Translate

9/09/2009

சந்தேகம்

Wednesday, 9 September 2009


அமுதாவிற்கு அன்று தூக்கம் பிடிக்கவில்லை, மாடியில் தன் படுக்கையறையில் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள், ஜன்னலிலிருந்து பார்த்தால் அடுத்த வீட்டு மதிர்ச் சுவரும் கேட்டும் தெரிந்தது,


மதிற்சுவர் மீது யாரோ ஒருவன் தொற்றி ஏறி சுவற்றின் மீது கயிற்றின் மீது நடப்பவன் போல மெதுவாக நடந்து வீட்டை நோக்கி செல்வது தெரிந்தது. இரவு மணி பனிரெண்டு ஆக போகிறது இந்த நடு நிசியில் மதிர்ச் சுவற்றின் மீது நடப்பது திருடனாகத்தான் இருக்கும், அடுத்த வீட்டின் தொலைபேசி எண் அமுதாவிற்கு தெரிந்திருக்கவில்லை.

நகர்ப்புற வாழ்க்கை என்பதால் அடுத்த வீட்டுக்காரர்களின் உறவு அவ்வளவாய் இருப்பதில்லை, இந்த நடு இரவில் அவர்களை எப்படி தொடர்பு கொள்வது, உள்ளே போனவன் அதே வழியாகத்தானே திரும்பி வருவான், வரட்டும் உற்று பார்க்கலாம், உள்ளே போனவன் திரும்ப வரவே இல்லை, மணி இரவு ஒன்றாகி விட்டது, உறக்கம் வரவே அமுதா தூங்கி விட்டாள்.

அடுத்த நாள் மாலை அடுத்த வீட்டிலிருந்து யாராவது வெளியில் வந்தால் தான் பார்த்ததை அவர்களிடம் சொல்லலாம் என்று ஜன்னல் வழியே அடுத்த வீட்டையே பார்த்து கொண்டிருந்தவள், அங்கே வேலைக்காரி வீட்டின் வாசலை துடப்பத்தால் சுத்தம் செய்து கோலம் போட்டு முடிக்கும் வரை மதிர்ச் சுவற்றின் அருகில் சென்று காத்திருந்தாள்.

அம்மா..... அம்மா ...

அமுதாவை நிமிர்ந்து பார்த்த அடுத்த வீட்டு வேலைக்காரி அவளை நோக்கி வந்தாள்.

'என்ன' என்று கேட்ப்பது போல அமுதாவை பார்த்தாள்.

இந்த வீட்டுகாரம்மா வீட்டுல இப்போ இருக்காங்களா

இருக்காங்கம்மா

நாயெல்லாம் கட்டி போட்டுத்தானே இருக்கு

ஆமாம்மா

சரி நானும் உன்னோடயே வரேன் நீ அங்கேயே இரு

அடுத்த வீட்டின் அம்மாவிடம் தான் நேற்று இரவு பார்த்ததை சொல்லும் போது அந்த அம்மாவின் முகத்தில் ஒரு வித கலவரம் தெரிந்தது. நாற்காலியை விட்டு எழுந்து ' அப்போ நான் வரேன்..... என்று சொல்லிக்கொண்டே எழுந்தாள் அமுதா.

இருங்க காப்பி சாப்பிட்டுட்டு போகலாம்.......என்றார் அடுத்த வீட்டு அம்மா.

இல்லம்மா , இன்னொரு நாள் நான் வரேன்

போலீசுக்குத்தான் புகார் குடுக்கணும்......என்று சொல்லிக்கொண்டே அந்த அம்மா அமுதாவுடன் நடந்து வீட்டின் கேட்டுவரை வந்து, ' சமயம் கிடைக்கும் போது எங்க வீட்டுக்கு வாங்கோ' என்று சொல்லிவிட்டு அமுதா அவள் வீட்டிற்குள் போகும் வரை கேட்டினருகே நின்றிருந்து வழியனுப்பியபின் அடுத்தவீட்டு அம்மா அவர்கள் வீட்டிற்குள் சென்று விட்டார்.

* * * * *

அடுத்த நாள் மாலை அடுத்த வீட்டு வேலைக்காரி அமுதாவின் வீட்டு காலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தாள். கதவை திறந்த அமுதா

என்னம்மா

அம்மா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணம்

சொல்லு

நேத்து நீங்க எங்க வீட்டு எசமானி அம்மா கிட்ட பேசினதை கேட்டுட்டு இருந்தேன், எனக்கு நீங்க இத பத்தி பேசத்தான் எங்க வீட்டு எசமானி அம்மாவை பார்க்க வரீங்கன்னு தெரியாம போச்சு

.............................

அது வந்துங்க, வேலைகாரிகளை சிபாரிசு செய்யற கம்பனியில இருந்து என்னை கூட்டிட்டு வந்து இருகாங்க, கம்பனி ஒப்பந்தப்படி வேலைக்கு வரவுங்களுக்கு உடம்புக்கு சர்க்கரை இரத்த அழுத்த நோயெல்லாம் இருந்தா வேலைக்கு சிபாரிசு செய்யறதில்லைங்க, அது மட்டுமில்ல, வேலை செய்யறவங்க வீட்டுக்கு தேடிக்கிட்டு சொந்தகாரங்க யாரும் வரக்கூடாது,

.............................

எனக்கு ஐம்பத்து வயசாகுதுங்க, இரத்த கொதிப்பு சர்க்கர நோய் எல்லாமே இருக்கு, அதனால என்னோட மகன் மாசத்துல ஒரு தரம் மாத்திரை வாங்கிட்டு வந்து எனக்கு குடுத்திட்டு போவான், நான் ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் என்னோட கல்யாணம் ஆன மகளை போயி பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு டாக்டர பார்த்துட்டு வருவேனுங்க

.............................

வீட்டுல எல்லாரும் தூங்கிட்ட அப்புறம் என்னோட மகன் மதில் சுவத்து மேல ஏறி வந்து மாத்திரையை என் கிட்ட குடுத்துட்டு போவான். இந்த வீட்டுல நிறைய நாய்கள வேற வளக்குறாங்க, அவனுக்கு நாய் பயம் .......அத தான் நீங்க பார்த்து இருக்கீங்க.


அப்படின்னா வீட்டுக்குள்ள வந்த அவன் ஏன் திரும்பி வெளியே போகல

அவன் போகும் போது சில சமயம் வீட்டுக்கு பின்னால இருக்கிற சுவத்து மேல போயி பக்கத்துக்கு தெருவுக்கு போயிடுவாங்க.......
சுவத்து மேல நடக்குறத யாராவது பார்த்துட்டா பிரச்சினை ஆயிடக்கூடாதுன்னு

...............................

எங்க வீட்டு எசமானியம்மா பார்த்துட போறாங்கன்னு பயந்து பயந்து மெதுவா வருவாங்க

இப்போ நான் என்ன பண்ணனும்ன்னு சொல்லு

என்னோட மகன் வருவது அவங்களுக்கு தெரிஞ்சிட கூடாதுங்க

ம்.....ம்ம்.....

உன்னோட மகன் திரும்பவும் என்னைக்கு வருவான்?

வர பதினைஞ்சாம் தேதி வருவானுங்க

சரி நான் காத்திருந்து அவனை பார்த்து விவரத்தை அவன் கிட்ட சொல்லி உனக்கு வாங்கிட்டு வர மாத்திரைகளை வாங்கி வைக்கிறேன்............நீ வந்து வாங்கிட்டு போ

அம்மா......நான் அக்கம்பக்கத்து வீட்டுகாரங்க கிட்ட பேசுறது எங்க எசமானி அம்மாவுக்கு பிடிக்காதுங்க

சரி...........நான் அவங்க கிட்ட எதையும் சொல்ல மாட்டேன்.......நீ வெளியில வரும் போது வந்து வாங்கிட்டு போ

* * * * *

வேலைக்காரியின் மகனை அன்று இரவு பன்னிரண்டு மணிவரை காத்திருந்து மதில் சுவர் ஏறுவதற்கு முன் கையும் மெய்யுமாய் பிடித்து அவனிடம் நடந்ததை விவரமாய் சொல்லி மாத்திரைகளை வாங்கி கொண்டு வீட்டிற்குள் வந்த போது அமுதாவின் கணவன் கதவு திறக்கும் சப்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டான், இந்த அர்த்த ராத்திரியில் இவள் எங்கே வெளியில் போயிட்டு வருகிறாள் என்று யோசித்து கொண்டு அவள் படுக்கை அறைக்குள் வரும் வரை காத்திருந்தான்.

வீட்டினுள் வந்த அமுதா கதவை அடைத்துக் கொண்டு படுக்கை அறைக்குள் வந்ததும் அவள் கணவன் தூங்குவதைப் போல விழித்துக் கொண்டிருந்தான், அவனுக்கு தூக்கம் கெட்டது, நாளைக்கு பார்க்கலாம் இதைப் பற்றி ஏதாவது சொல்கிறாளா என்று காத்திருந்தான்.

நாட்கள் ஓடின, ஒரு நாள் அமுதாவின் கணவன் வீட்டில் இருந்த நேரம் வேலைக்காரியின் மகன் வந்து காலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தான். வெளியில் நின்றிருந்த பையன் கையிலிருந்த மாத்திரை பொட்டலத்தை அவனிடம் நீட்டியபடி,

அம்மா இல்லீங்களா

யாரு நீ............எந்த அம்மாவ கேட்கிற

இந்த வீட்டுல இருப்பாங்களே .....அவுங்களத்தாங்க

நீ யாரு

நான் பக்கத்து வீட்டுல வேலை பாக்கற வேலைக்காரியோட மகனுங்க.......அம்மா கிட்ட இந்த மாத்திரை பொட்டலத்த குடுத்தா எங்க அம்மா கிட்ட குடுத்துடுவாங்க

நீயே கொண்டு போயி குடுக்க வேண்டியது தானே........எதுக்கு இங்க வந்து குடுக்கற

நடந்த கதையை முதலில் இருந்து வேலைக்காரியின் மகன் சொல்ல, மாத்திரை பொட்டலத்தை வாங்கி கொண்ட அமுதாவின் கணவன், மனதில் இருந்த சந்தேகத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தது நல்லதாக போனது என்று நினைத்துக் கொண்டான்.