Translate

1/20/2010

வேலைக்காரி + தூசு

தினமும் காலை பத்தரை மணிக்கு வீடு முழுவதையும் பெருக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தரையை துடைத்து, வீட்டிலிருக்கும் ஜன்னல் கதவு என தூசு படிந்திருக்கும் ஜடப்பொருட்களையும் துடைத்தால் போதும், காப்பி அல்லது டீ, காலை உணவு கொடுப்பேன், மாதம் எவ்வளவு வேண்டும் என்று புதிதாக வந்த வேலைக்காரியை கேட்ட போது சாமான் தேய்த்து கொடுத்து துணி துவைத்து கொடியில் உலர்த்தும் வேலைகளை யார் பார்ப்பது என்று கேட்டாள்,

வீட்டில் துணிதுவைக்க யந்திரம் இருக்கு, அதுவே நன்றாக பிழிந்து விடும் வேண்டுமானால் நானே கொடியில் உலர்த்திகொள்வேன், பாத்திரங்களை வேறு யாராவது தேய்த்து கொடுத்தால் எனக்கு திருப்தி ஏற்படுவது கிடையாது, அதனால் நானே தேய்த்து விடுவேன், பெருக்கி துடைக்கும் வேலை செய்ய மிகவும் சிரமமாக இருக்கிறது என்பதால் தான் ஒரு ஆள் தேவைபடுகிறது என்றேன்.

வருகிற ஒன்றாம் தேதி முதல் வந்து செய்து கொடுக்கவா இன்றைக்கே ஆரம்பித்துவிடவா? என்றாள்.

இன்றைக்கே செய்ய தொடங்கி விடு, மாதம் எவ்வளவு ரூபாய் எதிர்பார்க்கிறாய்? என்றேன்.

வீட்டை முழுவதுமாக பார்த்துவிட்டு சொல்கிறேனே என்றவள் வீட்டை ஒரு சுற்று சுற்றி வந்தாள், பின்னர் வீடு கொஞ்சம் பெரிசா இருக்கு அதனால எட்டுநூறு ரூபாய் கொடுதிடும்மா என்றாள்.

வீட்டின் பின்புறம் துடப்பம் துடைக்கத் தேவையான உபகரணங்கள் இருக்குமிடம் துடைத்த பின் அழுக்கு நீரை எந்த கால்வாயில் கொட்ட வேண்டும் போன்றவற்றை விளாவரியாக சொல்லிவிட்டு சமயலறையில் வந்து தேநீர் தயார் செய்து காலை உணவையும் எடுத்து மேசை மீது மூடி வைத்துவிட்டு சமயலறையில் இருந்த சிறிது வேலைகளை அப்புறம் பார்த்துகொள்வதென்று முடிவு செய்துவிட்டு ஹாலில் கிடந்த சோபாவில் வந்து அமர்ந்து கொண்டேன்.

அவள் வந்த ஒருமணி நேரத்தில் வீட்டை சுத்தமாக பெருக்கி கிருமினாசினியைக் கலந்த நீரில் சுத்தமாக வீடு முழுவதையும் துடைத்துவிட்டு நான் கிளம்பறேன் என்று என் எதிரில் வந்து நின்றாள். மேசை மீதிருந்த காலையுணவையும் flaskலிருந்த தேநீரை அருகிலிருந்த தம்ளரில் ஊற்றி வைத்துவிட்டு சாப்பிடு என்றேன். தேநீரைமட்டும் குடித்துவிட்டு தம்ளரை கழுவி வைத்துவிட்டு காலையுணவை அவள் கொண்டுவந்திருந்த பாத்திரத்தில் எடுத்து போட்டுக்கொண்டு போய்விட்டாள்.

அப்பாடா ஒரு வழியாக வேலைகாரி கிடைத்து விட்டாள், வீட்டிலிருந்த சகிக்க முடியாத தூசுகளை சுத்தம் செய்ய இயலாமல் தவித்தது போதும் போதும் என்றிருந்தது இப்போது அதற்கொரு முடிவு கிடைத்தது ஏதோ பெரிய சுமையொன்றை இறக்கி வைத்தாற்போல இருந்தது. பதினைந்து நாட்கள் ஒழுங்காக வேலைக்கு வந்தாள் வேலைகாரி தூசிலிருந்தும் அழுக்கிலிருந்தும் விடுதலை கிடைத்துவிட்டது என்ற நிம்மதி ஏற்பட்டது.

வீட்டிலிருந்த பொடிசுகள் உட்பட எல்லோரும் கிண்டலடிக்கத் துவங்கினர், 'பார்க்கலாம் இவள் எத்தனை நாளைக்குன்னு' என்று பல்வேறு விதமான நகைச்சுவைகளால் கேலி துவங்கியது.

அவள் தினமும் மணி இரண்டாகியும் வேலைக்கு வருவதே இல்லை என்பதால் மதியம் ஒரு சிறு தூக்கம் போடலாம் என்று படுக்கையில் சாயும் போது அழைப்பு மணி ஒலிக்க கதவினை திறந்து பார்த்தால், வேலைகாரி நின்றிருப்பாள், என்ன சொல்லுவதென்று புரியாமல் கதவை திறந்து உள்ளே விட்டு வேலை முடித்து போனால் போதும் என்று வாயை மூடிக்கொண்டு இருந்துவிடுவது,

வேலையிலிருந்து வீட்டிற்கு வந்த பின் கணவனிடம் இதை பற்றி சொன்னால் போகட்டும் விடு என்ன செய்வது எப்போது வேண்டுமானாலும் வந்து வேலையை செய்து கொடுத்துவிட்டு போனால் போதும் என்றனர். சனி, ஞாயிற்று கிழமைகளில் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு என்றைக்கெல்லாம் விடுமுறையோ அன்றைகெல்லாம் அவள் வேலைக்கு வருவது இல்லை.

அவளுடைய குழந்தைகள் வீட்டில் தனியே இருப்பதனால் விட்டுவிட்டு வேலைக்கு வர முடிவதில்லை என்று சொன்னாள். போகட்டும் என்று விட்டு விட்டேன். திடீரென்று ஊருக்கு போக வேண்டும் முன்பணம் ரூபாய் ஆயிரம் கொடுங்கள் என்றாள், யோசித்து பார்த்தேன், திரும்பி வேலைக்கு வருவாளோ மாட்டாளோ என்று மனது சொல்லியது. கையில் தற்போது பணம் இல்லை வீட்டுகாரர் வேலையிலிருந்து வந்தால் தான் கிடைக்கும் என்றேன்.

இருபது நாட்களாகியும் அவள் வேலைக்கு வரவேயில்லை, அவள் கொடுத்த செல்போனில் அழைத்த போது ஒரு ஆண்குரல் அவளது கணவனாக இருக்கும் என்று நினைத்தேன், அவள் பெயர் சொல்லி வேலைக்கு வருவாளா என்று விசாரித்தபோது இன்னும் சில மாதங்களாகும் என்றார் அந்த ஆள்.

மறுபடியும் வீட்டை தூசு ஆக்கிரமிக்க துவங்கியது, எட்டு மாதங்களுக்குப்பின் ஒருநாள் அழைப்புமணி ஒலித்தது, கதவை திறந்தபோது இவள் நின்றிருந்தாள், கதவை திறந்த போது உள்ளே வந்தள் ஊரிலிருக்கும் தன் பாட்டியை கவனித்துக்கொள்ள ஆள் இல்லை என்பதால் ஊரிலேயே தங்கிவிட நேர்ந்தது என்று பொய் சொன்னாள். தூசு அவளது பொய்யை மறக்கச் சொன்னது.

மறுபடியும் வேலை செய்ய துவங்கினாள், திடீரென ஒரு நாள் என்னிடம் ஏதோ ஒரு சாமி பெயர் சொல்லி என்மீது அடிக்கடி அந்த சாமி வரும் அப்போது நான் நினைவிழந்து ஆடுவேன் ஆடி முடிக்கும் வரை காத்திருந்து நான் கேட்காமலே எனக்கு ஒரு செம்பு நீரை குடிப்பதற்கு கொடுக்க வேண்டும், உங்கள் வீட்டை துடைத்து கொண்டு இருக்கும்போது கூட அப்படி சாமி என் மீது வரலாம் அதை கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம் என்பதற்காக முன் கூட்டியே உங்களிடம் சொல்லி வைக்கிறேன் என்றாள்.

இரண்டு நாட்கள் சென்றபின், வெளியூரிலிருக்கும் என் மகளிடம் ஒரு மாதம் போய் தங்க வேண்டி இருப்பதால், நான் போக வேண்டும், அதனால் வேலைக்கு நீ வர வேண்டாம் என்று சொல்லி கொடுக்க வேண்டிய பாக்கிபணத்தை அவளிடம் கொடுத்து அவளை அனுப்ப முயன்றேன் அவள் எப்போது நான் திரும்புவேன், என்று கேட்டாள். சொல்வதற்கில்லை என்றேன்.

என் மகளை பார்க்க நான் ஊருக்கு போகவில்லை என்பதை அறிந்த வீட்டிலிருக்கும் தூசு என்னை பார்த்து கேலி செய்தது.