Translate

2/19/2010

எப்படியும் சம்பாதிக்கலாம்

சரவணனுக்கு திண்டிவனத்தை அடுத்திருக்கும் ஒரு சிறிய கிராமம், அவனது நண்பனொருவன் சென்னையை அடுத்திருந்த ஆதம்பாக்கத்தில் தங்கி சென்னையில் வேலைபார்த்துக் கொண்டிருப்பதாக சொன்னது நினைவிற்கு வந்தது. நண்பன் சண்முகமும் திண்டிவனத்தை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன், இருவரும் திண்டிவனத்திலிருந்த ஜோசப் உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது சரவணனுக்கு பழக்கம். கிராமத்திலிருந்த நிலத்தில் விளைச்சலுக்கு பல தட்டுப்பாடுகள் ஏற்பட்டதாலும், நிலத்தடி நீர் குறைந்து போனதாலும் அந்த கிராமங்களில் இருந்து பெரும்பாலானோர் சுற்றியுள்ள நகரங்களில் வேலைத் தேடும் சூழல் உருவானது,

சண்முகம் எங்கு என்ன வேலை செய்கிறான் என்பது தெரியாது என்றாலும் அவன் குடும்பத்தாருக்கு அவன் மூலம்தான் வருவாய். சண்முகத்தை பார்த்தால் தனக்கும் ஏதேனும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்வான் என்ற நம்பிக்கையில் சரவணன் கிளம்பி அவன் தங்கியிருந்த ஆதம்பாக்கம் விலாசத்திற்கு வந்து பார்த்தபோது அவனது அறை கதவில் பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது, அருகே இருந்த வீட்டில் அவனைப்பற்றி விசாரித்தபோது அங்கிருந்த நடுத்தர வயது நிரம்பிய பெண் தெரியாது என்று சொல்லிவிட்டார்.

வேறு வழியின்றி சற்று தூரத்திலிருந்த ஒரு பெட்டிக்கடை வாசலில் நின்று காத்திருந்தவனை, கடைகாரர், யாரை பார்க்கவந்தீங்க என்று கேட்கிறார். அப்போது அவன் அந்த வீட்டை காண்பித்து அதில் தங்கியிருக்கும் சண்முகம் என்ற தனது நண்பனை சந்திக்க வந்திருப்பதாக சொல்கிறான். கடைக்காரர், அந்த வீட்டில் தங்கி இருப்பவரை இதுவரையில் தான் பார்த்ததே இல்லை என்று சொல்லுகிறார்.

இரவு ஒன்பது மணிவரை பெட்டிகடையில் காத்திருந்துவிட்டு பூட்டி இருந்த வீட்டின் அருகே வந்து உட்கார்ந்து கொண்டான் சரவணன். வீட்டின் பின்புறத்திலிருந்த வீட்டின் சொந்தக்காரர் அவனிடம் விசாரித்துவிட்டு தானும் அவனை பார்ப்பதே இல்லை என்று சொல்லுகிறார். இவர்களின் கூற்றுப்படி தான் தேடிவந்த சண்முகம் அங்குதான் தங்கி இருக்கிறானா என்பது சரவணனுக்கு கேள்விக்குறியானது. அந்த வாசலிலேயே இரவு படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்து தன் ஊருக்குத் திரும்பி போய்விடலாம் என்று நினைத்துக்கொண்டே அன்று காலை வாங்கிய ஒரு தினசரியை விரித்து போட்டு படுத்தான்.

தெரு நாய்கள் குரைத்த சத்தத்தில் சரவணன் விழித்துகொண்டான், தூரத்து தெருவிளக்கில் யாரோ வேகமாக நடந்து வருவது தெரிந்தது, வந்த உருவம் தன்னை நோக்கி வருவதை கண்டு சிறிது குழப்பமடைந்தான் சரவணன், இருட்டில் முகம் தெரியவில்லை, பூட்டிய கதவைவிட்டுச் சற்று ஒதுங்கி நின்றுகொண்டான், அங்கு வந்த உருவம் பூட்டிய கதவை திறக்க முயற்ச்சித்தது, கதவு திறக்கவில்லை, அந்த உருவத்தின் அருகே சென்று 'யாரது' என்றான், அந்த உருவம் கதவைத் திறப்பதை சட்டென்று நிறுத்திவிட்டு சரவணின் முகத்தில் ஓங்கி குத்தியது, குத்திய கையை இருக்க பிடித்துகொண்டான் சரவணன், இருட்டில் இருவரும் மண்ணில் புரண்டனர்,

அவன் தன்னை சரவணனின் பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள போராடினான், டேய் நீ யார்டா, என்று கேட்டுகொண்டே போராடியபோது வந்தவன் எழுந்து வந்த வழியே
இருட்டில் ஓடினான், அவனைத் துரத்திக்கொண்டு சரவணனும் பின்னாலேயே ஓடினான், வந்தவன் ஓடி இருட்டில் மறைந்துவிட்டான். சரவணனுக்கு செய்வதறியாது இருட்டில் பூட்டிய கதவருகில் உட்கார்ந்துகொண்டான். அடுத்தநாள் காலை எழுந்து தன் பையை எடுத்துகொண்டு அங்கிருந்த பேருந்துநிலையத்தை வந்தடைந்தான், அருகே இருந்த கடையில் ஒரு தேநீருக்கு சொல்லிவிட்டு தண்ணீர் வாங்கி கொப்பளித்துவிட்டு தேநீரை குடித்துவிட்டு, மீண்டும் பேருந்து வரவை எதிர்நோக்கி காத்திருந்தான்,

வந்த பேருந்தில் ஏறி அருகிலிருந்த ரயில்நிலையத்திற்கு சீட்டு வாங்கி கொண்டு, கூட்டத்தில் நின்றிருந்தவன் மீது யாரோ ஒருவன் வேகமாக மோத, திரும்பி பார்த்த சரவணனுக்கு ஆச்சரியம், அது அவன் தேடி வந்த சண்முகம், 'டேய் ஷண்முகா, உன்னை தேடி தாண்டா வந்தேன்', '
என்னை எந்த விலாசத்துல தேடின', என்றான் லேசான கிண்டலுடன் சண்முகம், அவன் விலாசத்தை ஒப்பிக்க, 'இப்போ அங்கே நான் இல்லடா' , நேற்றிரவு நடந்ததை சரவணன் சொல்ல சண்முகம் சலனமற்று கேட்டுகொண்டிருந்தான். ஊரிலிருந்த நிலத்தில் விளைச்சல் இல்லை வேலை ஏதாவது கிடைத்தால் வாங்கிகொடுக்க உதவிகேட்டு வந்திருப்பதாக சண்முகத்திடம் தெரிவிக்கிறான் சரவணன்.

அன்று பகல் சுமார் காலை 11.30 அந்த தெருவில் இருபுறமும் பெரிய கட்டிடங்கள்,
வீடுகள் வரிசையாக இருந்தது, தெருவில் வாகனங்களும் பாதசாரிகளும் பரபரப்பாக இருந்தது, ஒரு இடத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு மூன்றுபேரும் ஒரு வீட்டின் கேட்டைத் திறந்துகொண்டு வீட்டின் உள்ளே சென்று அங்கு உட்கார்ந்து தொலைகாட்ச்சியில் எதையோ பார்த்துகொண்டிருந்த முதியவரின் வாயை ஒருவன் கைகுட்டையில் கட்டும்போது மற்றொருவன் இரண்டு கைகளையும் பின்னால் சேர்த்துக்கட்டி அங்கேயே உட்காரும்படி சொல்லிவிட்டு, மேலே மாட்டியிருந்த பீரோவின் சாவியை எடுத்து பீரோவைத்திறந்து ரூபாய் கட்டுகளையும் கிடைத்த வளையல் சங்கிலி போன்ற சில நகைகளையும் எடுத்துகொண்டு வயதானவரின் வாயில் கட்டியிருந்த கைக்குட்டையை எடுத்துவிட்டு வெளியே வந்து வீட்டின் கேட்டை மூடிவிட்டு சற்று தூரத்தில் நிறுத்தியிருந்த ஆட்டோவில் ஏறிக்கொண்டு ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு இடத்திற்கு சென்று, எடுத்துவந்த பணத்தை எண்ணியபோது முப்பதாயிரம் தேறியது, மூவரும் சமமாக பகிர்ந்துகொண்டு கிடைத்த நகைகளை விற்று அதையும் சமமாக பகிர்ந்து கொண்டனர்.

சரவணன் சண்முகத்திடம் 'டேய் நீ இந்த வேலைதான் பாக்கறேன்னு எனக்கு சொல்லவேயில்லையேடா', அதற்க்கு சண்முகம், 'ஏறி இறங்காத இடமில்லடா, எத்தனை ப்ரொடியூசர் கிட்ட கதைகள சொல்லறேன், ஒரு இடத்துலேயும் நல்ல பதில் கெடைகலியே
டா, எப்போ நான் நினைச்சமாதிரி நடக்கபோகுதுன்னு தெரியலியே அதுவரைக்கும் ஊர்ல என்னை எதிர்பார்த்துகிட்டிருக்கரவங்கள நான் காப்பாத்தியாகணுமே' என்று தனது செய்கைகளை நியாயப்படுத்தினான்.

சென்னையின் புறநகர் பகுதியி
ல் எத்தனை நாளைக்கு ஒளிஞ்சுகிட்டு வாழறது, ஒரு நாளைக்கு மாட்டிகிட்டா அவ்வளவுதான், பாவம் அந்த வயதான காது கேட்காத மனிதர், எதற்காக வைக்கபட்டிருந்த பணமோ, அவர்கள் வயிற்றெரிச்சல் நம்மை சும்மா விடுமா, சண்முகமும் அவனது கூட்டாளிகளும் இரவும் பகலும் முழுமூச்சாக வீடுகள், தனியாக தெருவில் போகும் பெண்களின் கழுத்துச் சங்கிலி, வங்கியிலிருந்து பணம் எடுத்துக் கொண்டு வருபவர்கள், பேருந்தில் எமாந்தவரின் பாக்கெட்டுகள், பர்ஸ், தர்பூசணிபழம் வித்துகொண்டிருந்த கிழவியின் பணம், என்று பிணம் தின்னி கழுகுகளைப்போல பணத்தை வட்டமிட்டுக் கொண்டிருந்தது சரவணனை திகிலடைய வைத்தது.

கையில் எத்தனை பணமிருந்தாலும் நிம்மதியே இல்லாத வாழ்க்கை, எப்போது யாரிடம் மாட்டிகொ
ள்வோமோ என்ற திகில், யாராவது தன்னை கவனிக்கிறார்களோ என்ற பதட்டம், சண்முகமும் அவனது கூட்டாளிகளும் நிறைய குடித்துவிட்டு நிறைய மாமிச உணவுகளை குடிபோதையில் அரைகுறையாக விழுங்கிவிட்டு, ஊரின் ஒதுக்குப்புறங்களில் முட்புதர்களிலும் பாம்புகளுடனும் பேய்களுடனும் நேரம் வேளை என்று இல்லாமல் தூங்குவதும் விழிப்பதும், உயிரை கையில் பிடித்துகொண்டு ஓடுவதும்........வேண்டாம் இந்த பணமும் வாழ்க்கையும், ஊரைவிட்டு வந்த பதினைந்து நாட்களில் அவர்களைப்பற்றி தெரிந்து கொண்டது போதும்....அவர்களுடன் தன்னால் ஒத்துபோக முடியாது.

'நான் ஊருக்கு போயிட்டு வரேண்டா சண்முகம்' என்று சொல்லிவிட்டு திண்டிவனத்தின் அருகே இருந்த தன் கிராமத்திற்கு புறப்பட்டான் சரவணன்.

சரவணனின் கிராமத்தில் அடுத்த தெருவி
ல் இருந்து ஆண்களும் பெண்களும் ஒரு கூட்டம் கட்டிடம் கட்டும் வேலைக்கு கிளம்பிகொண்டிருந்தது, அவர்கள் கூட்டத்தில் சரவணனும் சேர்ந்துகொண்டான்.