Translate

2/02/2010

போற்றப்பட வேண்டியவர்கள்

இந்தியாவில் மட்டுமில்லாது உலகினை ஆட்டுவித்து தன் கோரப்பிடியில் சிக்கி தவிக்கச் செய்துவரும் தீவிரவாத செயல்களும் பொருளாதார சீரழிவுகளும் இதுவரை உலகில் கண்டிராத பின்னடைவுகள் என்றாலும் தற்போது அமெரிக்காவாக இருந்தாலும் இந்தியாவாக இருந்தாலும் அதின் ஆட்சியில் இருப்பவர்களைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும்போது, இவர்கள் கையில் ஆட்சி இருக்கும்போது இன்னவிதமாய் நேரவேண்டுமேன்பது ஆண்டவனின் திட்டமிடப்பட்ட முடிவு, அதற்காகவே இவர்களை இறைவன் படைத்திருக்க வேண்டும், இல்லையேல் எப்படி இவர்களால் இந்நிலையில் பொறுப்போடும் பொறுமையோடும் முடிவுகளை எடுத்து அவற்றை செயல் படுத்திக்கொண்டிருக்க முடியும்,

மத்திய அரசின் முக்கிய பதவிகளில் இருக்கும் மந்திரிகளை நினைத்துப் பார்க்கும் போது எனக்கு மூச்சு முட்டுகிறது, ஒருபுறம் பாகிஸ்தானிலிருந்து வரும் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க நடவடிக்கை, மற்றொருபுறம் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுவித்துக்கொள்ள தகுந்த நடவடிக்கை, பங்குச்சந்தைகளின் சரிவிலிருந்து காப்பாற்ற உரிய முடிவுகள், மாநில அரசுகளுக்கான நிதி நெருக்கடிகளை ஈடுகொடுக்க பல்வேறு முக்கிய உடனுக்குடனான முடிவுகளை எடுக்கவேண்டும்,

மறுபக்கம் உள்நாட்டு கலவரங்களை முடுக்கிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களை சமாளிக்கவேண்டும், இதனிடையே எதிர்கட்சிகளின் கூக்குரலுக்கு சரியான விளக்கம் அளிக்கவேண்டும் [அதை அவர்கள் காதுகொடுத்து கேட்கிறார்களோ இல்லையோ] நிச்சயமாக இப்பேற்பட்ட மிக மோசமான நெருக்கடியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் மத்திய அரசின் மந்திரிகளை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும், அடுக்கடுக்கான பிரச்சினைகளை தினம் தினம் சந்திக்க தங்களை எப்போதும் தயார் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும், நினைத்துப் பார்க்கும் போது தலையே சுற்றுகிறது. அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவனின் கருணை அபரிமிதமாக இருந்து எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளிலும் நிறைவு பெருக வேண்டும்.

அமெரிக்காவின் பொருளாதாரமும் தீவிரவாதிகளின் பயமுறுத்தல்களும் சொல்லில் அடங்காது, இந்நிலையில் அமெரிக்காவையும் அதன் மக்களையும் தீவிரவாதத்தின் கொடுமை அணுகாத வண்ணம் காப்பதற்கும் சரிவில் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் ஆட்சியில் இருப்பவர்கள் போராட வேண்டியுள்ளது என்பது உலகம் அறிந்தது, தகுந்த முடிவுகளை எடுத்து செவ்வனே நிறைவேற்றி நலிவுற்ற பொருளாதாரம் மறுபடியும் சீராக்க எடுக்கப்படும் முயற்சிகளில் முழு வெற்றியடைய இறைவன் நிச்சயம் உதவி செய்வார், ஏனெனில் இறைவன் வேறுபாடுகள் அற்றவன். தன்னை நோக்கி அபயக்குரல் எழும்போது நிச்சயம் பதில் நன்மையாகவே இருக்கும்.

நாடு இனம் மொழி மதம் யாவற்றையும் கடந்து மக்களின் நல வாழ்விற்காக அனைவரும் ஒன்று திரண்டு இறைவனிடம் கேட்கும் போது நிச்சயம் இறைவன் அருள் உலகமெங்கும் யாவருக்கும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.