Translate

8/26/2009

சுகாதார விழிப்புணர்வு


வேலை கிடைப்பதே பெரும்பாடாய் இருக்கும் இந்த காலத்தில் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தால்தான் செய்வேன் என்று பிடிவாதமெல்லாம் பிடிக்க முடியாது என்ற முடிவுடன் மெலிசா கிராம சுகாதார துறையில் கிராமம் கிராமமாக சென்று சுகாதாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை எடுத்துரைப்பதோடு தேவைப்பட்டால் செய்முறை விளக்கம் கூட செய்து காண்பிக்க வேண்டும் என்பது அவள் ஏற்றுக்கொண்ட வேலைக்கான விதி முறைகளில் ஒன்று.

அன்று காலை சுமார் மணி பதினொன்று ஆகிவிட்ட நிலையில் சீட்டி என்ற அந்த கிராமத்தினுள் நுழைந்தாள், நுழைகையிலேயே முதலில் இருந்த குடிசையின் வாசலில் நின்று 'உள்ளே யாராவது இருக்கீங்களா' என்று குரல் கொடுத்துக் கொண்டே அந்த சிறிய குடிசையினுள் நுழைந்தாள், அங்கு சுமார் ஐந்து அல்லது ஆறு குழந்தை தொழிலாளிகள் பீடி சுற்றும் வேலையில் மிகவும் கவனமாக இருந்தனர். ஒருவரும் மெலிசாவை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

வெளியில் வெயிலின் கோரத்தாண்டவத்திலிருந்து குடிசைக்குள் நுழைந்தது ஏதோ பாலைவனத்தில் சோலையை கண்டது போல இருந்தது. 'உங்கள் அம்மா வீட்டில் இல்லையே எப்போ வருவார்கள்' என்று மொத்தத்தில் அந்த குழந்தை தொழிலாளிகளிடம் கேட்டாள் மெலிசா.

'தெரியாது' என்று யாரோ ஒருவரிடமிருந்து பதில் வந்தது, அங்கிருந்த திண்ணைபோன்ற மண் திட்டில் உட்கார்ந்து கொண்டாள், 'உங்கள் அம்மா இப்போ வந்திடுவாங்க இல்லே' என்றாள் மறுபடியும், அவர்களிடமிருந்து பதிலேதும் வரவே இல்லை.

குழந்தைகள் தலையும் அவர்கள் அணிந்திருந்த சட்டையும் முகமும் பார்க்கும் போது குளியல் என்ற ஒன்றை கண்டிருக்கவே வாய்ப்பு இல்லை என்று தோன்றியது . 'குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுக்க முடியுமா' என்றாள் அந்த குழந்தைகளை பார்த்து.

அப்போதும் அவர்கள் தங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையிலிருந்த கவனத்தை திசை திருப்பவில்லை, மெலிஸாவிற்க்கு எப்படி ஆரம்பிப்பது இவர்களிடம் சுகாதாரத்தைப் பற்றி எப்படி எடுத்து சொல்லுவது என்று குழப்பமாக இருந்தது. அவள் கேட்ட எந்த கேள்விகளையும் அவர்கள் கவனித்ததாகவே தெரியவில்லை. அங்கிருக்கும் அத்தனை காய்ந்த இலைத் துண்டுகளையும் பீடி கட்டுகளாக்கி இன்று கொடுத்தால் தான் அவர்களது சாப்பாடு, இதற்கிடையில் இடியே தாக்கினாலும் அவர்கள் கவனம் பீடிகளை வேகமாக சுற்றி முடிப்பதில் தான் இருக்கும் என்பதை மெலிசா புரிந்து கொண்டாள்.

கை கடியாரத்தில் நேரம் இரண்டை தாண்டிக்கொண்டிருந்தது, இன்று எப்படியாவது இவர்களின் தாயை பார்க்காமல் அவளிடம் சுகாதாரத்தைப் பற்றி சில வார்த்தைகளாவது எடுத்து சொல்லாமல் இடத்தை விட்டு அசையப் போவதில்லை என்ற முடிவுடன் காத்திருந்தாள் மெலிசா.நேரம் மூன்றரையை காண்பித்தது கடியாரம், முப்பதுகளிலிருக்கும் ஒரு பெண் குழந்தைகளைப்போலவே அழுக்கு புடவையும் கிழிந்த ரவிக்கையும் , தலைமுடி எண்ணையையும் தண்ணீரையும் பார்த்திருக்க முடியாது என்று தெரிவித்தது, ஒரு பிளாஸ்டிக் குடத்துடன் அந்த குடிசைக்குள் வந்தாள், அவள் குடிசைக்குள் வருமுன்னரே வீதியிலிருந்தே சத்தமாக எதையோ சொல்லிக்கொண்டு வந்தாள்,

'ராத்திரி சோத்த எப்புடி ஆகுறது, குடிக்கிறதுக்கு கூட சுத்தமா தண்ணி இல்லையே, நா என்னாத்த பண்ணப்போறேன், இம்மாந் நேரம் தண்ணி வண்டி வரும்னு உட்கார்ந்திருந்தா வராதுன்னு இப்போ சொல்றானுங்க, இன்னைக்கு பீடி கட்டு கூட கொண்டு போயி குடுக்க முடியாம தண்ணிக்கி காத்திருந்தே நேரம் போச்சி'.....

அந்தப் பெண் பீடி சுற்றும் குழந்தை தொழிலாளிகளின் தாயாகத்தான் இருக்க வேண்டும், 'இந்த சோப்பை போட்டு குளித்தால் கிருமிகள் நீக்கி உடலை சுத்தமாக்கி ஆரோக்கியமாக பாதுகாக்கும்' என்று விளம்பரப் படுத்தப்படும் அந்த சிகப்பு சோப்பு, சுகாதார மையத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்வதற்கு கொடுப்பது, கைப்பையிலிருந்த அந்த சிகப்பு சோப்பை எடுத்து அங்கிருந்த குப்பையில் போட்டுவிட்டு வீதியில் நடந்தாள் மெலிசா.