Translate

7/07/2009

இந்த காலத்து முட்டாள்கள்

போட்டி போட்டுக் கொண்டு காதணிகள் சுரிதார், ஜீன் பான்ட் என்று ஒன்று விடாமல் வாங்கி குவித்து இப்போது அவசரத்திற்கு கையில் பணம் இல்லை, யாரிடமாவது அவசரத்திற்கு கேட்டு வாங்கி விடலாம், வங்கியில் பணம் இருக்கு ATM இல் பணம் எடுக்கும்போது யாராவது பார்த்துவிட்டால் அடுத்த நிமிடமே கடன் கேட்டு தொல்லை, கடன் கொடுப்பதற்கு ஒன்றும் பிரச்சினை இல்லை, திரும்ப கேட்டு வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும், அது மட்டுமில்லை ATM கிட்டே போனாலே இந்த ஜொள்ளு பார்ட்டி அங்கேயும் வந்து நின்று கொள்வான், இவனை தவிர்த்துவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு ஹாஸ்டலுக்கு வந்து சேருவதற்குள் வழியில் கல்லூரி ஆசிரியர்கள் யாராவது பார்த்துவிட்டால் போதும் இந்த ஜொள்ளு பார்ட்டியை பார்க்க தான் ஹாஸ்டலை விட்டு ATMமிற்கு வந்தேன் என்று தப்பு கணக்கு போட்டு இன்டெர்னல் மார்க்கில் தட்டி விடுவார்கள்.

போயும் போயும் இந்த ஜொள்ளு பார்ட்டி கிட்ட சரியா மாடிகிட்டோமே, எப்படியாவது இந்த எட்டாவது செமஸடரை முடித்துவிட்டு வெளியே போனால் போதும்னு இருக்குடா சாமி.

யாரிடம் கடன் வாங்குவது லாவண்யாவிடம் பணம் இருக்கும் கேட்டால் உடனே கொடுத்துவிடுவாள் ஆனால் வேறு தோழிகளிடம் பணம் கொடுத்ததை சொல்லி விடுவாளே, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளாது.

லாவண்யாவிடம் பணம் வாங்கி கொண்டு ரீசார்ஜ் கார்டை வாங்கி வந்து போனில் சொருகி அவசரமாக ஒரு குறுஞ்செய்தியை அவனுக்கு அனுப்பினாள், "ஹாப்பி பர்த்டே டு யு',

ஹாஸ்டலில் இருந்த கடைக்கு போய் ஒரு வாழ்த்து அட்டையும் ஒரு சிறிய பிறந்தநாள் பரிசும் வாங்கிக் கொண்டு வந்து அவசரமாக அதில் எழுதி அழகான வண்ண காகிதத்தில் பரிசுப்பொருளை மடித்து அவனது பெயரை எழுதி, கல்லூரி வகுப்பு முற்றத்தில் மரத்தின் கீழ் நின்றிருந்த அவனிடம் கொடுத்துவிட்டு வேகமாக யாரும் பார்க்கும் முன்னே தனது வகுப்பறைக்குள் ஓடிச்சென்று தனது இருக்கையில் உட்கார்ந்துக் கொண்டாள்.

மனதினுள் அவனை சபித்துக்கொண்டிருந்தாள், இந்த கல்லூரி படிப்பு முடியட்டும் பிறகு இந்த தொல்லையிலிருந்து நிரந்தரமாக விடுபட்டு விடலாம். அவளுக்கு அடுத்து உட்கார்ந்திருந்த பெண்களை சுற்றும் முற்றும் பார்த்தாள், எல்லோரும் எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டும் மும்முரமாக இருந்தனர், இவர்கள் யாரும் தன்னைப் போல பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாமல் எப்படி படிப்பில் முழு கவனத்துடன் இருக்கிறார்கள், மனதினுள் தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்,

தன் மீது தான் தவறு, முதலிலேயே இவனை தட்டி கழித்திருக்க வேண்டும், எதற்காக இவன் என்னை ரொம்ப அழகாயிருக்கேன்னு புகழ்ந்தான், நீ இல்லாத சமயங்களில் உன்னழகை பார்ப்பதற்கு உன்னோட புகைப்படம் வேண்டும் என்று இவன் கேட்டபோது தட்டிக்கழிக்க மனம் வரவில்லை, அவன் என்னை ரொம்ப அழகாயிருக்கே என்று சொன்னதால் தானே நான் இவனை புகைப்படம் எடுக்க அனுமதித்தேன், இன்று அந்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு blackmail செய்கிறானே பாவி இவன் நல்லா இருப்பானா, என்னுடைய பலவீனத்தை பயன்படுத்தி இரவெல்லாம் படிக்க விடாமல் செல்போனில் பேசியே உயிரை வாங்குகிறான், பணம் தண்ணி போல செலவாகிறதே,

மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை கிடைத்து சேர்ந்தாகிவிட்டது, இவன் அங்கேயும் தொடர்ந்து வர ஆரம்பித்துவிட்டான், புதியதாக வேலையில் சேர்ந்த இடத்தில் வேறு ஒருவன் காத்திருந்தான், புதியவர்களை மயக்கும் மன்மதன், இவனுடன் ஒருநாள் இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து பயணம் செய்தால் போதும் பழைய கல்லூரி வாழ்வில் தொல்லை கொடுத்து வந்தவனை துரத்த நல்ல வழி, [ மறுபடியும் பெரியதவறு செய்வதை உணராமலேயே, புதிதாக ஒரு புதைக்குழியை தனக்கு வெட்டிக்கொண்டாள் ] ,

மாலை வேலை முடிந்து வெளியே வரும் சமயம் புதிய மன்மதனிடம் இன்றைக்கு மட்டும் உன்னோடு பின்னால் ஏறி நான் வருகிறேன் என்னை கொஞ்சம் நான் சொல்லும் இடத்தில் இறக்கி விட்டுவிடு என்று சொல்லி, சும்மா போகிறதை விலை கொடுத்து வாங்கி தன் தோளில் போட்டு கொண்டாள், இதை பார்த்த பழையவனின் தொல்லை விட்டது, பழைய சனி விட்டது, புதிய சனியை இவளே போய் பிடித்துக் கொண்டாள்.

எல்லா இடத்திலும் எல்லாவிதமான நபர்கள் இருப்பது சகஜம், நமது பலவீனம் என்ன என்பதை உணர்ந்து அதற்கேற்றார் போல தன்னை விடுவித்துக் கொள்ளவே நமக்கு கடவுள் புத்தி கொடுத்திருக்கிறார். தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா என்று தீக்குள் கையை வைத்தால் விரல் வெந்து போகுமே தவிர நந்தலாலாவை உணர முடியாது என்பதை யாரும் சொல்லி கொடுக்க தேவை இல்லையே..

சில சமயம் நம்மை தேடி வரும் ஆபத்துக்களை நாம் அறியோம், ஆனால் இது போன்று நாமே ஆபத்தை தேடி போய் பிடித்துக் கொள்ளுவது அடிமுட்டாள் தனம்.