Translate

8/31/2009

எனக்குப் பிடித்த நடிகைகள் - சுஜாதா, ஸ்ரீப்ரியா, ராதா, சிம்ரன்


எனக்குப் பிடித்த நடிகைகளின் வரிசையில் நடிகை சுஜாதா ஏற்று நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் மிகவும் ரசித்தேன். முதன் முதலில் இவர் அறிமுகமான திரைப்படம் கே.பாலச்சந்தரின் ' அவள் ஒரு தொடர்கதையிலேயே' இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது,

அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த போது நல்ல நடிகைகள் நமக்கு கிடைத்திருக்கிறார்கள் என்ற திருப்தி ஏற்ப்பட்டது. அந்த திரைப்படத்தில் அவர் அறிமுகப்படுத்திய நடிக நடிகையர் யாவருமே பிற்காலத்தில் மிகவும் பிரபலமானார்கள், அதற்க்கு காரணம் இயக்குனர் சிகரம் தான், ஏன் என்றால் அவரது 'அவர்கள்' திரைப்படத்திலும் அந்த சிறப்பை மீண்டும் பார்க்க முடிந்தது,
ஒரு சிறந்த இயக்குநர் ஒரு நடிகர் அல்லது நடிகையின் திறமைகளை அறிந்து வெளிக்கொணர வாய்ப்பும் சந்தர்ப்பமும் கொடுக்காவிட்டால் அந்த நடிகர் அல்லது நடிகையின் திறைமை வெளியே தெரியாமலேயே போய் விடுகிறது,

அந்த வகையில் நடிகை சுஜாதாவின் நடிப்புத் திறமைகளை வெளி கொண்டு வந்தவர் திரு கே. பாலச்சந்தர் தான் என்பதில் சந்தேகமில்லை. அன்னக்கிளியிலும் அந்தமான் காதலியிலும் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்களில் இவரது நடிப்பை பெரிதும் நான் ரசித்திருக்கிறேன். இவர் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார்.




நடிகை ஸ்ரீ ப்ரியா சிறந்த நடிகை, சிறந்த நடனக் கலைஞர். இவரது திறைமைக்கு ஏற்றார் போன்ற கதைகள் அதிகமாக அமையவில்லை என்பதே என் குறை. இவர் திறமைசாலி என்பதை ஒரே திரைப்படம் 'அவள் அப்படித்தான்' நிரூபித்தது. அந்த திரைப்படத்தில் அத்தனை இயல்பாக இவர் நடித்திருப்பார், அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க பலர் தயங்கலாம் ஆனால் ஒரு சிறந்த நடிகை என்பதற்கு சான்று அந்த மாதிரியான அபூர்வமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்வது தான்.

ஆட்டுக்கார அலமேலு, நீயா, வசந்தத்தில் ஓர்நாள், போன்ற இவர் நடித்த பல திரைப்படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறேன். இவர் சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர், அதற்கேற்றார்ப் போல திரைப்படத்தில் வாய்ப்புகள் அதிகம் இவருக்கு கிடைக்கவில்லை, 'வாழ்வே மாயம்', ' நீயா ', இன்னும் ஒரு சில திரைபடங்களில்மட்டும் இவரது நாட்டியத்திறைமைக்கு வாய்ப்பிருந்தாலும் முழுமையான இவரது திறமைக்கு ஏற்ற கதைகள் அமையவில்லை என்பது என்னைப் போன்ற இவரது ரசிகைகளின் குறை.



நடிகை ராதா அப்போதைய நடிகைகளில் பெரும்பாலான திரைபடங்களில் நடித்தவர், இவரது நடிப்பைவிட இவரது உயரமும் முக வசீகரமும் ரசிக்கும்படியாக இருந்தது என்பதால் இவர் நடித்த பல திரைப்படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன், இவர் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் இவருக்கு ரசிகர்கள் ஏராளம், இன்னும் கூட இவர் நடித்திருக்கும் திரைப்படங்களில் வரும் பாடல் காட்சிகளில் இவரை பார்த்து ரசிப்பதுண்டு.



நடிகை சிம்ரன் நடித்த திரைபடங்களில் இவரது நடனத்தை பார்த்து ரசிப்பதற்கே நான் இவரது திரைப்படங்களை பார்ப்பதுண்டு, பம்பாயிலிருந்து கோடம்பாக்கத்திற்கு வந்த நடிகைகளில் சிம்ரனின் தோற்றமும் உடலழகும் நடிப்பும் ரசிக்கும்படியாக இருந்தது. இவருக்கு ரசிக கூட்டமும் பெரிதாக இருந்தது, இவர் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் நடிகை ஜோதிகாவும் நடிக்க ஆரம்பித்தார், நான் சிம்ரன் நடித்த திரைப்படங்களை ரசித்தது பாடல் காட்சிகளில் அவரது நடனத்திற்கும் மெல்லிய கொடி போன்ற உடல் அமைப்பையும் கொஞ்சம் நடிப்பும் இவருக்கு வந்தது என்பதும் ரசிப்பதற்கான முக்கிய காரணங்கள்.