Translate

7/17/2009

அந்தரங்கம் பாவம் நிறைந்தது

பெற்றது எல்லாம் பிள்ளைகள் இல்லை

இருபது முப்பது கிலோ ஈரக்களிமண்ணை வயிற்றின் மீது கட்டிக்கொண்டு நாற்ப்பது நாற்ப்பத்தைந்து வாரங்கள் வாழ்ந்து பார்த்துவிட்டு, 'அப்பப்பா எப்படித்தான் பெண்கள் குழந்தையை பத்து மாதங்கள் சுமந்து பெற்றுக்கொள்ளுகிறார்களோ', என்று சொன்ன ஒரு ஆணிடம் 'வயிற்றிலிருக்கும் குழந்தை களிமண்ணாக மட்டுமிருந்து விட்டால் பரவாயில்லையே, அது ஒரு உயிருள்ள குழந்தை ஆயிற்றே'.

முதல் மூன்று மாதங்கள் வாந்தி மயக்கம் என்று ஆட்டிப்படைக்கும் வேதனைகளை கடந்து, வயிற்றிலிருக்கும் குழந்தை சுகத்துடனும் நலத்துடனும் வளர, பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ உணவை சரியான நேரத்திற்கு சாப்பிட்டு, நடக்க முடிகிறதோ இல்லையோ மாதம் தவறாமல் மருத்துவரை அணுகி அவர் போடும் ஊசிகளை சகித்து, அடிக்கடி மூச்சுவிட முடியாமல் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, ஏழு எட்டு மாதங்களில் வயிற்றில் குதித்து விளையாடும் [இன்ப] வேதனைகளை சகித்து, ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் கழிவது போல் கழித்து, பத்தாம் மாதம் எப்படி இருக்குமோ என்ற திகிலுடன் வாழ்ந்து, பிள்ளை பேறுகாலத்தின் வலியின் கொடுமையை சகித்து சிலருக்கு பிரசவத்தில் பிரச்சினை இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் பிள்ளையை பெற்று எடுத்து,

பிள்ளை வளரும் வரை பல தியாகங்கள் செய்து, பச்சை தண்ணீரில் குளிக்க முடியாது அது கத்திரி வெயல் கொளுத்தும் சமயமாக இருந்தாலும், ஆசைப்பட்ட உணவை சாப்பிட முடியாது, இப்படி பல தியாகங்கள் செய்து, குழந்தை ஓரளவு தானே உணவு சாப்பிடும் வரை வாயை கட்டி வயிற்றைக்கட்டி. அதற்குள் பல முறை ஜுரம் சளி, தடுப்பூசி என்று மருத்துவரிடம் நடையாய் நடந்து, முதன் முதலில் குழந்தையின் நடை கண்டு ரசித்து, தடுக்கி விழுந்த போது ஆறுதல் சொல்லி, மழலையை ஆர்வமாய் ரசித்து,

குழந்தைக்கு மூன்று வயது ஆவதற்குள் ஒரு நல்ல பள்ளியில் கஷ்டப்பட்டு பல ஆயிரங்களை கொடுத்து அட்மிஷன் வாங்கி, தினமும் குழந்தையை போர்முனைக்குச் செல்லும் வீரனை தயார் செய்து அனுப்புவதுபோல தினமும் காலை தயார் செய்து பள்ளிக்கு கொண்டு சென்று திரும்பவும் வீடு திரும்புவதற்குள் தேவையான உணவு மற்றும் பானம் தயாரித்து, புகட்டி, பள்ளியில் கற்றுவந்த ரைம்ஸ் சொல்லச் சொல்லி கேட்டு மகிழ்ந்து,

பள்ளியில் கொடுத்தனுப்பிய வீட்டுப்பாடங்களை செய்து கொடுத்து, இரவு உணவு கொடுத்து, குழந்தை உறங்கியப்பின் உறங்கி குழந்தை எழும்போதெல்லாம் எழுந்து, ப்ளஸ் டூ வரை நாமும் அவர்களுடன் பள்ளிப்பாடங்களை படித்து, மார்க்குகள் வாங்கி வந்த போதெல்லாம் அரவணைத்து கட்டி முத்தமிட்டு, மகிழ்ந்து, ஒருவழியாக பள்ளி இறுதியை முடித்து வெளியே வருவதற்கு முன் ஒரு நல்ல கல்லூரியில் இடம் பிடித்து, இடையில் காதல் என்ற சருக்குமர விளையாட்டில் பல்டி அடித்தாலும் படிப்பை கோட்டை விடாமல் கவனித்து,

வேலைக்குப் போக தயார் செய்து, வேலை கிடைத்தவுடன் மகிழ்ந்து, முதல் சம்பளம் வாங்கியபோது பெருமை கொண்டு, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள் இரண்டாம் மாத சம்பள கவருடன் வரும் போது, "தன் சம்பாதனை", என்ற தோரணை கூடி போக, நாம் சிறிது தடுமாற்றத்தில் வியந்து நிற்க, மூன்றாம் மாத சம்பளம் நம் பார்வையை விட்டு மறைய, சிறிது சிறிதாக, "என்னுடைய வருமானம், இதில் மற்றவரின் தலையீடு வேண்டாம்" என்ற பரிணாம வளர்ச்சியை கண்டு நாம் வியந்து நிற்க.

"போகட்டும், அவன் (அல்லது) அவளது சம்பாத்தியத்தை அவர்களே சேமிக்கட்டும்", என்று பெற்றவர்க்கே உரிய பெரிய மனதோடும் சிறிதே வேதனையோடும் விட்டுக்கொடுக்க, திருமணம் என்ற மற்றுமொரு பரிணாம வளர்ச்சியின் பாதிப்பால் வேரோடு பிடுங்கி காத தூரத்தில் எறியப்பட. இனி நாம் ஒதுங்கி "சின்னஞசிருசுகள் தனியே வாழ்வதை விட்டுக் கொடுக்கத்தானே வேண்டும்", என்று மனதை தேற்றிக்கொண்டு வாழ பழகிக்கொள்ள, நம்மை தூக்கி எறிந்த இடம் நம்மைப்போன்ற பலரும் உள்ள இடம் தான் [ முதியோர் இல்லம்] என்று மனதை சமன் படுத்திகொண்டு, அங்கே ஏன் இந்த அசுர அமைதி என்ற கேள்வி எழ,

முதியோர் இல்லத்தில் உள்ளவர் ஒருவரோடொருவர் பேசினால் என்ன பேச முடியும், மகனை அல்லது மகளை அருமையாய் பெற்று வளர்த்து ஆளாக்கி திருமணமும் செய்து வைத்து, பின் அவர்களுக்கு தாங்கள் சுமைகளாய் தெரிந்த போது முதியோர் இல்லத்திற்கு கொண்டுவந்து விட்டு போன அதே கதை.எல்லாருடைய கதையின் கருவும் ஒன்றாகத்தான் இருக்கப் போகிறது என்ற எண்ணம் போலும், மயான அமைதியாய், ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏற்ப்பட்ட சுனாமியால் நிலைகுலைந்து நிற்க, பேரிழப்பை பிரதிபலிக்கும் முகத்தோடு, இன்னும் சில காலம் காத்திருந்தால், தான் பூமிக்கு வந்த வேலையும் முடிந்து விடும் என்ற காத்திருப்போடு அமைதியாய் இருக்கின்றனர் போலும் ! ! !

மனித வாழ்க்கையில் எதை கொண்டுவந்தோமோ தெரியவில்லை, ஆனால் போகும்போது நிறைய தொலைத்துவிட்டுத்தான் போகிறோம்..........