Translate

12/19/2009

வெயில் + மழை =


ஊரை கழுவி சுத்தப்படுத்திய மழை வெள்ளமாக பெருக்கெடுத்து வெயில் சுட்டெரித்து விடாயத்திருந்த பள்ளம் மேடுகளை விழுங்கி நீருக்கு ஏங்கி நின்ற மரங்களை வேரோடு பிடுங்கி அள்ளிக்கொண்டு அசுர வேகத்தில் ஓடிச் சென்று கடலோடு கலந்துக் கொண்டிருந்தது.

மழைக்கும் வெயிலுக்கும் மண்ணின் மீதும் மரங்களின் மீதும் ஏனிந்த கோபம், என் கண்கள் கண்ணீரை வெந்நீராய் பெருக்கியதைக் கண்ட மழை என்னிடம் கேட்டது, காய்ந்துப் போன உன் கண்களில் கூட கண்ணீர் சுரக்கிறதே என்று.

மழையின் கிண்டல் பேச்சு எனக்கொன்றும் புதிதல்ல, ஒவ்வொரு வருடமும் என்னைப் பார்த்து கேட்கின்ற கேள்வி தான். என்றாலும் இவ்வருடத்தில் மழையின் மீது என் கோபம் குறைந்திருந்தது என்பதால் மழைக்கு என் மீதான கிண்டல் கூடிவிட்டிருந்தது.எனக்கு அப்போது வயது பத்திருக்கும் அந்த வருடத்தில் நான் சாப்பிட்ட மாம்பழங்களிலேயே மிகவும் அருமையான ருசிகரமான மாம்பழக் கொட்டையை மட்டும் கவனமாக வீட்டின் பின்புறத்தில் புதைத்து வைத்திருந்தேன் அது முளைத்து அழகிய புதுமையான நிறத்தில் துளிர்களை விட்ட போது மனது மகிழ்ச்சியில் துள்ளியது, நான் வளர்ந்ததை விட மாஞ்செடி மிகவும் குதூகலமாகவே வளர்ந்து குறிப்பிட்ட சமயத்தில் பூக்கள் பூத்து பூவும் பிஞ்சுமாக நின்றிருந்த சமயம், சுழன்று சுழன்று வீசிய காற்றில் மரத்திலிருந்த பூக்களும் பிஞ்சுகளும் மரத்தைச் சுற்றி கொட்டிக்கிடந்ததை அடுத்த நாள் காலையில் பார்த்த போது மனம் வேதனை அளித்தது.

அவ்வருடம் மழை இல்லாத வருடமாக போனதும் இன்னும் எனக்கு நன்றாக நினைவிற்கு வருவதுண்டு. பெய்து கெடுக்கும் அல்லது காய்ந்து கெடுக்கும் என்பார்கள், அதைப் போன்று மழை பெய்யாமல் கெடுத்தது. அந்த சொந்த வீட்டில் நான் வைத்திருந்த மல்லிகை பந்தல் கடும் காற்றில் சாய்ந்து போனதும், பின்னர் மல்லிகை கொடியை வெட்டி விட்டு மல்லிகைக் கொடி இருந்த இடத்தில் மதிற்சுவரை கட்டியது கூட இன்றும் மனதில் பசுமையாய் நினைவில் இருப்பவை.

சொந்தவீட்டை வேறு ஒருவருக்கு விற்ற போது நான் வளர்த்த மாமரம் என்னைப் பார்த்து அழுவதை நான் மட்டுமே உணர்ந்தேன், அந்த வீட்டை விட்டு வந்த பின் அங்கு செல்வதற்கு மனமில்லாமல் போனது. அந்த மாமரம் பெய்த மழையில் வேருடன் விழுந்துவிட்டதாக கேள்விபட்டதிலிருந்து மனம் கனத்தது. கண்களில் கண்ணீர் சுடுநீறாய் கொட்டியது.மழையே உனக்கு ஏன்னிந்த மரங்களின் மீதும் மேடுகளின் மீதும் இத்தனை கோபம் என்றேன் நான். மரம், செடி, ஏரி, குளம், கிணறு என்று ஒரு இடம் விடாமல் வெயில் கரித்து கொட்டுகிறதே அதன் மீது மட்டும் உனக்கு கோபம் இல்லையே அது ஏன் என்றது மழை. யார் சொன்னது வெயிலின் மீது கோபம் இல்லையென்று என்றேன் நான். மரங்களும் செடிகளும் விலங்குகளும் குடிக்க நீரில்லாமல் வாடும் நிலையை பார்த்து நான் வேதனை அடைவது உனக்கென்ன தெரியும் என்றேன் நான்.

என்னை மட்டும் தடுத்து நிறுத்தி ஏரி குளம் என்று உபயோகிக்கும் மனிதர்கள், மின்சார உற்பத்தி குறையும் போது, உங்கள் அறிவியலின் புதுமையான கண்டுபிடிப்பினால் கிடைத்த உபகரணங்கள் மூலம் வெயிலின் காட்டு மிராண்டித்தனமான வெப்பத்திலிருந்து மின் உற்பத்தி செய்ய யோசிப்பதே இல்லையே ஏன் என்று கேட்டது மழை. என் மனதினுள் மழையின் கோபம் புரிந்தாலும் தெரியாதவள் போல் ஒன்றும் பேசாமல் நின்றேன்.

பூமியின் ஒரு பங்கில் வாழும் உங்களுக்கு பூமியின் மீது இருக்கும் பாச நேசத்தை விட பூமியின் முக்கால்வாசி இடத்தை ஆக்கிரமித்திருக்கும் எனக்கு பூமியின் மீதிருக்கும் அக்கறை அதிகம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றது மழை. நான் பூமியிலே இருந்தாலும் கூட உங்கள் கைக்கு எட்டாத இடத்திலிருக்கும் சூரியனைப் போல பூமியிலிருந்து எட்டாத இடத்திற்கு போகிறேன், வெயிலின் தாக்கத்திலிருந்து மின் உற்பத்தி செய்து என்னை கொஞ்சம் ஓய்வெடுக்க விடுங்களேன் என்றது மழை.

தாகம் என்றால் தண்ணீரைத்தானே குடிக்க முடியும் என்றேன் நான், தண்ணீருக்கு பதிலாக வேறு பானங்களை குடித்து பழகுங்கள் என்றது மழை. வரும் காலங்களில் நீருக்கு பதிலாக பெட்ரோல் டீசல் இன்னும் வேறு எண்ணைகளை கூட குடித்து உயிர் வாழ நேரலாம், மழையின் கோபமும் வெயிலின் கோபமும் மனிதனை இந்த அளவிற்கு தாக்குவது எதனால்? நான் யோசித்தேன். மனிதனுக்கு அவற்றின் அருமை தெரியாமல் இருப்பதுதான் காரணமாக இருக்க முடியும் என்ற முடிவிற்குத் தான் வர முடிந்தது.

எதுவுமே இருக்கின்ற வரையில் அதன் அருமை விளங்குவது இல்லை, இல்லாமல் இருக்கும் போது அதன் அருமை உணர்ந்து யாருக்கு என்ன பிரயோஜனம்.