Translate

8/26/2009

எனக்குப் பிடித்த நடிகர்கள் - பிரகாஷ் ராஜ்

Wednesday, 26 August 2009




நடிகர் பிரகாஷ் ராஜின் நடிப்பாற்றலுக்கு பல திரைப்படங்களைச் சொல்லலாம், இவரது நடிப்பிலும் திறமையிலும் தயாரிப்பிலும் இன்னும் நிறைய எதிர்பார்ப்புகள் இவரது ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருவது உண்மை, இதனால் இன்னும் வித்தியாசமான கதைகளை இவரது தயாரிப்பிலும் நடிப்பிலும் காண எனக்கும் இவரது தீவிர ரசிகை என்ற முறையில் மிகுந்த ஆவல்.

இவர் யாருடன் ஜோடியாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பதை யோசிப்பது அவசியமே இல்லாத ஒன்று, ஏன் என்றால், தனியாக தன் நடிப்பால் தன்னை சிறப்பாக வெளிப்படுத்துபவர் இவர், பொதுவாக வில்லனாக நடிப்பவர்களுக்கு ஜோடியாக நடிப்பவர்கள் யாராக இருந்தாலும் அதைப் பற்றி முக்கியத்துவமிருக்காது, இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருவதாலோ என்னவோ இவருடன் எந்த நடிகை ஜோடியாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று யோசிக்க இயலவில்லை.

இவர் எழுதிய 'சொல்லாததும் உண்மை' என்ற சுயசரிதத்தில் தனது கடந்தகாலத்தில் நடந்த சம்பவங்களை ஒளிவு மறைவின்றி எழுதி இருக்கிறார், பொதுவாக மனிதர்களின் மறுபக்கம் என்பதில் பல சுயநலங்களும் சமுதாயத்தில் அசிங்கம் என்று சொல்லப்படும் விஷயங்களும் நிறைந்திருக்கும், இதனால் எந்த மனிதரும் தனது மறுபக்கத்தை அத்தனை சுலபத்தில் உண்மையாக சொல்லிவிடுவது கிடையாது, அப்படி சொல்லிவிடுவதால் தன்னை மிகவும் மோசமானவன் என்றோ கேவலமானவன் என்றோ மற்றவர்கள் நினைத்து விடக் கூடாது என்பது தான் பொதுவாக மனிதர்கள் தங்களது சுயரூபத்தை மறைத்து கொள்வதற்கான காரணம்.




பிரபலமானவர்கள் தங்களது பிரபலத்தை இழந்து அவப்பெயரை பெற்றுவிட வேண்டாம் என்பதற்காக தனது ரகசியங்களை வெளியே தெரிவிக்க விரும்புவது கிடையாது, ஆனால் இவர் பிரபலம் ஆன பின்னர் தனது ரகசியங்களை ஒரு புத்தகமாக எழுதியிருப்பது, மேலை நாடுகளில் நடக்கின்ற விஷயம், அதைப் போலவே பிரகாஷ் ராஜும் மிகவும் தைரியமாக எழுதி வெளியிட்டும் இருக்கிறார்.

கமலாதாஸ் என்ற கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரது வாழ்வில் நடந்த எல்லா சம்பவங்களையும் எழுதினார், பல ஆண்டுகளுக்கு முன்னர் தொடராக வெளிவந்தது, பிரகாஷ் ராஜின் 'சொல்லாததும் உண்மை' என்ற புத்தகத்தை படித்த போது அதன் நினைவுதான் வந்தது.

தன் அருமை புதல்வனை இழந்து துயரம் தாங்காமல் நடந்த சம்பவங்களை பற்றி அவர் எழுதியுள்ளதை படிக்கும் போது மனிதர்கள் எல்லோருமே பந்த பாசங்களுக்கு உட்பட்டவர்கள் தான் என்பது புரிகிறது, வாழ்வில் இன்ப துன்பம் இரண்டும் மனிதனை நிலை குலைய செய்யும் மாய சக்திகள் இதிலிருந்து மீண்டு தன்னை தன் பாதையில் எப்போதும் போல இயல்புநிலைக்கு தயார்படுத்திக்கொள்வது என்பது லேசான காரியம் கிடையாது.

பிரகாஷ் ராஜ் தனது வாழ்க்கை பயணத்தை நலமுடன் தொடர்ந்து இன்னும் பல இமாலய சாதனைகள் புரிய வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.