Translate

9/09/2009

கொட்டாங்கச்சி

குதிரைப் பந்தயம், மாட்டுப் பந்தயம், ஆட்டுக் கடா பந்தயம், சேவல் பந்தயம், இன்னும் எத்தனையோ பந்தயங்களை பற்றி கேள்விப்பட்டதுண்டு, வயதிற்கு வந்த இளம் பெண்ணிடம் காதல் மொழி பேசி அவளை காதலில் சிக்கவைத்து, திருமணம் செய்துகொள்வேன் என்று சத்தியமாய்ச் சொல்லி, 'அவள் யாரிடமும் சிக்க மாட்டாள் என்று சொன்னாயே பார்த்தாயா நான் அவளை மயக்கிவிட்டேன்' என்று ஆர்பாட்டமாய் கேலி செய்து பார்க்க,

பெண் என்ற அந்த மண் பொம்மையின் மனதை சுக்கு ரூறாய் சிதறடித்து வாழ்நாள் முழுதும் இரத்தக் கண்ணீர் சிந்த வைத்து , சித்த ப்ரம்மைக் கொண்டு அவள் வீதிகளில் அலைவதில் ஆனந்தம், இதுவும் ஓர் பந்தயம்.

துரோகம் சுடுவதுபோல் கண்ணீர் சுடுநீறாய் மாறி நெஞ்சத்தில் விழுந்தாலும் நெஞ்சம் சுடுவதில்லை, காலம் பல கடந்தாலும் துரோகத்தின் காயம் ஆறுவதில்லை, வேதனையில் நெஞ்சம் சுடுவது போல கத்தரி வெயல் கூட சுட்டெரிப்பதில்லை,

கண்ணீரும் வற்றி, உடலிலுள்ள இரத்தமெல்லாம் சுண்டிவிட்ட போதும், தலையின் நரம்புகள் அத்தனையும் வேதனையில் வெடித்து சிதறுவது அணுகுண்டு வெடிப்பது போலில்லை,

எந்த வழி செல்ல வேண்டும், அடுத்தது என்ன என்பதை யோசிக்க இயலாத கரும் இருட்டில் தள்ளி விட்டு இனி வெளிச்சத்தையே காண முடியாத சிறை வாசம் வைத்தது ஏமாற்றம்.

சிதைய இனி ஏதுமில்லை, சிதைவுக்கு அர்த்தமில்லை, சிற்றேரும்பிர்க்கு உணவாகி உணர்வின்றி போனது சடலம்,

உறவு சொல்ல பலர் இருந்ததும் உண்மை அன்பை காணா, வெற்று வாழ்க்கை, கண்களில் கண்ணீர் இல்லை, வேதனைகள் குறையவில்லை,

வடித்த கண்ணீரெல்லாம், காய்ந்து உப்பாய் மாறி உப்பின் மீது
படுக்கை, உப்பு முள்ளாய் குத்தியும் இரத்தம் வரக் காணோம், இரத்தமெல்லாம் ஒன்று திரண்டு, கண்ணீராய் மாறியதாலே,

குற்றம் எவர் மீதும் இல்லையே, குற்றம் இல்லா மனிதர் எவரும் இல்லையே,சந்தேகம்

Wednesday, 9 September 2009


அமுதாவிற்கு அன்று தூக்கம் பிடிக்கவில்லை, மாடியில் தன் படுக்கையறையில் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள், ஜன்னலிலிருந்து பார்த்தால் அடுத்த வீட்டு மதிர்ச் சுவரும் கேட்டும் தெரிந்தது,


மதிற்சுவர் மீது யாரோ ஒருவன் தொற்றி ஏறி சுவற்றின் மீது கயிற்றின் மீது நடப்பவன் போல மெதுவாக நடந்து வீட்டை நோக்கி செல்வது தெரிந்தது. இரவு மணி பனிரெண்டு ஆக போகிறது இந்த நடு நிசியில் மதிர்ச் சுவற்றின் மீது நடப்பது திருடனாகத்தான் இருக்கும், அடுத்த வீட்டின் தொலைபேசி எண் அமுதாவிற்கு தெரிந்திருக்கவில்லை.

நகர்ப்புற வாழ்க்கை என்பதால் அடுத்த வீட்டுக்காரர்களின் உறவு அவ்வளவாய் இருப்பதில்லை, இந்த நடு இரவில் அவர்களை எப்படி தொடர்பு கொள்வது, உள்ளே போனவன் அதே வழியாகத்தானே திரும்பி வருவான், வரட்டும் உற்று பார்க்கலாம், உள்ளே போனவன் திரும்ப வரவே இல்லை, மணி இரவு ஒன்றாகி விட்டது, உறக்கம் வரவே அமுதா தூங்கி விட்டாள்.

அடுத்த நாள் மாலை அடுத்த வீட்டிலிருந்து யாராவது வெளியில் வந்தால் தான் பார்த்ததை அவர்களிடம் சொல்லலாம் என்று ஜன்னல் வழியே அடுத்த வீட்டையே பார்த்து கொண்டிருந்தவள், அங்கே வேலைக்காரி வீட்டின் வாசலை துடப்பத்தால் சுத்தம் செய்து கோலம் போட்டு முடிக்கும் வரை மதிர்ச் சுவற்றின் அருகில் சென்று காத்திருந்தாள்.

அம்மா..... அம்மா ...

அமுதாவை நிமிர்ந்து பார்த்த அடுத்த வீட்டு வேலைக்காரி அவளை நோக்கி வந்தாள்.

'என்ன' என்று கேட்ப்பது போல அமுதாவை பார்த்தாள்.

இந்த வீட்டுகாரம்மா வீட்டுல இப்போ இருக்காங்களா

இருக்காங்கம்மா

நாயெல்லாம் கட்டி போட்டுத்தானே இருக்கு

ஆமாம்மா

சரி நானும் உன்னோடயே வரேன் நீ அங்கேயே இரு

அடுத்த வீட்டின் அம்மாவிடம் தான் நேற்று இரவு பார்த்ததை சொல்லும் போது அந்த அம்மாவின் முகத்தில் ஒரு வித கலவரம் தெரிந்தது. நாற்காலியை விட்டு எழுந்து ' அப்போ நான் வரேன்..... என்று சொல்லிக்கொண்டே எழுந்தாள் அமுதா.

இருங்க காப்பி சாப்பிட்டுட்டு போகலாம்.......என்றார் அடுத்த வீட்டு அம்மா.

இல்லம்மா , இன்னொரு நாள் நான் வரேன்

போலீசுக்குத்தான் புகார் குடுக்கணும்......என்று சொல்லிக்கொண்டே அந்த அம்மா அமுதாவுடன் நடந்து வீட்டின் கேட்டுவரை வந்து, ' சமயம் கிடைக்கும் போது எங்க வீட்டுக்கு வாங்கோ' என்று சொல்லிவிட்டு அமுதா அவள் வீட்டிற்குள் போகும் வரை கேட்டினருகே நின்றிருந்து வழியனுப்பியபின் அடுத்தவீட்டு அம்மா அவர்கள் வீட்டிற்குள் சென்று விட்டார்.

* * * * *

அடுத்த நாள் மாலை அடுத்த வீட்டு வேலைக்காரி அமுதாவின் வீட்டு காலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தாள். கதவை திறந்த அமுதா

என்னம்மா

அம்மா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணம்

சொல்லு

நேத்து நீங்க எங்க வீட்டு எசமானி அம்மா கிட்ட பேசினதை கேட்டுட்டு இருந்தேன், எனக்கு நீங்க இத பத்தி பேசத்தான் எங்க வீட்டு எசமானி அம்மாவை பார்க்க வரீங்கன்னு தெரியாம போச்சு

.............................

அது வந்துங்க, வேலைகாரிகளை சிபாரிசு செய்யற கம்பனியில இருந்து என்னை கூட்டிட்டு வந்து இருகாங்க, கம்பனி ஒப்பந்தப்படி வேலைக்கு வரவுங்களுக்கு உடம்புக்கு சர்க்கரை இரத்த அழுத்த நோயெல்லாம் இருந்தா வேலைக்கு சிபாரிசு செய்யறதில்லைங்க, அது மட்டுமில்ல, வேலை செய்யறவங்க வீட்டுக்கு தேடிக்கிட்டு சொந்தகாரங்க யாரும் வரக்கூடாது,

.............................

எனக்கு ஐம்பத்து வயசாகுதுங்க, இரத்த கொதிப்பு சர்க்கர நோய் எல்லாமே இருக்கு, அதனால என்னோட மகன் மாசத்துல ஒரு தரம் மாத்திரை வாங்கிட்டு வந்து எனக்கு குடுத்திட்டு போவான், நான் ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் என்னோட கல்யாணம் ஆன மகளை போயி பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு டாக்டர பார்த்துட்டு வருவேனுங்க

.............................

வீட்டுல எல்லாரும் தூங்கிட்ட அப்புறம் என்னோட மகன் மதில் சுவத்து மேல ஏறி வந்து மாத்திரையை என் கிட்ட குடுத்துட்டு போவான். இந்த வீட்டுல நிறைய நாய்கள வேற வளக்குறாங்க, அவனுக்கு நாய் பயம் .......அத தான் நீங்க பார்த்து இருக்கீங்க.


அப்படின்னா வீட்டுக்குள்ள வந்த அவன் ஏன் திரும்பி வெளியே போகல

அவன் போகும் போது சில சமயம் வீட்டுக்கு பின்னால இருக்கிற சுவத்து மேல போயி பக்கத்துக்கு தெருவுக்கு போயிடுவாங்க.......
சுவத்து மேல நடக்குறத யாராவது பார்த்துட்டா பிரச்சினை ஆயிடக்கூடாதுன்னு

...............................

எங்க வீட்டு எசமானியம்மா பார்த்துட போறாங்கன்னு பயந்து பயந்து மெதுவா வருவாங்க

இப்போ நான் என்ன பண்ணனும்ன்னு சொல்லு

என்னோட மகன் வருவது அவங்களுக்கு தெரிஞ்சிட கூடாதுங்க

ம்.....ம்ம்.....

உன்னோட மகன் திரும்பவும் என்னைக்கு வருவான்?

வர பதினைஞ்சாம் தேதி வருவானுங்க

சரி நான் காத்திருந்து அவனை பார்த்து விவரத்தை அவன் கிட்ட சொல்லி உனக்கு வாங்கிட்டு வர மாத்திரைகளை வாங்கி வைக்கிறேன்............நீ வந்து வாங்கிட்டு போ

அம்மா......நான் அக்கம்பக்கத்து வீட்டுகாரங்க கிட்ட பேசுறது எங்க எசமானி அம்மாவுக்கு பிடிக்காதுங்க

சரி...........நான் அவங்க கிட்ட எதையும் சொல்ல மாட்டேன்.......நீ வெளியில வரும் போது வந்து வாங்கிட்டு போ

* * * * *

வேலைக்காரியின் மகனை அன்று இரவு பன்னிரண்டு மணிவரை காத்திருந்து மதில் சுவர் ஏறுவதற்கு முன் கையும் மெய்யுமாய் பிடித்து அவனிடம் நடந்ததை விவரமாய் சொல்லி மாத்திரைகளை வாங்கி கொண்டு வீட்டிற்குள் வந்த போது அமுதாவின் கணவன் கதவு திறக்கும் சப்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டான், இந்த அர்த்த ராத்திரியில் இவள் எங்கே வெளியில் போயிட்டு வருகிறாள் என்று யோசித்து கொண்டு அவள் படுக்கை அறைக்குள் வரும் வரை காத்திருந்தான்.

வீட்டினுள் வந்த அமுதா கதவை அடைத்துக் கொண்டு படுக்கை அறைக்குள் வந்ததும் அவள் கணவன் தூங்குவதைப் போல விழித்துக் கொண்டிருந்தான், அவனுக்கு தூக்கம் கெட்டது, நாளைக்கு பார்க்கலாம் இதைப் பற்றி ஏதாவது சொல்கிறாளா என்று காத்திருந்தான்.

நாட்கள் ஓடின, ஒரு நாள் அமுதாவின் கணவன் வீட்டில் இருந்த நேரம் வேலைக்காரியின் மகன் வந்து காலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தான். வெளியில் நின்றிருந்த பையன் கையிலிருந்த மாத்திரை பொட்டலத்தை அவனிடம் நீட்டியபடி,

அம்மா இல்லீங்களா

யாரு நீ............எந்த அம்மாவ கேட்கிற

இந்த வீட்டுல இருப்பாங்களே .....அவுங்களத்தாங்க

நீ யாரு

நான் பக்கத்து வீட்டுல வேலை பாக்கற வேலைக்காரியோட மகனுங்க.......அம்மா கிட்ட இந்த மாத்திரை பொட்டலத்த குடுத்தா எங்க அம்மா கிட்ட குடுத்துடுவாங்க

நீயே கொண்டு போயி குடுக்க வேண்டியது தானே........எதுக்கு இங்க வந்து குடுக்கற

நடந்த கதையை முதலில் இருந்து வேலைக்காரியின் மகன் சொல்ல, மாத்திரை பொட்டலத்தை வாங்கி கொண்ட அமுதாவின் கணவன், மனதில் இருந்த சந்தேகத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தது நல்லதாக போனது என்று நினைத்துக் கொண்டான்.

9/08/2009

புதியவர்கள் - சந்தியா, ப்ரியாமணி, பத்மப்ரியா, சிநேகா


புதிய இளம் நடிகைகளில் சந்தியா நடித்த காதல் திரைப்படத்தில் கிளைமாக்ஸ்காட்சியில் சந்தியாவிற்கு திறமை இருக்கிறது, சரியான இயக்குநர் சரியான கதாபாத்திரம் கிடைத்தால் நிச்சயம் தனக்கிருக்கும் திறமையை வெளிக்கொணர முடியும் என்பதை நிரூபித்துள்ளார். சந்தியாவின் காதல் திரைப்பட கிளைமாக்ஸ் காட்சியை பார்த்த போது மறைந்த ஷோபா நினைவிற்கு வருகிறார், சிறிய வயதிலேயே மிகவும் முதிர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனது திறைமையை நிரூபித்தவர் மறைந்த நடிகை ஷோபா என்பது யாவரும் அறிந்தது.
ப்ரியாமணியால் சிறப்பாக நடிக்கமுடியும் என்பதற்கு பருத்திவீரன் திரைப்படம்
உதாரணமாக அமைந்தது, சிறப்பான கதாபாத்திரங்களும் இயக்குனர்களும் அமைவதில் தான் ஒரு நடிகன் அல்லது நடிகையின் திறமை வெளிப்படுகிறது என்பது ஏற்கனவே நாம் பார்த்த பழைய நடிகைகளின் திறமைகள் எவ்வாறு வெளிக்கொணரப்பட்டது என்பதை அறிந்துகொண்ட போது தெரிந்துகொண்ட தகவல். இதற்க்கு பிரியாமணியும் விதிவிலக்கல்ல.பத்மப்ரியா என்ற புதியவரும் இந்த பட்டியலில் இடம் பிடிக்கிறார், திறமையை
நிரூபிக்க கதாபாத்திரமும் இயக்குனரும் சரியான விதத்தில் அமைந்தால் சிறப்பாக நடிக்கமுடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
சிநேகாவின் நடிப்பிற்கு பல வாய்ப்புகள் அமைந்தது, பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனது நடிப்பை வெளிகாட்டியுள்ளார், எனினும் இன்னும் தேசிய விருதை பெரும் அளவிற்கு சிறந்த வாய்புகள் அமையவேண்டும் அவற்றில் அவரது திறமையை வெளிப்படுத்தவேண்டும். கிளாமராக நடிக்கவேண்டும் என்ற சிநேகாவின் புதிய முயற்ச்சியை வரவேற்கிறோம், ஆனால் மக்கள் மனதில் நெடுநாட்கள் நிற்கின்ற கதாபாத்திரங்கள் கிளாமர் கதாபாத்திரங்களாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதையும் சிநேகா மறந்துவிடக் கூடாது, சிநேகாவை இந்த அளவிற்கு பிரபலபடுத்தியது இதுவரையில் அவர் நடித்துவந்த ஹோம்லியான கதாபாத்திரங்கள் தான். குணசித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து தேசிய விருதை பெற வாழ்த்துகிறோம்.


சோழியன் குடுமி சும்மா ஆடாது !!!!!!!

எருதூரில் வாழ்ந்து வந்த சோழியன் என்பவன் அதிகம் படிப்பறிவு இல்லாதவனாக இருந்தாலும் எதை செய்தாலும் அதற்க்கு ஒரு காரணம் இல்லாமல் செய்யமாட்டான் என்று அந்த ஊரில் உள்ள அனைவரும் நம்பினர். இதனால் அவனிடம் அந்த ஊரில் உள்ள பல படித்தவர்கள் உள்பட அனைவரும் அவனது செய்கைகளை கவனித்து வந்ததுடன், அந்த செய்கைகளுக்கு பெரிதும் மதிப்பளித்தும் வந்தனர்.

அந்த காலத்தில் எல்லோருமே குடுமி வைத்திருந்தனர், யாரோ ஒரு சிலர் மட்டுமே சதுரவட்டை என்று சொல்லக்கூடிய முடித்திருத்தம் செய்வது வழக்கம், சோழியனுக்கும் அவனது தந்தையை போலவே குடுமிதான். சோழியனுக்கு ஐந்து வயதிருக்கும் போது அவன் பெற்றோர் அவனை கூத்துப்பட்டறையில் சேர்த்து விட்டனர், இதற்க்கு காரணம் இவனது இரண்டு அக்காள்களும் நாட்டியம் பயின்று வந்ததுடன், அந்த காலத்து திண்ணைபள்ளிக்கூடம் சென்று வந்தனர், அவர்களிருவரும் திறைமைசாலிகள் என்று
ம் பெயரெடுத்து வந்தனர்.

சோழியனை திண்ணை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிய போது அவன் அங்கே படிக்காமல் விளையாடுவதும் சுட்டித்தனங்கள் செய்வதுமாக இருந்து வந்ததால் திண்ணை பள்ளிக்கூட வாத்தியார் அவனது பெற்றோரை வரச் சொல்லி, இவனுக்கு படிப்பில் ஆர்வமில்லை,
அவன் மற்ற மாணவர்களையும் படிக்க விடாமல் குறும்புத்தனம் செய்கிறான், கண்டித்தாலும் செவி கொடுப்பதில்லை இதனால் அவனுக்கு வேறு எதில் ஆர்வமிருக்கிறதோ அதில் சேர்த்து விடுமாறு சொல்லி இனி திண்ணை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவேண்டாம் என்றும் கூறி அனுப்பிவிட்டனர்.

அடுத்த ஊரிலிருந்த கூத்துப்பட்டறைக்கு சிறுவர்களை சேர்த்துகொள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில் சோழியனை அங்கே சேர்த்துவிட்டனர். சோழியனுக்கு வேறு வழியில்லாமல் போகவே கூத்துப்பட்டறையில் சேர்ந்து காலம் ஓட்டி வந்தான், சோழியனை கூத்தில் சாமரம் வீசுவது இன்னும் பல வசனம் பேசாத வேடங்களில் நிற்க வைத்தனர், ஒருநாள் பாட்டு பாடும் சிறுவன் ஒருவனுக்கு காய்ச்சல் என்பதால் அந்த சிறுவனுக்கு பதில் அரிச்சந்திரன் கூத்தில் அச்சிறுவனின் வேடத்தில் இவனை நிறுத்திவிட்டு பின்னாலிருந்து இவனுக்கு பதில் வேறொரு பெரியவர் வசனம் பேசி சோழியனை அந்த பையனுடைய வேடத்தில் நிற்க வைத்து அன்றைய கூத்தை முடிக்க வேண்டியதாகிவிட்டது.

அந்த கூத்தை சோழியனின் ஊர் மக்களில் சிலரும் சோழியனின் பெற்றோரும் பார்த்ததிலிருந்து சோழியன் ஒரு நடிகனாகிவிட்டது போன்ற பரவசமடைந்தனர். சோழியன் வளர வளர, சிறு சிறு வேடங்கள் கொடுத்து கூத்து நடத்தி வந்தனர். சோழியனின் அம்மாவிற்கு உடல் நலம் சரியின்றி போனதாலும் சோழியனின் தமக்கைகள் இருவருக்கும் திருமணமாகி அவர்கள் கணவன் வீட்டிற்கு சென்றுவிட்டதால் வீட்டில் துணைக்கு வேறு ஆள் இல்லை என்ற காரணமும் சோழியனை நிரந்தரமாக கூத்து பட்டறையிலிருந்து கூட்டி வந்து வீட்டில் அவனுடைய பெற்றோர் அவனை தங்களுடனேயே வைத்துக்கொண்டனர்.

சோழியன் ஆற்றிலோ குளத்திலோ கிணற்றிலோ குளித்து முடித்து விட்டு தன்தலை முடியை உலர்த்தி கொண்டு நின்று கொண்டிருக்கும் சமயங்களிலும், மற்ற பல சமயங்களிலும் தான் கற்றுக்கொண்ட கூத்தை நினைவு படுத்திகொள்வான், தன்னை மறந்து அந்த கூத்தின் கதாபாத்திரங்களின் நினைவில் ஒன்றி விடுவான், அப்போது அவன் தனது தலையை ஆட்டி ஆட்டி வசனங்களையும் பாடல்களையும் தனக்குத் தானே சொல்லி கொள்வான், அப்போது அவனது தலைகுடுமி ஆடி கொண்டே இருக்கும்
, அவனிடம் அவனது குடுமி ஆடுவதற்கு காரணம் கேட்ட சிலரிடம் ' நான் கூத்துப் பட்டறையில் கற்றுக்கொண்ட முழுவதும் உங்களுக்கு சொல்லி விளக்க முடியாது, அதனால் என் குடுமி ஆடினால் அதற்க்கு ஒரு காரணமிருக்கும்' என்பானாம். சோழியனின் குடுமி ஆடினால் கிராம மக்கள் சோழியன் எதைசெய்தாலும் அதற்க்கு ஒரு காரணம் இருக்கும் அவனது குடுமி ஆடினால் கூட அதற்கும் ஒரு காரணம் இருக்கும் என்று நினைத்து கொள்வார்களாம்,

அதனால் சோழியனின் குடுமி காற்றில் ஆடினால் கூட நிச்சயம் அதற்கொரு காரணமிருக்கும் என்று ' சோழியன் குடுமி சும்மா ஆடாது 'என்ற வழக்கு வந்ததாக கதை.

9/07/2009

இருட்டுப்பள்ளம்

அன்று அலுவலகத்தில் வேலைகளை முடிப்பதற்குள் மணி 7 ஆகிவிட்டது. வாஷ்பேசினில் இருந்த குழாயில் முகத்தை அலம்பிக்கொண்டு அங்கிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் முகத்தை பார்த்தவாறே கையிலிருந்த சிறிய டவலால் முகத்தை அழுந்த துடைத்து ஆடையை சரி செய்து கொண்டு தான் உட்கார்ந்து வேலை செய்யும் மேஜையை பூட்டி அதன் சாவியை எடுத்து கைப்பையில் போட்டுக் கொண்டு லிப்டிற்க்குள் நின்று, தரைக்கு வந்ததும் ஆபீசின் கட்டிடத்திலிருந்து வெளியே வந்து சாலையில் போய் கொண்டிருக்கும் சன கூட்டத்தில் கலந்து பேருந்து நிலையத்திற்கு வந்து சேருவதற்குள் மணி 7.30 காண்பித்தது அருணாவின் கைகடியாரம்.

ஏற வேண்டிய பேருந்து கூட்டத்தை சுமந்து கொண்டு ஒரு புறமாக சாய்ந்து ஊர்ந்து வந்து பேருந்து நிலையத்தில் நின்றதும் அதுவரை பேருந்தின் சன்னல் கம்பிகளிலும் வாசலிலும் தொங்கி வழிந்து கொண்டிருந்த சிலர் பேருந்தை விட்டு இறங்கி இறங்குபவர்களை வரவேற்ப்பது போல வாசலின் இருபுறமும் நின்று வெளியே நின்றிருந்த கூட்டம் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு ஏற, பயணிகளை திணித்துக் கொண்டு மறுபடியும் சன்னல் கம்பிகளில் வழிந்து, நடத்துனரின் இரு விசிலோடு பேருந்து மறுபடியும் வாகன கூட்டத்தில் ஊர்ந்து செல்ல துவங்கியது.

இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர்கள் தள்ள, பேருந்திலிருந்து பிதுங்கி கொண்டு கீழே இறங்கி சாலையோரத்தில் நடந்து பின்னர் ஆள் அதிகம் நடக்காத பங்களாக்கள் நிறைந்த தெருவில் தான் தங்கியிருந்த பெண்கள் விடுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் அருணா. அருணாவின் பூர்வீகம் திருச்சி, சென்னையில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது, வேலையில் சேர்ந்து மூண்டு மாதங்களே ஆகி இருந்தது, சென்னைக்கு இதற்க்கு முன்னால் கல்லூரியில் படிக்கும் போது சுற்றுலா வந்தது மட்டுமே, உடன் படித்தவர்கள் யாரேனும் சென்னையில் வேறு நிறுவனங்களில் வேலை செய்வதாக அதுவரையில் அவளுக்கு தகவல் இல்லை, உறவினர்களும் யாரும் சென்னையில் இல்லை என்பதால் பெண்கள் விடுதியில் தங்கி வேலைக்கு செல்லவது வழக்கமாகியது.

தெருவில் விளக்கு வெளிச்சம் இல்லை கரும் இருட்டாக இருந்தது, தினமும் நடக்கும் தெரு என்பதால் ஒரு யூகத்துடன் தட்டு தடுமாறிக் நடந்து கொண்டிருந்தவள் திடீரென்று ஒரு பள்ளத்தில் தடுமாறி விழுந்தாள்.

வலது கால் எதன் மீதோ பலமாக விழுந்தது வலது கையிலும் சரியான வலி, குழியிலிருந்து ஏற முயன்றும் காலும் கையும் ஒத்துழைக்கவில்லை. வலியின் தீவிரம் மூளைக்குள் மின்சாரம் பாய்ந்தது போல விண்ணென்று பரவ சுய நினைவு இழந்தாள்.

கண் திறந்து பார்த்த அருணாவின் பக்கத்தில் அவளது அறையில் தங்கியிருந்த ராதிகா

ராதி.. .......

அருணா ...........

'முதலில் பல் தேய்த்து விடறேன்'.........என்று சொல்லிக் கொண்டேகட்டிலின் தலைபகுதியை மேலே உயர்த்தினாள் ராதிகா

ராதி....... என்னை ....எப்படி........இங்க......

கையில் பல் தேய்க்க பசையுடன் வந்த ராதிகா , ' முதலில் பல் தேய்த்து விட்டு காப்பி சாப்பிடு அப்புறம் நடந்ததை பத்தி பேசலாம் ' என்றாள்.

இல்ல உனக்கு எதற்கு சிரமம் நானே தெய்ச்சுக்கிரேனே ' சொல்லிக் கொண்டே வலது கையை தூக்க முயன்றவள், கைகளில் போடப்பட்டிருந்த கட்டுகளை பார்த்து , வலியின் தீவிரம் சிறிது குறைந்திருப்பது உணர்ந்தாள். கையில் பலத்த காயம் என்பதால் கட்டு போடப்பட்டிருந்தது, ராதிகாவின் உதவி யின்றி பல் தேய்ப்பது மட்டுமல்ல வேறு எந்த வித அசைவிற்கும் உடல் ஒத்துழைக்காது என்பது அருணா தெரிந்து கொண்டாள்.

காலை உணவை ஊட்டி முடித்ததும் சில மாத்திரைகளுடன் நீரையும் குடிக்க கொடுத்தாள் ராதிகா. அருணாவின் கண்களில் நீர் மல்க தொடங்கியது.

அழாதே அருணா, உனக்கு ஒண்ணும் ஆகல, டாக்டர் ஒண்ணும் பயப்பட வேண்டாம்ன்னு சொன்னார்.

சொல்லேன்....ராதி.......என்னை ஆஸ்பத்திரிக்கு எப்படி கூட்டிட்டு வந்தே.....

'இரவு சுமார் ஒன்பது இருக்கும் உன்னை காணலியேன்னு உன்னோட செல்போனுக்கு போன் செய்தேன், தொடர்ந்து அடிச்சுட்டு 'no reply' ன்னு வந்தது, செல்போனை தொலைச்சுட்டியா இல்லன்னா மறந்து ஆபீசிலேயே வச்சுட்டு வந்துட்டியான்னு குழப்பமா இருந்துச்சு'.

'ஹாஸ்டலை விட்டு வெளியே வந்து நின்று சிறிது நேரம் தெருவையே பார்த்து கொண்டிருந்தேன், மெதுவாக நடந்து கொண்டிருந்த போது, தெரு முழுதும் ஒரே இருட்டா இருந்ததால யார் நடக்கராங்கன்னே தெரியல, என்னோட செல்போன்ல இருந்த டார்ச் வெளிச்சத்துல தெருவில் நடக்க ஆரம்பித்தேன், அப்போது உன் செல்போன்ல இருக்கிற ரிங்க்டோன் சத்தம் கொஞ்சம் தூரத்துல இருந்து கேட்டுது, சத்தம் வந்த பக்கம் வேகமாக நடக்க ஆரம்பிச்சேன், சத்தம் நின்னுடுச்சி என்னோட செல்போன்ல இருந்து உன்னோட செல்போனுக்கு கால் பண்ணேன், மறுபடியும் அதே ரிங்டோன் சத்தம் கேட்டுது, சத்தம் வந்த பக்கம் மெதுவா நடந்தேன், என்னோட செல்போன் வெளிச்சத்துல அங்கே இருந்த ஒரு குழியிலிருந்து ரிங்க்டோன் சத்தம் வந்தது தெரிஞ்சது, கிட்ட போய் பார்த்தால் நீ அங்கே விழுந்து கிடந்தே, கூப்பிட்டு பார்த்தேன், நீ மயக்கமா இருக்கிறன்னு தெரிஞ்சுது, உடனே தெருவை விட்டு வண்டிகள் போய்க் கொண்டிருந்த சாலைக்கு வந்து ஒரு ஆட்டோவை அழைத்து வந்து ஆட்டோக்காரரின் துணையுடன் உன்னை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, நேரே ஹாஸ்டலுக்குப் போய் அவர்களிடம் நடந்ததை சொல்லிவிட்டு, நம் அறையிலிருந்து தேவையானவற்றை எடுத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்து சேர்த்தேன்'.

' டாக்டர் எக்ஸ்ரே ரத்த டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்துட்டு காலிலும் கையிலும் லேசான எலும்பு முறிவு, கை இடுப்பு கால் எல்லா இடத்திலும் பலமா அடி பட்டு இருக்குன்னு சொன்னார், ஒரு வாரமாவது படுக்கையில இருக்கனம்ன்னு சொன்னார் ' என்றாள் ராதிகா.

' காலைல வேலைக்கு போகிற அவசரத்துல தெருவில் குழிகள் தோண்டப்பட்டு இருந்ததா என்று கவனிக்காமல் போய்டேன் போல இருக்கு, தெருவில் விளக்குகள் இல்லாதிருந்ததனால் குழிகள் தோண்டப்பட்டு இருப்பதை பார்க்க முடியலை'....என்றாள் ஈனஸ்வரத்தில் அருணா.

[ தெரு விளக்குகளும் இல்லாமல் தெருவிலும் குழிகளை தோண்டிவிட்டு வேலைகளை முடிக்காமல் தோண்டிய குழிகளில் பாதசாரிகளோ வண்டிகளோ விழுந்து விபத்துக்குள்ளாவதை குழியை தோண்டுபவர்கள் உணர்ந்தால் இப்படிப்பட்ட விபத்துகள் ஏற்படாமல் தடுக்கமுடியும்.]9/06/2009

இயற்கையை வெல்ல முடியுமா

மூர்த்திக்கு இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் செய்தது கண் முன்னால் வந்து நின்று கேள்விகள் கேட்பது போல் இருந்தது, அப்போது மூர்த்தி தன் மனைவியின் தலை பிரசவத்திற்காக அவளுடைய பெற்றோர் வீட்டில் விட்டிருந்தார்,

டாக்டர் குறித்திருந்த தேதியில் பிரசவம் ஆனால் குழந்தையின் திருமண வாழ்க்கையில் பெரும் பாதிப்பு இருக்கும் என்று அவர்கள் குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய நெடுநாளைய நண்பரும் ஜோசியருமான ஒருவர் சொன்னதால் மருத்துவரிடம் சென்று குழந்தையை வேறு எந்த தேதிகளில் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க முடியும் என்று விசாரித்து, பிறக்க வேண்டிய தேதிக்கு இரண்டு நாட்க்களுக்கு முன்னாலேயே குழந்தையை எடுத்து, ஜாதகமும் எழுதி வைத்திருத்தார் மூர்த்தி.

மூர்த்தி தன் இருபது இரண்டு வயது மகள் கலாவிற்கு சேகரின் ஜாதகம் மிகவும் பொருத்தமாக இருந்ததால், கலாவை சேகருக்குத் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர், சேகர் முதன் முதலாக கலாவை பார்த்த போது சேகரின் மனதில் நிஜமாகவே தான் காத்திருந்தது வீண் போகவில்லை என்று மனம் குதூகலித்தது, கல்யாணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன் தான் கலாவும் சேகரும் செல்போனில் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

கல்லூரியில் படிக்கும் போது கூட சேகருக்கு எந்த பெண்ணின் மீதும் காதல் ஏற்ப்பட்டது இல்லை, அவனுடன் இருந்த நண்பர்கள் அவனை கேலி செய்வது உண்டு, ஏன் அவனே கூட அவனை நினைத்து அதிசயித்துக் கொண்டதுண்டு, இந்தக் காதல் ஏன் இன்னும் தன்னை விட்டு வைத்திருக்கிறது என்று அவனுக்கே ஆச்சர்யம் தான் என்றாலும், அதற்க்கு காரணம் அவனுக்கே அறியாமல் அவன் மனதில் பதிந்திருந்த அவனது குடும்ப சூழல் தான்.

காதல் என்று தனக்கு ஏதேனும் ஏற்ப்பட்டாலும் தன் பெற்றோர் நிச்சயம் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், தனது பெற்றோரையும் சொந்தக்காரர்களையும் மீறி தன்னால் நிச்சயம் காதலுக்காக தியாகம் என்ற பெயரில் வீட்டை விட்டு குடும்பத்தை விட்டு வெளியேற முடியாது என்பது அவனது மனதில் படிந்துள்ளதால் தானோ காதல் அவனிடமிருந்து சற்று ஒதுங்கி இருந்தது என்று கூட சொல்லலாம்.

சேகரின் ஜாதகமும் மூர்த்தியின் மகள் கலாவின் ஜாதகமும் மிகவும் அருமையாய் இருக்கிறது என்று தனக்கு மிகவும் பரிச்சயமான ஜோதிடர் சொன்ன பிறகு மூர்த்தியும் மாப்பிள்ளை வீட்டாரும் திருமணத்தை ஜோராக நடத்தி முடித்தனர்.

ஆட்க்குறைப்பு காரணமாக கலாவிற்கு இரண்டு நாட்கள் மட்டுமே லீவு எடுக்க முடிந்தது, திருமணம் முடிந்த இரு தினங்களில் ஆபீசிற்கு வந்ததாலோ அல்லது சேகரின் புதிய அன்பின் சுகத்தினாலோ கலாவிற்கு வேலையில் முழு கவனம் செலுத்த முடியவில்லை, இருந்தாலும் அலுவலகத்தில் தனகிருந்த வேலைகளை முடித்து வீட்டிற்கு கிளம்ப அன்று மணி ஏழாகி விட்டது. கல்யாணத்திற்கு பின் கலாவிற்கு லீவு எடுக்க முடியாமல் போனதற்காக சேகர் மிகவும் வருத்தப்பட்டான், ஆனால் வேலையில் இருக்கும் பிரச்சினைகள் பற்றி கலா சேகரிடம் சொல்லியிருந்தாள்.

பச்சை விளக்குகள் ஒளிர்வதற்கு முன்
வேகமாக சாலையை கடந்து விடலாம் என்று ஓடி வந்தவள், வரிசையாய் நின்றிருந்த வாகனங்களை கடக்க முற்ப்பட்ட போது பச்சை விளக்கு ஒளிர வாகனங்கள் சீறி பாய, சில வினாடிகளில் அந்த அசம்பாவிதம் நடந்து முடிந்து விட்டது. சாலையில் ரத்த வெள்ளத்தில் அவள் உடல் சின்னா பின்னமாகி விட்டது. இப்படி நடக்கும் என்று சேகர் நினைத்துப் பார்க்கவே இல்லை. கலாவின் உடலை கூட பார்க்க முடியாத படி சிதைந்து போனதை நினைத்து அவனால் மனதை தேற்றிக் கொள்ள முடியவில்லை.

அவன் இன்னும் தூங்கி கொண்டிருகிரானே என்று எழுப்ப அவனது அறையை தட்டி பார்த்தும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது அவன் கயிற்றில் உயிரற்ற உடலாய் தொங்கி கொண்டிருப்பதை கேள்வி பட்டு
சேகரின் அப்பா மாரடைப்பினால் சாய்ந்து விட்டார்.

கலா பிறக்க வேண்டிய நேரத்தையும் நாளையும் மாற்றியதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை தெரிந்து கொள்ள மூர்த்தி இருபத்தி இரண்டு வருடம் காத்திருக்க வேண்டி இருந்தது.

9/05/2009

திருடர்களின் அபாயம் !!!!!

இணையம் வழியாக பல தீராத தொல்லைகளை கொடுத்துவரும் யாரோ சிலர், இரவு நேரங்களில் அதாவது இரவு 11.30 மணிக்கு மேல் எங்கள் வீட்டின் பின் புறமிருக்கும் தாழ்வாரத்தில் ஏறிவந்து அங்கே அவர்கள் வந்துவிட்டு போனதற்கான அடையாளமாக அவர்கள் தின்றுவிட்டு போட்டுவிட்டு போகும் சாக்கலேட்டு காகிதங்களும் இன்னும் பல நொறுவைதீனியின் உரைகளையும் அங்கே பார்க்க முடிகிறது, இத்தகைய பயங்கரம் கடந்த நான்கு ஐந்து மாதமாக தொடர்கதையாகி வருகிறது.

இவர்கள் திருடர்களாகவும், கற்பழிப்பு கொலைகள் ஆட்கடத்தல் செய்பவர்களாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏன் என்றால், இரவு நேரங்களில் இவர்கள் இரண்டு ஆட்டோக்களில் வருகின்றனர் என்பது அவர்கள் கிளம்பி செல்லும்போது எங்கள்
வீட்டின் முன்னால் இருந்தோ அல்லது இரண்டு மூன்று வீடுகள் கடந்து அவர்கள் வந்து செல்லும் ஆட்டோக்கள் கிளம்பிச் செல்லும் சப்தம் கேட்ப்பது வழக்கம். இவர்கள் இணையதளத்தில் தொல்லை கொடுத்துவரும் திருடர்களாக இருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.

எங்கள் வீட்டின் எதிரிலும் அருகாமையிலும் பகல் நேரங்களில் ஆட்டோக்கள் நிற்ப்பதுண்டு, புதிய ஆட்டோக்களை அவர்கள் அங்கு நிற்ப்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.
எனவே அந்த ஆட்டோக்களுடன் இவர்களும் இணைந்து பகல் நேரங்களில் நிற்க முடியாது, பகலில் நிற்கும் ஆட்டோக்கள் அனேகமாக எங்கள் வீட்டைச் சுற்றி இருப்பவர்களின் ஆட்டோக்களாகத்தான் இருக்கும், அவர்கள் இரவு நேர சவாரிக்காக அதே இடத்தில் ஆட்டோக்களை நிற்க வைக்கும் வழக்கம் கிடையாது.

இதனால் இரவில் 11 மணிக்கு மேலே எங்கள் தெருவில் வந்து நிற்கும்ஆட்டோக்கள் எங்கள் ஏரியா ஆட்டோக்கள் கிடையாது என்பது உறுதி. இவர்கள் எதற்காக இரவு நேரத்தில் இங்கே வந்து நிற்கிறார்கள் பிறகு 1 மணிக்கோ 2 மணிக்கோ கிளம்பி போகிறார்கள் என்பது கேள்வி குறியாக உள்ளது
. தப்பித்து ஓடுவதற்காக அவர்கள் குறி வைக்கும் வீடுகளின் அருகே அவர்கள் ஏறிவரும் ஆட்டோக்களை நிறுத்தி வைக்கிறார்கள் என்று சந்தேகம் தோன்றுகிறது. சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக பல சமயங்களில் இவர்கள் ஏறிவரும் ஆட்டோக்களை வேறு இடங்களில் நிறுத்தி வைத்துவிட்டு குறிவைக்கும் இடத்திற்கு வருவதும் உண்டு. ஏன்னெனில் பல நாட்களில் ஆட்டோக்களின் சப்தம் கேட்காது ஆனால் அவர்கள் வந்துவிட்டு போனதற்கான வேறு பல அடையாளங்கள் இருக்கும்.

இதனால் நான் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால், எங்கள் வீட்டில் கொலையோ கொள்ளையோ ஆள்கடத்தலோ நடந்தால் இணையதள பகிர்வோரையும், எங்கள் வீட்டிற்கு தண்ணீர் சுத்தம் செய்யும் இயந்திரத்தின் சர்விஸ் ஆளாகவோ அவனது கூட்டாளிகளாகவோ [யுரேக்கா நிறுவனம்] இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது, (இவர்களைத் தவிர வேறு யார் வேண்டுமானாலும் கூட இப்படி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது) என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


[இந்த இடுகைக்கு யாரேனும் அபிப்பிராயம் எழுத விரும்பினால் எழுதலாம், அவற்றை நான் மட்டும் படித்துவிட்டு அழித்துவிடுவேன், எனவே உங்கள் கருத்துக்களை எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்]

9/04/2009

எனக்குப் பிடித்த நடிகைகள் - டி.ஆர். ராஜகுமாரி, கண்ணாம்பா, ஆர். ராதிகா


காலம் சென்ற நடிகை டி. ஆர். ராஜகுமாரி, கருப்பு வெள்ளை திரைபடங்களில் பெயரும் புகழும் பெற்றவர்களில் ஒருவர். பெண்கள் திரையுலகுக்கு வராத காலத்தில் துணிவுடன் அப்போதைய முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். எனக்கு டி.ஆர். ராஜக் குமாரியை பிடிப்பதற்கு அந்த துணிவும் ஒரு காரணம், இப்போதும் அவர் நடித்த பழைய திரைப்படங்களை பார்க்கும் போது பெண்கள் வெளியே ஆண்கள் எதிரில் வருவதற்கே தயங்கிய காலத்தில் அத்தனை ஆண்களுக்கு முன்னால் நின்று வசனம் பேசி நடித்திருக்கிறார் என்பது தான் எனக்கு முதலில் நினைவிற்கு வரும். தமிழ்நாட்டிலிருந்து நடிக்க திரையுலகிற்கு வந்த நடிகைகளின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவிற்கு இருப்பது யாவரும் அறிந்தது அதில் காலம் சென்ற நடிகை டி.ஆர். ராஜகுமாரியும் ஒருவர் என்பது ஒரு ஆச்சரியமான தகவல்.
காலம் சென்ற நடிகை கண்ணாம்பாவும் துணிவுக்கும் தைரியத்திற்கும் பெயர் போனவர், இல்லையென்றால் திரையுலகில் அத்தனை பிரபலமாகி நீண்ட காலம் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழுடன் இருந்திருக்க முடியாது, இவரது கணீர் என்ற குரலில் வசனங்கள் பேசுவது தான் இவரது தனி சிறப்பாக பேசப்பட்டது என்று நான் கேள்விபட்டிருக்கிறேன்.இப்போதைய நடிகை ஆர்.ராதிகாவை இவர்கள் வரிசையில் இணைத்து எழுதுவதற்கு காரணம் இவரும் அவர்களைப் போலவே துணிச்சலுடனும் தன்னம்பிக்கையுடனும் நடித்து புகழடைந்ததுடன், இன்றுவரை இவரது நடிப்பின் மூலம் நம்மை ஆட்கொண்டிருப்பவர். பெண்களில் இந்த மூவருமே தன்னம்பிக்கை தளராத உழைப்பு ஆண்களுக்கு முன்னால் சரிநிகர் சமமாக தங்களது திறமைகளை மிகத்துணிவுடன் எடுத்து காட்டியவர்கள் என்றால் அது மிகையாகாது.

9/03/2009

அஞ்சலி - திரு. ராஜசேகர ரெட்டி


பழுதடைந்திருக்கும் ஹெலிகாப்டர்களையும் விமானங்களையும் நாட்டின் மிக முக்கிய பொறுப்பு வகிக்கும் தலைவர்கள் அல்லது அரசியல்வாதிகள் பயன்படுத்தி அது சீராக இயங்காத காரணத்தால் உயிரிழப்பது என்பது டெக்னலாஜி இத்தனை முன்னேற்றம் கண்ட ஒரு மாபெரும் நாட்டில் நடந்திருப்பது மிகப்பெரிய அவலம்.

வருடத்திற்கு ஒருமுறை அதன் எல்லா பாகங்களும் சரியாக இயங்குகிறதா என சோதித்து தர கட்டுப்பாடு சான்றிதழை பெறாத ஒரு வாகனத்தில் ஏறி பயணம் செல்வதென்பது மரணத்தை நாமே ஏற்றுக்கொள்வதற்கு சமமாகும். முதலமைச்சருக்கே இந்த நிலை ஏற்ப்படுமானால் சாமான்யர்களின் நிலை என்னவாக இருக்க முடியும் என்பது சோகத்திலும் சிந்திக்க வைக்கும் கேள்வி.

வேதனைகளை தரக்கூடிய இத்தகைய சம்பவங்கள் இனியாவது நடக்காமல் இருக்குமானால் இறந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடையுமென்று நான் நம்புகிறேன், ஏன் என்றால் திரு ராஜ சேகர ரெட்டி அவர்கள் ஏழை எளிய மக்களின் துயர் துடைத்தவர் என்பதால் அவரது ஆன்மா இத்தகைய சம்பவங்கள் இனி நாட்டில் எங்கும் எந்த வழியிலும் நடவாமலிருக்கவே நிச்சயம் விரும்பும் என்பதில் சந்தேகமில்லை.

அவருடன் சென்ற மற்றவர்களும் இந்த விபத்தில் மரணமடைந்ததும் நெஞ்சை உருக்கும் துயரச் சம்பவமாக உள்ளது. இவர்கள் அனைவரின் குடும்பத்தாரின் மனநிலையை நினைத்துப் பார்க்கவே வேதனை அளிக்கிறது, இவர்கள் அனைவருக்கும் ஆண்டவன் மனசமாதானத்தை கொடுத்து இறந்தவர்களின் ஆன்மாக்களும் சாந்தியடைய அருள் புரிவாராக.


9/02/2009

எனக்குப் பிடித்த நடிகைகள் - ஸ்ரீவித்யா, அமலா, கவுதமிகாலம் சென்ற நடிகை ஸ்ரீவித்யாவிற்கு நடனம், வாய்பாட்டு, நடிப்பு அழகிய முகம் என்ற எல்லாம் ஒரு சேர அமைந்த நடிகை, எந்த ஒரு கலையையும் அவரால் சிறப்பாக செய்திருக்க முடிந்தும் அவர் ஏற்றுகொண்ட நடிப்பில் கடைசிவரையில் இருந்து பெயரும் புகழும் பெற்று விரைவிலேயே மறைந்தும் விட்டார் என்பது மிகவும் வருத்தமான செய்தியாகவே இன்றும் உள்ளது. இவரது நடிப்பில் பல திரைப்படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன், அபூர்வ ராகங்களில் தொடங்கிய கதாநாயகி பயணம் பல திரைபடங்களில் சிறப்பாக இருந்தது.நடிகை அமலாவும் சிறந்த நடன கலைஞர், மிக சிறப்பாக நடித்து என்னை ரசிக்க வைத்தவர் இவரை பல திரைபடங்களில் பார்த்து ரசித்திருக்கிறேன், வேதம் புதிது, சத்யா, அக்னி நட்சத்ரம், மெல்ல திறந்தது கதவு, கலியுகம், மௌனம் சம்மதம், இன்னும் பல திரைப்படங்களில் ரசிக்கும்படியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருப்பதும் இவரது நடனமும் மெல்லிய உடல் வாகும் என்னை மிகவும் கவர்ந்தவை.நடிகை கவுதமி நல்ல உயரமும் மிக அழகிய முகமும் உடல்வாகும் உடையவர், இவரது நடனத்திறமையை முழுமையாக திரைபடங்களில் பார்த்து ரசிக்க முடியாதபடி இவரது நடனத் திறமைக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் தமிழ் திரைபடங்களில் அமையவில்லை. இவர் நடித்த நீ பாதி நான் பாதி, தேவர் மகன், அவசர போலீஸ் 100, ருத்ரா, ஜென்டில்மேன், நம்மவர், குருதிப்புனல், போன்ற திரைப்படங்களைப்பார்த்து ரசித்து இருக்கிறேன்.

9/01/2009

சுற்றுலாசுற்றுலாவிற்கு தன் கணவன் சூரஜ் என்றுமில்லாத அதிசயமாய் கூட்டிக்கொண்டு வந்திருப்பது சுகந்திக்கு நம்பமுடியாத உண்மையாக இருந்தது , ஊட்டியின் அழகை பார்த்து ரசித்தவாறே இருவரும் நடந்து கொண்டிருந்த போது நடப்பது நிஜம் தானா கனவில் நடக்கிறோமா என்று ஒருமுறை தன்னை கிள்ளி பார்த்துக்கொண்டாள். கல்யாணம் ஆன புதிதில் கூட தேன்நிலவிற்கு தன்னை எந்த ஊருக்கும் அழைத்துச் செல்லவில்லை என்ற குறை இன்று தீர்ந்தது போல் அவளுக்கு ஏகப்பட்ட சந்தோசம்.

சீசன் இல்லாததால் ஊட்டியில் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததும் தனிமைக்கு இனிமை சேர்த்தது போல் இருந்தது. ஆசையாய் கணவனது கையை பிடித்துக்கொண்டு நடக்க முயன்று அவனது கையை பிடித்தபோது அவன் லேசாக ஒதுங்கிகொள்வது அவளை மிகவும் சங்கடப்படுத்தியது. அவன் பட்டும் படாமல் அவளிடம் நடந்து கொள்வது அவளுக்கு அவன் மீது எரிச்சலை உண்டுபண்ணுவதாக இருந்தது. அவனது பாராமுகத்தால், மேகங்கள் முகத்தின்மீது உரசி செல்வதைக் கூட ரசிக்க இயலாமல் போனது.

இருவரும் தங்கியிருந்த அறைக்குத் திரும்பும் போது இருட்டிவிட்டது, இரவு உணவை முடித்துக்கொண்டு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குச் செல்லும் வழியில் அவளருகே எதிரில் மிக அருகில் சுந்தர், சுகந்தி அவனை பார்க்காதவள் போல அவசரமாக கணவனுடன் அறைக்குள் சென்றுவிட்டாள். சுந்தர் தன்னை பார்த்துவிட்டான், மறுபடியும் அவனை நேரில் சந்திக்காமல் தவிர்க்க வேண்டும் என்று மனதினுள் இறைவனை வேண்டிக்கொண்டாள்.

அன்று அந்த குளிர்ந்த இரவிலும் அவளுக்கு வியர்த்தது, உறக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்து பொழுதும் விடிந்து போனது, பொழுது விடியும் நேரத்தில் கண்கள் தூக்கத்தின் மிகுதியால் தானே மூடிக்கொண்டது. விழிப்பு வந்து கடியாரத்தை பார்த்தபோது மணி மதியம் பன்னிரண்டு ஆகியிருந்தது, குளித்து உடை மாற்றி தலை சீவிக்கொண்டு, மதிய உணவிற்கு கீழே இருந்த அறைக்கு போகும் வழியில் சுந்தர் நின்று கொண்டிருந்தான்.

அவள் அவனை பார்க்காதவள் போல வேகமாக நடந்து படியிறங்கி சென்று கொண்டிருந்தாள், சுந்தர் அவளை பின் தொடர்வதை அவளால் உணர முடிந்தது, இவன் தன்னிடம் பேசாமல் விடமாட்டான் என்றது மனம், அவள் நேரே சென்று மேசையில் சாப்பிடுவதற்காக உட்கார்ந்து கொண்டாள். அவள் உட்கார்ந்திருந்த மேசையின் எதிரில் இருந்த நாற்காலியில் அவனும் வந்து உட்கார்ந்துகொண்டான்.

'என்ன, சுகந்தி, என்னை பார்க்காத மாதிரி போற, என்னை அதுக்குள்ளே மறந்துட்டியா' என்றான்.

அவள் பதிலேதும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள், அவள் கணவன் காலையில் எழுந்து குளித்துவிட்டு அருகிலிருந்த ஆங்கில பள்ளியில் படிக்கும் அவனது அலுவலகத்தில் உடன் வேலைபார்ப்பவரின் மகனை அவன் தங்கியிருந்த விடுதியில் சென்று பார்த்துவிட்டு வருவதற்கு போயிருந்தான். அவனும் இருந்திருந்தால் நிலைமையை எப்படி சமாளித்திருக்க முடியும் என்பதை அவள் நினைத்த போது கைகள் இரண்டிலும் வியர்த்தது. கைக்குட்டை வியர்வையில் நனைந்துவிட்டது,

வெளியே மழைத்தூறல் போட்டு குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. எதிரிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த சுந்தர்,

'என்ன பேச மாட்டியா' என்றான்.

மேசைக்கு உணவு கொண்டுவரும் சர்வர் யாரும் அங்கு இல்லையா என்று சுற்றிலும் பார்த்தாள், அதை தூரத்திலிருந்து கவனித்த சர்வர் அவளது மேசையை நோக்கி வந்தான். மதிய உணவை அறைக்கு கொண்டு வரும்படி சொல்லிவிட்டு நாற்காலியை விட்டு எழுந்து மாடியிலிருந்த தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவனும் அவளை பின்தொடர்ந்தான். மாடிப்படிகளில் ஏறிகொண்டிருக்கும்போது சுற்றிலும் அவனையும் அவளையும் தவிர யாரும் இல்லை என்பதை உறுதி செய்துக்கொண்ட பின்,

'என்னை பின் தொடராதே, என் பின்னால் நீ தொடர்ந்தால் நான் போலீசுக்கு போன் செய்வேன்' என்றாள் கோபமும் பயமும் கலந்த குரலில். அவளது இந்த பதிலை எதிர்பார்த்திருந்தவனைப் போல,

' போலீசுக்கு போன் செய்து சொல்லு, போலீசு வரட்டும், ' என்றான்.

அவள் வேகமாக அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள். நெஞ்சு படபடத்தது, கைகள் வியர்த்தது, அருகிலிருந்த போன் அடித்தது, போனில் அவன்தான் ' ஒரு தடவை என்னோட படுத்துடு போதும் உன்ன விட்டுடறேன்'........ போனை சட்டென்று வைத்து விட்டாள். மூச்சு வாங்கியது, கைகள் நடுங்கியது, வியர்த்துக் கொட்டியது,

கதவை தட்டி விட்டு மதிய உணவை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு ஒரு துண்டு காகிதத்தை அவளிடம் கொடுத்து 'இதை உங்ககிட்ட குடுக்கசொன்னாரும்மா அந்த ஆள்' என்றான் சர்வர். அவள் அந்த காகிதத்தை பிரித்துப்பார்த்தாள், அவனது செல்போன் எண்ணும், கிறுக்கிய கையெழுத்தில் ' ஒரு தடவை போதும் உன்னை தொல்லைகொடுக்கவே மாட்டேன்' என்று எழுதியிருந்தது.

அவளது செல்போனில் அவள் கணவன் அழைத்தான், 'சுகந்தி, இந்த பையன் கோயம்பத்தூர் போயி ஏதோ வாங்கனும்னு சொல்லறான், நான் அவனை கூட்டிட்டு போயிட்டு வந்துடறேன், நீ சாப்பிட்டு விட்டு படுத்துக்கோ, நான் சீக்கிரம் வந்திடுவேன்' என்றான். தங்கியிருந்த விடுதியின் போனில் சுந்தரின் செல்போனுக்கு போன் செய்து சுந்தரை விடுதியின் முகப்பில் அவளுக்காக காத்திருக்க சொல்லிவிட்டு கைபையை எடுத்துக்கொண்டு அறையை பூட்டி, சாவியை முகப்பில் கொடுத்துவிட்டு முகப்பில் காத்திருந்த சுந்தரை நோக்கி நடந்தாள் சுகந்தி.

கால் டாக்ஸியை கூப்பிட்டு இருவரும் அதில் ஏறிக்கொண்டு, ஆள் நடமாட்டமே இல்லாத மரங்களடர்ந்த பகுதியை கார் தாண்டிக்கொண்டிருந்த போது காரோட்டியிடம் நிறுத்தச் சொல்லி காரைவிட்டு இறங்கி கொண்டனர் இருவரும்.

'என்னோட ரூமுக்கு நீ வந்திருக்கலாமே சுகந்தி',

' யாராவது பார்த்துட்டா பிரச்சினையாகிடும் எனக்கு' என்றாள் சுகந்தி.

சுந்தரும் சுகந்தியும் சாலையை ஒட்டியிருந்த மலையோரத்தில் யாருமில்லா தனி இடம் நோக்கிச் சென்றனர். 'நான் நினைச்சேன் சுகந்தி நீ நிச்சயம் என்னோட வேண்டுகோளை ஏத்துப்பேன்னு ' யாரும் இல்லாத இடத்தை நோக்கி இருவரும் நடந்து கொண்டிருக்கும் போது சுந்தர் சுகந்தியின் கையை பிடித்துக்கொண்டான், சிறிது நேரத்திற்குப்பின் அவள் இடுப்பைச் சுற்றியது அவனது கை,

சுந்தர் அவளுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவன், எல்லாவித கெட்ட பழக்கங்களும் ஒன்றாக அவனிடமிருந்தது, பெண்களை நயவஞ்சகமாக தன் வலைக்குள் சிக்கவைத்து, சிக்காதவர்களை பலாத்காரமாகவும் வாழ்க்கையை சீரழித்து வந்தவன், கடைசி வருடம் கல்லூரி படிப்பு முடியும் தருவாயில் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் தான் அவனைப் பற்றி முழுமையாக கல்லூரியிலிருந்த அனைவரும் தெரிந்து கொள்ள முடிந்தது, அதுவரை அவன் பல பெண்களின் வாழ்க்கையை சூரையாடியிருப்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது, இன்று அவனை சந்தித்தது தன் வாழ்நாளிலேயே மிக மோசமான நாள் என்பதை உணர்ந்தாள் சுகந்தி.

கரும்மேகங்கள் திரண்டு வந்ததால், அந்த இடம் முழுவதும் இரவு போல இருண்டது, இருவரும் ஆள் அரவமற்ற இடத்தில் உட்கார்ந்தனர், அவன் அவள் மடியில் படுக்கவேண்டும் என்றான், அவள் சமதித்தது அவனுக்கு கிறக்கத்தை ஏற்ப்படுத்திவிட்டது, கண்களை லேசாக மூடினான், மழை தூறல் ஆரம்பித்தது,

தோட்டக்கலையில் சுகந்திக்கு ஆர்வமிருந்ததால் செடிகளை கத்தரிக்க ஊட்டியில் முந்திய நாள் வாங்கியது, அவள் கைபையில் தயாராக வைத்திருந்த கூர்மையான புதிய கத்தரிக்கோலை எடுத்து அவனது தொண்டையில் தன் பலம் முழுவதையும் ஒன்று திரட்டி குத்தி........., ரத்தம் பீறிட்டு அவள் முகம் சேலை முழுவதையும் நனைத்தது, கத்தரிக்கோலைப் பிடித்திருந்த அவளது கைகளில் குளிருக்காக கையுறை அணிந்திருந்தாள்,

மழை மிக பலமாக பெய்ய ஆரம்பித்தது, சிறிது தூரத்தில் அதல பாதாளம், சுந்தரின் உடலை தன் பலம் முழுவதையும் ஒன்று திரட்டி மலையின் பாதாளத்தில் தள்ளிவிட்டு, அவனது உடல் பாறைகளில் மோதிக்கொண்டு மழை வெள்ளத்தோடு சேர்ந்து பாதாளத்தை நோக்கி உருண்டு செல்வதை பார்த்துவிட்டு சாலையை நோக்கி ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்தாள், சிறிது தூரத்தில் வந்துக்கொண்டிருந்த கார் ஒன்றை நிறுத்தச் சொல்லி கையசைத்தாள், கார் நின்றவுடன் அதில் ஏறிக்கொண்டு தான் தங்கியிருந்த விடுதிக்கு வந்து சேர்ந்தாள், அவள் உடுத்தியிருந்த உடையின் நிறமும் மழையும் சுந்தரின் ரத்தக்கரையை மறைத்துவிட்டது.