Translate

1/12/2010

ராஜீவ் படுகொலை வழக்கு

கிழக்கு பதிப்பகத்தின் புதிய வெளியீடான ராஜீவ் படுகொலை வழக்கு என்கின்ற இந்த புத்தகத்தை எழுதியிருப்பவர் இந்த கொலைவழக்கை விசாரித்த ஓய்வுபெற்ற தலைமை புலனாய்வுதுறை அதிகாரி ரகோத்தமன் என்பது இதன் முக்கியத்துவம்.

33 வது புத்தக கண்காட்ச்சியில் வாங்கிய புத்தகங்களுள் முதலில் நான் படித்து முடித்தது இந்நூலைத்தான். இதில் உள்ள பல விவரங்களை நாம் பத்திரிகைகளில் படித்திருந்தாலும் புலனாய்வு செய்த ஓய்வுபெற்ற அதிகாரி எதற்காக இந்த புத்தகத்தை இப்போது வெளியிட்டிருக்கிறார் என்கிற எனது பல கேள்விகளுக்கு விடையாக இவர் எழுதி இருக்கும் விடைகளும் விளக்கங்களும் பதிலளித்தன.

இந்த புத்தகத்தின் மூலம் இவர் தெரியப்படுத்தும் செய்திகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என படிப்பவர்களால் தெரிந்து கொள்ள முடியும், இப்புத்தகத்தை வாசித்து தெரிந்து கொள்ளும் வாசகர்களைவிட நமது அரசாங்கமும் அதிகாரவர்கமும் மற்றும் பாதுகாவல் பணியிலும் அதிகாரத்திலும் எல்லா மட்டத்திலும் நிச்சயம் சரியான மாற்றங்கள் வந்தேயாக வேண்டும் என்பது தெள்ளதெளிவாகிறது.

காலம்சென்ற திருமதி இந்திராகாந்தியின் மரணமும் ராஜீவின் மரணமும் பாதுகாவலர்களின் கவனக்குறைவும் தவறான அதிகார துஷ்பிரயோகமும் தான் முழு காரணம் என்பது இந்நூல் விளக்குகிறது. இதனால் வரும் காலங்களிலாவது அப்படிப்பட்ட அரசியல்வாதிகளின் தவறான அணுகுமுறைகளும் பாதுகாவலை மேற்கொண்டிருக்கும் எல்லா மட்டத்திலும் காணப்படும் கவனகுறைவுகளும் அலட்சிய போக்கும் எந்த அளவிற்கு இழப்புகளை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தியுள்ளார்.

உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசு யந்திரத்தின் அலட்சிய போக்கு எவ்வாறு உள்ளது என்பதை படிக்கும்போது இந்தியநாடு வல்லரசாகும் வாய்ப்புக்கள் உண்டா என்கின்ற கேள்வியை வலுப்படுத்துகிறது. அதிகார துஷ்பிரயோகம், அரசியல்வாதிகளின் தவறான அணுகுமுறை என இதன் விஸ்தாரம் பெருகிக்கொண்டே இருப்பது நாட்டின் பாதுகாப்பையும் மற்றும் நாட்டின் தலைவர்களின் பாதுகாப்பையும் குலைத்து வருவதை புரிந்து கொள்ள முடிகிறது.

தவறுகள் குறிப்பிட்ட ஒரு சிலரால் மட்டுமில்லை ஒட்டு மொத்த அரசு ஊழியர்களும் இதில் அடக்கம் என்பதற்கு ராஜீவ் மற்றும் இந்திராகாந்தி இருவரின் கொலைகளும் மிகப்பெரிய எடுத்துகாட்டு என விளக்கியுள்ளார் ஆசிரியர். நிச்சயம் இந்நூல் மிகவும் பயனுள்ள நூல் என்பதில் சந்தேகமே இல்லை.