Translate

11/30/2009

காதல் வந்தால்.....( 5 )

பல வருடங்களுக்குப் பின் தாராவின் மகள் சாந்தி, கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த சமயம் சாந்தியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடவேண்டும் என்று திட்டமிட்டனர், கல்லூரி தோழிகள் எல்லோரும் ஒன்றாக கூடி சந்தோஷமாக கொண்டாடினர், வந்திருந்த அனைவரும் பரிசுப்பொருட்களை கொடுத்துவிட்டு சென்றனர், கல்லூரித் தோழிகளில் மிகவும் நெருக்கமான தோழி மீனா அவளுடைய ஒரே அண்ணன் தினேஷும் தனித்தனியே சாந்திக்கு பரிசுபொருட்கள் கொடுத்துச் சென்றனர்.

அடுத்தநாள் பரிசுப் பொருட்களை திறந்து பார்த்துக் கொண்டிருந்த ஷாந்தி ஒரு ழகிய சிங்கபூர் கைகடியாரம் வைத்திருந்த சிறிய பெட்டியை தாராவிடம் காண்பித்து இது மீனாவின் அண்ணன் தினேஷ் கொடுத்தது என்று காண்பித்தாள். வேறு சில தோழிகளும் கைகடியாரம் பரிசாக கொடுத்திருந்தாலும் திலீப் கொடுத்திருந்த கைகடியாரம் மிகவும் அழகானதாக இருந்தது. ஷாந்தி தினமும் அந்த கடியாரத்தை ஒருமுறையாவது கையில் எடுத்து பார்க்காமல் இருப்பதே இல்லை.

தற்ச்செயலாக இதை கவனித்த தாராவிற்கு ஷ்யாம் தனக்குக் கொடுத்த அந்த அழகிய வளையல்களை தினமும் எடுத்து பார்த்த நினைவுகள் ஒருகணம் வந்து போனது. தினேஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் விமானி, வசதி நிறைந்த குடும்பம் என்றாலும் ஜாதி ஜாதகம் என்ற இடையூறுகள் இல்லாமல் இருந்துவிட்டால் திருமணம் பேசுவதற்கு வேறு பிரச்சினை இருப்பதாக தோன்றவில்லை தாராவிற்கு.

ஒரு சில வருடங்களில் மீனாவிற்க்குத் திருமணம் முடிந்தவுடன் திலீப்பிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த சமயம், தாராவிற்கு மகள் சாந்தியின் மனநிலையில் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்குமோ என்ற ஆதங்கம், ஷாந்தி ஒருவித மாற்றமும் இல்லாமல் இருந்தது உள்ளூர தாராவிற்கு சந்தேகத்தை ஏற்ப்படுத்தியது, அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், திலீப்பின் திருமணத்திற்கு போக வேண்டாமா ஷாந்தி என்று தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள சாந்தியிடம் கேட்டாள் தாரா.

போக வேண்டும், கண்டிப்பாக போகவேண்டும், என்னுடன் நீயும் அப்பாவும் வந்தே ஆகவேண்டும் என்ற சாந்தியின் முகத்தில் சந்தோஷத்தை தவிர வேறு ஒன்றும் காணமுடியவில்லை. தாராவின் மனதினுள் நிம்மதி ஏற்ப்பட்டது, பரிசுபொருட்கள் கொடுப்பதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் அர்த்தமும் காரணங்களும் முற்றிலும் வெவ்வேறாகவும் இருக்கக் கூடும் என்று தோன்றியது.

முற்றும்

காதல் வந்தால்.....( 4 )

Sunday 29 November 2009

பள்ளி
படிப்பு முடிந்து கல்லூரிக்கு போனபோது அங்கே ஒரு பெண் ஷ்யாமை நேசிப்பதாக ஷ்யாமிடம் சொல்லி இருக்கிறாள், ஆனால் ஷ்யாமிற்கு அவள் மீது காதல் ஏற்ப்படவில்லை, எத்தனையோ முறை ஷ்யாமிடம் கெஞ்சி கேட்டிருக்கிறாள் அப்படியும் ஷ்யாமிற்கு அவள் மீது காதல் வரவில்லை, இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் தனக்குத் தெரிந்த சில முரட்டு சீனியர் மாணவர்களிடம் சொல்லி ஷ்யாமை நன்கு அடித்துவிடும்படி சொல்லி இருக்கிறாள், அதன்படி ஒருநாள் கல்லூரி முடிந்து திரும்பிக்கொண்டிருந்த ஷியாமை அவர்கள் வழிமறித்து இரும்பு ஆயுதங்களால் பலமாக தாக்கி இருக்கின்றனர், ரத்த வெள்ளத்தில் இருந்த ஷ்யாமை சிலர் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கின்றனர்.

சுய நினைவற்ற ஷ்யாமிடமிருந்து மருத்துவர்களுக்கு விலாசம் அறிய முடியாமல் போனது, வீட்டில் நாங்கள் ஷ்யாமைத் தேடிக் கொண்டிருந்தோம், இந்நிலையில் போலீசின் மூலம் அவன் ஆஸ்பத்திரியில் இருப்பதை கேள்விப்பட்டு அங்கே போய் பார்த்தோம் ஷ்யாமின் மண்டை உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தான் நினைவு வரவே இல்லை, எப்படியாவது அவனை காப்பாற்றும்படி மருத்துவர்களிடம் பெற்றோர் கெஞ்சினர், பல மாதங்கள் படுக்கையில் இருந்த ஷ்யாம் பின்னர் நடை பிணமாக நினைவு இல்லாமல் வாழ்ந்து வருகிறான்.

அவன் என்னிடம் சொன்னது இன்னும் என் நினைவில் இருக்கிறது, நான் வாங்கி வைத்திருக்கும் வளையல்கள் நான் மிகவும் நேசிக்கும் ஒரு பெண்ணுக்காக என்று சொல்லுவான், அவன் நேசித்தது உன்னைத்தான் என்பது எனக்கு மட்டும் தெரியும், அதனால் தான் மிகவும் அழகான அந்த வளையல்களை உனக்கு பரிசாக கொடுத்தான். ஆனால் இப்போது அவன் நினைவிழந்து நடைப் பிணம் போல வாழ்ந்து வருகிறான். அவனது தூய அன்பைப் பற்றி உனக்கு தெரிந்திருக்க வழி இல்லை, ஆனால் அதை சொல்லாமலிருக்க என்னால் முடியவில்லை, உன்னை எனது திருமணத்திற்கு வரச் சொல்லி இத்தருணத்திலாவது உன்னிடம் சொல்லி விடவேண்டும் என்று நினைத்தேன், இல்லையென்றால் வேறு சந்தர்ப்பமே கிடைக்காமல் போய்விடும், ஏனென்றால் ஷியாமின் காதல் மிகவும் உன்னதமானது என்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

தொடரும்....

11/28/2009

காதல் வந்தால்.....( 3 )

தாரா B.Com முடித்து அரசு வங்கியொன்றில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஷியாமின் தங்கை பானுவின் திருமணத்திற்கு திருமண அழைப்பு வந்திருந்தது, இடைப்பட்ட காலத்தில் ஊரில் நடந்த பல சுப காரியங்களும் துக்க காரியங்களும் என்னென்ன என்பதை எப்போதாவது ஊரிலிருந்து வரும் நீல நிற inland கடிதம் சுமந்து வரும்போது தாராவின்
அம்மா அதைப்பற்றி மறக்காமல் தாராவிடம் சொல்லுவதுண்டு. பானுவிற்கு தாராவையும் சுபத்திராவையும் தனது திருமணத்திற்கு அழைக்கவேண்டும் என்கிற ஆசை, கல்யாண பத்திரிகையுடன் நிச்சயமாக தனது திருமணத்திற்கு தாராவையும் அழைத்து வரவேண்டும் என்று எழுதி இருந்தாள் பானு.

பானுவின் திருமணத்திற்கு ஒருவாரத்திற்கு முன்பே சுபத்திராவின் சொந்த ஊருக்கு கிளம்பினர் பானுவும் சுபத்திராவும். சித்தி பார்வதியின் வீட்டில் தங்கிய போது அடிக்கடி பானுவின் வீட்டிற்கும் சென்று வந்தனர், திருமணத்திற்கு முந்தினநாள் சித்தி பார்வதியும் அவரது மகள்களுடன் அனைவரும் கல்யாண வீட்டிற்கு சென்று தங்கினர். கல்யாண வீடு மிகவும் கலகலவென இருந்தது, பல சொந்தங்களின் வரவால் வீடு நிரம்பி இருந்தது.

அன்று இரவு பானுவுடன் அவளது அறையில் இருந்த போது மற்றவர்கள் கண் அயர்ந்தனர், பானுவும் தாராவும் திருமணத்திற்கான உற்சாகத்துடன் இருந்தனர், ஊருக்கு வந்ததிலிருந்து ஷியாமைத் தவிர எல்லோரையும் பார்த்தாகி விட்டது. தாராவின் மனம் ஷ்யாமை பல வருடங்களுக்குப்பின் பார்க்க மிகவும் ஆவலாக இருந்தது, பானுவின் திருமண வேலைகளில் ஈடுபட்டிருப்பதால் ஷ்யாமை பார்க்க முடியவில்லை என்று எண்ணி இருந்தாள்.

பானு தாராவிடம் 'உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் கடிதத்தில் எழுத முடியாத விஷயம் என்பதால் உன்னை எப்போது பார்ப்பேன் எப்போது உன்னிடம் சொல்லமுடியும் என்றிருந்தேன். யாராவது வருவதற்குள் சொல்லிவிடுகிறேன், ஒருமுறை நாங்கள் எல்லோரும் குடும்பத்துடன் வட இந்திய சுற்றுப் பயணம் போய் இருந்தோம், அப்போது எல்லோரும் அவரவருக்கு பிடித்த பொருட்கள் நண்பர்களுக்கு பரிசு பொருட்கள் என வாங்கினோம் ஆனால் ஷ்யாம் மட்டும் எங்கேயும் ஒன்றும் வாங்கவே இல்லை, அவனிடம் நீ மட்டும் ஒன்றுமே வாங்கவில்லையே என்று கேட்டோம், அவன் ஒன்றுமே பதில் சொல்லவில்லை. நாங்கள் ராஜஸ்தான் சென்றிருந்த போது அங்கே வளையல்கள் மிகவும் வித்தியாசமானதாகவும் மிகவும் அழகானதாகவும் இருந்தது, நானும் என் அக்காவும் நிறைய விதவிதமான வளையல்கள் வாங்கினோம், அப்போது ஷ்யாமும் சில வளையல்களை வாங்கினான். என் மூத்த அண்ணன் ரவி ஷ்யாமை என்னடா girl friendக்கு வாங்குறியா என்று கேலி செய்துகொண்டே இருந்தான். ஆனால் ஷ்யாம் ஒன்றுமே பதில் பேசாமல் இருந்தான்.

ஷ்யாமும் நானும் ஒரே பள்ளியில் தான் படித்தோம், அவனுக்கு நண்பர்களும் நண்பிகளும் உண்டு ஆனால் எந்த பெண்ணுக்காக அந்த வளையல்களை அவன் வாங்கினான் என்று எனக்கு தெரியவில்லை, ஏனென்றால் அவனுடன் பழகும் பெண்களிடம் அவன் சாதாரண நண்பன் என்ற முறையில் மட்டுமே பழகுவது எனக்குத்தெரியும், நாங்கள் வட இந்திய சுற்றுலா முடித்து வந்திருந்த அதே வருடம்தான் நீயும் உன் அம்மாவுடன் இந்த ஊருக்கு வந்திருந்தீர்கள், அப்போது ஷ்யாம் அந்த வளையல்களை உன்னிடம் கொடுத்தது எனக்கு மட்டுமே தெரியும், ஆனால் அதைப் பற்றி நான் அப்போது ஏதும் நினைக்கவில்லை, அவனுக்கு உன்னை மிகவும் பிடித்து இருந்தது என்பது மட்டும் எனக்கு விளங்கியது.

தொடரும்....


காதல் வந்தால்....( 2 )

ஒருவாரம் ஷியாமின் வீட்டிலிருந்து பழகியப்பின் அவர்களை பிரியும்போது மனதினுள் வேதனை தலை தூக்கியது, திரும்பவும் இப்படியொரு சந்தர்ப்பம் வாய்க்குமா என்பது சந்தேகமே, ஏனென்றால் சொத்துக்களை பிரிப்பதில் சித்திக்கும் அம்மாவிற்கும் சிறிது மனவேற்றுமைகள் ஏற்ப்பட்டது, தாராவின் அம்மா சுபத்திராதான் அவர்கள் வீட்டின் முதல் பெண், அடுத்து இரண்டு சித்திகள், கடைசி சித்தி பெங்களூருவில் வசதியாக செட்டில் ஆகிவிட்டிருந்தார், ஆனாலும் சொத்துக்கள் மூவருக்கும் சமபங்கு என்ற விகிதத்தில் பகிரபட்டதாக சித்தி பார்வதி சொல்லிக்கொண்டிருந்தாள்.

சுபத்திரா தன் விருப்பபடி திருமணம் செய்து கொண்டு போய்விட்டதால் சொத்துக்கள் முழுவதும் சித்தி பார்வதியிடம் தான் இருந்தது, ஆண் வாரிசே இல்லாத சொத்துக்கள் என்பதால், வீடு விளைநிலம் தென்னந்தோப்பு என இருந்த சொத்துக்கள் பார்வதியின் கையில் இருந்தது, இதனால் பராமரிப்பு செலவினங்களை கணக்கு காண்பித்து தனது சகோதரிகளின் சொத்து பங்கில் மோசம் செய்தாள் பார்வதி.

அதுவரை தனது தாய் வீட்டு சொத்தில் ஒரு நயாபைசாவை கூட வாங்க போவதில்லை என்கிற முடிவில் இருந்துவந்த சுபத்திரா தன் கணவரது தொழிலில் ஏற்பட்ட திடீர் நஷ்டத்தினால் பணமுடை ஏற்பட்டு தனது சொத்தில் பங்கு கேட்கும் சூழ்நிலை ஏற்பட்டது. சுபத்திரா பிறந்த போது அதிஷ்டம் மிகுந்து பணமும் சொத்துக்களும் குவிந்தன என்று சுபத்திராவின் பெற்றோரும் ஊராரும் சொல்லி கேள்விபட்டிருந்தாலும், பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்யாமல் தனக்குப் பிடித்திருந்த பாபுவை திருமணம் செய்தபோது சுபத்திராவின் பெற்றோர் சுபத்திராவிற்கென வாங்கிய நகைகள் பணம் சீர் என ஒன்றையும் மீதம் வைக்காமல் சுபத்திராவிற்கு கொடுத்து அனுப்பியது அனைவரையும் நெகிழ வைத்த சம்பவமாக இன்றுவரை அந்த ஊரில் பேசிகொள்வதுண்டு.

தனது தங்கை தன்னை மோசம் செய்ததைப் பற்றி மிகவும் மனவருத்தம் அடைந்தாள் சுபத்திரா, ஆயினும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தங்கை பார்வதியுடன் நல்ல முறையிலேயே சொல்லிவிட்டு தனது வீட்டிற்குத் திரும்பினார்கள் தாராவும் சுபத்திராவும்.

தொடரும்.....

11/26/2009

காதல் வந்தால்....( 1 )

செம்பருத்தி, அந்திமந்தாரை, சங்குபூக்களும் இன்னும் விதவிதமான மலர்கள் மலர்ந்திருந்த அந்த தோட்டத்தின் பூக்களையெல்லாம் பறித்துவிட ஆவல் கொண்டவளைப்போல எட்டாத உயரத்திலிருக்கும் பூக்களையும் பறித்து கூடையை நிரப்பிக் கொண்டிருந்தாள் தாரா.

சாதரணமாக காலையில் படுக்கையிலிருந்து எழுந்து கொள்ள எட்டுமணியாகும், ஆனால் சொந்த ஊருக்கு வந்ததிலிருந்து சித்தியின் மூத்தமகள் ஜமுனா அவளுடைய தங்கைகள் இருவரையும் எழுப்புவது போலவே தாராவையும் காலை ஆறுமணிக்கே எழுப்பி விடுவதும், காலையில் குளித்து முடித்தவுடன் காப்பி குடித்து பின்னர் தோட்டத்திலிருக்கும் ஒட்டு மொத்த பூக்களையும் பறித்துக் கொண்டு சில பூக்களை சித்தியின் மகள் மீனாவும் மாலாவுடன் கோவிலுக்கு கொண்டு சென்று தொழுதுவிட்டு வருவதற்குள் சித்தியின் மூத்த பெண் ஜமுனா மீதமுள்ள பூக்களில் பூக்கோலம் போட ஆரம்பித்திருப்பாள்.

தாராவிற்கு புதிய அனுபவமாக இருந்தாலும் சுவாரசியமானதாக இருந்தது, தாராவின் தாய்வீட்டு சொத்தில் பாகம் பிரிப்பதற்காக தாராவும் அவளது அம்மாவுடன் சொந்த ஊருக்கு சென்றிருந்தாள்.

ஷ்யாம் தாரா அம்மாவின் தூரத்து உறவுக்காரப் பையன், ஷ்யாமின் வீட்டிற்கும் சித்தி வீட்டிற்கும் அதிக தூரமில்லை, தாராவும் அம்மாவும் ஷ்யாமின் வீட்டிற்குசென்றனர். பல வருடங்கள் பார்க்காமல் இருந்து சந்தித்ததால் தாராவின் அம்மாவும் ஷ்யாமின் அம்மாவும் நீண்ட கதைகள் பேசி பேசி இரவு நீண்டது, ஷ்யாமின் வீட்டார் தாராவின் அம்மாவை சிறிது நாட்கள் அவர்கள் வீட்டில் தங்கி விட்டு போகும்படி கேட்டபோது தட்டி கழிக்க முடியாமல் தாராவின் அம்மாவும் தாராவும் அங்கு ஒருவாரம் தங்கினர்.

ஷ்யாம் ப்ளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்தான் தாரா எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். ஷாமின் வீட்டில் தங்கிய மூன்றாவதுநாள் ஷ்யாம் சில தடித்த வளையல்களை தாராவிற்கு பரிசாக கொடுத்தான். ஷ்யாமிற்கு ஒரு அக்காளும் ஒரு தங்கையும் ஒரு அண்ணனும் இருந்தனர். ஷ்யாமின் தங்கை பானுவும் தாராவும் ஒத்த வயதினர்.

தொடரும்.......


11/25/2009

Wonderful Entertainers

ரஜனிகாந்த் என்கிற சிவாஜி ராவ் புதியவராக திரையுலகில் வந்த போது அவரது கையசைவுகளின் புதிய விதங்கள் இவரை மக்களிடையே மிகவும் பிரபலபடுத்தியது, அவர் தான் புதிய அசைவுகள் செய்வதற்கான காரணங்களை அவரே பத்திரிகைகளில் எழுதி ஒரு சிறிய இணைப்பாக வெளிவந்தது. [ரஜினி ஸ்டைல் என்ற இணைப்பு]

காரணங்கள் என்னவாக இருந்தாலும் அதுவரை எந்த நடிகராலும் செய்து காண்பிக்கபடாத வகையில் இருந்ததால் அந்த புதிய body language மிகவும் வரவேற்ப்பை பெற்றது. ஒரு காலகட்டம் வரையில் ரஜினிகாந்தின் நடிப்பை காண்பதில் நானும் ஆர்வம் மிகுந்திருந்தேன், ஆனால் மறைந்த எம்.ஜி.ஆரைப்போல இவருக்காகவே பிரத்தியேகமாக கதைகள் எழுதப்பட்டு படமாக்கப்படும் நிலைக்கு மாறியதிலிருந்து இவரது திரைப்படங்கள் பார்க்கவேண்டும் என்று தோன்றாமல் போனது.

எம்
.ஜி.ஆரின் திரைப்படங்களைக்கூட பார்க்க பிடிக்காமல் போனதற்கும் இதுவே காரணம். குறிப்பிட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு திரைப்படங்கள் உருவாக்கப்படும் போது ஏனைய ரசிகர்களின் நிலைக்கு ஏற்ப்படும் 'ஒவ்வாமை' தான் இதற்க்கு முக்கிய காரணம்.

பெரும்பாலான
ரசிகர்களுக்கு திரைப்படம் உருவாக்கப்படும்போது பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு நிம்மதி பெருமூச்சு விடக்கூடிய நிலை உருவாக காரணமாகவும் இருக்கிறது. இதனால் சொற்ப ரசிகர்களைத்தான் இழக்க நேரிடுமே தவிர பேரிழப்பிற்க்கு உள்ளாகாமல் திரைப்படம் தப்பித்துக்கொள்ளும் என்பதே இதன் பார்முலாவாக இருக்கக் கூடும் என நான் நினைக்கிறேன்.கமல்ஹாசனின் திரைப்படங்களில் நாயகன் திரைப்படத்திற்கு முன் நாயகன் திரைப்படத்திற்குப் பின் என்ற இருவகை உண்டு, நாயகனுக்கு முன் இவர் நடித்த திரைப்படங்கள் நான் கல்லூரி மாணவியாக இருந்தபோது திரைக்கு வந்தவை, அப்போதைய கமலஹாசன் கல்லூரி மாணவிகளின் 'dreamboy'. ஆனால் எனக்கு இவரை dreamboyயாக ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. இதற்க்கு காரணம் பரதநாட்டியம் கற்றுக்கொண்டு நடனபயிற்ச்சிகள் செய்து கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறேன், இவரில் பெண்மை தான் என்னால் அதிகமாக காண முடிந்தது. ஆனாலும் இவரது மீசையின் மீது மட்டும் கொள்ளை காதல்.

நாயகனுக்கு முன்பு வெளிவந்த திரைப்படங்கள் பலவற்றை தியேட்டரில் பார்த்து மகிழ்ந்த அனுபவமுண்டு. நாயகனுக்குப் பின்னர் திரைக்கு வந்த திரைப்படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் [திரையரங்கில்] இன்றுவரையில் கிடைக்கவே இல்லை. [திருமணம் என்ற ஆயுள் கைதி]. இவரது திரைப்படம் என்றில்லை திரையரங்கிற்கு போவதே கிடையாது. தொலைகாட்ச்சி
பெட்டியை நம்பித்தான் காலம் போகிறது.


நாயகன் திரைப்படத்திலிருந்து இவரது நடிப்பும் ஆண்மையின் முழுமையும் காண முடிந்தது. சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா, போன்ற ஜாம்பவான்கள் நடிப்பின் உச்சகட்டத்தை காண்பித்துவிட்டு போனதாலோ என்னவோ புதிதாக நடிகர்கள் யார் சிறப்பாக நடித்தாலும் அது ஒன்றும் பெரிதாக தெரியாமல் போய்விடுகிறது. இதனால் தான் இளைஞர்களும் புதிதாக தமிழ் திரைப்படங்களை பார்ப்பவர்களும் ரஜினிகாந்த், கமலஹாசன் போன்றவர்களின் நடிப்பை புகழமுடிகிறது.

இவர்களது சம்பளம் கோடிகளில் அல்லவா நிர்ணயிக்கிறார்கள், இதை பற்றி கேட்கும் போது பஞ்சத்தில் உயிர் வாழ்ந்த அந்த காலத்து ஜாம்பவான்களின் நினைவு என்னை வாட்டுவது நிஜம்.

இந்தகாலகட்டத்தின் தமிழ் திரையுலகின் சிறந்த entertainers ரஜினிகாந்தும், கமலஹாசனும் என்பதில் வேற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.