Translate

12/12/2009

கோட்டீஸ்வரன் - 3

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் கோட்டியின் அக்காள் கௌரியின் திருமணத்திற்கு மூன்று லட்சம் பணம் தேவைப்பட்டது, பணத்தை கொண்டுவந்து வீட்டில் கொடுத்தால் தன் மீது ஊரார்க்கும் வீட்டில் உள்ள அனைவருக்கும் சந்தேகம் ஏற்ப்படும், யோசித்த போது கல்லூரியில் நடந்த சம்பவம் நினைவிற்கு வந்தது,

இரண்டாம் வருடம் தேர்வு எழுதிக்கொண்டிருந்த போது புத்தகத்தை பார்த்து எழுதிக் கொண்டிருந்த பாண்டியன் என்னும் சக மாணவன் கையும் களவுமாய் பிடிபட்டபோது அவனை அடுத்து உட்கார்ந்து பரீட்சை எழுதிக் கொண்டிருந்த கோட்டி தான் தனக்கு காப்பி அடிக்க புத்தகம் உதவி செய்ததாக பாண்டியன் பொய் சொல்ல வேறு வழி இன்றி அந்த குற்றம் கோட்டியின் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றமாகிவிட, எப்படியோ தப்பித்துவிட்டான் பாண்டியன், ஆசிரியர் குழுவின் பரிந்துரை பேரில் கோட்டி குற்றமற்றவன் என்பது நிருபிக்கபட்டுவிட்டதால் கோட்டியின் கல்லூரி படிப்பு தொடர்ந்தது.

பணக்கார பாண்டியன் தான் தப்பித்துக் கொள்ள கோட்டியின் பெயரை சொல்லிவிட்டதால் விசாரணையின் போது கோட்டி உண்மைகளை சொல்லிவிடக்கூடும் என்று நினைத்து பெரும் தொகையை கோட்டிக்கு கொடுத்து செய்த தவற்றுக்கு தான் தான் காரணம் என்று ஒத்துக் கொள்ளுமாறு கோட்டியை வற்புறுத்தினான் பாண்டியன், பணத்தை ஏற்க மறுத்த கோட்டி, குற்றத்தை விசாரணையின் போது தான் செய்ததாக ஒப்புக் கொண்டாலும் பாண்டியனைப் பற்றிய அபிப்ராயம் கல்லூரி முழுவதும் அறிந்திருந்ததால் கோட்டி நிரபராதி என்று ஆசிரியர் குழு தீர்ப்பளித்தது.

கல்லூரியை விட்டு வெளியேறிய கடைசி நாளில் பாண்டியன் கோட்டியிடம் எந்த உதவி வேண்டுமானாலும் தன்னிடம் கேட்க கோட்டிக்கு உரிமை உண்டு என்று எல்லோரது முன்பிலும் கூறி நெகிழ்ந்தது நினைவிற்கு வந்தது, யாரும் சந்தேகப் படாத வகையில் பாண்டியனிடம் உதவி கேட்டு செல்வதாக சொல்லிவிட்டு கோயம்பத்தூரையடுத்த ஒரு சிறிய பழையனூர் கிராமத்தை வந்தடைந்தான் கோட்டி, தன்னிடமிருந்த இரண்டு பெட்டிகளையும் வேறு இரண்டு பெரிய பெட்டியின் உள் வைத்து மிக பத்திரமாக எடுத்து வந்திருந்தான்.

ஒருமுறை இந்த பழையனூர் கிராமத்தில் இருந்த நெசவாலைக்கு கோட்டியும் அவனது குடும்பமும் வேலை செய்து கொண்டிருந்த நெசவாலையிலிருந்து ஏதோ வேலையாக அனுப்பி இருந்தனர். அந்த ஊரில் ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கினான் கோட்டி. அந்த வீட்டைச் சுற்றி கண்ணுக்கெட்டிய தூரம்வரை வீடுகளோ போக்குவரத்தோ இல்லை. அடுத்த நாள் காலை எழுந்த பின் முதல் வேலையாக போக்குவரத்து வசதிக்காக யாரோ மிக குறைவாக உபயோகித்த இரண்டுச் சக்கரவாகனம் ஒன்றை விலைக்கு வாங்கிக் கொண்டு ஒரு இரும்பு கடைக்குச் சென்று கொத்தனார் வேலைக்கு தேவைப்படும் பொருள்களையும் இன்னும் தேவையான உணவு பொருள்களையும் மற்றப் பொருள்களையும் வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

அடுத்தநாள் எழுந்து முதல் வேலையாக வீட்டினுள் தரையை உடைத்து ஒரு பெட்டி உள்ளே போகும் அளவிற்கு ஒரு நிலவறை ஒன்றை தயார்செய்து அதற்க்கு ஒரு மூடியும் உருவாக்கி பணப் பெட்டியை உள்வைத்து பத்திரப்படுத்தினான். முதல் முறையாக பெட்டியினுள் இருந்த பணத்தை கணக்குப் பார்த்த போது அவனுள் திக் என்று இருந்தாலும் மிகவும் சந்தோஷமாகவும் இருந்தது. தான் பல கோடிகளுக்கு சொந்தக்காரன் என்கிற சந்தோசம். மற்றொரு பெட்டியை திறந்து பார்த்த போது தங்க வைர நகைகள் பல கோடிகள் விலை மதிப்புடையதாக இருந்தது.

தொடரும்....