Translate

1/31/2010

அனுபவம் புதுமை -10

அடுத்தநாள் இரவு இந்தியாவிற்கு போவதற்கு விமான பயணசீட்டு என் கைக்கு வந்து சேர்ந்தது, அன்று மாலை என் எசமானி வங்கியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் அவரது காரை எடுத்துகொண்டு வெளியே போனவர் நான் அந்த வீட்டிலிருந்து கிளம்பும்வரை திரும்பவே இல்லை, அவரது கணவரும் வீட்டில் இல்லை, பிலிப்பைன் பெண்ணிடமும் இலங்கைப்பெண்ணிடமும் சொல்லிவிட்டு ஓட்டுனர் பழனியுடன் இரவு பத்துமணிக்கு வீட்டைவிட்டு எனது பெட்டி பொருட்களுடன் கிளம்பினேன்.

விமான நிலையம் நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது வழியில் காரை நிறுத்தி பழனி சாப்பிடுவதற்கு ஏதோ வாங்கி வந்தார், விமானத்தில் கொடுப்பார்கள் வேண்டாம் என்று சொல்லியும் சாப்பிடும்படி வற்ப்புருத்தினார், பிடித்தும் பிடிக்காமலும் சிறிது சாப்பிட்டுவிட்டு பழனிக்கு நன்றி சொன்னேன். சென்னைக்கு விடுமுறையில் வரும்போது என்னை வந்து சந்திப்பதாக சொல்லி விமான நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றார்.

விமான நிலையத்தினுள்ளே பயணிகள் உட்கார்ந்திருக்கும் நாற்காலிகளில் அதிக கூட்டம் இல்லை, வயதான முதியவரின் வீட்டில் பணிப்பெண்ணாக பார்த்த பெண் அங்கு உட்கார்ந்திருந்தார் அவரது முகம் முழுவதும் பலத்த காயங்கள், கைஎலும்பு முறிந்தவர் போல கையில் கட்டு போட்டு கழுத்துடன் இணைக்கபட்டிருந்தது. அவரின் அருகே என்னை டாக்ஸியில் ஏற்றிவிட்டு பணம் கொடுத்தவரும் நின்றிருந்தார். அவர்கள் இருவருக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை, சில நிமிடங்களே
என்னை பார்த்திருந்தது ஒரு காரணம், நான் புடவை அணிந்திருந்தது இன்னொரு காரணம் அவர்கள் என்னை அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை என்பது மற்றுமொரு காரணம்.

அவர்கள் அருகே சென்று என்னை யாரென்று சொன்னவுடன் நின்றிருந்த ஆள் புரிந்து கொண்டார், அந்த பெண்ணுக்கு காயங்கள் எதனால் ஏற்பட்டது என்று விசாரித்தேன், அவர்கள் பணிசெய்யும் வீட்டின்
எண்பது வயது மூதாட்டி தடித்த தடி மற்றும் ஆயுதங்களால் பணிப்பெண்களை பணி செய்ய சொல்லி தாக்குவது வழக்கமாம், அதனால் அந்த வீட்டில் பணிப்பெண்கள் யாரும் இருப்பதே கிடையாது என்று சொன்னதோடு, என்னையும் அங்கே வேலை செய்வதற்காக அழைத்ததாகவும் பின்னர் நான் இந்தியாவிற்கு திரும்புவதை அறிந்து அதை கைவிட்டதாகவும் சொன்னார்.

இரவு விமானத்திலேறி அடுத்தநாள் காலை சென்னை விமானநிலையத்தில் வந்திறங்கிய போது என் கணவர் என்னை கூட்டிச்செல்ல வந்திருந்தார், அவர் முகத்தில் காணப்பட்ட ரேகைகள் வேறு ஒரு கசப்பான அனுபவம் காத்திருப்பதை எனக்கு உணர்த்தியது.

முற்றும்

1/30/2010

அனுபவம் புதுமை - 9

மேலும் ஒரு மணிநேரம் அந்த பெட்ரோல் பங்கிலேயே நான் காத்திருந்தேன், பழனி வந்து என்னை காரில் கூட்டி செல்லும் போது சொன்னார், முதன் முதலில் உங்களது புகைப்படத்துடன் விசாவும் விமான பயணசீட்டையும் குறிப்பிட்ட நபரிடமிருந்து பெற்று வந்து எசமானின் கையில் கொடுத்த போது அதில் ஒரு நகல் எடுத்து என்னிடம் கொடுத்து நீங்கள் ஊரிலிருந்து வரும் போது உங்களை விமான நிலையத்திலிருந்து கூட்டிவரச் சொன்னார். அப்போது உங்கள் வீட்டு விலாசத்தை பார்த்த நான் சென்னையிலிருக்கும் என் தம்பிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்கள் விலாசத்தையும் உங்கள் வீட்டு தொலைபேசி எண்ணையும் கொடுத்து எனக்குத் தேவையான சில பொருட்களை வாங்கி உங்கள் வீட்டிற்கு சென்று நீங்கள் இங்கே வருவதற்கு முன்பு கொடுக்கச் சொல்லி இருந்தேன் உங்கள் வீட்டு விலாசத்தை கண்டு பிடித்து வாங்கிய சில பொருட்களை உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்த என் தம்பி வீட்டையும் வீடு இருந்த இடத்தையும் சுற்றியுள்ள வீடுகளையும் பார்த்துவிட்டு இந்த வீட்டிலிருந்து ஒரு பெண் வெளிநாட்டிலிருக்கும் வீட்டிற்கு வேலைகாரியாக செல்வதற்கு வாய்ப்பிருக்க முடியாது விலாசம் தவறி இருக்கலாம் என்று நினைத்து பழனியிடம் இதை தெரிவித்ததாக என்னிடம் பழனி சொன்னார். அப்போது நான் நடந்த தவறைப்பற்றி சொன்னேன்,

என்னை விமான நிலையத்திலிருந்து கூட்டி வருவதற்கு பழனி வராமல் வேறு ஒரு ஆள் வந்ததைப்பற்றி பழனியிடம் அப்போது சொன்னேன், பழனியின் விலாசமும் சென்னை, நானும் சென்னையில் வசிப்பதாலும், சில பொருட்களை வாங்கி அனுப்பும்படி தம்பியிடம் சொன்னதை பற்றி அங்கு வேலை செய்யும் இரு பெண்களிடம் வாய்தவறி தெரிவித்ததின் பலன், நான் வருகின்ற அந்த சமயத்தில் எசமானரும் எசமானியும் வேறு எங்கோ அனுப்பிவிட்டதாக என்னிடம் சொன்னார். இருவரும் வீடு வந்து சேர்ந்தோம்,

அங்கு தங்கியிருந்த ஒரு வாரத்தில் ஒரு நாள் கூட சாப்பாடு கிடைக்கவில்லை, மிகவும் களைத்திருந்தேன், வாழ்க்கையில் சாப்பாடு இல்லாமல் பள்ளி கூடம் சென்றதுண்டு, சமயலறையில் குடிநீரை சுத்தமாக்கும் இயந்திரத்திலிருந்து குப்பியில் பிடித்து வந்து என் அறையில் வைத்துகொள்வேன், இதை இரண்டு பெண்களும் பார்த்துக் கொண்டிருப்பார்கள், ஒருநாள் எனது அறையிலிருந்த குப்பி தண்ணீருடன் சில மாத்திரைகளை விழுங்கியதையும் இருவரும் பார்த்துக்கொண்டிருந்தனர், எதற்காக மாத்திரைகளை சாப்பிடுகிறேன் என்று என்னிடம் விசாரித்தனர், நான் காரணத்தை சொன்னேன், அதை அந்த பெண்கள் இருவரும் கேட்டுக் கொண்டிருந்தனர், இந்த நிலை மிகவும் கேவலமானதாக எனக்கு தோன்றியது. என் குழந்தைகளின் நினைவு என்னை வேதனைப்படுத்தியது.

தங்கியிருந்த அறையின் குளியலறையின் மின்சாரம் நான் சென்ற இரு தினங்களில் துண்டிக்கபட்டுவிட்டதால் புதிய நீரில் குளித்தவுடன் லேசாக ஜலதோஷமும் காய்ச்சலும் வேறு சேர்ந்து கொண்டது. அன்றிரவு சுமார் மணி ஒன்பதிருக்கும் எசமானி நான் இருந்த அறைக்குள் திடீர் விஜயம் செய்தார். அங்கு தொங்கிகொண்டிருந்த எனது உடையை காண்பித்து அங்கிருந்து எடுக்க சொன்னார், நான் குப்பியில் வைத்திருந்த குடிநீரை பார்த்து இது எதற்கு என்று கேட்டார், நான் குடிப்பதற்கு என்று சொன்னேன், குடிப்பதற்கு தண்ணீர் தேவைப்படும்போது குளியலறை குழாயிலிருந்து பிடித்து குடிக்க சொன்னார்.

நான் பதிலேதும் பேசாமல் நின்றிருந்தேன், எனது அறையை பரிசோதித்த எசமானி நான் எதற்கு மாத்திரைகளை சாப்பிடுகிறேன் என்று என்னிடம் விசாரித்தாள், நான் மாத்திரை சாப்பிடுவது இவருக்கு பிலிப்பைன் பெண் சொல்லியிருப்பாள், இலங்கைப் பெண்ணுக்கு ஆங்கிலம் பேச வராது. காரணத்தை சொன்னேன், நாளை பழனியிடம் அந்த மாத்திரைகளை கொடுத்தனுப்பும்படி சொன்னாள் நான் எதற்கு என்று கேட்டேன், அவளுக்குத் தெரிந்த மருத்துவரிடம் கொடுத்து அந்த மாத்திரைகள் எதற்காக என்று விசாரிக்கபோவதாக சொன்னாள். எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை,

அடுத்தநாள் காலை தான் பம்பாயிலிருந்து சென்னை வந்தவுடன் விமான பயணச் சீட்டிற்கான ஏற்பாட்டை செய்துவிட்டதால் எனது விமான பயணசீட்டு அனுப்பபடுவதாக என் கணவர் தொலைபேசியில் தெரிவித்தார்.


தொடரும்....

1/29/2010

அனுபவம் புதுமை - 8

வேலைகாரப் பெண் என்னை பார்த்து லேசாக சிரித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். அந்த மூதாட்டி திரும்ப வரவே இல்லை, நான் அந்த வீட்டு வேலைக்கார பெண் வந்ததும் அவரிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தேன், எந்தப்பக்கம் போக வேண்டும் என்று தெரியவில்லை, அங்கே கதவருகில் நின்றிருந்த ஆளை அங்கு காணோம், மறுபடியும் உள்ளே சென்றபோது அந்த வீட்டில் வேலை பார்க்கும் ஒரு ஆண் என் எதிரில் வந்தார் அவரிடம் எனக்கு தொலைபேசியில் பேச வேண்டும் என்று சொன்ன போது தொலைபேசி உள்ளே இருப்பதாகவும் எண் தெரிவித்தால் தானே போன் செய்து விவரம் சொல்லுவதாகவும் சொன்னார், நான் எசமானியின் வீட்டு எண்ணை சொல்லி கார் ஓட்டுனர் பழனியை அங்கு அனுப்புமாறு சொன்னேன் சிறிது நேரத்தில் அவர் திரும்பி வந்து ஓட்டுனர் பழனி எசமானியின் பெண்களை கூடிக்கொண்டு எங்கோ சென்றிருக்கிறார் என்றும் அவர் எப்போது திரும்புவார் என்று தெரியாது என்றும் பதில் சொல்லப்பட்டதாக என்னிடம் அந்த ஆள் வந்து சொன்னார்.

அந்த ஆளிடம் எனது எசமானியின் பெயரை சொல்லி அவர் வீட்டிற்கு நான் போகவேண்டும் என்று சொன்னபோது, அவர் கேட்டிற்கு வெளியே வந்தார், அந்த சமயத்தில் வீதியில் சென்றுகொண்டிருந்த ஆளில்லா டாக்ஸியை கூப்பிட்டு என்னை அதில் ஏற்றி விட்டு தனது பாக்கெட்டிலிருந்த பணத்தை எடுத்து டாக்ஸி ஓட்டுனரிடம் கொடுத்து என்னை இறக்கி விடவேண்டிய இடத்தை சொல்லிவிட்டு அவர் உள்ளே சென்று கதவை அடைத்துகொண்டார்.

டாக்ஸி அரைமணி நேரமாக ஓடியும் நான் போய் சேரும் இடம் வராததால் எனக்கு சந்தேகம் ஏற்ப்பட்டது,
பழனி என்னை கூட்டி வரும்போது ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை, ஆனால் டாக்ஸி அரைமணி நேரமாகியும் செல்லவேண்டிய இடம் வராததால் லேசாக பயத்தை ஏற்படுத்தியது, டாக்ஸி ஓட்டுனர் பெட்ரோல் போடுவதற்காக ஒரு பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தியவுடன், நான் டாக்ஸியை விட்டு இறங்கி பெட்ரோல் பங்கிற்கு உள்ளே சென்று அங்கு மேசையின் எதிரே உட்கார்ந்திருந்தவரிடம், எனக்கு அவசரமாக ஒரு தொலைபேசி அழைப்பு செய்யவேண்டும் என்று சொன்னவுடன் அவர் அருகிலிருந்த போனை காண்பித்து பேச சொன்னார்,

எசமானியின் வீட்டு தொலைபேசி எண்ணை அழுத்திய போது எசமானியின் கணவர் தொலைபேசியை எடுத்தார், அவரிடம் நான் வெளியே வந்த காரணத்தை சொல்லி தற்போது டாக்ஸி ஓட்டுனர் என்னை தவறான பாதையில் கொண்டு செல்வதை தெரிவித்தேன்,
நான் எங்கிருந்து அவருடன் பேசுகிறேன் என்று என்னை கேட்டார், நான் பெட்ரோல் பங்கில் டாக்ஸி ஓட்டுனர் பெட்ரோல் போடுவதற்கு இறங்கியதை பற்றி சொன்னேன், தொலைபேசியை அருகிலிருந்தவரிடம் கொடுக்கச் சொன்னார், அவரிடம் அந்த பெட்ரோல் பங்க் இருக்குமிடத்தை விசாரித்து விட்டு பழனியை அனுப்புவதாக சொல்லி என்னை அந்த பங்கின் அருகிலேயே நிற்க சொன்னார்.

தொடரும்......

1/28/2010

அனுபவம் புதுமை - 7

எசமானியின் பங்களாவை அடுத்திருக்கும் பெரிய பங்களா கட்டியது முதல் ஒருவரும் வந்தது இல்லை என்றும், அந்த பங்களாவின் பின்பகுதியை சுத்தப்படுத்தி வைத்திருப்பதாகவும் அங்கே நான் என்னுடமைகளுடன் தங்கி கொண்டால் அவர் எனக்குத் உணவு தருவார் என்றும், வேறு எங்காவது வேலைக்கு ஆள் தேவை என அவரது நாட்டை சேர்ந்த தோழிகள் மூலம் அறிந்தால் நான் அங்கே சென்று வேலை பார்க்கலாம் என்றும் இந்தியாவிற்கு திரும்பி போக வேண்டாம் என்றும் என்னிடம் சொன்னார் இலங்கைப்பெண், அந்தநாட்டில் எனக்கு எந்த வேலையும் செய்ய விருப்பம் கிடையாது என்று சொல்லிவிட்டு அவரிடம் மேற்கொண்டு ஏதும் பேசாமல் இருந்தேன்.

ஒவ்வொரு நாளை நகர்த்துவதற்க்குள் எனக்கு போதும் போதும் என்று இருந்தது, தொலைபேசியில் யாரோ என்னுடன் பேசுவதற்கு கூப்பிடுவதாக பிலிப்பைன் பெண் என்னிடம் சொன்னார், தொலைபேசியை எடுத்தபோது ஆணின் குரல், என்னுடன் மலையாளத்தில் பேசத்துவங்கினார், எனக்கு மலையாளம் தெரியாது என்று நான் ஆங்கிலத்தில் பதில் சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டு பிலிப்பைன் பெண்ணிடம் தொலைபேசியில் என்னை கூப்பிட்டது யார் என்று கேட்டேன், தன் சகோதரி வேலை பார்க்கும் வீட்டில் அவருடன் வேலை செய்பவர் என்று சொன்னார், நான் எதற்காக அவரிடம் பேச வேண்டும் என்று கோபமாக கேட்டேன், தான் வேலை செய்யும் வீட்டிற்கு புதிய பெண் வந்திருப்பதாக அவளது சகோதரியிடம் சொன்னாள் என்றும் அவள் தன்னுடன் வேலைபார்ப்பவரிடம் சொன்னாள், தென் இந்தியப் பெண் என்றவுடன் வந்திருப்பவர் மலையாளம் பேசுபவரா என்பதை தெரிந்துகொள்ள அந்த ஆள் தொலைபேசியில் அழைத்து என்னிடம் பேசவேண்டும் என்று கேட்டதாகவும் சொன்னாள் அந்த பிலிப்பைன் பெண். இது என்ன கூத்து.

மதியம் சாப்பிட வந்த ஓட்டுனர் பழனி எசமானி என்னை எங்கோ அழைத்து வரும்படி சொன்னார் என்று சொல்லி காரில் கூட்டி சென்றார், ஐந்து நிமிடத்திற்குப் பின் ஒரு பெரிய பங்களாவின் முன் காரை நிறுத்திவிட்டு இந்த வீட்டின் உள்ளே அவர் இருப்பதாகவும் என்னை கூட்டி வர சொன்ன இடம் அதுதான் என்று சொல்லி என்னை அந்த வீட்டின் கேட்டருகில் இறக்கி விட்டுவிட்டு அவர் காரிலே போய் விட்டார், அந்த வீட்டின் கதவருகே ஒரு ஆள் நின்றிருந்தார் அவரிடம் நான் ஆங்கிலத்தில் எனது எசமானியின் பெயரை சொன்னவுடன் அவர் கேட்டை திறந்து உள்ளே போகும்படி சொன்னார், உள்ளே சென்ற போது எழுபது வயதிற்கும் அதிகமான வயதுடைய அந்நாட்டு மூதாட்டி உட்கார்ந்திருந்தார், என் எசமானியை அங்கே காணவில்லை.

நான்
அவருக்கு வந்தனம் சொல்லிவிட்டு என் எசமானியின் பெயரை சொன்னேன், உடனே அவர் உனக்கு வீட்டு வேலை செய்வதற்கு பிடிக்கவில்லையா என்று கேட்டார், நான் சமையல் வேலை எனக்குத் தெரியாது என்று சொன்னேன், வேறு என்ன வேலை தெரியும் என்று கேட்டார், அப்போது அவரது வீட்டில் வேலை செய்யும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அங்கு வந்தனர், மூதாட்டிக்கு தொலைபேசியில் அழைப்பு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டதும் அந்த மூதாட்டி எழுந்து வேறு அறைக்கு தொலைபேசியில் பேசுவதற்கு சென்றுவிட்டார்.

தொடரும்...

1/27/2010

அனுபவம் புதுமை - 6

இதற்கிடையில் இந்திய தூரகத்தின் மற்றொரு அதிகாரி அங்கு வந்தார், அவரை பார்பதற்கு வட இந்தியர் போலிருந்தார், அவருக்கு மற்றொரு அதிகாரி எனக்கு போன் கொடுத்து பேச சொன்னது பிடிக்கவில்லை, அதற்குள் எசமானிக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டு விட்டதைப்போல அங்கிருந்து எழுந்து என் கணவரின் தொலைபேசி அழைப்பிற்கு காத்திருக்க பிடிக்காதவர் போல தனது காரினுள் வந்து அமர்ந்து கொண்டு காரை ஓட்டிச்சென்று என்னை மறுபடியும் வங்கியின் முகப்பில் காத்திருக்க சொல்லிவிட்டு தனது அலுவலகத்திற்குள் சென்றுவிட்டார்.

காரின் ஓட்டுனர் பழனி வந்து என்னை ஏற்றிக்கொண்டு எசமானியின் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தார். எனது பெட்டி நாதாவின் காரிலேயே இருந்தது, பழனியிடம் சொல்லி எனது பெட்டியையும் மற்ற எனது உடமைகளையும் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கும்படி சொன்னேன், அன்று மதியம் பழனி எனது உடமைகளை எடுத்து வந்து என்னிடம் சேர்த்தார்.

நான் வீட்டிற்கு வந்து சேர்ந்த பின்னர் அன்று மதியம் என்கணவரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, பிரச்சினை பற்றி சொல்லி இந்தியாவிற்கு திரும்புவதற்கு ஏற்ப்பாடு செய்ய சொன்ன போது, திரும்புவதற்கு விமான பயணச் சீட்டு கட்டணம் இருபத்தையாயிரம் ரூபாய், உடனே சமாளிக்க இயலாது என்றும், காத்திருக்கும்படி சொன்னார்.

இலங்கைப்பெண்
என்னை அங்கேயே தங்கும்படி சொன்னார், அன்றிரவு கடையில் பார்த்த பாகிஸ்தானி அவரது அறைக்கு அன்று வருவதாக சொல்லியிருப்பதாகவும் நானும் அவரது அறையில் வந்து அவருடன் தங்கும்படி கேட்டார், எனக்கு அருவருப்பாக இருந்தது, நான் அவரது அறைக்கு வர இயலாது என்று மறுத்துவிட்டேன். அன்று இரவு, சுமார் ஒருமணிக்கு நான் தங்கியிருந்த அறையின் கதவு தட்டும் சத்தம் கேட்டு அறையின் விளக்கை போட்டு வெளியே நிற்பவரை கதவிலிருந்த கண்ணாடி வழியே பார்த்தேன், அந்த வீட்டின் காரோட்டி பழனி நின்றிருந்தார்.

நான்
படுக்கையறையில் போட்டுக்கொள்ளும் அரைகுறை உடையில் இருந்ததால் ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு வேறு துண்டு ஒன்றை எடுத்து என் மீது போர்த்தி கொண்டு கதவை திறந்த போது என் அறையின் உள் வந்து கதவை மூடி தாழிட்டுக்கொண்டார். அவரது இந்த செயல் நான் எதிர்பார்க்காத செயலாக இருந்தது, என்னுடன் உடலுறவு கொள்வதற்கு வந்திருக்கிறார் என்பதை அறியாத நான், எசமானி பார்த்தால் பிரச்சினையாகிவிடும் என்று அவரிடம் சொல்லி உடனே வெளியேறிவிடுமாறு கெஞ்சினேன்.

அவர்
என்னை கட்டியணைக்க முயன்றார், அவருக்கு திருமணமாகவில்லை இருபத்தேழுவயது மதிக்கத்தக்க தமிழ் நாட்டு இளைஞர், என்னிடம் தவறாக நடக்க முயன்றால் எசமானியிடம் தெரிவித்து விடுவேன் என்று சொன்னவுடன் கதவை திறந்து கொண்டு வெளியேறிவிட்டார். எனக்கு இருப்புக் கொள்ளவில்லை, தொலைபேசி கிடைத்தால் யாரிடமாவது இன்றைக்கே நான் அங்கிருந்து போக வழி செய்ய சொல்லி அழலாம் போல இருந்தது,

அடுத்த
நாள் காலை, இலங்கை பெண்ணும் பழனியும் பேசிக்கொண்டு தூரத்தில் உட்கார்ந்திருந்தனர். இருவரும் என்னை மோசம் போக்க செய்த சதி திட்டங்களைப்பற்றி பேசிக் கொண்டிருப்பார்களா, அல்லது நான் தவரானவள் என்று எசமானியிடம் சொல்வதற்கு ஆலோசனை செய்து கொண்டிருப்பார்களோ தெரியவில்லை.

தொடரும்.......

1/26/2010

அனுபவம் புதுமை - 5

அன்று மாலை வீட்டிற்கு வந்த எசமானி அடுத்தநாள் காலை நான் தயாராக இருக்கவேண்டும் என்று சொன்னார், காலையில் பத்துமணியளவில் என்னை கார் ஓட்டுனர் பழனி மறுமடியும் எசமானி வேலைபார்க்கும் வங்கிக்கு எனது பெட்டி மற்ற பொருட்களுடன் அழைத்து சென்றார், அந்த வங்கியில் வேலை பார்க்கும் அந்நாட்டுப் பெண் நாதா என்னை அவருடன் கூட்டி போகும்படி என் எசமானி சொன்னதாக என்னிடம் சொல்லி விட்டு அவரது காருக்கு எனது பெட்டி மற்றும் எனது உடமைகளை ஓட்டுனரிடம் மாற்றி வைக்கச் சொல்லி எங்கோ அவரே காரை ஓட்டிச்சென்றார்.

குறைந்தது ஒரு மணிநேர பயணம், ஆட்களே இல்லாத பாலைவனம், எங்கு திரும்பினாலும் உயர்ந்த செந்நிற மலைகள், இரண்டு மூன்று சிறிய வீடுகளே இருந்த ஒருமலையின் அடிவாரத்தில் காரைக் கொண்டு நிறுத்தினார், ஒரு வீட்டின் மாடிப்பகுதிக்கு என்னை கூட்டி சென்றார், எனது பெட்டி மற்றும் எனது உடமைகளை எடுத்துக்கொண்டு அவரை பின் தொடர்ந்தேன்,

மாடி
படிகள் முழுவதும் குப்பை மேட்டின் மீது நடப்பது போல குப்பைகள் கொட்டி கிடந்தன, சிறிய வீடு, இரண்டு சிறிய படுக்கையறைகளும் ஒரு சமையலறையும் ஒரு சிறிய பொது இடமும் இருந்தது, இரண்டு கழிப்பறைகள் வெவ்வேறு இடங்களில் இருந்தது, வீட்டில் இரண்டு திருமணமாகாத பெண்கள், இருவரும் நாதாவின் கணவனின் தங்கைகள், இரண்டு திருமணமாகாத ஆண்கள் இருபத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களாக தெரிந்தனர், இருவரில் ஒருவன் நாதாவின் தம்பி இன்னொருவன் தம்பியுடன் வேலைபார்ப்பவன். இவர்களில் திருமணமாகாத பெண்கள் இருவரும் அங்கு தங்குபவர்கள் இல்லை, அடுத்த நாள் காலை அந்த வீட்டை சுத்தம் செய்வது துணியை இயந்திரத்திலிட்டு மாடியில் கொண்டு உலற வைத்து மடித்து மின்சார பெட்டியினடியில் வைத்து சுருக்கமற தேய்த்து மடித்து வைப்பது, மூன்று வேளைக்கும் உணவு சமைத்து பரிமாறி பாத்திரங்களை சுத்தபடுத்தி வைப்பது போன்ற வேலைகள் நான் செய்யவேண்டும் என்று நாதா என்னிடம் சொன்னார்,

அந்த
நாட்டிற்கு போய் சேர்ந்த பின்னர் சில verification செய்து அவர்கள் அரசு கொடுக்கும் பணி செய்பவர்களுக்கான அனுமதி அட்டையை வாங்க வேண்டும், அதற்காக மறுபடியும் என்னை அடுத்தநாள் காலை அழைத்து சென்றார் நாதா, போகும் வழியில் என்னால் வீட்டு வேலைகள் செய்ய முடியாது நான் என் நாட்டிற்கு திரும்பிவிட வேண்டும் என்று நாதாவிடம் சொன்னேன். அன்று மாலை நாதாவின் வீட்டிற்கு திரும்பி கொண்டு வந்து விட பட்டு மறுபடியும் அடுத்த நாள் காலை எசமானியுடன் இந்திய தூதரகத்திற்கு அழைத்துச் செல்லபட்டேன்,

இந்திய
தூதரகத்திற்கு சென்ற போது அங்கிருந்தவருடன் எசமானியுடன் வந்திருந்த அந்த ஊரகாரர் எதை எதை பற்றியோ பேசிக்கொண்டிருந்தார், பின்னர் தூதரக அதிகாரி என்னிடம் என்னவென்று கேட்பது போல தலையசைத்தார், ஆங்கிலத்தில் அவரிடம் எனது பிரச்சினைகள் என்னவென்பதை சொன்னேன், அவரது அலுவலக தொலை பேசியிலிருந்து என்னை யாருடன் வேண்டுமானாலும் பேசும்படி சொன்னார், என் வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்த போது என் மகளே திரும்பவும் எடுத்தாள், அப்போதெல்லாம் செல்போன் கிடையாது என் கணவரின் அலுவலகத்திற்கு போன் செய்து என்னை குறிப்பிட்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளும்படி சொன்னேன்,

தொடரும்...

1/25/2010

அனுபவம் புதுமை - 4

பொது தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஒருவரிடத்தில் எனக்கு போன் செய்ய வேண்டும் என்று சொன்ன போது அவர் அதற்க்கு கடையில் காசு கொடுத்து அட்டை வாங்கி அதை போனில் சொருகினால் தான் போன் செய்ய முடியும் என்றார், என்னிடம் இந்திய பணம் இருக்கிறது அட்டைக்கு எவ்வளவு பணம் தேவைப்படுமோ அதை தருவதாகவும் இந்த ஊர் பணம் என்னிடம் இல்லை என்றும் சொல்லி அட்டை வாங்கி தரும்படி அவரிடம் கெஞ்சினேன். தனது அட்டையை உபயோகித்து கொள்ளும்படி அவர் சொன்னார், என் வீட்டு தொலைபேசி எண்ணை அமுக்கியபோது மறுமுனையில் தொலைபேசி ஒலித்ததும் என் மகள் குரல் கேட்டது, கணவர் அங்கே இருக்கிறாரா என்று கேட்டதற்கு அவர் பம்பாய்க்கு சென்றிருக்கிறார் என்றும் எப்போது திரும்புவார் என்பது தெரியாது என்றும் சொன்னாள்,

என்
வீட்டில் என் பெற்றோர் எனது குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருந்தனர், அவர் திரும்பி வந்தால் நான் தங்கியிருந்த வீட்டின் தொலைபேசியின் எண்ணை கொடுத்து என்னிடம் தொடர்பு கொள்ளும்படி சொல்லிவிட்டு எனக்கு உதவியவரை நன்றியுடன் பார்த்து நன்றி சொன்னேன், அவர் பதிலேதும் சொல்லாமல் தொலைபேசி அட்டையை எடுத்துகொண்டு போய்விட்டார்.

என்னுடன்
வந்த இலங்கை பெண்ணை எங்கேயும் காணவில்லை, நான் வேகமாக வந்த வழியே நடக்க ஆரம்பித்தேன், இருட்ட ஆரம்பித்திருந்தது, வழியில் பாதசாரிகளை பார்க்க முடியவில்லை, வேகமாக நடந்துகொண்டிருந்த போது என்னை கடந்து சென்ற ரேஞ் ரோவர் வண்டி என்னருகே பின்னோக்கி வந்து நின்றது, ஏதோ அசம்பாவிதம் நடக்கபோவதாக எனக்குத் தோன்றியவுடன், மிக வேகமாக ஓடி அருகே இருந்த மிகப்பெரிய பங்களாவின் மூடிய கேட்டை தட்டினேன், கேட்டை திறக்க வீட்டிலிருந்து யாரும் வெளியே வரவில்லை, அந்த இடத்திலிருக்கும் கேட்டுகள் ரிமோட் கண்ட்ரோலில் இயங்கக் கூடியவை என்பதால், திறப்பதற்கு ஆட்கள் அங்கே இருப்பது கிடையாது. அதை பார்த்த என் பின்னால் வந்த அந்நாட்டு ஆட்கள் மறுபடியும் ரேஞ் ரோவரில் ஏறி சென்று விட நான் வேகமாக தங்கியிருந்த வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தேன்.

இலங்கைப் பெண் அங்கே இருந்தார், நான் ஒன்றும் அவரிடம் கேட்கவில்லை, அடுத்தநாள் காலை அந்த வீட்டின் எஜமானி என்னிடம் இன்டெர் நேஷனல் உணவுகளை சமைக்க வேண்டுமென்றும் அதற்காக நான் அழைக்கப்பட்டேன் என்றும் என்னிடம் சொன்னார், எனக்கு சமையலைப் பற்றி எதுவுமே தெரியாது, என்னை அலுவலகப் பணி செய்வதற்கு இந்நாட்டிற்கு அனுப்புவதாக கூறி அனுப்பியுள்ளனர் என்று சொன்னேன், அவர் என்னிடம் சமைப்பதற்க்குத்தான் ஆள் கேட்டிருந்ததாகவும் அதற்காக நான் அனுப்பப்பட்டேன் என்றும் என்னிடம் சொன்னார்.

அன்று காலை அவர் வேலைக்குச் சென்ற பின்னர் எஜமானி வேலை பார்க்கும் வங்கிக்கு என்னை கூட்டி கொண்டு வரச் சொன்னதாக அந்த வீட்டின் கார் ஓட்டுனர் பழனி என்னிடம் சொன்னார், நான் அங்கு போனபோது வங்கியில் எசமானியுடன் வேலை பார்த்த தமிழ் நாட்டுக்காரர்கள் இருவருடன் என்னை பேச சென்னார். அவர்கள் என்னிடம் கேட்ட சில தமிழ் கேள்விகளுக்கு நான் பதில் சொன்ன பின் வீட்டிற்கு திருப்பி அனுப்பிவிட்டார். என்ன பிரச்சினை, ஏன் வேலை செய்யவில்லை என்பது தான் அவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகள்.

தொடரும்....