Translate

1/23/2010

அனுபவம் புதுமை - 1

பள்ளியிறுதித் தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின் ஆசையாய் காத்திருந்த கல்லூரிகாலம் ஆரம்பித்திருந்தது, அருகே இருந்த கலைக் கல்லூரியிலிருந்து விண்ணப்பபடிவம் வாங்கி வந்து பூர்த்தி செய்து அனுப்பி வைத்து அழைப்பு வந்தவுடன் தகப்பனாரிடம் சொல்லி கல்லூரிக்கு சென்று என் பெயரை பியூன் வந்து கூப்பிடும் வரை வெளியில் காத்திருந்த கூட்டத்தில் நின்றிருந்த போது அந்த கல்லூரியில் நான் வளைய வரப்போகிற நினைவுகளில் மூழிகிகிடந்தேன்,

என் பெயரை அழைத்ததும் என்னுடன் என் தகப்பனார் வரவில்லை நீ மட்டும் உள்ளே போ என்ன சொல்லுகிறார்கள் என்று வெளியே வந்து என்னிடம் சொன்னால் போதும் என்றார். கல்லூரியின் பிரின்சிபால் சக பேராசிரியைகள் புடை சூழ கம்பீரமாக அமர்ந்திருந்தார், வந்தனம் சொல்லிவிட்டு அமைதியாக அவரையும் அவரது குழுவினரையும் பார்த்த போது எந்த க்ரூப் வேண்டும் என்றார், அவர் கையில் எனது பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பிய விண்ணப்ப படிவம் இருந்தது, நான் எனக்கு விருப்பமான க்ரூப்பை சொன்னவுடன் ஒரு குறிப்பிட்ட தொகையை கவுண்டரில் செலுத்திவிடு என்றார். அந்த தொகை மிகவும் சொர்ப்பமானதுதான்.

உடனே செலுத்த முடியாது என்று தயங்கியபடியே சொன்னேன், இந்த வாரத்திற்குள் கட்டிவிடு என்று சொல்லிவிட்டு அடுத்த விண்ணப்பபடிவத்தை கையில் எடுத்து கொண்டார், நான் வெளியே வந்து என் தகப்பனாரிடம் சொன்னேன். அவர் ஏற்கனவே ஒரு முடிவில்தான் இருந்திருப்பார் போலும், இந்த பணத்தை கட்டுவதில் ஒன்றும் சிரமம் இல்லை,

உடுத்திக் கொள்வதற்கு உடைகள் பேருந்து கட்டணம், மூன்று வேளைக்கு நேரம் தவறாமல் சாப்பாடு இவையெல்லாம் மூன்று வருடத்திற்கு தவறாமல் வேண்டும், மழை வந்தால் ஒதுங்கிக் கொள்வதற்கு கூட நமக்கு ஒரு நல்ல குடிசை கிடையாது இந்நிலையில் கல்லூரி படிப்பை எப்படி தொடங்க முடியும் என்பதை யோசிக்க வேண்டும் என்று என்னிடம் சொல்லிக்கொண்டே வந்தார், நாங்கள் வீடு திரும்பினோம்,

தட்டெழுத்து வகுப்பிற்கு போகும்படி சொன்னார், எனக்கு போக பிடிக்கவில்லை, வேதனையுடன் ஏழெட்டு மாதங்கள் ஓடிவிட்டது, வேறு வழியின்று தட்டெழுத்து பயிற்ச்சியில் சேர்ந்தேன், அதுவும் ஒரு வருடத்திலேயே முடிந்துவிட்டது, ஏதேதோ நிறுவனங்களுக்கு வேலைக்காக விண்ணப்பம் செய்தேன், பின்பு ஒருவர் மூலம் உருப்படாத நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்து அதன் மூலம் சொற்ப மாத வருமானம் கிடைத்தது, சுருக்கெழுத்து சேர்த்தேன் ஆறு மாத முடிவில் சுருகெழுத்தின் ஒரு பகுதியும் முடித்தேன்.

என்னுடன் பள்ளியில் படித்த பெரும்பாலோர் அரசு வேலை வங்கி வேலை
பேராசிரியர் வேலை என சேர்ந்திருந்தனர், எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது, கிடைத்த வேலையும் ஒரு நல்ல நிறுவனத்தில் போதிய சம்பளத்தில் கிடைக்கவில்லை. நாட்கள் வருடங்களாகியது, திருமணம் என்று ஏதோ ஒன்றை நடத்தி வைத்தனர். என்னைத் திருமணம் செய்தவர் அரபு நாடுகளுக்கு போவதற்காக நிறைய நிறுவனங்களில் தொடர்பு வைத்திருந்தார், திருமணத்திற்குப் பின் எனக்கும் சேர்த்து வளைகுடா நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டில் வேலை கிடைக்க முயன்று வந்தார்.

இடைப்பட்ட காலத்தில் எனது மேற்படிப்பு தாகம் என்னை சும்மா இருக்க விடாமல் தபால் மூலம் விடுபட்ட கல்லூரிக்கனவை பூர்த்தி செய்திருந்தேன், நான் தற்போது முதுகலை பட்டதாரி என்பதால் எனக்கு வளைகுடாவில் வேலைகிடைத்தது, என் கணவரும் பல வருடங்களாக முயன்றும் கிடைக்காத நிலையில் எனக்கு முதலில் கிடைத்தது பற்றி அவருக்கு மிகுந்த ஆச்சரியம், உள்ளூரில் என் கணவருக்கு உயர்வான உத்தியோகமும் போதுமான அளவு வருமானமும் கிடைத்தாலும் வெளிநாட்டிற்கு சென்று வீட்டு எந்த வேலையிலாவது
சேர்ந்து அதிகம் சம்பாதிக்கவும் வெளிநாட்டு உல்லாச வாழ்க்கையை அனுபவிக்கும் நோக்கத்துடன் பல வருடங்களாக வெளிநாட்டில் வேலைக்கு முயன்றவர்.

தொடரும்....