Translate

10/20/2009

ஆஸ்த்ரேலிய கிரிகெட் அணி


கிரிகெட் விளையாட்டு தற்காலத்தில் இந்தியாவில் மிகவும் சிறப்பு பெற்று, பெரும்பான்மை இந்தியர்களின் வெறிக்கு ஆளாகியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. ஆனால் எனக்கு ஏனோ வெறித்தனமான ரசனை கிரிகெட் விளையாட்டின் மீது இருப்பதில்லை, ஆனாலும் சில நாட்டு கிரிக்கெட் அணிகளில் வீரர்கள் கிரிகெட் விளையாடும் போது அவரின் விளையாட்டின் திறமையும் அழகும் என்னை கவர்துள்ளது என்னவோ உண்மை.

இந்தவகையில், விளையாட்டை எந்த நாட்டைச் சார்ந்தவள் என்ற நோக்கில் நான் எப்போதுமே ரசிப்பது கிடையாது, இதனால் பல நாட்டு கிரிகெட் வீரர்களின் விளையாட்டை என்னால் ரசிக்க முடிகிறது.

பழைய கிரிகெட் வீரரான கபில்தேவ் பந்தை எடுத்துக் கொண்டு ஓடும் ஓட்டமும் அதை லாவகமாக சொல்லிவைத்தார்போல வீசும் அழகும் பார்க்க மிகவும் அருமையாக இருக்கும், ஷார்ஜாவில் உலக கோப்பையை அவர் தலைமையில் இந்தியா வென்ற போதும் மற்ற மாட்ச்களிலும் அவரது ஆட்டத்தின் சிறப்பை பார்த்து நான் மிகவும் ரசித்து இருக்கிறேன், ஆட்டத்தின் இறுதியில் பாட்ஸ்மேனாக வந்து பந்தை ஓங்கி அடித்து சிக்செர்களையும் பவுண்டரிகளையும் அடித்து தள்ளிவிட்டு பந்தை காட்ச் கொடுத்துவிட்டு போவதும் கூட ரசிகர்களின் எதிர்பார்ப்பை போலவே அமையும்.
ரவிஷாச்திரியின் பந்து வீச்சு அற்புதமாக இருக்கும், ஆனால் இவர் பாட்டை எடுத்து பந்தை அடித்து பார்ப்பது மிகவும் அரிது, நல்ல உயரம் இருப்பதால் இவர் அதிக ரன்கள் எடுக்க முடியுமே என்று நாம் எதிர்பார்க்கும் போது சில பந்துகளில் அவுட்டாகி வெளியேறிவிடுவார்.

கவாஸ்கரின் பொறுமையான ஆட்டம் நம்மை அசரவைக்கும், டெஸ்ட் மாட்ச்களில் கடும் வெயிலில் அதிக நேரம் அவுட்டாகாமல் பாட்டை பிடித்துக்கொண்டு சற்றும் சளைக்காமல் சில பந்துகளை லேசாகவும் சில பந்துகளை சற்று அழுத்தம் கொடுத்தும் அவர் அடிப்பது அவரது ஆட்டத்தின் தனி சிறப்பு, அத்தனை எளிதில் அவுட்டாக்கி வெளியேற்ற முடியாத விளையாட்டு வீரர் கவாஸ்கர். இவரது ஆட்டத்தைப் போல தற்காலத்து விளையாட்டு வீரர்கள் யாரும் ஆடுவதாக தெரியவில்லை. ஆஸ்திரேலிய கிரிகெட் வீரர் டேவிட் பூனை நினைவுபடுத்தும் சுனில் கவாஸ்கரின் விளையாட்டு.

பாகிஸ்தான் கிரிகெட் அணியில் இடம் பெற்றிருந்த பல கிரிகெட் வீரர்களின் விளையாட்டு ரசிக்கும்படியாக இருந்துள்ளது, அவர்களை வரிசைப் படுத்துவது மிகவும் கடினம், அத்தனை வீரர்கள் சிறப்பாக விளையாடி பார்த்து ரசித்து இருக்கிறேன்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றிருந்த விவியன் ரிச்சர்ட், ஹெய்டன் இன்னும் பலரது திறமையை கண்டு வியப்படைந்துள்ளேன். மிகவும் திறமைவாய்ந்த கிரிகெட் வீரர்களையும், இயற்கையே இவர்களுக்கு வரபிரசாதமாக கொடுத்திருக்கும் உடல்வாகும் வலிமையும் ரசனைக்குரியது.

ஆஸ்திரேலிய அணியின் விளையாட்டு என்னை என்றுமே அசரவைக்கும், அன்றும் இன்றும் என்றும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரரும் சிறப்பு வாய்ந்தவர்கள், ஆஸ்திரேலிய அணியின் வீரர்களை தெரிவு செய்து, விளையாடுவதற்கு அவர்களை தயார் செய்து மிக சிறந்த கிரிகெட் அணியாக வைத்திருப்பது ஆஸ்திரேலிய கிரிகெட் வாரியத்திற்கு பெருமை சேர்ப்பதாகும், கிரிகெட் பார்க்க ஆர்வம் இல்லாதவர்களைக் கூட பார்க்க வைக்கும் திறமையும் லாவகமும் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது., 'முரட்டுத் தனமான' ஆட்டக்காரர்கள் என்று இவர்களை சிலர் சொல்வதுண்டு, முரட்டுத்தனம் அவசியம், முரட்டுத்தனம் அவர்களின் சிறப்பும் கூட.


சிங்கம் புலி யானை காண்டாமிருகம் இவைகளை முரட்டுத்தனம் வாய்ந்தவை என இழிவாக நினைப்பது எத்தனை மடமையோ அப்படித்தான் ஆஸ்த்திரேலிய கிரிகெட் வீரர்களின் முரட்டுத்தனத்தை பற்றி கேவலமாக பேசுவதும். சிறந்த விளையாட்டும் திறமையும் எங்கே யாரிடமிருந்தாலும் அதை ரசிப்பதே உண்மையான ரசிகத்தனம். தவறு யாரிடமிருந்தாலும் அதை ஒப்புக்கொள்வதே மனிதத்தனம்.