Translate

8/18/2009

ஓவியம் - 3

அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாதம் பொங்கி வழிந்து எரிந்துகொண்டிருந்த நெருப்பின் மீது விழுந்து கொண்டிருந்ததை கவனியாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தாள் பொற்கொடி. பின்னாலிருந்து வந்த அடுத்த வீட்டுக்காரியின் குரல் கேட்டுத் தன் நினைவிற்கு வந்தாள்,

'பொன்னு, நெனப்பு இங்க இல்ல, அத்தை வீட்டுக்கு போயிட்டு வந்ததிலிருந்தே உன் நெனப்பு இங்க இல்ல' என்றாள் அவள்.

'இல்லக்கா அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆதங்கரையில யாரோ ஒரு புது ஆளு குளிச்சிக்கிட்டு இருந்தாரு, பார்த்தா நம்ம ஊரு ஆசாமி மாதிரி தெரியல, யாரோ காருல அவரு பேர சொல்லி தேடிகிட்டு கூட வந்தாங்க, அதுதான் யோசிச்சிகிட்டு இருந்தேன், நான்
அத்தை வீட்டுக்கு போயிட்டு வரதுக்குள்ளே யாரோ புது ஆளுங்க நம்ம கிராமத்துக்கு வந்திருகாங்களே'

'அதுவா, அந்தாளு இந்த கிராமத்துக்கு வந்து ரொம்ப நாளாச்சு, நீ இப்பதான் பார்த்திருக்க போல'

'அப்படின்னா உனக்கும் அந்த ஆளத் தெரியுமா'

'நான் பார்த்தது இல்ல, நம்ம ஊர்ல யாராவது புதுசா வந்தா தெரியாமையா போயிடும், அந்த ஆளு படம் வரைவாராம், எனக்கும் மாரியக்காதான் சொல்லுச்சி, மாரியக்கா அங்கே
பெருக்கி சுத்தம் செய்யறதுக்கு வேலைக்கு சேர்ந்து இருக்குதாம்'

மாரியக்கா கணவனை இழந்தவள், மூன்று சிறிய குழந்தைகளை காப்பாற்ற வசதியிலாமல் வயிற்றை கழுவ எங்கு வேலை கிடைத்தாலும்
செய்வதற்கு கிளம்பி விடுவாள். மாரியக்காவை பார்த்தால் மற்ற விவரங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டு சமையல் வேலைகளை செய்யத்துவங்கினாள் பொற்கொடி.

மாரியக்கா பொற்கொடியின் வீட்டருகிலிருக்கும் ஊரின் பொது கிணற்றில் குடிநீர் எடுக்க வந்தாள், பொற்கொடியும் ஒரு செப்புக்குடத்தை எடுத்துக்கொண்டு குடிநீர் எடுக்க செல்ல அவளருகே சென்று கிணற்று நீரை வாளியிலிருந்து குடத்திற்கு ஊற்றிக்கொண்டே,

'மாரியக்கா, எங்க பார்க்கவே முடியல, குடிதண்ணீ எடுக்க கூட கிணற்று பக்கம் வரதே இல்லையே'

'நான் எப்பவும் வந்து குடி தண்ணீ எடுத்துகிட்டு போகலன்னா, குடிக்க வேறே ஏது தண்ணீ, உன்னதான் ரொம்ப நாளா பாக்க முடியல, அத்தை வீட்டுக்கு போயிருக்கேன்னு மல்லிகா சொன்னா, எப்போ வந்தே, பொன்னு, அத்தை எப்போ நம்ம ஊருக்கு வருதாம்' என்றாள் மாரியக்கா.

'அத்தை நம்ம ஊரு திருவிழாவுக்குத் தான் வரும், எங்கயாவது வேலைக்கு போறியா மாரிக்கா'

'போறேன் பொன்னு, நம்ம ஊர்ல புதுசா படம் வரையரவரு வந்திருக்காரே, அங்கே போயி வேல பாக்கறேன், அது ஒரு மூணு நாலு மாசமா நான் போயிஅங்கே வேலை செய்துட்டு வரேன்'

அதுக்கு மேலே என்ன விசாரிப்பது என்று தெரியாமல், மாரியக்கா குடத்தை எடுத்துக்கொண்டு கிளம்பியதும், தண்ணீர் நிரம்பிய குடத்துடன் வீட்டுக்குச் சென்றாள். அடுத்தநாள் ஆற்றங்கரையில் பல்தேய்த்துக்கொண்டு நின்றிருந்த நீலவண்ணன், அவளை கவனியாதவன் போல் குளித்து முடித்தான், அவன் குளித்து முடிக்கும் வரை கரை மீதிருந்த மரத்தினடியில் சென்று மறைந்து நின்று கொண்டாள் பொற்கொடி.

அவள் எத்தனைதான் தன்னை மறைத்தாலும் அவளது கொலுசின் சிணுங்கல் கேட்காமல் இல்லை.

தொடரும்.......