Translate

1/22/2010

என் அம்மா சொன்ன கதை

கதை - 2

போக்குவரத்து
வசதிகளும் தார் வீதிகளும் இல்லாத காலம் அது, ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்வதற்கு மாட்டுவண்டிகளை கூடாரம் அமைத்து கூட்டமாக காட்டு வழியே பயணம் செல்லும் போது ஊர் போய் சேர்வதற்கு வார கணக்கு மாத கணக்கில் ஆகும் என்பதால் கிளம்பும் போது எடுத்துச் சென்ற கட்டு சோறு தீர்ந்து போன பின் வழியில் இறங்கி சமைத்து சாப்பிட்டு விட்டு களைப்புத் தீர உறங்கி மறுபடியும் பயணத்தை துவக்குவது வழக்கமாம்.

அப்படி ஒரு இடத்தில் இறங்கி அங்கே கிடந்த ஒரு நீண்ட பழைய மரத்தின் மீது ஓட்டினார் போல வரிசையாய் அடுப்பு பற்ற வைத்து காட்டில் கிடைத்த விறகில் எல்லோரும் தங்களது சமையலை ஆரம்பித்தனர், அடுப்பிலிருந்த அரிசி கொதித்துகொண்டிருந்த போது திடீரென எல்லோருடைய கொதித்துக் கொண்டிருந்த பானைகளும் சாய்ந்து நீருடன் அரிசியும் வெளியே கொட்ட ஆரம்பித்தது, எல்லோரும் ஓவென்று கத்தி அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

கூட்டத்திலிருந்த சில தைரியமான ஆண்கள் ஒன்று சேர்ந்து எதற்காக பானைகள் அடுப்பிலிருந்து கவிழ்கிறது என்பதை கண்டுபிடிக்க எரிந்து கொண்டிருந்த அடுப்புகளின் அருகே சென்று பார்த்தபோது காய்ந்து வீழ்ந்து கிடந்த பெருத்த மரமென்று நினைத்தது மரமில்லை மிகப் பெரிய மலைப்பாம்பு இரையை விழுங்கிவிட்டோ அல்லது இரையை பிடிப்பதற்கோ அசையாமல் படுத்து கிடந்துள்ளதை கண்டு பிடித்தனர், அதன் ஓரத்தில் அடுப்பு வைத்து நெருப்பை ஏற்ப்படுத்திய போது அதன் சூட்டில் மலைப்பாம்பு தன் உடலை அசைக்க ஆரம்பித்தவுடன் எல்லோரது பானைகளும் கவிழ தொடங்கியது என்பது தெரியவந்தது, வேறு இடத்திற்குச் சென்று அடுப்பை உண்டாக்கி சோறு சமைத்து சாப்பிட்டுவிட்டு பயணத்தை தொடர்ந்ததாக அம்மாவின் பாட்டி சொன்ன கதை.