Translate

2/05/2010

நினைவில் நின்றவள் - 2

மேருவின் வீட்டிற்கு வந்து ஒருவாரம் கடந்ததே தெரியவில்லை, வினோத்திற்கு மேருவுடன் பேசி தீர்ந்தபாடில்லை, மாயாவும் குழலியும் மேருவின் மனைவியுடன் சேர்ந்து வீட்டையும் தோப்பு துறவு கோவில் ஆற்றோரம் என்று வலம் வந்துக் கொண்டிருந்தனர், பல நாட்கள் குப்பன் மனோவுடனேயே மேருவின் வீட்டில் தங்கி விடுவதும் வழக்கமாக இருந்து வந்தது, ஒரு நாள் மனோ குப்பன் இருவருடன் குழலியும் குளத்திலும் ஆற்றிலும் மீன் பிடிக்கச் சென்றாள், மனோ மீன் பிடித்தலில் மும்முரமாக இருந்த சமயம் குப்பன் மரத்தினடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்,

மாலை வெகு நேரமாகிக்கொண்டிருந்தது, குப்பனை தட்டி எழுப்பினாள். அடித்துப் பிடித்துகொண்டு எழுந்த குப்பன் குழலி தன்னை எழுப்பியதை கண்டு கோபத்துடன் முறைத்தான், வீட்டிற்கு போக வேண்டுமென்று குப்பனை வற்புறுத்தினாள் குழலி. மனோ வராமல் வீட்டிற்கு போவதற்கில்லை என்று சொல்லிவிட்டு அங்கேயே மறுபடியும் படுத்து உறங்க ஆரம்பித்தான் குப்பன், மனோ எங்கே போனான் என்பதே தெரியவில்லை எப்போது அவன் திரும்புவது இருட்ட ஆரம்பித்தவுடன் குழலிக்கு அந்த ஆற்றங்கரை மிகவும் பயங்கரமாக தோன்ற ஆரம்பித்தது, குழலி மனோ மனோ என்று முழு மூச்சுடன் கூவினாள். மனோவின் பதிலே இல்லை, மனோவின் முழுகார்ச் சட்டை கழட்டி மரத்தில் தொங்கவிடபட்டிருந்ததை குழலி கவனித்தாள், அதன் பாக்கெட்டிலிருந்த பணத்தை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த குப்பனின் கால்சட்டையின் பாக்கெட்டில் சொருகிவிட்டு, அழுதுகொண்டே தட்டுதடுமாறி ஒருவழியாக வந்த வழியை நினைவுபடுத்தி தனியே வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

குழலி தனியே வருவதைக் கண்ட அவளது அம்மா மாயா, ஏன் தனியே வருகிறாய் மனோவும் குப்பனும் எங்கே என்று கேட்டுக்கொண்டே இருந்தாள், குப்பன் தனக்கு வழி காண்பிக்க மறுத்துவிட்டதாக அழுகையுடன் சொன்னாள். குப்பனும் மனோவும் வீட்டிற்கு திரும்பி வரும்போது இரவு எட்டு மணிக்கும் அதிகமாகி விட்டிருந்தது. குப்பனின் முகமெல்லாம் அடிபட்டு இரத்தம் வந்துக்கொண்டிருந்தது. அதை கவனித்த அனைவரும் என்ன நடந்தது என்று அவர்களை விசாரித்துக் கொண்டிருந்தனர்.

மரத்திலேறியபோது அங்கிருந்து தவறி கீழே விழுந்து அடிபட்டு விட்டது என்று மனோ சொல்லுவது கேட்டது. அடுத்தநாள் குப்பனின் காயம் பலமானது என்பதால் ஜுரம் அடித்து அவன் படுத்த இடத்தில் அரற்றிக் கொண்டிருப்பது கேட்டது, குப்பனை மேரு தனது ஜீப்பிலேற்றி அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருந்துகளை வாங்கி கொடுத்து அவனது வீட்டில் விட்டு விட்டு வந்திருந்தார்.

ஒரு வாரம் கடந்ததும் பண்டிகைக்கான ஏற்பாடுகள் வீட்டில் தலை தூக்க ஆரம்பித்தது, மனோவின் அம்மாவும் அவனது தங்கையும் தன் அண்ணன் மேருவின் வீட்டிற்கு பண்டிகை கொண்டாட வந்திருந்தனர். மனோவின் அம்மாவிற்கு குழலியின் மீது பிரியம், அதற்க்குக் காரணம் குழலியின் அப்பாவை சிறுவயதிலிருந்தே விருப்பம், திருமணம் செய்வதற்கு முடியாமல் போனது அவருக்கு மிகுந்த வருத்தம், அதனால் குழலியை தன் மருமகளாக்கிகொண்டு விடுபட்ட உறவை புதுபிக்க விரும்பினார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட பின் குப்பன் மனோவை தேடி வருவது நின்று போனது. அன்று தேங்காய்களை வண்டியிலேற்றுவதற்க்கு கூலி ஆட்கள் மிகவும் குறைவாக இருந்ததால் குப்பனை கூட்டி வரும்படி மேரு ஒரு ஆளை அவன் வீட்டிற்கு அனுப்பினார், வேலையாளுடன் வந்திருந்த குப்பன் தேங்காய்களை ஏற்றியபின் மனோவுடன் விளையாட வீட்டிற்கு வராததைப் பற்றி குப்பனிடம் கேட்டார் மேரு, பரீட்சை நெருங்குவதால் படிக்க வேண்டும் என்று பதில் சொல்லிவிட்டு போக இருந்தவனை மேருவின் மனைவி கூப்பிட்டு வீட்டில் பண்டிகைக்கான வேலைகள் அதிகமிருப்பதால் அவனது உதவி வேண்டும் என்று சொல்லி சில வேலைகள் கொடுத்தார்.

மேருவின் மனைவி குளிப்பதற்கு போகும்போது சில நகைகளை கழற்றி அங்கிருந்த மேசை மீது வைத்துவிட்டு போய் இருந்தாள், அங்கு வந்த குழலி அங்கிருந்த நகையிலிருந்து ஒன்றை எடுத்து கழற்றி தொங்க விடபட்டிருந்த குப்பனின் சொக்காய் பாக்கெட்டில் போட்டுவிட்டு தன்னை எவரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு அங்கிருந்து போய் விட்டாள்,

குளித்து முடித்து தன்னை அலங்காரம் செய்து கொண்டிருந்த மேருவின் மனைவி கழற்றி வைக்கபட்டிருந்த தனது நகைகளில் ஒன்று குறைவதை கண்டு எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தாள், எல்லோரும் ஒவ்வொரு இடத்தில் தேட ஆரம்பித்தனர், குழலி அவர்கள் அனைவரின் எதிரிலேயே அங்கு மாட்டியிருந்த குப்பனின் சட்டைப் பையிருந்து அந்த நகையை எடுத்து அவன் மேசைமீதிருந்து எடுக்கும் போது தான் பார்த்ததாகவும் ஆனால் அது நகை என்று தான் நினைக்கவில்லை என்றும் எல்லோரிடமும் சொன்னாள்.

அதை கண்டு அதிர்ச்சியுற்ற அனைவரும் குப்பனை கூப்பிட்டு நம்பிக்கை துரோகம் செய்தவன் என்ற பழி சொல்லுடன் வசைமாறி பொழிந்தனர், வசைச்சொல்லுடன் குப்பன் அங்கிருந்து போய்விட்டான். மேருவின் வீட்டு வேலைகள் செய்வதற்கு அன்றிலிருந்து
குப்பனை கூப்பிடுவது இல்லை. அவனுடைய அம்மாவிடமும் அவனது களவு பற்றி புகார் செய்யப்பட்டது, குப்பனின் அக்காள் வேலை செய்யும் ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றிற்கு ஆள் தேவை என்று அதன் முதலாளி கேட்டிருந்ததால் படித்தது போதும் என்று நிறுத்திவிட்டு குப்பனை வேலைக்கு அனுப்பி விட்டனர்.

ஆண்டுகள் கடந்தன, மேருவின் தங்கையின் விருப்பபடி மனோவை குழலிக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல் போனது, மனோ படிக்கவில்லை, ஊர் சுற்றுவது சீட்டு ஆடுவது என்று வீணாக பொழுதை கழித்து வந்தான். மாமா மேருவின் அதிகப்படியான செல்லமும் கண்டிப்பின்மையும் அவனை பாழடித்து விட்டிருந்தது. குழலி கல்லூரியொன்றில் பேராசிரியையாக இருந்தாள். கல்லூரி விடுமுறையின் போது மேருவின் வீட்டிற்கு தன் பெற்றோருடன் வந்திருந்தாள் குழலி,

'குப்பா, இந்த வருஷம் தேங்கா விளைச்சல் எதிர்பார்த்தபடி இல்ல, இருக்கறத ஏத்தி அனுப்பறேன்...' என்று மேரு தொலைபேசியில் குப்பனுடன் பேசுவது கேட்டது. சற்று தொலைவில் நின்றிருந்த
மஞ்சள் நிற லாரிகளில் 'குழலி ட்ரான்ஸ்போர்ட் சர்வீசஸ்' என்ற கொட்டை கருப்புநிற எழுத்துக்கள் தெரிந்தன.

முற்றும்.