பிக்கையை நினைத்து சிரிப்பு வரும், அவர்களுடைய நம்பிக்கையின்படி சமையல்காரர்கள் எல்லோருமே ஏற்கனவே பாம்பாட்டிகளாக இருந்திருக்கவேண்டும் என்று தோன்றும், அதை நினைத்து எனக்கு சிரிப்பு வராமல் வேறு என்ன வரும்.
குழவி வீட்டில் கூடு கட்டினால் அந்த மண்ணை உடைத்துவிடக் கூடாது என்றொரு நம்பிக்கை, வீட்டின் சன்னல்களிலும் வாயிற் நிலைகளிலும் குழவிகள் ஈரமண்ணில் கூடு கட்டும், அதை உடைத்தால் குழந்தை பிறக்காது என்பது எப்படி சாத்தியமாகும் என்பது புரியவில்லை, எந்த உயிரினத்தையும் அழிப்பது கூடாது என்பதற்காக கூட்டின் உள்ளே குழவியின் முட்டைகளோ புழுக்களோ இருக்கும் போது அந்த கூட்டை சிதைப்பது சரியானது இல்லைதான், அந்த கூடுகள் வெறுமனே பூச்சிகளே இல்லாமல் இருக்கும்போது அதை உடைத்தெரிவதினால் குழந்தை பிறப்பது எப்படி தவறிப் போகும் என்பது விளங்காத ஒன்றாகவே உள்ளது.
மனிதர்கள் புறப்பட்டு வெளியே போகும்போது குறுக்கே பூனை ஓடினால் வீட்டிற்க்குத் திரும்பிச் சென்று சிறிது தண்ணீர் குடித்துவிட்டு மறுபடியும் வெளியே செல்லுகிறார்கள், வெளியே போகும் போது குறுக்கே பூனை போனால் போகின்ற இடத்திலே காரியம் நன்மையில் முடியாது என்பது பலரது நம்பிக்கை, கறுப்புப் பூனையை வளர்த்தால் காத்து கருப்பு வீட்டில் அண்டாது என்போர் பலர்.
ஆனால் இவை அனைத்திலுமே மூட நம்பிக்கைகள் உள்ளது என்பதை அறிந்த பின்னும் பழையவற்றிலிருந்து மீள முடியாமல் பழக்க வழக்கங்களை விட முடியாமல் பழமையில் வாழ்ந்துகொண்டு நடை உடையில் மட்டும் மேனாட்டு கலாசாரத்தை பின்பற்றி வாழ்ந்து வருபவர்கள் இன்றைய காலகட்டத்தில் எங்கும் உள்ளனர்.

நரி முகத்தை பார்த்துவிட்டு சென்றால் காரியம் விருத்தியடையும் அல்லது வெற்றி கிடைக்கும் என்றும் நம்பி வருகின்றனர், நரி காடுகளில் வாழும் மிருகம், இதை பார்த்துவிட்டு போனால் ஜெயம் கிடைக்கும் என்றால், தற்காலத்தில் நரி போன்ற மனிதர்களைத்தான் பார்த்துவிட்டு போக முடியும் காட்டிலுள்ள விலங்கை எங்கிருந்து பார்ப்பது, யாருக்காவது போன காரியம் வெற்றியடைத்தால், நரி முகத்தில் முழித்தாயோ என்ற பழமொழி சொல்லபடுகிறது. இன்னும் ஏராளமான வினோதமான அடிப்படையற்ற நம்பிக்கைகள் நமது நாட்டில் இன்னும் நம்பப்படுகிறது என்பது கேட்பதற்கு சற்று வருத்தமாகவும் உள்ளது.

ஆனால் இந்த மிருகங்களும் பூச்சிகளும் மனிதனைக் கண்டுதான் ஓடி ஒளிந்து வாழ்ந்துவருகிறது என்பது மட்டுமே நிஜம்.