Translate

12/09/2009

கோடீஸ்வரன் - 2

ப்ளஸ் டூ படிக்கும் போது கவிதை கதை எழுதுவதற்கு தன் தமிழ் வாத்தியாரிடம் கற்றுக்கொண்டான் கோட்டி. அரசு பள்ளிகூடத்தில் படித்துவிட்டு கல்லூரிக்குச் சென்றதால் கோட்டியின் ஆங்கிலப் புலமை மிகவும் மோசமாகவே இருந்தது. பல பாடங்களில் தோல்வி அடைந்து தொடர்ந்து அவற்றை மறுபடியும் பரீட்சை எழுதி வெற்றி பெறுவதற்குள் கல்லூரி படிப்பும் முடிந்து போனது. ஆனால் அவனது பெற்றோருக்கு தன் மகன் கல்லூரியில் படிப்பதே பெருமை அளிப்பதாக இருந்தது.

கல்லூரி படிப்பு முடிந்தாலும் தோல்வியுற்ற பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு மறுபடியும் பரீட்சைகள் எழுதிக்கொண்டிருந்தான். வருமானம் பற்றாகுறையால் குடும்பச் சூழல் மிகவும் மோசமடைந்து கொண்டிருந்ததால் தானும் நெசவு ஆலைக்குச் சென்று வேலைகள் செய்து கொண்டிருந்தான். ஒருநாள் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பும் வழியில் சாலையின் ஓரத்தில் நொறுங்கி கிடந்த புதிய கார் ஒன்றும் அதனையடுத்து யாரோ மெலிதாக முனகும் ஓசையும் கேட்டது, தான் ஓட்டி வந்த மிதிவண்டியை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு முனகல் வந்த திசையில் சென்று பார்த்த போது உயிர் பிரிந்து கொண்டிருந்த ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

காரிலிருந்து வெளியே வீசி எரியப்படிருந்த ஒரு பெட்டி லேசாக திறந்து கிடந்தது, அந்த பெட்டி முழுவதும் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள். அந்த பெட்டியைப்போலவே மற்றொரு பெட்டி திறக்காமலே கிடந்தது, திடீரென்று ஏதோ ஒன்று தன் மனதினுள் தோன்ற இரண்டு பெட்டிகளையும் எடுத்துக் கொண்டு ஊரின் எல்லையில் புதர்கள் மண்டி கிடந்த பாழடைந்த பங்களாவில் பத்திரமாக வைத்து விட்டு வீடு வந்து சேர்ந்தான் கோட்டி.

தொடரும்....