Translate

7/12/2009

அந்தரங்கம் பாவம் நிறைந்தது - [மேரி]

பெருமை என்றால் என்னவென்று மேரியிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும், எதற்க்கெல்லாம் எப்படியெல்லாம் பெருமைப்படுவது என்பதையும் மேரியிடம்தான் தெரிந்து கொள்ள வேண்டும், தனது ஐம்பதாவது வயதில் கணவனை இழந்தவளுக்கு இழந்த கணவனைப்பற்றிய கவலை இருந்ததில்லை, கணவன் வழியே தனக்கு வந்து சேரவேண்டிய சொத்துக்களைப்பற்றிய கவலையே அதிகம், இதனால் கணவனுக்கு சரியான மருத்துவ வசதிகளை கூட செய்யவில்லை. தனது சுயசரிதத்தைப்பற்றி சொல்வதை கேட்க மேரிக்கு யாரேனும் வேண்டும், ஒருமுறை மேரியின் சுயசரிதத்தைப்பற்றி கேட்டுவிட்டால் அடுத்தடுத்து கேட்க்க அவள் வீட்டிற்க்கு போகவேண்டும் என்று எதிர்பார்ப்பாள், அப்படி போகவில்லையென்றால் சண்டை போடுவாள். இப்படியும் இருப்பார்களா என்று நினைக்கும் பலரில் மேரியும் ஒருத்தி, பஞ்சமாபாதகி என்றால் மிகையாகாது.

கணவனின் மரணத்திற்கு பின் கணவனுக்கிருந்த இரண்டு வீடுகள் வங்கியில் பணம் இறந்தபின் வேலையில் கிடைத்த பணம் நகை என்று ஏகப்பட்ட வரவு இருந்தது . தனக்கிருந்த ஒரே மகனும் மகளும் போதும் வேறு எந்த சொந்தமும் தேவை இல்லை என்று வாழத்துவங்கினாள் மேரி, மேரியின் ஒரே மகன் சார்லஸ் படிப்பில் புலி இல்லை ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து வைத்தால் போதும் என்று படித்தவன், தனது அப்பாவின் மரணத்திற்குப்பின் அப்பாவின் வேலையும் கிடைத்ததில் வேலைத்தேடும் வேலையும் மிஞ்சியது. சார்லஸ் சிறிய பையனாக இருக்கும் போதே அவனுக்கு விஷம் ஊட்டி வளர்ப்பது போல நிறைய போதித்து வளர்த்தாள் மேரி.

வாலிபனாக மாறிய பின் தனது அம்மாவின் போதகத்தை மனதினுள் வைத்து தனது காதலை தன் இனத்தை சேர்ந்த பெண் கிடைக்கும் வரையில் காப்பாற்றினான் சார்லஸ். கிடைத்த பெண்ணுக்கோ சொத்து கிடையாது, ஒரு சாதாரண செவிலியாக பணிபுரிந்து வந்தாள். சார்லசும் அவன் காதலி ஜெனிபரும் திருமணத்திற்கு தயாரானார்கள் ஆனால் அவன் தாய் மேரிக்கு மருமகள் கை நிறைய சம்பாத்தியம் வரதட்சிணையும் வீடு தோட்டம் கொண்டு வருவதோடு அதிகம் படித்தவளாகவும் இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு இதனால் தாய்க்கும் மகனுக்கும் பெரிய தர்க்கங்களுக்கிடையே மகனின் காதலுக்கு மேரி அடிபணிய நேர்ந்தது. ஆனால் மருமகள் ஜெனிபாரை
மேரி சும்மா விடவில்லை , சார்லஸ் இல்லாத சமயங்களில் அவளை எல்லா வகைகளிலும் துன்பத்தை கொடுத்து விரட்டிவந்தாள்.

மேரியின் அரக்கத்தமான சுபாவங்களைப்பற்றி அவளை தெரிந்த எல்லோரும் நன்கு அறிவர், ஜெனிபாருக்கு மேரியிடமிருந்து தப்பிக்கவே முடியாத நிலைமையாகிவிட்டது. ஜெனிபாருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர், ஒரு நாள் ஜெனிபார் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் சமயம் எதிர்பாராவிதமாக விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்தாள், உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள், அறுவை சிகிச்சை மருந்து மாத்திரை என்று பணம் தண்ணியாக செலவானது, இதை மேரியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, ஏற்கனவே தன் மாமியாரைப்பற்றி தான் வேலை செய்யும் ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவரிடம் சொல்ல வேண்டிய சில சந்தர்ப்பங்கள் ஏற்ப்பட்டிருந்தது ஜெனிபாருக்கு, தற்ப்போது விபத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜெனிபாருக்கு செலவு செய்ய மாமியார் மறுப்பதையும் தெரிவிக்கும்படியான நிலைமை ஏற்ப்பட்டது, இந்த சந்தர்ப்பத்தில் தலைமை மருத்துவர் அருவைசிகிச்சைகான கட்டணத்தை குறைத்ததுடன் ஜெனிபாருக்கு அமெரிக்காவில் உள்ள தன்னுடன் படித்த மருத்துவரிடம்
சிபாரிசு செய்து செவிலியாக வேலை வாய்ப்பு பெற்று கொடுத்தார்.

ஜெனிபாரும் உடல் தேறியப்பின் அதிக அளவில் வேலையை செய்ய இயலாமல் போனாலும் முடிந்த அளவு செய்து பணம் சம்பாதிக்கவும் மாமியாரிடமிருந்து நிரந்தரமாக தப்பிக்கவும் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டாள், தனது பெண் குழந்தைகளுடன் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டாள். மேரிக்கு தன் மகன் சார்லசுடன் தனித்து வாழ்வதில் பெரும் இன்பம்,
தன் மகனுடன் வாழும் வாழ்வில் மருமகளோ பேர குழந்தைகளோ இணைந்து வாழ்வதை பொறுக்க முடியாமல் ஜெனிபாரை துரத்த பல முறை திட்டம் போட்டாள் மேரி. சார்லஸ் தன் குடும்பத்தை விட்டு வாழ்வதில் அத்தனை சந்தோசம் இல்லையென்றாலும் வரும்படி கிடைப்பதோடு தனது அம்மா இறந்த பின் தானும் அமேரிக்காவில் தன் மனைவி குழந்தைகளுடன் சுகமாக வாழலாம் என்று தன்னை சமாதானப் படுத்திக்கொண்டான்,வேறு வழியின்றி தன் அம்மா மேரியுடன் வாழ்ந்துவந்தான்.

மேரிக்கு கடவுள் பக்த்திக்கு பஞ்சமில்லை, ஊரைக்கூட்டி வீட்டில் எப்போதும் பூஜையும் பாட்டும் தான். ஆனால் கடவுள் அதையெல்லாம் கேட்ப்பாரா என்பதுதான் தெரியவில்லை.