Translate

7/18/2009

அசோக்

அசோக் மனிதருள் மாணிக்கம் என்று சொன்னால் மிகையாகாது. படிப்பில் கெட்டிக்காரன், கீபோர்ட் வாசிப்பதிலும் டென்னிசிலும் முதலிடம், கார் ரேஸ் அசோக்கின் மிகப் பெரிய ஹாபி, அசோக் கார் ஓட்டும் அழகே தனி, தினமும் அலுவலகத்திற்கு கார் ஓட்டி வந்து நிறுத்துவதை பார்க்கத் தவறுவதே இல்லை, சென்னையை அடுத்த மாதாவரத்தில் நடக்கும் கார் ரேசில் தவறாமல் கலந்து கொள்ளுவார் என்று கேள்விப்பட்டேன், மற்ற விளையாட்டுக்களையும் விட்டு வைப்பதில்லை, பொதுஅறிவில் மன்னன், ஆறு அடி இரண்டு அங்குலம், மாநிறம், எடுப்பான மூக்கு சிறிய அழகிய வாய், குறையே இல்லாத மனிதனை ஆண்டவன் அதிகம் படைப்பதில்லை, ஆனால் அசோக்கை எத்தனை நல்ல குணங்கள் உலகத்தில் இருக்குமோ அத்தனை குணத்தையும் ஒருங்கே கொடுத்துப் ஆண்டவன் படைத்துவிட்டிருந்தான்.

எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவுடன் கிடைத்த வேலையை செய்யவில்லை, மேற்க்கொண்டு படித்தார், வேறு வழி இல்லை வேலைக்கு போகத்தானே வேண்டும், அவரை பொறுத்தவரையில் உத்தியோகம் புருஷலட்சணம், கிடைத்த வேலையும் நல்ல நிறுவனத்தில் கிடைத்துவிட்டது, அசோக் பெற்றோருக்கு செல்லப்பிள்ளை ஒரே பிள்ளை, ஏராளமான சொத்துக்களுக்கு சொந்தக்காரர், அவரது அப்பாவிற்கு இருந்த டீ, ஏலக்காய், ரப்பர் எஸ்டேட்டுகளில் இருந்து கிடைக்கும் வருமானம் ஏகப்பட்டது, ஒரு அழகிய பணக்காரப் பெண்ணைப் பார்த்து அசோக்கிற்கு திருமணம் செய்து வைத்தார் அவருடைய அப்பா.

அசோக்கின் திருமணம் தெய்வலோகத்தில் நடந்ததைப் போன்று நடந்து முடிந்திருந்தது. மனைவியின் அழகை பார்ப்பவர் திறந்த வாயை மூட மாட்டார்கள் அத்தனை அழகிய மனைவி, பட்டப்படிப்பை அப்போதுதான் முடித்திருந்தாள் அசோகின் மனைவி, பெயர் வினையா. அசோக்கின் கல்லூரி நண்பன் சுரேஷ் அடிக்கடி அசோக்கின் வீட்டிற்கு வந்து போவான், அவனுக்கு எப்போதுமே அசோக்கைப் பற்றி மிக பெரிய ஆச்சரியம், இத்தனை நல்ல விஷயங்களும் ஒருவனுக்கு வாழ்வில் ஒருங்கே கிடைத்து விடுபவனை எப்படி ஆண்டவன் படைத்தார் என்று. இதே கேள்விதான் அசோக்கை பார்ப்பவர்கள் யாராயிருந்தாலும் மனதில் தோன்றும்.

சுரேஷிற்கு அமெரிக்காவிற்கு போய் வேலை பார்க்கவேண்டும் என்பது விருப்பம், சுரேஷிற்கு சொத்து சுகங்கள் என்று பெரிதாக ஒன்றும் இல்லை என்பதால் அமெரிக்காவிற்கு போய் கை நிறைய சம்பாதித்து மிகப் பெரிய ஆள் ஆகவேண்டும் என்ற கனவில் வாழ்ந்து வருபவன். இதனால் அமெரிக்காவிற்கு போவதற்கு வேண்டிய ற்ப்படுகளை செய்து வந்தான்.

இந்நிலையில் அசோக்கிற்கு அவர் வேலைபார்க்கும் நிறுவனத்தில் பங்குகொள்ளும் விருந்துகளில் குடிப்பதற்கு அவசியம் ற்ப்பட்டதன் விளைவு, வீட்டிலும் விருந்துகள் கொடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. இதில் சுரேஷும் கலந்துகொள்ளும் விருந்துகளும் உண்டு. குடிப்பழக்கம் நாளுக்குநாள் அதிகரிக்க ஆரம்பித்துப் பின் அசோக் ஒரு குடிகாரனாக மாற ஆரம்பித்தார்.

இந்நிலையில், தான் மனைவியுடன் சேர்ந்து போகவேண்டிய இடங்களுக்கெல்லாம் சுரேஷை அனுப்பி வைத்தார், சுரேஷும் வினையாவும் விதியின் கையில் சிக்கியவர்களாக மாறவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. இப்படி ஒரு தவறை செய்கிறோம் என்பதை அறியாதவராக அசோக் தன் மனைவியையும் சுரேஷையும் பல முறை பல இடங்களில் பார்த்தும் கூட சந்தேகப்படவேயில்லை, இதற்குக் காரணம் அசோக்கிற்கு இப்படியெல்லாம் தவறுகள் செய்வார்கள் என்பது தெரிந்திருக்கவில்லை என்பதுமட்டுமே காரணம், அசோக் அத்தனை வெள்ளை மனம் படைத்தவர்.

சுரேஷும் வினையாவும் அமெரிக்காவிற்கு போய்விட்டனர், ஆனால் அசோக் இங்கு பைத்தியம் பிடித்தவனைப் போலமாறிவிட்டார், வேலைக்கு போவதில்லை, காலை முதல் இரவுவரை குடி என்று அவரது வாழ்வில் எல்லையில்லா துன்பத்தை முதன் முதலில் சந்தித்தார், அவரது நிலைமையை காண பொறுக்காமல் பெற்றோர் மரணம் அடைந்துவிட்டனர். அவருடன் படித்த வேறு நண்பர்கள் இதை கேள்விப்பட்டு அவரை சென்னைக்கு கூட்டிவந்தனர், மருத்துவர்களிடம் ஆலோசனைக்குக் கூட்டிச்சென்று சில மருந்துகளும் கொடுத்து மறுபடியும் அவரை மனிதனாக இயங்க வைத்து ஒரு நிறுவனத்தில் உயரிய பதவியில் பணி செய்ய வைத்தனர்.

நிறுவனத்திற்கு வந்த புதிய அதிகாரியை பற்றி ஊழியர்கள் பலரும் உயர்வாய் பேசிக்கொள்வதை நான் கேள்வி பட்டேன், அந்த நிறுவனத்தில் மூன்று யூனியன்கள் உண்டு, மூன்று யூனியங்களைச் சேர்ந்தவர்களிடமும் நல்ல பெயர் எடுப்பது என்பது நடக்காத காரியம், ஆனால் எல்லூராலும் மிக மிக நல்லவர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட முதலும் கடைசியுமான அதிகாரி அசோக் மட்டும் தான், அவர்கள் எல்லோரும் புகழ்வது என்றால் அசோக் நிஜமாகவே ஒரு தெய்வப்பிறவியாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.

ஏனென்றால் நானும் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன், என் தகப்பனாரும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஒரு நாள் நான் அசோக்கை நிறுவனத்தின் கோப்புகளுடன் சந்தித்தேன், அப்போதுதான் முதன் முதலில் நான் அசோக்கை பார்த்தேன், அசோக் என்னுடன் அதிகம் பேசுவதற்கு ஒன்றும் இல்லாதிருந்தது, பின்னர் ஓரிருமுறை வேலைவிஷயமாக பார்த்தேன், அசோக் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்த ஏறக்குறைய எட்டு ஒன்பது மாதங்களுக்குப் பின் எங்கள் நிறுவனத்திலிருந்த யுனிய
ன் கிளர்ச்சியால் நிறுவனத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிறுவனம் மூடப்பட்டது.

மூன்று மாதங்களுக்குப்பின்
கம்பனி போராட்டத்தில் மூடி கிடந்த சமயம் நான் வேலை செய்துவந்த நிறுவனத்தில் ஒரு முக்கிய பதவியில் அவர் இருந்ததால், அசோக்கின் வீட்டிற்குச் சென்று கம்பனியின் முக்கிய கோப்புகளை கொடுத்துவிட்டு சில முக்கிய பணிகளைப்பற்றி கேட்டு வருவதற்காக என் தகப்பனாருடன் சென்றிருந்த போது, நான் நேரில் பார்த்த அந்த ஆங்கிலோஇந்திய பெண், அசோக்கின் மனைவி என்று சொல்ல கேட்டபோது நான் அதிர்ச்சியுற்றேன், என் மனதில் அசோக்கைப் பற்றிய நினைவுகள் செய்திருந்த ஈடுபாடு தான் அதற்க்கு காரணம் என்பதை என்னால் பிறகுதான் புரிந்துகொள்ள முடிந்தது, அதை காதல் என்று சொல்வதா, பாசம் என்று சொல்வதா தெரியவில்லை.

இப்போது
கூட அசோக்கோடு ஒரு காரியாதரிசியாக, நிரந்தர செவிலியாக காலம்பூராவும் அசோக்கோடு மட்டுமே வாழச்சொன்னால் கூட வாழ்ந்து விடலாம் என்று தோன்றும்; அந்த உணர்வுகளை நான் என்னவென்று சொல்லுவேன்,
அசோக்கை அலுவலக விஷயமாக நேரில் பார்க்க சென்றிராவிட்டால் அசோக்கைப்பற்றிய, அவரது சொந்த வாழ்க்கையைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடாமல் இருந்திருப்பேன்.

அந்த வயதான பெண்ணுடன் அசோக்கை நான் பார்த்த போது தான் இந்த அசோக் என்பவரின் முழுகதையை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்தது. நான் அதற்க்கு முன்னும் பின்னும் அத்தனை காதல் வயப்பட்டிருப்பேனா என்பது தெரியவில்லை, அவரது குணநலன்களை அலுவலகத்தில் பார்த்த எனக்கு ஏற்ப்பட்ட மதிப்பை விட, அவரை நேரில் பார்த்தபோதும் அவரது சோக கதையை முழுவதுமாக தெரிந்து கொள்ளும் ஆவல் எனக்குள் எழுந்த போது தான் என்னுள் தோன்றியிருப்பது அசோக்கின் மீது எல்லையில்லா காதல் என்று நான் உணர்ந்து கொண்டேன். அந்த காதலில் காமம் இல்லை, விரகதாபம் இல்லை, மனிதநேயம் அதிகரித்த நிலையில் உணர்வுகளின் எல்லையில் ஒரு தாய்மைகலந்த பாசம் அது.

கம்பனியை யூனியன் திறக்க விடவே இல்லை, கோர்ட்டில் கேஸ் நடந்தவாறு இருந்தது, நான் வேறு கம்பெனியில் வேலை செய்ய ஆரம்பித்தேன், இரண்டு வருடங்கள் ஓடி மறைந்தது, இடையில் என் தகப்பனாரின் உடல்நலக்குறைவால் அசோக்கைப்பற்றி செய்திகள் திரட்டுவதில் தடை ஏற்ப்பட்டுவிட்டது, என் தகப்பனாரின் உடல் தேறியப்பின் எனக்கு கிடைத்தசெய்தி, அசோக் அதிகமாக குடித்து ஒருநாள் நெஞ்சுவலி என்று
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்துவிட்டார்.

இன்றும் என் மனதில் பசுமையாய் நிற்கும் அசோக்கைப் பற்றிய நினைவுகள். எப்படி அசோக்கின் மனைவியால் அப்படி ஒரு துரோகத்தை அசோக் போன்ற ஒரு அருமையான மனமும் குணமும் படைத்தவருக்கு செய்ய முடிந்தது, மனிதனைவிட காமம் பெரிதா, என்றெல்லாம் கேள்விகள் தோன்றும்,
இப்படியொரு காதலி இருந்திருப்பாள் என்று அசோக்கிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

என்னைப்போன்று எத்தனைப் பேர் அசோக்கை நேசித்திருப்பார்களோ என்று கூட நான் நினைப்பதுண்டு, ஏனென்றால் அவர் அபூர்வமான, அலாதியான கடவுளின் படைப்பு.