Translate

2/11/2010

திருத்துவது என் பணியல்ல

தவறுகள் திருத்தி கொள்ளப்படுவதே, திருடாதே, பொய் சொல்லாதே, வேசிகளோடு கலவாதே, பிறன் மனை நோக்காதே, உன்னகென்று இல்லாத எதையும் அபகரிக்க ஆசை கொள்ளாதே, என்று சொல்வதற்கு எண்ணிலடங்கா திருத்தங்கள் உள்ளன, இவை உள்ளனவா என்னும் ப்ரங்ஞை இல்லாதோரும் எண்ணிலடங்கா, இவரை திருத்தும் பணி எனக்கு கொடுக்கப்படவில்லை. ஏனெனில் நான் என்னை திருத்துவதில் கவனம் செலுத்துகிறேன்.

இயேசுவை போன்ற முற்றிலும் பரிசுத்தமானவர் மட்டுமே இவரையெல்லாம் திருத்த வந்தவர்கள், எனக்கு நான் உத்தமம் என்பதால் அடுத்தவரை திருத்தும் உயர் ஸ்தானத்திற்கு நான் வந்தடைந்துவிட்டதாக என்னால் எப்போதும் நினைக்க முடியாது. திருந்துவது அவரவரின் விருப்பம். எனது அபிப்பிராயங்களை மட்டுமே பதிவு செய்ய முடியும், அவற்றை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று வற்புறுத்தும் உரிமை எனக்கு இல்லை.

என்னால் சிறந்ததாக தெரிவு செய்யப்பட்ட ஒன்று அடுத்தவரால் நிராகரிக்கபடுவது தான் யதார்த்தமாக எங்கும் என்னால் காண முடிகிறது. திருந்து என்று நான் சொல்லும்போதே அதற்க்கு எதிர்மறையான எண்ணங்களும் செயல்களும் அடுத்தவரிடம் செயல்பட துவங்கி விடுகிறது. நல்லவற்றிக்கும் உண்மைக்கும் மெஜாரிட்டி எப்போதுமே குறைவு என்பது காலம் காலமாக கண்டும் கேட்டும் வரும் மறுக்க இயலாத உண்மை.

இதனால் நான் மெஜாரிட்டியின் பக்கம் வந்துவிட்டேனா என்றால் இல்லவே இல்லை. நான் எங்கு எப்படி இருந்தாலும் அங்கு என்னை நானாகவே வைத்து கொண்டு வாழவே பிரயாசப்பட்டு வருகிறேன். என்னால் அக்கிரமத்தையும் அநியாயத்தையும் பார்த்து நிம்மதியாக வாழ முடியவில்லைதான், அதற்காக நான் அந்த அநியாயத்தையும் அக்கிரமத்தையும் திருத்திவிட இயலுமா, இதில் எனது இயலாமை எனக்கு விளங்கினாலும் எதார்த்தம் அப்படித்தானே இருக்க வைக்கிறது.

திருத்த முயற்ச்சித்து அறிவுரை சொல்வது எல்லோராலும் முடிந்த ஒன்று, அக்கிரமத்தையும் அநியாயத்தைக் கண்டு சினம் கொள்வதும் எல்லோருக்கும் ஏற்ப்படும் உணர்வு, அதை கடந்து வேறு எதை செய்தால் அவற்றை தடுத்து நிறுத்த இயலும், அல்லது அவை இனி நடக்காமலேயே பார்த்துக்கொள்ள முடியும், நானும் அக்கிரமக்காரர்களைபோல வெறி பிடித்து வெட்டி கொல்வது ஒன்றுதான் வழியென்று செயல்பட்டால் எனக்கும் அவர்க்கும் என்ன வித்தியாசம்.

அக்கிரமம், அநியாயம், துரோகம், பேராசை, கொலைபாதகம், புறம்கூறுதல், கோள் சொல்லுதல், இச்சை, வேசித்தனம், இழிவு படுத்துதல், பொறாமை, இன்னும் பல தீயகுணங்களின் தன்மை தன்னை தானே அழித்துக் கொள்ளகூடியது, அவற்றின் முடிவு பயங்கர அழிவு. ஆனால் அவற்றிக்கு அவைகள் எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் நீண்டது, அதுவரை நீதி நியாயம் என்பவை பொறுமையுடன் இருக்க வேண்டிய கட்டாயத்திற்குள் இருக்கிறது. நான் இருக்குமிடம் மைனாரிட்டி என்றாலும் பொறுமை ஒன்றுதான் எல்லாவற்றையும் மாற்றும் என்று நிதானத்துடன் செயல்பட வேண்டியது கட்டாயமாகிறது.

திருத்துவதும் அறிவுரை சொல்வதும், அக்கிரமத்தைக் கண்டு சினந்தெழுவதும் எதிர்ப்பு குரல் கொடுப்பதும் என் வேலையல்ல, நான் விட்டேத்தியாக இப்படி ஒரு நிலைக்கு வரவில்லை, ஆராய்ந்து யோசித்து, வேதம் பயின்று, சான்றோர் பலரின் அனுபவங்களை ஆராய்ந்து அதனூடே என் அனுபவங்களும் என்னை இப்படி உருவாக்கியது என்பதே உண்மை. சினந்தெழுவதால் எந்த மாற்றங்களும் ஏற்படாது என்பதே நியதி.