Translate

12/30/2009

இசையென்பது

இசையைப் பற்றி நான் தெரிந்து கொண்டது என் பெற்றோரிடமும் என் சித்தப்பாவிடமும். என் குடும்பத்தார் கர்னாடக இசை பிரியர்கள் என்பதால் வீட்டில் இசையைப் பற்றிய பேச்சுக்களுக்கு பஞ்சம் இருக்காது. இசையின் மூலம் இறைவனை காண முடியும் என்பது எத்தனை உண்மை என்பது இசையை அறிந்தவர்களால் சொல்ல முடியும்.

இறைவன் இசை வடிவில் இருக்கிறான் என்றால் அது மிகையாகாது. ரம்மியமான இசையை ஆழ்ந்து கேட்கும் போதும் பாடும் போதும் ஆத்மார்த்தமான உணர்வு நம்மை ஆட்கொள்வதை அனுபவித்தால் நன்கு புரியும். கர்னாடக இசைக்கு மட்டும் தான் தெய்வீகம் உண்டு என்பதை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன், இசை என்பது ரம்மியமாக மனதை வருடும் வகையில் இருந்தால் அது எந்த வகையை சேர்ந்த இசையாக இருந்தாலும் அதற்க்கு தெய்வீக குணம் உண்டு என்பது அனுபவித்தவர்களால் ஏற்றுக்கொள்ள முடிந்த உண்மை.

இதனால் தானோ என்னவோ இறைவனை பாடி வணங்குதல் ஒரு முறையாக இருந்து வந்துள்ளது, வரலாற்றை படித்தால் ஆதி காலமுதலே இறைவன் இசை வடிவாய் ஓங்காரமாக இருந்ததும் இசையால் இறைவனை வழிபடும் முறைகளை கையாண்டு வந்ததும் நம்மால் படித்து தெரிந்து கொள்ள முடியும்.

மௌனத்திலும் கூட ஒரு ஓசை உள்ளது புரியும், கண்களை மூடி எண்ணங்களை ஒருமித்து இறைவனை நோக்கி பார்க்கும் சமயங்களில் ஓசையற்ற மோன நிலை இருந்தாலும் இசையுடன் கூடிய இறை தரிசனமே மனதை குதூகலிக்கச் செய்யும். முன்னோர்கள் பாடிப் பாடி இறைவனை வணங்கியத்தின் காரணமும் இதனால் தான். சுகமான ராகங்கள் மனதை கொள்ளை கொள்வது உண்மை, அழகிய குரல்வளத்தால் ரம்மியமான ராகங்களை பாடும் போது தெய்வீகம் உணரப்படுவதும் உண்மை.

12/29/2009

வாழும்வரை

என் தகப்பனாரிடம் பல அறிய குணங்களை நான் கண்டு கேட்டு இருக்கிறேன், அவற்றில் ஒன்று தவநிலை அல்லது முற்றும் துறந்த துறவறம். துறவறத்தைப் பற்றி என் தகப்பனார் கூறும் இந்த அறிய கருத்து இன்றைக்கும் எண்ணி பார்க்க மிகவும் அதிசயமானதாகவும் அதில் எத்தனை உண்மை உள்ளது என்பதும் எனக்குத் தோன்றுவதுண்டு.

ஒரு மனிதன் துறவியைப் போல வாழ்வதற்கு மனிதர்களே இல்லாத காட்டுக்கோ மலைகள் சூழ்ந்துள்ள பகுதிகளுக்கோ சென்று துறவியாக வாழ்வது என்பது மிகவும் சுலபமானது, நெருக்கடியான தொல்லைகளும் ஆசாபாசங்களும் நிறைந்திருக்கும் மக்களுடன் ஒருவனாக வாழும் போதே அவன் மனம் ஒரு துறவியின் நிலையை அடைவது தான் மிகவும் கடினமானது என்று கூறும் அவர் அப்படியே வாழவும் பழகிக்கொண்டார் என்பதை நான் பார்த்து இருக்கிறேன்.

அவரைச் சுற்றி இருந்தவர்களிடம் ஏச்சும் பேச்சும் அவருக்கு கிடைத்தாலும் ஒரு நாளும் தன்னிலைத் தவறாமல் துறவியைப் போல வாழ்ந்தவர் அவர். நம்மைச் சுற்றி உள்ள உலகம் நம்மை என்னவாக நினைக்கிறது என்ன எதிர்பார்க்கிறது என்பதைப் பற்றிய கவலை அவரை ஒருநாளும் பாதிக்கவில்லை. ஒருநாளும் அதற்காக அவர் கவலைபட்டதில்லை. யார் யாரையோ திருப்திபடுத்த அவர் ஒருநாளும் யோசித்து தனது நேரத்தை வீணடித்ததில்லை. மாறாக இறைவனிடம் எப்போதுமே அன்னியோன்னியத்துடன் இருந்து வந்தார்.

ஆனால் தான் இறைவனிடம் மிகவும் அன்னியோன்னியமாக இருந்து வருகிறார் என்பதைப் பற்றி யாரிடமும் சொல்லிக் கொண்டது கிடையாது. அவருக்கும் இறைவனுக்குமான தொடர்பு அத்தனை நெருக்கத்துடன் இருந்தாலும், தனக்கென்றும் வாரிசுகளுக்கென்றும் ஏதும் கேட்டு பெற்றுக்கொள்வது என்கிற வாணிப நோக்கம் போன்ற வழக்கத்தை இறைவனிடம் அவர் ஏற்படுத்திக் கொண்டது இல்லை.

அவர் அடிக்கடி , மனம் தூய்மையான கண்ணாடியைப்போல இருக்க வேண்டும், அப்படிப்பட்ட மனங்களால் மட்டுமே இறைவனிடம் நெருக்கத்தை அடைய முடியும். இறைவனை தரிசிக்கவும் இறைவனுக்கு உகந்தவர்களாகவும் நம்மை நாம் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம் என்று சொல்லுவார்.

பைபிளில் சொல்லியதுப் போல ஒரு குழந்தையின் மனதையும் எண்ணங்களையும் ஒத்தவர்களாக நாம் இருக்கும் போது இறைவனை நன்றாக உணரவும் தரிசிக்கவும் முடியும் என்பார். அவர் தன் வாழ்நாளை அப்படியே வாழ்ந்தும் வந்தார்.

அவரது பேச்சில் கூட தான் ஒரு துறவியைப் போல வாழ்வதாக சொல்லிக் கொண்டது கிடையாது. அவருக்கு பனிரெண்டு வயதிருக்கும் போது பல வயதினரோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக சொல்லுவார் அவர்களில் சில துறவிகளும் உண்டு. துறவிகளுடன் பல நாட்கள் தங்கி விடுவதும் உண்டு என்பார். அவரது பெற்றோர் அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தாலும், மற்ற பிள்ளைகளுக்கும் இவருக்குமான வித்தியாசத்தை இவரது சிறிய வயதிலேயே அவர்கள் நன்கு புரிந்து கொண்டதாக சொல்லுவார். பலவற்றைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் சிறிய வயதிலிருந்தே மிகுந்து காணப்பட்டதாகவும் அவற்றிக்கான விடைகளைத் தேடி புத்தகங்கள் பலவற்றை படித்து புரிந்து கொள்ள இயலாத பலவற்றை பலரிடம் கேட்டு அறிந்து கொண்டதாகவும் சொல்லுவார். இசையைக் கூட இவர் கற்றுக் கொண்ட விதமே தன்னார்வம் மிகுதியினால் என்பார்.

அவரிடம் இறைவனைப் பற்றி பல விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேனே என்று எனக்கு தோன்றுகிறது . அவர் எல்லாரையும் சுத்த மனதோடு உண்மையாய் அன்பு கூறும் குணம் கொண்டவர், அதே போன்று என் தாயாரும் எல்லோரையும் உண்மையாய் நேசிக்கும் குணம் கொண்டவர். விரோதிகள் என்று அவர்களுக்கு யாருமே இருந்ததில்லை, யாரையுமே அவர்கள் வெறுத்ததில்லை. ஒருவரையும் குறை கூறி பேசி பார்த்ததே இல்லை. அப்படிப்பட்ட பெற்றோர் கிடைக்க நான் மிகவும் பாக்கியசாலியாக இருந்தேன் என்பதுகாலம் கடந்து உணர முடிகிறது.

12/28/2009

புதிய வருடத்தின் தீர்மானங்கள் [RESOLUTIONS]

சிலர் தங்களிடம் இதுவரையில் நடைமுறையில் இருந்துவந்த தனக்கும் சில சமயங்களில் அடுத்தவர்க்கும் பிரச்சினை அல்லது உபத்திரவத்தை கொடுக்கும் சில பழக்க வழக்கங்களை புதிய வருடத்தில் தொடராமல் விட்டுவிட முடிவு எடுப்பது, பின்னர் விட முடியாமல் தொடர்ந்து அந்த பழக்கத்திற்கு அடிமையாகி தவிப்பது என்கிற வினோத போக்கு எனக்கு நினைவிற்கு வருகிறது.

எந்த நிமிடத்தில் விட்டுவிட வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறோமோ அந்த நிமிடத்திலேயே அமலுக்கு கொண்டு வருவது தான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கமுடியும். எந்த ஒரு காரியத்தை செயல் படுத்தவேண்டும் என்று முடிவிற்கு வருகிறோமோ அந்த நிமிடத்திலிருந்து செயல்படுத்தினால் மட்டுமே நாம் நினைத்தபடி நம்மால் செயல்படுத்த முடியும், நினைப்பது ஒரு நாள் செயல்படுத்த வருடத்தின் முதல் நாள் என்று காத்திருந்தால் ஒரு நாளும் நம்மால் நினைத்ததை செயல் படுத்த இயலாமலே போய்விடும் என்பது தான் நிஜம்.

நம்மை நாம் ஆள்வது என்பது நமது சிந்தனைக்கும் செயல்களுக்கும் ஒற்றுமை இருக்கும்படியாக நம்மை நாமே ஆள பழகி கொள்ளுதல். முடிவுகளை எடுப்பதற்கு முன்னும் புதிய பழக்கவழக்கங்களை தெரிந்தெடுப்பதற்கு முன்னும் அதைப் பற்றி நிதானமாக யோசித்து தெரிந்து கொள்வது விவேகம். பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது என்பதற்கும், ஏற்பட்டுவிடுவதற்கும் வித்தியாசங்கள் உண்டு. எந்த சூழ்நிலையிலும் தன்னைத் தானே நிலையான வரம்புகளுக்கு உட்படுத்தி வாழ்க்கையை வாழ பழகிகொள்வது என்பது தியான அப்பியாசம் போன்றது.

புதியவருடத் துவக்கத்திற்க்காக காத்திருந்து முடிவெடுப்பதால் குறிப்பிட்ட பழக்கம் நம்மை விட்டுவிடும் என்று நாம் எதிர்பார்ப்பதற்கு பதில் குறிப்பிட்ட காரியத்தை வெறுத்து ஒதுக்க நம்மை நாம் பழக்கிக் கொள்வதால் மட்டுமே அந்த பழக்கத்தை நம்மால் விட்டுவிட முடியும். முயற்ச்சிகள் என்பது நம்மிடம்தான் உள்ளது என்பதால், முடிவு எப்போது எடுகிறோமோ அப்போதே அதை செயல்படுத்த வேண்டும் என்பது தான் சரியானதாக இருக்க முடியும்.

12/21/2009

இந்திய ஒரு வல்லரசு நாடாக ......

நான் பிறந்த தேசம் இந்தியா நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமை கொளுகிறோம், நாம் உழைத்து சம்பாதிக்கும் பணத்திலிருந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக செலுத்தப்படும் வரிபணத்தில் கட்டப்படும் மேம்பாலங்கள் கடற்கரை வீதிகள் பூங்காக்கள் சாலைகள், அரசு பேருந்துகள், என ஒவ்வொன்றும் உருவாக்கப்படுவது அவற்றை தினம் தினம் உபயோகிக்கும் ஒவ்வொரு மனிதனுக்காக. கடற்கரையோரத்தில் பல கோடிகள் செலவழித்து கட்டபட்டிருக்கும் அத்தனையும் பொதுமக்களின் உபயோகத்திற்கு.

அமெரிக்க
ஐக்கிய நாட்டிலிருந்து பலவற்றை நாம் கற்றுக்கொள்ளுகிறோம் , ஆனால் ஆட்ச்சியில் எந்த கட்ச்சியின் முதல்வர் பதவிக்கு வந்தாலும் ஏற்கனவே ஆட்ச்சியில் இருந்துவிட்டு போன கட்சி நாட்டிற்கு செய்துவிட்டு போன நல திட்டத்தையோ மேம்பாலங்களையோ தொழில்நுட்ப பூங்காக்களையோ சேதப்படுத்துவது பற்றி அவர்கள் அறிந்திராத விஷயம்,
அப்படி செய்வதால் நாட்டின் மக்களிடமிருந்து வசூலித்த வரிப்பணம் தான் வீணாகுமே தவிர ஏற்கனவே ஆட்ச்சியில் இருந்துவிட்டுச் சென்ற ஜனாதிபதியையோ அவரது கட்ச்சியையோ அவதூறு செய்து விட்டதாக முட்டாள்தனமாக அவர்கள் நினைப்பதே கிடையாது. இத்தகைய விவேகமற்ற செயல்களால் இந்தியாவின் பணம் கோடிகணக்கில் வீணாவது போல வேறே எந்த நாட்டிலும் வீணாக்கப் படமாட்டாது.

அப்படி அவர்கள் முட்டாள்தனமாக யோசித்து செயல்பட்டால் பொதுமக்களும் சட்டமும் அவர்களை சும்மாவிடாது. ஆனால் வல்லரசாக நினைக்கும் இந்திய நாட்டில் ஒரு கட்ச்சியின் ஆட்சி முடிந்து வேறு ஒரு கட்ச்சியின் ஆட்சி வந்து விட்டால் முதலில் பதவிக்கு வந்தவுடன் செயல் படுத்தும் விஷயம் ஏற்கனவே ஆட்ச்சியில் இருந்தவர்கள் செய்துவிட்டு போனவற்றை இடித்து தகர்த்து பெயர்த்து எடுப்பது, நல திட்டங்களை ரத்து செய்வது.

இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் அரசியல் பழி தீர்க்கும் படலம் முதலில் முடிவிற்கு வரவேண்டும், எந்த அரசு ஆட்ச்சிக்கு வந்தாலும் நடைமுறையிலிருக்கும் மக்களின் நல திட்டங்கள் ரத்து செய்வது என்ற முட்டாள்தனம் நடக்கக்கவிடாமல் கவனித்துக்கொள்ள மக்கள் ஐந்து வருடம் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லாமல் புரட்ச்சி வெடிக்க வேண்டும். நடைபாதைகள் மேம்பாலங்களை இடிப்பது எந்த காரணத்திற்க்காக இருந்தாலும் பொதுமக்கள் அப்படி நடக்கவிடாமல் ஒன்று கூடி தடுக்க முன்வரவேண்டும். அரசியலில் காணப்படும் காழ்ப்புணர்ச்சியினால் நிச்சயம் இந்திய தேசத்தின் நலன் பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாகிறது.

இதனால் கோடிகணக்கில் செலவழிக்கப்படும் பணம் வீணாக்கப்படுவதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது, நாம் கட்டிய சொந்த வீட்டை வேறு ஒருவர் உடைத்தாலோ சேதப்படுத்தினாலோ நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை, ஆனால் பொது சொத்துக்கள் சூறையாடுவதை பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருந்து விடுகிறோம், சூறையாடப்படும் பொது சொத்தும் நம்முடைய பணத்தில் தான் உருவானது என்கிற எண்ணம் ஏன் நமக்கு ஏற்ப்படுவதில்லை. நாட்டின் குடிமக்கள் சுயநலவாதிகளாக இருந்தால் நாடு ஒருகாலமும் வல்லரசாக வாய்ப்பே இல்லை.
12/20/2009

கிறிஸ்துமஸ்

Merry Christmas Comments and Graphics for MySpace, Tagged, Facebookநவம்பர்
மாதம் வந்துவிட்டாலே கிறிஸ்துமஸை பற்றிய குதுகலம் நிறையத் துவங்கிவிடும், அப்போது மேரிக்கு பதினான்கு வயதிருக்கும் எதையும் உணரத் தெரியாத வயசு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மனதை சந்தோஷப்படுத்துவதில் இருக்கும் அளவிற்கு வீட்டில்அதற்க்கான அடையாளங்கள் நிறைந்திருக்காது, மேரி ஒரு ஏழைப் பெண், ஏழைகளுக்கு ஏது பண்டிகை.

ஏழ்மைநிலையில்
வாடிக்கொண்டிருக்கும் இளம் தளிர் அவள், அவளுக்குத் பண்டிகை கொண்டாட்டத்தின் அர்த்தம் என்னவென்பது ஒன்றும் அறிந்திராதவள், பனி கொட்டும் இரவுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதால் நல்ல குளிரில் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து குளித்து புதிய உடை இருப்பவர்கள் உடுத்திக் கொண்டு ஆலயத்திற்கு போவது வழக்கம், மேரியின் கிறிஸ்துமஸ் எப்போதுமே ஒரே மாதிரித்தான் கொண்டாடப்பட்டு வந்துள்ளது, அதிகாலை மூன்றரை மணிக்கு இருட்டில் குடும்பத்தோடு ஆலயத்திற்குச் சென்று அங்கு குழுமியுள்ள கூட்டத்தின் புதிய உடைகளை வெறித்து பார்த்துவிட்டு வீடு திரும்புவது.

மேரியின்
வீடு அமைதியின் இருப்பிடம், சிலரது வாழ்க்கையில் குடிகார அப்பாவினால் குடும்பத்தில் அமைதியே இராது, ஆனால் மேரியின் வீடு அமைதியின் மொத்த இருப்பிடம். உடுத்த புதிய உடை இல்லையென்ற குறை கூட பெரிதாக தெரியாமல் போய்விடும். அன்பினால் ஒருவரையொருவர் ஆக்கிரமித்த குடும்பம்.

மேரியின்
அம்மா செய்து வைத்திருக்கும் கிறிஸ்துமஸ் பலகாரங்களை அண்டை வீடுகளில் உள்ளவர்களுக்கு கொடுக்கச் சொல்லி அனுப்பி வைப்பாள், அப்படி அனுப்பும் வீடுகளில் அவளது சொந்தக்காரர்களின் வீடுகளுக்கும் செல்வதுண்டு, மேரியின் அப்பாவின் இரு சகோதரர்களின் வீடுகளுக்கு பலகாரம் கொண்டு சென்று அவர்களது வீட்டின் வாசலை நெருங்கும் போதே வீட்டினுள் நடக்கும் சண்டையின் சப்தம் வீதியில் தெளிவாக கேட்கும், மேரிக்கு அந்த வீட்டிற்குள் போகலாமா வேண்டாமா, பலகாரத்தை திரும்பி எடுத்துக் கொண்டு போனால் அம்மா திட்டுவார்களே என்று எண்ணிக்கொண்டிருக்கும் போது சண்டை போட்டுக் கொள்பவரில் வீட்டை விட்டு வெளியேறுபவர் எப்போதுமே மேரியின் பெரியப்பாவும் சித்தப்பாவுமாகத்தான் இருக்கும், சில சமயங்களில் பெரியம்மா பெட்டியுடன் கிளம்பி கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறுவதும் பார்க்க முடியும்.

மேரிக்கு இவற்றின் அர்த்தம் புரிந்துகொள்ள இயலாத வயசு, சண்டை நடக்கும் இரண்டு வீடுகளிலும் புதிய ஆடைகள், வீட்டு அலங்காரம், சமையல்காரனை வைத்து பலகாரம் தயாரித்தல் என்று கிறிஸ்துமஸ் களை கட்டி இருந்தாலும் இவர்கள் ஏன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது கேள்வி குறியாகவே இருப்பதுண்டு.

அப்போது
மேரிக்கு இருபத்து இரண்டு வயதிருக்கும் கிறிஸ்துமஸ் நெருங்கி கொண்டிருந்த சமயம், என்னுடன் பேசிக்கொண்டிருந்த மேரி இந்த கேள்வியை என்னிடம் கேட்டாள், எல்லாமிருந்தும் இவர்கள் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டு சந்தோஷமில்லாமல் இருக்க காரணம் என்னவாக இருக்க முடியும் என்பது எனக்கு இன்றுவரையில் விளங்காத கேள்வியாகவே இருந்து வந்துள்ளது, என் அப்பாவைப் போலவே என் சித்தப்பாவும் பெரியப்பாவும் குடிகாரர்களோ சூதாட்டக்காரர்களோ கிடையாது, மனைவியை அதிகம் நேசிப்பவர்கள் அப்படி இருந்ததும் ஏன் இந்த ஓயாத சண்டை என்றாள்.

கிறிஸ்துமஸ்
என்பதன் பொருள் என்னவென்று தெரிந்து கொள்வதை விட கிறிஸ்து என்கிற கடவுள் மனிதனாக பிறந்ததின் காரணத்தை இவர்கள் அறிந்தும் அதை பூரணமாய் தங்கள் மனதினுள்ளும் தன் வாழ்க்கையிலும் ஏற்றுக்கொள்ளாமல் இந்த உலகத்திற்குரிய பலவித ஆசைகளால் இழுப்புண்டு சண்டை சச்சரவுகளை உண்டாக்கும் காரியாங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி ஒருவரையொருவர் காயப்படுத்தி கொண்டு அறியாமையிலேயே வாழ்ந்துவருகிறார்கள், எல்லாம் இருந்ததும் சமாதானம் சந்தோசம் போன்றவற்றை இழந்து தங்களை வருத்திக் கொள்ளுகிறார்கள்.

எப்படி
என்றால் கிறிஸ்துவின் பிறப்பு என்பது உலகத்தில் வாழும் மனிதர்கள் ஒருவரையொருவர் சுத்த மனதோடு நேசிக்க வேண்டும் என்கிற அடிப்படையான கட்டளையை மறந்து தினம் தினம் ஒன்றுமில்லாத உலகப் பொருளுக்காக ஒருவரையொருவர் காயப்படுத்தி கொள்கிறார்கள் என்றேன் நான்.

மேரிக்கு
நான் சொன்னது முழுவதுமாக புரிந்து கொள்ள முடிந்ததா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள அவளுக்குத் திருமணமாகி குடும்ப வாழ்க்கையினுள் காலடி எடுத்து வைத்த பின்னர் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் காத்திருக்கிறேன். இயேசு கிறிஸ்த்துவே நமக்கு கிடைத்த மிகப்பெரிய விலைமதிப்பற்ற விருது. விலை மதிப்பற்ற வைரமும் ஆடை அணிகலன்களும் அதற்க்கு நிகர் இல்லை என்பதே கிறிஸ்துமஸ்.