Translate

9/01/2009

சுற்றுலாசுற்றுலாவிற்கு தன் கணவன் சூரஜ் என்றுமில்லாத அதிசயமாய் கூட்டிக்கொண்டு வந்திருப்பது சுகந்திக்கு நம்பமுடியாத உண்மையாக இருந்தது , ஊட்டியின் அழகை பார்த்து ரசித்தவாறே இருவரும் நடந்து கொண்டிருந்த போது நடப்பது நிஜம் தானா கனவில் நடக்கிறோமா என்று ஒருமுறை தன்னை கிள்ளி பார்த்துக்கொண்டாள். கல்யாணம் ஆன புதிதில் கூட தேன்நிலவிற்கு தன்னை எந்த ஊருக்கும் அழைத்துச் செல்லவில்லை என்ற குறை இன்று தீர்ந்தது போல் அவளுக்கு ஏகப்பட்ட சந்தோசம்.

சீசன் இல்லாததால் ஊட்டியில் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததும் தனிமைக்கு இனிமை சேர்த்தது போல் இருந்தது. ஆசையாய் கணவனது கையை பிடித்துக்கொண்டு நடக்க முயன்று அவனது கையை பிடித்தபோது அவன் லேசாக ஒதுங்கிகொள்வது அவளை மிகவும் சங்கடப்படுத்தியது. அவன் பட்டும் படாமல் அவளிடம் நடந்து கொள்வது அவளுக்கு அவன் மீது எரிச்சலை உண்டுபண்ணுவதாக இருந்தது. அவனது பாராமுகத்தால், மேகங்கள் முகத்தின்மீது உரசி செல்வதைக் கூட ரசிக்க இயலாமல் போனது.

இருவரும் தங்கியிருந்த அறைக்குத் திரும்பும் போது இருட்டிவிட்டது, இரவு உணவை முடித்துக்கொண்டு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குச் செல்லும் வழியில் அவளருகே எதிரில் மிக அருகில் சுந்தர், சுகந்தி அவனை பார்க்காதவள் போல அவசரமாக கணவனுடன் அறைக்குள் சென்றுவிட்டாள். சுந்தர் தன்னை பார்த்துவிட்டான், மறுபடியும் அவனை நேரில் சந்திக்காமல் தவிர்க்க வேண்டும் என்று மனதினுள் இறைவனை வேண்டிக்கொண்டாள்.

அன்று அந்த குளிர்ந்த இரவிலும் அவளுக்கு வியர்த்தது, உறக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்து பொழுதும் விடிந்து போனது, பொழுது விடியும் நேரத்தில் கண்கள் தூக்கத்தின் மிகுதியால் தானே மூடிக்கொண்டது. விழிப்பு வந்து கடியாரத்தை பார்த்தபோது மணி மதியம் பன்னிரண்டு ஆகியிருந்தது, குளித்து உடை மாற்றி தலை சீவிக்கொண்டு, மதிய உணவிற்கு கீழே இருந்த அறைக்கு போகும் வழியில் சுந்தர் நின்று கொண்டிருந்தான்.

அவள் அவனை பார்க்காதவள் போல வேகமாக நடந்து படியிறங்கி சென்று கொண்டிருந்தாள், சுந்தர் அவளை பின் தொடர்வதை அவளால் உணர முடிந்தது, இவன் தன்னிடம் பேசாமல் விடமாட்டான் என்றது மனம், அவள் நேரே சென்று மேசையில் சாப்பிடுவதற்காக உட்கார்ந்து கொண்டாள். அவள் உட்கார்ந்திருந்த மேசையின் எதிரில் இருந்த நாற்காலியில் அவனும் வந்து உட்கார்ந்துகொண்டான்.

'என்ன, சுகந்தி, என்னை பார்க்காத மாதிரி போற, என்னை அதுக்குள்ளே மறந்துட்டியா' என்றான்.

அவள் பதிலேதும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள், அவள் கணவன் காலையில் எழுந்து குளித்துவிட்டு அருகிலிருந்த ஆங்கில பள்ளியில் படிக்கும் அவனது அலுவலகத்தில் உடன் வேலைபார்ப்பவரின் மகனை அவன் தங்கியிருந்த விடுதியில் சென்று பார்த்துவிட்டு வருவதற்கு போயிருந்தான். அவனும் இருந்திருந்தால் நிலைமையை எப்படி சமாளித்திருக்க முடியும் என்பதை அவள் நினைத்த போது கைகள் இரண்டிலும் வியர்த்தது. கைக்குட்டை வியர்வையில் நனைந்துவிட்டது,

வெளியே மழைத்தூறல் போட்டு குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. எதிரிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த சுந்தர்,

'என்ன பேச மாட்டியா' என்றான்.

மேசைக்கு உணவு கொண்டுவரும் சர்வர் யாரும் அங்கு இல்லையா என்று சுற்றிலும் பார்த்தாள், அதை தூரத்திலிருந்து கவனித்த சர்வர் அவளது மேசையை நோக்கி வந்தான். மதிய உணவை அறைக்கு கொண்டு வரும்படி சொல்லிவிட்டு நாற்காலியை விட்டு எழுந்து மாடியிலிருந்த தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவனும் அவளை பின்தொடர்ந்தான். மாடிப்படிகளில் ஏறிகொண்டிருக்கும்போது சுற்றிலும் அவனையும் அவளையும் தவிர யாரும் இல்லை என்பதை உறுதி செய்துக்கொண்ட பின்,

'என்னை பின் தொடராதே, என் பின்னால் நீ தொடர்ந்தால் நான் போலீசுக்கு போன் செய்வேன்' என்றாள் கோபமும் பயமும் கலந்த குரலில். அவளது இந்த பதிலை எதிர்பார்த்திருந்தவனைப் போல,

' போலீசுக்கு போன் செய்து சொல்லு, போலீசு வரட்டும், ' என்றான்.

அவள் வேகமாக அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள். நெஞ்சு படபடத்தது, கைகள் வியர்த்தது, அருகிலிருந்த போன் அடித்தது, போனில் அவன்தான் ' ஒரு தடவை என்னோட படுத்துடு போதும் உன்ன விட்டுடறேன்'........ போனை சட்டென்று வைத்து விட்டாள். மூச்சு வாங்கியது, கைகள் நடுங்கியது, வியர்த்துக் கொட்டியது,

கதவை தட்டி விட்டு மதிய உணவை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு ஒரு துண்டு காகிதத்தை அவளிடம் கொடுத்து 'இதை உங்ககிட்ட குடுக்கசொன்னாரும்மா அந்த ஆள்' என்றான் சர்வர். அவள் அந்த காகிதத்தை பிரித்துப்பார்த்தாள், அவனது செல்போன் எண்ணும், கிறுக்கிய கையெழுத்தில் ' ஒரு தடவை போதும் உன்னை தொல்லைகொடுக்கவே மாட்டேன்' என்று எழுதியிருந்தது.

அவளது செல்போனில் அவள் கணவன் அழைத்தான், 'சுகந்தி, இந்த பையன் கோயம்பத்தூர் போயி ஏதோ வாங்கனும்னு சொல்லறான், நான் அவனை கூட்டிட்டு போயிட்டு வந்துடறேன், நீ சாப்பிட்டு விட்டு படுத்துக்கோ, நான் சீக்கிரம் வந்திடுவேன்' என்றான். தங்கியிருந்த விடுதியின் போனில் சுந்தரின் செல்போனுக்கு போன் செய்து சுந்தரை விடுதியின் முகப்பில் அவளுக்காக காத்திருக்க சொல்லிவிட்டு கைபையை எடுத்துக்கொண்டு அறையை பூட்டி, சாவியை முகப்பில் கொடுத்துவிட்டு முகப்பில் காத்திருந்த சுந்தரை நோக்கி நடந்தாள் சுகந்தி.

கால் டாக்ஸியை கூப்பிட்டு இருவரும் அதில் ஏறிக்கொண்டு, ஆள் நடமாட்டமே இல்லாத மரங்களடர்ந்த பகுதியை கார் தாண்டிக்கொண்டிருந்த போது காரோட்டியிடம் நிறுத்தச் சொல்லி காரைவிட்டு இறங்கி கொண்டனர் இருவரும்.

'என்னோட ரூமுக்கு நீ வந்திருக்கலாமே சுகந்தி',

' யாராவது பார்த்துட்டா பிரச்சினையாகிடும் எனக்கு' என்றாள் சுகந்தி.

சுந்தரும் சுகந்தியும் சாலையை ஒட்டியிருந்த மலையோரத்தில் யாருமில்லா தனி இடம் நோக்கிச் சென்றனர். 'நான் நினைச்சேன் சுகந்தி நீ நிச்சயம் என்னோட வேண்டுகோளை ஏத்துப்பேன்னு ' யாரும் இல்லாத இடத்தை நோக்கி இருவரும் நடந்து கொண்டிருக்கும் போது சுந்தர் சுகந்தியின் கையை பிடித்துக்கொண்டான், சிறிது நேரத்திற்குப்பின் அவள் இடுப்பைச் சுற்றியது அவனது கை,

சுந்தர் அவளுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவன், எல்லாவித கெட்ட பழக்கங்களும் ஒன்றாக அவனிடமிருந்தது, பெண்களை நயவஞ்சகமாக தன் வலைக்குள் சிக்கவைத்து, சிக்காதவர்களை பலாத்காரமாகவும் வாழ்க்கையை சீரழித்து வந்தவன், கடைசி வருடம் கல்லூரி படிப்பு முடியும் தருவாயில் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் தான் அவனைப் பற்றி முழுமையாக கல்லூரியிலிருந்த அனைவரும் தெரிந்து கொள்ள முடிந்தது, அதுவரை அவன் பல பெண்களின் வாழ்க்கையை சூரையாடியிருப்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது, இன்று அவனை சந்தித்தது தன் வாழ்நாளிலேயே மிக மோசமான நாள் என்பதை உணர்ந்தாள் சுகந்தி.

கரும்மேகங்கள் திரண்டு வந்ததால், அந்த இடம் முழுவதும் இரவு போல இருண்டது, இருவரும் ஆள் அரவமற்ற இடத்தில் உட்கார்ந்தனர், அவன் அவள் மடியில் படுக்கவேண்டும் என்றான், அவள் சமதித்தது அவனுக்கு கிறக்கத்தை ஏற்ப்படுத்திவிட்டது, கண்களை லேசாக மூடினான், மழை தூறல் ஆரம்பித்தது,

தோட்டக்கலையில் சுகந்திக்கு ஆர்வமிருந்ததால் செடிகளை கத்தரிக்க ஊட்டியில் முந்திய நாள் வாங்கியது, அவள் கைபையில் தயாராக வைத்திருந்த கூர்மையான புதிய கத்தரிக்கோலை எடுத்து அவனது தொண்டையில் தன் பலம் முழுவதையும் ஒன்று திரட்டி குத்தி........., ரத்தம் பீறிட்டு அவள் முகம் சேலை முழுவதையும் நனைத்தது, கத்தரிக்கோலைப் பிடித்திருந்த அவளது கைகளில் குளிருக்காக கையுறை அணிந்திருந்தாள்,

மழை மிக பலமாக பெய்ய ஆரம்பித்தது, சிறிது தூரத்தில் அதல பாதாளம், சுந்தரின் உடலை தன் பலம் முழுவதையும் ஒன்று திரட்டி மலையின் பாதாளத்தில் தள்ளிவிட்டு, அவனது உடல் பாறைகளில் மோதிக்கொண்டு மழை வெள்ளத்தோடு சேர்ந்து பாதாளத்தை நோக்கி உருண்டு செல்வதை பார்த்துவிட்டு சாலையை நோக்கி ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்தாள், சிறிது தூரத்தில் வந்துக்கொண்டிருந்த கார் ஒன்றை நிறுத்தச் சொல்லி கையசைத்தாள், கார் நின்றவுடன் அதில் ஏறிக்கொண்டு தான் தங்கியிருந்த விடுதிக்கு வந்து சேர்ந்தாள், அவள் உடுத்தியிருந்த உடையின் நிறமும் மழையும் சுந்தரின் ரத்தக்கரையை மறைத்துவிட்டது.