Translate

11/07/2009

பிரிவு

நாம் வாழுகின்ற காலத்தில் குழந்தைப் பருவம் முதல் வாழ்வின் இறுதிவரையில் எத்தைனையோ மனிதர்களையும் இடங்களையும் ஊர்களையும் நாடுகளையும் ஜடப்பொருட்களையும் மிருகங்களையும் ஊர்வன பறப்பன என்று கோடிகணக்கானவற்றை சந்திக்கின்றோம். இவை அனைத்தையும் நம்மால் நினைவில் வைத்துக் கொள்வதற்காக மூளையின் ஒருபகுதி இயங்கிவருகிறது.

பலவற்றை நாம் சந்தித்தவுடன் சில நிமிடங்களிலேயே மறந்துவிடுகின்றோம், அதற்கு காரணம் நாம் அந்த பொருளையோ மனிதரையோ இடத்தையோ நினைவு வைத்துக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை நாம் உணர்கிறோம் இந்த உணர்வானது நரம்புகளின் வழியாக மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு எடுத்துச் சொல்லப்படுவதால் நாம் அவற்றை மறந்து விடுகின்றோம்.

சிலவற்றை நாம் நினைவில் வைத்துக்கொள்வது அவசியம் என்ற போதும் கூட மறந்துவிடும் சம்பவங்களும் உண்டாக காரணமாக இருப்பது நாம் வேறு பல நடப்பு காரியங்களில் மூழ்கி விடுகிறோம் என்பதால் தான். இதனால்தான் பலர் பல வேலைகளை நாட்குறிப்பிலோ செல்போன்களிலோ எழுதி பதிவு செய்து நினைவுபடுத்தி செயல்படுகின்றனர்.

ஒரு சாதாரண பேனாவோ பென்சிலோ அல்லது நாம் வைத்திருந்த மிகவும் பிடித்த அல்லது நம்முடனேயே இருக்கவேண்டும் என்று நாம் விரும்புபவற்றை தொலைத்துவிடும் போது மிகவும் வேதனையடைகிறோம், எப்படியாவது தேடி அது கிடைத்துவிடவேண்டும் என்று ஆவல் கொள்கிறோம். அப்படி கிடைத்து விட்டால் பெருமகிழ்ச்சியில் திளைத்துவிடுகிறோம், இழந்தது இழந்ததுதான் என்ற நிலையில் மனம் உடைந்து பெரும் வேதனையடைகிறோம், அந்த சம்பவத்தை மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் மனம் கிடந்தது தவியாய் தவிப்பதை பார்க்கின்றோம்.

அவ்வாறு வேதனை அடையும் போது அந்த வேதனைகளை கட்டுக்குள் வைத்திருக்க நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் ரசாயனங்கள் உதவியுடன் நாம் பல நேரங்களில் முயன்று வெற்றி பெறுகிறோம், பல நேரங்களில் தோல்வி என்றாகி விடும் போது மனதின், மற்றும் நரம்புகளின் செயல்பாடுகள் அசாதாரண நிலையை அடைந்து கொஞ்சம் கொஞ்சமாக அதன் வலிமைகளை இழந்துவிட ஆரம்பிக்கின்றது, மூளையில் மற்றும் வயிற்றிலிருக்கும் சுரப்பிகளில் சுரக்கும் திரவம் அல்லது ரசாயனங்கள் நரம்புகளுக்கும் உடலுக்கும் தேவையான திரவம் அல்லது ரசாயனங்கள் சுரப்பது நிறுத்திவிடுகிறது, அல்லது குறைந்துவிடுகிறது. இயல்பு நிலையிலிருந்து உடல் மாற்றங்கள் அடைய நேருகிறது. இதனால் உடலில் பலவித நோய்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏற்ப்பட ஏதுவாகிறது.

சந்தித்ததில் மகிழ்ச்சியடையும் அல்லது தனக்கு கிடைத்தவற்றில் மகிழ்ச்சியுறும் மனது, அவற்றை இழந்து அல்லது பிரிந்து விடும் போது இழப்பை ஏற்க மறுக்கின்றது. காதல் தோல்வி, மரணம், பிரிவுகள் பலவும் நம் மனதை மிக ஆழமாக பாதிப்பிற்க்குள்ளாக்குகிறது. யாரோ ஒருவரின் மரணமாக இருந்தாலும் அத்துயரம் சம்பந்தப்படாதவரைக் கூட வேதனையடையச் செய்கிறது. யாரோ ஒருவரின் மரணத்திற்காக வருந்துவது குறைவாகவும் பின்னர் மறக்கப்பட்டும் விடக்கூடியது என்பதை நாம் உணர்வதால் அது நம்மை பாதிப்பதில்லை, குறிப்பிட்ட இழப்புகள் நாம் எதிர்பார்த்திராததாகவோ நமக்கு மிகவும் வேண்டியதாகவும் இருக்கின்ற காரணத்தால் சில பிரிவுகளும் மரணமும் மன உளைச்சல் உண்டாக்குகிறது. மன உளைச்சல் என்பது உடலில் ஏற்ப்படும் அசாதாரண ரசாயன மாற்றமாகும். மனஉளைச்சல் என்பதை மருத்துவ ரீதியாக மனநோய் என்று அழைக்கபடுவதால் இதை சரிசெய்ய சரியான விகிதத்தில் ஏற்ற மருந்துகள் உட்கொள்ளும் போது இந்நோய் சரிசெய்யப்பட்டு விடுகிறது,

சந்திப்பில் கிடைக்கும் ஆனந்தத்தைவிட பிரிவில் உண்டாகும் துயரம் மனதை பாதிப்படையச் செய்யும் வல்லமை மிகுந்து காணப்படுகிறது. சந்திப்பில் எல்லையற்ற மகிழ்ச்சி மனிதனின் மனதிற்கு தெம்பூட்டுவதாக அமைவதற்கு காரணம் மகிழ்ச்சியில் பல சுரப்பிகள் தேவையான திரவங்களை சுரந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளுக்கு வலிமையையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க உதவுகிறது.

மகிழ்ச்சியை விருந்து கேளிக்கை ( பலர் விஸ்கி பிராந்தி குடித்து கொண்டாடுவதும் உண்டு ) என்று கொண்டாடுவதும், துயரத்தை குடி போதை சிகரெட் போன்ற தீய பழக்கங்களால் போக்க நினைப்பதற்கும் மனிதனின் எண்ணங்களும் நினைவுகளும் காரணமாக இருக்கிறது,

துயரம் என்பது அதிகமாகி நீடிக்கும் போது சுரப்பிகளின் வேலை குறைந்து காணப்படுவதும், துயரம் என்பது மனிதனின் உடலிலும் மூளையிலும் நரம்புகளிலும் சந்தோஷத்தின் எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது.

நாம் வெளிநாடுகளுக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ சுற்றிபார்க்க போகும்போது புகைபடங்களை எடுத்துக்கொளுகிறோம், நாம் சந்திக்கும் மனிதர்கள் இயற்க்கை காட்ச்சிகள் என்று எதுவெல்லாம் நம்மை ஈர்க்கின்றதோ அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் புகைபடமாக்கிக் கொண்டு நாம் நிரந்தரமாக வாழும் இடத்தில் வைத்துக் கொள்கிறோம். அதற்க்கு காரணம் அந்த காட்ச்சிகளையோ மனிதர்களையோ இனி நம்மால் பார்க்க முடியாது என்பதை நமது மனமும் எண்ணங்களும் உணர்வதால் அவற்றை புகைப்படமாக்கி திரும்ப பார்த்து மகிழ்ச்சியுற நினைவுச் சின்னமாக வைத்துக் கொள்ளுகிறோம். ஆனால் நாம் நிரந்தரமாக இருக்கின்ற இடத்தையோ நபர்களையோ புகைப்படமாக்கி பார்த்துக் கொண்டிருக்க விரும்புவது கிடையாது, அப்படியொரு எண்ணமோ நினைவோ ஏற்ப்படுவதும் கிடையாது.

ஒருவர் மரணத்தை எதிர்கொள்ள போகிறார் என்று தெரிந்து விட்டால் அவருக்கு அதுநாள்வரையில் கொடுத்த பராமரிப்பு பாசம் போன்றவற்றை விட அதிகம் கொடுக்கப்படுவதற்குக் காரணம் மரணம் என்ற பிரிவிற்கு கொடுக்கப்படும் உபச்சாரம். நம்மோடிருக்கும் ஒருவருக்கு நாம் ஏன் அத்தனை அன்பும் கவனிப்பும் கொடுக்கத் தவறுகிறோம்? அவர் எப்போதும் நம்முடன் தானே இருக்கப் போகிறார் என்ற 'எண்ணம் அல்லது நமது நினைவு' தான் அதற்க்கு காரணமாக அமைகிறது.

மனிதருக்குள் ஏன் இந்த எதிர்மறையான எண்ணங்கள் நினைவுகள் ஏற்ப்படுகிறது? எந்த ஒன்றையும் தன்னிடம் நிரந்தரமாக இருக்கின்ற போது அதைபற்றிய அக்கறையும் கவனமும் இல்லாமலும் அதை பிரிந்திருக்கும் பட்சத்தில் அதிகமாகிவிடுவதும் மனிதனின் இயல்புகளில் ஒன்றாக காணப்படுவதே இதற்க்கு காரணம்.