Translate

9/06/2009

இயற்கையை வெல்ல முடியுமா

மூர்த்திக்கு இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் செய்தது கண் முன்னால் வந்து நின்று கேள்விகள் கேட்பது போல் இருந்தது, அப்போது மூர்த்தி தன் மனைவியின் தலை பிரசவத்திற்காக அவளுடைய பெற்றோர் வீட்டில் விட்டிருந்தார்,

டாக்டர் குறித்திருந்த தேதியில் பிரசவம் ஆனால் குழந்தையின் திருமண வாழ்க்கையில் பெரும் பாதிப்பு இருக்கும் என்று அவர்கள் குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய நெடுநாளைய நண்பரும் ஜோசியருமான ஒருவர் சொன்னதால் மருத்துவரிடம் சென்று குழந்தையை வேறு எந்த தேதிகளில் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க முடியும் என்று விசாரித்து, பிறக்க வேண்டிய தேதிக்கு இரண்டு நாட்க்களுக்கு முன்னாலேயே குழந்தையை எடுத்து, ஜாதகமும் எழுதி வைத்திருத்தார் மூர்த்தி.

மூர்த்தி தன் இருபது இரண்டு வயது மகள் கலாவிற்கு சேகரின் ஜாதகம் மிகவும் பொருத்தமாக இருந்ததால், கலாவை சேகருக்குத் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர், சேகர் முதன் முதலாக கலாவை பார்த்த போது சேகரின் மனதில் நிஜமாகவே தான் காத்திருந்தது வீண் போகவில்லை என்று மனம் குதூகலித்தது, கல்யாணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன் தான் கலாவும் சேகரும் செல்போனில் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

கல்லூரியில் படிக்கும் போது கூட சேகருக்கு எந்த பெண்ணின் மீதும் காதல் ஏற்ப்பட்டது இல்லை, அவனுடன் இருந்த நண்பர்கள் அவனை கேலி செய்வது உண்டு, ஏன் அவனே கூட அவனை நினைத்து அதிசயித்துக் கொண்டதுண்டு, இந்தக் காதல் ஏன் இன்னும் தன்னை விட்டு வைத்திருக்கிறது என்று அவனுக்கே ஆச்சர்யம் தான் என்றாலும், அதற்க்கு காரணம் அவனுக்கே அறியாமல் அவன் மனதில் பதிந்திருந்த அவனது குடும்ப சூழல் தான்.

காதல் என்று தனக்கு ஏதேனும் ஏற்ப்பட்டாலும் தன் பெற்றோர் நிச்சயம் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், தனது பெற்றோரையும் சொந்தக்காரர்களையும் மீறி தன்னால் நிச்சயம் காதலுக்காக தியாகம் என்ற பெயரில் வீட்டை விட்டு குடும்பத்தை விட்டு வெளியேற முடியாது என்பது அவனது மனதில் படிந்துள்ளதால் தானோ காதல் அவனிடமிருந்து சற்று ஒதுங்கி இருந்தது என்று கூட சொல்லலாம்.

சேகரின் ஜாதகமும் மூர்த்தியின் மகள் கலாவின் ஜாதகமும் மிகவும் அருமையாய் இருக்கிறது என்று தனக்கு மிகவும் பரிச்சயமான ஜோதிடர் சொன்ன பிறகு மூர்த்தியும் மாப்பிள்ளை வீட்டாரும் திருமணத்தை ஜோராக நடத்தி முடித்தனர்.

ஆட்க்குறைப்பு காரணமாக கலாவிற்கு இரண்டு நாட்கள் மட்டுமே லீவு எடுக்க முடிந்தது, திருமணம் முடிந்த இரு தினங்களில் ஆபீசிற்கு வந்ததாலோ அல்லது சேகரின் புதிய அன்பின் சுகத்தினாலோ கலாவிற்கு வேலையில் முழு கவனம் செலுத்த முடியவில்லை, இருந்தாலும் அலுவலகத்தில் தனகிருந்த வேலைகளை முடித்து வீட்டிற்கு கிளம்ப அன்று மணி ஏழாகி விட்டது. கல்யாணத்திற்கு பின் கலாவிற்கு லீவு எடுக்க முடியாமல் போனதற்காக சேகர் மிகவும் வருத்தப்பட்டான், ஆனால் வேலையில் இருக்கும் பிரச்சினைகள் பற்றி கலா சேகரிடம் சொல்லியிருந்தாள்.

பச்சை விளக்குகள் ஒளிர்வதற்கு முன்
வேகமாக சாலையை கடந்து விடலாம் என்று ஓடி வந்தவள், வரிசையாய் நின்றிருந்த வாகனங்களை கடக்க முற்ப்பட்ட போது பச்சை விளக்கு ஒளிர வாகனங்கள் சீறி பாய, சில வினாடிகளில் அந்த அசம்பாவிதம் நடந்து முடிந்து விட்டது. சாலையில் ரத்த வெள்ளத்தில் அவள் உடல் சின்னா பின்னமாகி விட்டது. இப்படி நடக்கும் என்று சேகர் நினைத்துப் பார்க்கவே இல்லை. கலாவின் உடலை கூட பார்க்க முடியாத படி சிதைந்து போனதை நினைத்து அவனால் மனதை தேற்றிக் கொள்ள முடியவில்லை.

அவன் இன்னும் தூங்கி கொண்டிருகிரானே என்று எழுப்ப அவனது அறையை தட்டி பார்த்தும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது அவன் கயிற்றில் உயிரற்ற உடலாய் தொங்கி கொண்டிருப்பதை கேள்வி பட்டு
சேகரின் அப்பா மாரடைப்பினால் சாய்ந்து விட்டார்.

கலா பிறக்க வேண்டிய நேரத்தையும் நாளையும் மாற்றியதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை தெரிந்து கொள்ள மூர்த்தி இருபத்தி இரண்டு வருடம் காத்திருக்க வேண்டி இருந்தது.