Translate

1/21/2010

என் அம்மா சொன்ன கதை

கதை - 1

ஜமீந்தார்
பங்களாவில் சமைப்பதற்கு இருபது பார்பனர்கள் இருந்தனர், இவர்கள் விடியற்காலை ஐந்து மணிக்கு சமைக்க ஆரம்பிப்பது வழக்கம், சமைப்பதற்கு தேவையான பொருட்களை வைத்திருக்கும் அறையின் சாவி அம்மாவின் பாட்டி மரகதம்மா ஜமிந்தாரின் உறவு என்பதால் மரகதம்மாவிடம் கொடுத்து வைக்கப்பட்டு இருந்தது.

மரகதம்மாவின் வீடு ஜமீனின் எல்லைக்குள்ளே இருந்தாலும் ஏறக்குறைய பத்துமனைகள் தூரம் கடந்து வரவேண்டியதிருக்கும், அக்காலத்திலே கடியாரம் அந்த ஊரில் ஜமீனின் வீட்டில் மட்டுமே இருந்ததால் காலை ஐந்து மணி முதல் ஒவ்வொரு மணிநேர இடைவெளியிலும் ஊரின் மக்களுக்கு மணி தெரிந்து கொள்வதற்காக அவர்கள் வீட்டு வாயிலில் கட்டபட்டிருக்கும் பெரிய வெண்கல மணியை ஒரு வேலைக்காரன் அடிப்பான். [1942ஆம் ஆண்டு காலம்சென்ற திரு ராஜா சாண்டோ என்கிற புகழ் மிக்க இயக்குனரால் இயக்கி வெளிவந்த ஆராய்ச்சிமணி தமிழ் திரைப்படத்தில் தன் கன்றின் மீது தேரோட்டி கொன்ற கன்றின் தாய் பசு மன்னனிடம் நீதி கேட்டு அடித்த மணியாக காட்சியில் காண்பிக்கப்பட்ட மணி என்பது இதன் பல சிறப்புகளில் ஒன்று].

மரகதம்மாள் மூன்று மணி ஜாமத்தில் தூக்கம் விழித்து எழுந்து மணி தெரியாமல் திரும்பவும் படுத்துவிட்டால் பொழுது விடிந்துவிடுமே என்ற பயத்தில் கையில் லாந்தர் விளக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு [அந்த காலத்தில் மின்சார விளக்குகள் கிடையாது] ஜமீனின் வீட்டை நோக்கி நடந்து வருகின்ற சமயத்தில் மரகதம்மாவிற்கு சற்று முன்னால் யாரோ ஒருவர் நடந்து செல்வது தெரிந்தது, ஊர் வெளிச்சம் என்று சொல்லுவார்கள் அந்த வெளிச்சத்தில் பழகியவர்களுக்கு ஒருவர் நடப்பது நிழல்போல் தெரியும்.

மரகதம்மா தன் முன்னால் நடப்பவர் யாரோ அந்த ஊர்காரர் என்று நினைத்து யாரு அது என்று கேட்டுக்கொண்டே ஜமீனின் வாயிலை அடைந்து விட்டார், ஜமீனின் வாயிலை நெருங்கியதும் அங்கே ஒரு பெரிய குளம் பக்கத்தில் உண்டு, மரகதம்மாவின் முன் சென்ற அந்த உருவம், உனக்கு தீர்க்காயுசு என்று பெரிய சத்தத்தில் கத்திவிட்டு குளத்தினுள் குதித்துவிட்டது. அந்த குரல் ஒரு மனிதனுக்கு இருக்க முடியாத குரல் என்பதும் தெரிந்தது அதிலிருந்து மரகதம்மா ஜமீனிலேயே பல நாட்கள் தங்கிவிடுவது என்று முடிவு செய்தார்.

அப்போதுதான் மரகதம்மாவிற்கு புரிந்தது தனக்கு முன்னே நடந்துபோனது ஒரு பேய் என்பது. ஜமீனின் கதவை தட்டி அங்கு தூங்கும் வேலைக்காரனின் பெயரை சொல்லி கூப்பிட்டபோது அவன் வந்து கதவை திறந்துவிட்டு மணி மூன்றுதானே ஆகிறது அதற்குள் ஏனம்மா சிரமம் என்றானாம்.