Translate

10/08/2009

முல்லைபெரியார் அணை


முல்லை பெரியார் அணையின் வயது 114, 1886ஆம் ஆண்டு ஜான் சைல்ட் ஹமிங்க்டன் என்ற மதராசின் அப்போதைய ஆங்கிலேய அரசு அதிகாரியும் திருவிதாங்கூரின் [திருவனந்தபுரம்] அப்போதைய திவானும் கையொப்பமிட்டஒப்பந்த படிவத்தில் தமிழ்நாட்டின் நீர் தேவைகளுக்கு தற்போதிருக்கும் அணையை அவ்விடத்தில் கட்டுவதற்கு அனுமதி அளித்து, அணையின் நீரை விவசாயம் மற்றும் பிற தேவைகளுக்கு உபயோகிக்கவும் அனுமதித்துள்ளது, அந்த படிவத்தின்படி ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அணையை 1887ஆம் ஆண்டு கட்ட துவங்கி 1895ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

1952 இல் உருவான தற்ப்போதைய கேரள அரசாங்கம் 1990 முதல் அணையை நீர் மட்டத்தை முழுமையான கொள்ளளவான 152 அடிக்கு உயர்த்த விடாமல் 132 அடியாகவே இருக்க வேண்டும் என போராடி வருகிறது, சமீபத்தில் உச்சநீதி மன்றத்தினால் அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த கொடுக்கப்பட்ட ஆணையை கேரள அரசு ஏற்க மறுத்து அணையை இடம் மாற்றி கட்டும்படி வற்ப்புறுத்தி வருவது அரசியல் உள்நோக்கம் வாய்ந்ததாக இருக்கும் என தோன்றுகிறது.

கேரள அரசின் எல்லைக்குள் முல்லை பெரியாரணை இருக்கின்ற காரணத்தாலும், மிகவும் பழைய அணை என்பதாலும் அணையில் பழுது இருக்க வாய்ப்பிருக்கும் என்ற யூகத்தில் கேரள அரசு வேறு அணை கட்டுவதற்கு வற்ப்புறுத்தி வந்தது, கேரளஅரசின் கோரிக்கையை பரிசீலித்து அணையின் பராமரிப்பு பணிகளை தமிழக அரசு செய்யத் துவக்கியது ஆனால் கேரள அரசு பணிகளை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியதுடன் அணையின் நீர் மட்டத்தை குறைக்கும்படி வற்ப்புறுத்தியதன் பேரில் நீர் மட்டம் 132 அடியாக குறைக்கப்பட்டது, அணையில் சேதம் ஏற்பட்டு அணையின் சுற்றியுள்ள ஐந்து கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிப்பிற்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக கூறி அணையின் நீர் மட்டத்தை மேற்கொண்டு உயர்த்த விடாமல் கேரள அரசு தடுத்து வருகிறது.

பேச்சுவார்த்தைக்கோ பராமரிப்பு அல்லது பழுது பார்க்கும் பணிகளுக்கு ஒத்துழைக்காத
கேரள அரசின் போக்கு உள்நோக்கம் உடையது என்பதை நிரூபிக்கிறது. தற்ப்போது மத்திய அரசிடம் அணையை ஆய்வு நடத்த வற்ப்புறுத்தி வருகிறது.

மத்திய அரசு அணையை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தாலும் அந்த குழுவில் தமிழக அரசின் முக்கிய நபர்களும் இடம் பெற்றிருக்க வேண்டும், முடிவு எடுக்கும் தகுதி இரு மாநில முதலமைச்சர்களிடம் மட்டுமே இருக்க வேண்டும், இதில் மூன்றாம் நபரின் ஆதிக்கம் அல்லது தலையீடு இருக்க கூடாது. தற்ப்போது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருக்கும் நிலையில் திடீரென்று ஒரு குழுவை அணையை ஆய்வு செய்வதற்கு தெரிவு செய்வது முறையல்ல என்று தமிழக முதல்வர் கூறி இருப்பது சரியானது, ஏன் தமிழக முதல்வரிடம் அனுமதி கேட்காமல் அப்படி ஒரு குழுவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது என்பது கேள்விக்குறியே.

இந்திய தேசத்தில் ஓடும் நதிகளை இணைக்கும் சாத்தியம் இல்லை என்ற கருத்து எழுந்துள்ளதற்க்கும் இதை போன்ற ஒத்துழையாத மாநில அரசுகளின் போக்கே காரணமாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது என்பது தெளிவாகிறது.

தமிழ்
நாட்டில் மழை [முன்மாரி] பொய்த்து போன நிலையில் முல்லைபெரியாறு அணையின் நீரை விரயம் செய்து மாற்று அணை கட்டுவதென்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று.

அணையில் பழுது ஏற்பட்டு இருந்தால் அதற்கான நீர் கசிவு தெரியும், பின்னர் அதை கவனியாமல் விட்டுவிட்டால் அணைக்கும் சேதம் ஏற்ப்படும், சுற்றியுள்ள கிராமங்களுக்கும் சேதம் ஏற்ப்படும், நீர் கசிவு என்பதை தடுத்து நிறுத்த நவீன முயற்சிகள் மேற்கொள்வதை விடுத்து, அணையை முற்றிலுமாக இடித்து விட்டு வேறு அணை கட்டச் சொல்வதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை.

மூதாதையர்கள் கட்டிய பழைய கட்டிடங்களில் விரிசல், ஒழுக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது சாத்தியம், என்றாலும் அந்த கட்டிடங்களை உடனே நாம் இடித்து விடுவதில்லை, மாறாக நிபுணர்களை அழைத்து தகுந்தபடி ஆய்வுகள் செய்த பின்னரே கட்டிடம் இடிக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்கிறோம், அதைப் போலவே இந்த அணை விஷயத்தையும் தீர ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டுமே தவிர, சிறிய நீர் கசிவை சரி செய்துவிடும் அளவிற்கு அதன் கட்டுமானம் ஸ்திரமாக இருக்குமென்றால் எதற்காக அணையை முழுவதுமாக இடிக்க முயல வேண்டும்.

ஏற்கனவே வெப்பமயமாதல் மூலம் பூமி நீரை இழந்து கொண்டிருக்கின்ற நிலையில், நீர் ஆதாரங்களை அத்தனை சுலபத்தில் இடித்துவிட்டு வேறு புதிய அணையை கட்டி அதில் நீரை மாற்றுவது என்பது பண விரயம் ஏற்ப்படும், பணவிரயத்தை விட, எவ்வளவு பணம் கொடுத்தாலும் பெற இயலாத நீர் விரயம் ஏற்ப்படும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது, கேரளஅரசின் விடா பிடியான இந்த போக்கு எதிர்கால இருமாநில உறவுகளை மோசமாக்காமல் சுமூகத் தீர்விற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இந்திய தேசத்தில் மட்டும் தான் பல ஜாதிகள் பல மதங்கள் பல மொழிகள் பல மாநிலங்கள் என்று வேறுபாடுகள் நிறைந்து காணப்படுவதோடு, வேற்றுமையான எண்ணங்களும் எங்கும் எதிலும் நிறைந்து காணப்படுகிறது, இத்தகைய விரோத மனப்பான்மை நாட்டை பாழ்படுத்தும் தீய சக்தியாகும். ஒரு நாட்டின் முன்னேற்றம் பாதிப்புக்குள்ளாவது
என்பது பொருளாதாரத்தை சீர்குலைக்கும், இந்நிலை மிகவும் வருந்தத்தக்கது. இரு வேறு நாடுகளுக்குள் இருக்கும் பல்வேறு பிரச்சினைகள் என்பது சகஜமானது, ஒரு தேசத்தினுள் இருக்கும் இரு மாநிலங்களுக்குள் இப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் என்பது நாம் உட்கார்ந்திருக்கும் மரக்கிளையை நாமே வெட்டிக் கொள்வது போன்று உள்ளது.

வருங்காலத் தலைமுறையினருக்கு நாம் எவற்றை கற்று கொடுத்துவிட்டு போகப்போகிறோம் என்பதை நினைக்கையில் வேதனையாகவும் வருத்தமாகவும் உள்ளது. வேற்றுமை உணர்வு மட்டுமே மேலோங்கி இருப்பது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்ப்படுத்தும், இவ்வித எதிர்மறையான, வேற்றுமை உணர்வுகளை ஒருபோது
ம் வளர விடக்கூடாது, வருங்கால இந்தியாவின் முன்னேற்றம் எந்தவித வேற்றுமையான எண்ணங்களாலும் உணர்வுகளாலும் பாதிக்காமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

மாநிலத்தை ஆளும் கட்சியையோ தலைவரையோ பிடிக்காமல் இருப்பதை மையமாக வைத்து ஒட்டு மொத்த பொது மக்களின் தேவைகளுள் மிக முக்கியமான நீர் ஆதாரத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் செயல்படுவது, துரோகச் செயலாகும் என்பதை கேரள அரசின் வயது முதிர்ந்த தலைவர்களும் அமைச்சர்களும் யோசித்து செயல்பட வேண்டும், அப்போதுதான் இளைஞர்களும் தொண்டர்களும் அதே வழியை பின்பற்றுவர். வீணே விரோத மனப்பான்மையை கிளறிவிடும் நோக்கில் பெரியவர்கள் ஈடுபடுவது மோசமான அரசியல் ஆகும். இதில் பெரும் பாதிப்பிற்கு உ
ள்ளாக்கப்படுபவர்கள் ஒன்றும் அறியாத பொது மக்கள் என்பதை அவர்கள் ஒரு போதும் மறக்க கூடாது.