Translate

7/02/2009

பெண் கொலைகள்....

சேலம், மதுரை, ஈரோடு இன்னும் தென்னகத்தின் பல ஊர்களில் நடக்கும் பெண் சிசு கொலைகளை கேட்கும் போது மனம் பதறுகிறது, தவறான உறவுகளினால் உற்ப்பத்தியான கரு முதல் கொண்டு திருமணமாகி கருவுற்ற பெண்கள் வரையிலான இந்த பெண் கரு கலைப்பு தமிழகத்தின் மிக அவலமான செய்கைகளின் எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம்.

பெண் குழந்தை பிறந்தால் கணவனும் அவனது பெற்றோரும் தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்ற பயத்தில் பெண்கள் தன் கருவில் உருவாகிவரும் குழந்தை பெண் என்றால் தன் உடல் நலம் பாதித்தாலும் பரவாயில்லை கருவை அழித்து விட வேண்டும் என்ற நடவடிக்கையில் இறங்குவது எத்தனை அவமானமான செய்கை என்பதை அவர்கள் அறியாமல் இருப்பதிலிருந்தே தெரிகிறது இந்த மனிதர்கள் மனிதர்கள் இல்லை மாக்கள் என்பது.

ஆணை பெற்ற பெண்களும் அவர்களது தாய் தகப்பனும் அடையும் பெருமையும் பெண்ணை பெற்ற பெண்ணும் அவர்களது தாய் தகப்பன் அடையும் வேதனையும் பார்க்கும் போது இந்த கேடு கெட்ட சமுதாயம் முதுகெலும்பற்ற மனிதர்களை கொண்டுள்ளது என்பது விளங்குகிறது.

அரசு ' தொட்டில்' என்ற ஒரு புதிய வழியை ஏற்ப்படுத்தி கொடுத்தாலும், இந்த தொட்டிலில் பிறந்த பெண் குழந்தைகளை கொண்டு வந்து போடாமல் கொலை செய்யும் கொலைகாரர்களை யாரால் தண்டிக்க முடியும், அரசின் 'தொட்டில்' என்ற திட்டம் என்பது இப்போது நடைமுறையில் உள்ளதா என்பது தெரியவில்லை ஆனால் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எப்போதுமே நடைமுறையில் இருந்து வருவது தவறுவதில்லையே.

ஆணை விட பெண் எந்த அளவில் குறைச்சல் என்பதை இந்த பாமரர்களால் இன்னும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. இதில் நான் ஆண் குழந்தையை பெற்று விட்டேன் என்ற பெருமை எதற்காக எங்கிருந்து வருகிறது என்பது தான் புரியவில்லை. பெற்ற மகனை வளர்த்து ஆளாக்கிய பின் அவன் தன் போக்கில் போவதை தான் பார்க்க முடிகிறதே தவிர பெற்றெடுக்கும் ஆண் குழந்தையால் என்ன சுகத்தை இவர்கள் அடைகிறார்கள் என்று கேட்டால் 'அவன் தான் எங்களுக்கு கடைசி காலத்தில் கொள்ளி வைப்பான்' என்பார்கள் இந்த பாமரர்கள்.

கொள்ளி வைப்பதற்கு இப்போதெல்லாம் ஒரு ஆண்மகனின் அவசியம் கூட இருப்பதில்லை, மின்சார பொத்தானை அழுத்தினாலே போதும் ஆணை பெற்ற உடல் என்று பெருமைபட்டுக் கொள்ளும் உடம்பாக இருந்தாலும் பெண்ணை பெற்று விட்டான் என்று ஏளனம் பேசும் உடம்பானாலும் ஐந்து நிமிடத்திலேயே சாம்பலாகி விடுகிறதே. இதற்க்கு ஏன் ஒரு ஆண் குழந்தை?

தென்னாட்டில் தான் பெண்களுக்கு அதிக கெளரவம் கொடுக்கிறார்கள் என்று
சிலர் பெருமையுடன் மீசையை முறுக்குவார்கள், பெண் சிசுவை கருவிலேயே அல்லது பிறந்தவுடன் கொன்று குவிக்கும் பெருமை படைத்தது தான் தென் தமிழ்நாட்டின் கலாசாரப் பெருமை என்றால் இவர்களை கொலைகாரர்கள் என்று கூடசொல்லி பெருமை பட்டுக் கொள்ளலாம் போலிருக்கிறது.

பெண் குழந்தைகளை கொல்லுவதற்கு மிக முக்கிய காரணமாக விளங்குவது பணம், வரதட்சினை என்ற பெயரில் ஒரு ஆண் படித்த படிப்பிற்கேர்ப்ப அல்லது அவனது வசதிகளுக்கு ஏற்ப பணம் நகைகள் சீர் நிலம் வீடு முதலிய பொருள்களை கொடுத்தால் தான் ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளுகிறான்,

இது கையாலாகாத்தனத்தை அல்லவா எடுத்து காட்டுகிறது, அப்படியானால் யாரால் பெண் குழந்தைகள் கொல்லப்படுகின்றன என்பது வெளிப்படையாக தெரிகிறதே. இப்படிப்பட்ட பழக்கம் தென் தமிழ் நாட்டில் தான் அதிகம் காணப்படுகிறதே தவிர சென்னையில் பிறந்து வளரும் சென்னையை சொந்த ஊராக கொண்டவர்கள் பெரும்பாலும் இப்படிப்பட்ட தெளிவற்ற சிந்தனைகளை கைகொள்ளுவதில்லை.
அங்கு பெண்குழந்தை என்றாலே வெறுப்பு, இதனால் பெண் குழந்தை கொலைகள் தொடர்கதையாகி வருகிறது. இவற்றிற்கு காரணம் ஆண் ஆதிக்க சமுதாயம் என்பது தெள்ள தெளிவாகிறது.

எனக்கு தெரிந்து தென் தமிழ் நாட்டில் வரதட்சிணை கொடுக்க இயலாத பல ஏழை பெண்கள் சென்னையை சொந்த ஊராக கொண்ட வேற்று ஜாதியினரை பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து கொண்டதை பார்க்க முடிந்தது,

இதில் அவமானப் பட வேண்டியவர்கள் வெட்க்கப் பட வேண்டியவர்கள் யார் என்றால் ' பெண் குழந்தை பிறந்தால் நீ இங்கே வராதே " என்று கட்டளை போடும் ஈன பிறவிகள் தானே தவிர பெண் குழந்தையை சுமக்கும் பெண்கள் அல்லவே.