Translate

2/18/2010

இருபத்தேழு ஆண்டுகள் காணாமல் போனேன்

எண்பதுகள் துவக்கி கடந்த இருபத்து ஏழு ஆண்டுகள் நான் காணாமல் போனேன் என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள், ஆனால் உண்மை. எங்கே போனேன், நான் போனது எனக்கே தெரியவில்லை, யாரோ என் கண்களை கட்டி, நான் மயங்கி கிடக்க ஏதோ மருந்தை கொடுத்திருக்க வேண்டும், என் சுயநினைவே இல்லாமல் நான் இருபத்தேழு ஆண்டுகளை கடந்திருக்கிறேன்.

இருபத்தேழு ஆண்டுகளில் நான் பார்த்த உலகம் மிகவும் வித்தியாசமானது, ஏன் நான் கடத்தப்பட்டேன், இன்னொரு உலகை காண்பதற்கா, இருக்கலாம், பல விஷயங்கள் நம் வாழ்க்கையில் ஏன் எதற்கு நடக்கின்றன என்பதே எத்தனை யோசித்தாலும் புரிவதில்லை. திடீரென கடத்தப்படுவேன் என்பதை நான் முன்னமே அறிந்திருந்தால் அதை தவிர்த்திருக்க முடியுமா என்றால் ஒருபோதும் முடியாது.

பல நிகழ்வுகளை ஒருசமயம் முன்பே அறிந்துகொள்ள முடிந்தாலும் நம்மால் தவிர்க்க இயலாது, அதற்குப் பெயர் சிலர் விதி என்று சொல்லுகின்றனர், ஆனால் எனக்கு விதி என்ற ஒன்றைப் பற்றி தெரியாது, தெரிந்துகொள்ளும் ஆர்வமும் கிடையாது. ஒன்று மட்டும் நான் உறுதியாக நம்புகிறேன், நடக்க வேண்டியவைகள் நடந்தே தீருகிறது என்பதுதான் அது.

இப்போது நினைத்துப் பார்த்தால் எனக்கே ஆச்சரியமாகவும் பல சமயங்களில் விநோதமாகவும், இப்படியெல்லாம் நம்மையறியாமல் நம்மை எங்கெங்கோ இழுத்துக்கொண்டு போகும் அந்த 'சக்தி' எது என்று யோசிக்க வைக்கிறது. எல்லாமே திடீர் திடீரென்று நடந்து முடிந்தவைப் போல என் மனத்திரையில் ஒவ்வொரு நிகழ்வுகளும் சினிமா காட்ச்சிகளைப் போல தோன்றுகிறது.

கடந்த இருபத்தேழு ஆண்டுகளாக பத்திரிகைகளில், எழுத்தாளர்களின் எழுத்தில், புதிய எழுத்தாளர்களின் வரவு என்று எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை பார்க்கும்போது, இடைவெளியின் அளவை கண்டு என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. நான் இருபத்து ஏழு ஆண்டுகள் வாழ்ந்த உலகத்திற்கும் இந்த உலகத்திற்கும் சம்பத்தமே கிடையாது. அதற்காக அந்த இருபத்தேழு ஆண்டுகளை நான் வீணடித்துவிட்டேன் என்ற மனக்குறை எனக்கு கிடையவே கிடையாது. ஏனென்றால் எனது குடும்பம், குழந்தை வளர்ப்பு, என் பெற்றோரை பராமரித்தல் என்ற மிகப் பயனுள்ள நிகழ்வுகளுக்காகவே அந்த இருபத்து ஏழு ஆண்டுகளை என்னை நான் ஒரு துறவியைப் போல மாற்றிக்கொண்டு, அவர்களுக்காகவே வாழ்ந்து இருக்கிறேன் என்ற திருப்தி எனக்கு உண்டு.

ஆனால் அதே சமயம் நான் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகத்தில், சமுதாயத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை அறிந்துகொள்ளவோ, அதற்காக நேரம் ஒதுக்கவோ நான் முயலக்கூட இயலாத வகையில் முற்றிலுமாகவே என் ஒவ்வொரு நிமிடங்களைகூட கழித்திருக்கிறேன் என்பதை இப்போதுதான் என்னால் உணரமுடிகிறது. இடைப்பட்ட காலத்தில் வந்த புதிய திரைப்படங்கள், புதிய திரைப்பாடல்கள், புதிய இயக்குனர்கள், புதிய கதாசிரியர்கள், இன்னும் என்னென்வோ எனக்கு தெரியாமல் உள்ளது. அவற்றை தெரிந்துகொள்ளும் ஆவல் கூட எனக்கு அப்போது இல்லாமல் முழு நினைவும் குடும்பம் என்ற ஒன்றிலேயே நிலைத்திருந்துள்ளது என்பதை இப்போது நினைக்கும்போது எனக்கு என்னையே புதிதாக தெரிகிறது.

என் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நான் வாழ்ந்து சுகித்த தோட்டம் வீடு இன்னும் பல (திரையிசைப்பாடல்கள் திரைப்படங்கள் புத்தகங்கள்) என எல்லாவற்றையும் மறுபடியும் சென்று பார்க்க ஆசை, அப்படி சென்ற போது அங்கே அடுக்கு மாடி கட்டிடங்களும், நான் தனியே நின்று ரசித்த தோப்புகளும் மரங்களும் வெட்டப்பட்டு கட்டிடங்கள் நின்றுகொண்டிருப்பதை கண்ட போது நான் அங்கு போகாமலேயே இருந்திருக்கலாமே என்று வருந்தவைத்தது. அங்கே எத்தனை எத்தனை நிகழ்வுகள், இன்று நினைத்தாலும் அந்தநாள் இனி வராதா என்ற ஏக்கம்தான் எஞ்சி நிற்கிறது.

அங்கிருந்த செடிகளை என் மாணாக்கர்களா பாவித்து நான் அவர்களின் டீச்சராக பாடம் சொல்லி கொடுத்தது, புதிய செடிகளை நட்டு வைத்து அவற்றிக்கு நீர் ஊற்றி வளர்த்து பூக்கள் மலரும்போது அவற்றைகண்டு சந்தோஷமடைந்த நாட்கள், நான் அடைந்த சந்தோஷத்தை பார்க்கப் பிடிக்காத என் அடுத்த வீட்டு என் வயதையொத்த சில பெண்கள் இரவில் உள்ளே நுழைந்து அந்த செடிகளை பிடுங்கி எடுத்து எங்கோ எறிந்துவிட்டு பின்னர் 'இப்போ என்ன செய்வே' என்று என்னிடம் சண்டைக்கு வந்த நாட்கள், நான் வளர்த்த நாய்க்குட்டியைப் பிடித்துச் சென்று கொன்று போட்ட அடுத்த வீட்டு வில்லன்(பையன்கள்). அப்போது நான் அழுத தீரா அழுகை, என் வீட்டு சுவற்றில் என்னையும் வேறு பையனையும் படம் வரைந்து தப்பு தப்பாக தமிழிலும் ஆங்கிலத்திலும் 'கிசுகிசு' எழுதிய வில்லன்கள், [பையன்கள்].

சில டீச்சர்களின் தீராத தொல்லைகள், வீட்டுப்பாடம் கொடுத்துவிட்டு எழுதிவராதவர்களை வகுப்பிற்கு வெளியே நிற்க்கச்சொல்லும் வில்லி டீச்சர்கள், வீட்டுபாடம் எழுதிக்கொண்டு போனாலும் அதை வாங்கிகூட பார்க்காத அதே பிரகிருதிகள். பெயருக்கு பாடம் நடத்திவிட்டு மாணவர்கள் சரியாக படிக்கவில்லையென்று பொய்சொல்லி மாதம் தவறாமல் சம்பளம் வாங்கிய சில பள்ளி டீச்சர்கள், கல்லூரியில் ஆங்கிலமே தெரியாது அவஸ்தைப்படும் சில லெக்சரர்கள், எங்கிருந்தோ அரைகுறையாக நோட்ஸ் எடுத்துகொண்டு வந்து பாடத்திற்கும் சிலபஸூக்கு பொருந்தாத எதையோ தப்பும் தவறுமாக சொல்லி கல்லூரி வாழ்க்கையை நரகமாக்கிய அறிவு ஜீவிகள். கிளாசில் தன் வகுப்பிற்கு வரும் மாணவிகளைக் கூட தெரிந்து வைத்திராத பேராசிரியர்கள்.

நோட்ஸ் எழுதி கொடுக்கச் சொல்லி தொல்லை கொடுக்கும் கல்லூரி (சோம்பேறி) தோழி, நோட்ஸ் காபி செய்துவிட்டு திருப்பி தருகிறேன் என்று வாங்கிகொண்டு போய்விட்டு, திருப்பி கொடுக்காத fraudகள், கேட்டால் 'நான் எப்போது உன்கிட்ட நோட்ஸ் வாங்கிகொண்டு போனேன் என்று' கூறும் வருங்கால வக்கீல்களும் சீட்டுகம்பனி நிறுவனர்களும். (கல்லூரியில் உடன் படித்த சில fraud).

அதிகாலை நான்கு மணி இருட்டில் என்னை எழுப்பிவிட்டு நான் பல் தேய்த்து வந்ததும் எனக்கு குடிப்பதற்கு பால் கொடுத்து தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்து வகுப்பிற்கு இருட்டில் என்னுடன் துணைக்கு வந்த என் அம்மா, பல சமயங்களில் கறவை மாடுகள் மீது இருட்டில் முட்டிகொண்டது, சுருக்கெழுத்து தட்டெழுத்து இரண்டிலும் முதல் மாணவியாக வந்ததை பொறுக்காத என் Institue நடத்துனர் (பார்பனர்), அதற்காக என்னை வீழ்த்த அவர் எடுத்துக்கொண்ட வீண் முயற்ச்சிகளை கண்ட மாணவர்கள் அவரை எதிர்த்தபோது எனக்கேற்பட்ட சந்தோசம்.

தட்டெழுத்து பரீட்சைக்கு தாம்பரம் கார்லி ஆண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு மின்சார ரயிலில் கொட்டும் பேய் மழையிலும் புயல் காற்றிலும் சென்று, பள்ளியின் வளாகத்தில் இடுப்பளவு நீரில் நடுங்கும் குளிரில் மெழுகுவர்த்தியின் துணையோடு என்னை போல வந்திருந்த ஆயிரகணக்கானவர்களுடன் இருட்டில் தட்டெழுத்து பரீட்சையை முடித்து பின்னர் தோல்வி என்ற தேர்வு முடிவு கிடக்கபெற்றது. அதற்குப் பின் பல நிறுவனங்களுக்கு இண்டர்வியூ சென்று வரும்போது ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்கள், மேசையின் கீழே என் காலை அவனது காலால் வருடிய அற்ப காமுகன், பெயருக்கு இண்டர்வியூவிற்கு கூப்பிட்டுவிட்டு பிறகு ஏற்கனவே ஆட்களை வேலைக்கு சேர்த்துவிட்ட அற்பர்களின் அட்டகாசங்கள்.

எல்லாவற்றையும் இருபத்து ஏழு ஆண்டுகள் கழித்து இன்று நினைத்து பார்க்கும் போது எனக்கேற்படும் அதிசயம். நான் இருபத்து ஏழு ஆண்டுகள் காணாமல் போயிருக்கிறேன் என்று நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது.