Translate

6/30/2009

கடவுள் - நான் - அனுபவம்

நான் முதன் முதலில் முதுகலை முதலாம் ஆண்டு வகுப்பிற்கு சென்ற போது எனது ப்ரோபாசர் என்னை கேட்ட கேள்வி, உன்னை ஒரு கிறிஸ்த்தவ மதத்தை சேர்ந்தவள் என்று சொல்லுகிறாயே, இந்த மதத்தை நீ தேர்தெடுத்து பின்பற்றுகிறாயா அல்லது உன்னை கிறிஸ்த்தவள் என்று எப்படி சொல்லுகிறாய் என்றார்.

நான் சொன்னேன் முதலில் எனது பெற்றோர் என்னை கிறிஸ்த்தவள் என்று சொல்லி வளர்த்தனர், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் அந்த மதத்தைப் பற்றிய அறிவை நான் வளர்த்துக் கொண்ட பின் அந்த மதத்தை பின் பற்றுவதையே விரும்புகிறேன், அதனால் நான் கிறிஸ்த்தவள் என்றேன்.

என் தகப்பனை எனது மற்ற உறவுகளை எனது தாய் எனக்கு அறிமுகம் செய்து வைக்கா விட்டால் எனக்கு அவர்கள் யார் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதை போன்றே மதத்தையும் கடவுளையும் கூட என் தாய் தான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார், பின்னர் எனக்கு தெய்வம் பற்றிய உண்மைகள் விளங்க நான் தேடுதல்களில் இறங்குகிறேன், மட்டுமல்ல, பல சமயங்களில் என்னை யாரோ ஒருவர் காத்து வருவதை நான் உணர்ந்திருக்கிறேன், பல இக்கட்டுகளிலிருந்து காக்கப் படுகிறேன் என்பதை எனது விரோதிகள் கூட அறிந்து ஆச்சர்யம் அடைகிறார்கள், அப்படி அவர்கள் ஆச்சரியம் அடைந்ததைப் பற்றி பின் என்னிடமே தெரிவிக்கின்றனர்.

இன்னும் பல அரிய சந்தர்பங்கள் மூலமாக தொடர்ந்து என்னுடன் இருக்கும் அந்த அதிசயத்தை நான் கடவுள் என்றும் நம்புகிறேன், நான் வழிப் பட்டாலும் வழிபடா
விட்டாலும் என்னுடன் எப்போதும் இருந்து கொண்டிருக்கும் அந்த மகாசக்தியை என்னால் பல சமயங்களில் உணர முடிந்ததில் ஆச்சர்யம் இல்லை.

கேட்ப்பவர் வேண்டுமானால் ஆச்சர்ய படலாம், நான் என் பெற்றோருக்கு பிறந்த கதையே ஒரு ஆச்சரியமான நிகழ்வு தான், இதற்காக நான் பெருமிதம் அடையவில்லை, ஏன் என்றால் அது ஒரு நிகழ்வு, நடக்க வேண்டியது நடந்திருக்கு என்று நினைக்கத்
தோன்றுகிறது.

கடவுள் என்னுடன் இருக்கிறார் என்பதால் மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய கஷ்டங்களும் துன்பங்களும் நோய்களும் ஏற்படாமல் நான் ஒரு தெய்வப்பிறவியாக வாழ்கிறேன் என்பது அர்த்தமல்ல, எல்லா மனிதர்களுக்கும் கஷ்டங்களும் துன்பங்களும் உண்டு எல்லாம் வெவ்வேறு விதமானது. அதேபோல என்னுடைய அனுபவங்களும் வேறு விதமானது.

எனக்கு எந்த விதமான அனுபவங்கள் பெற வேண்டும் என்பது இருந்ததோ அதை நான் பெற்றிருக்கிறேன், இதனால் நான் ஒருவிதத்திலும் ஸ்பெஷல் என்று சொல்லமாட்டேன். இதுவும் நடக்கவேண்டியது தான் நடந்து வருகிறது என்பேன்.

சிலருக்கு பைத்தியமாக தோன்றுவது சிலருக்கு சரியானதாக தோன்றுகிறது, இதனால் யார் அதி புத்திசாலி என்பது கேள்வி அல்ல, யாருக்கு எதுதெரிந்திருப்பது அவசியம் என்பது கடவுள் சித்தமோ அது அவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


6/28/2009

அன்புடன் உங்கள்.......

மனிதனாக பிறப்பவர்கள் எல்லோருமே ஒருநாள் நிச்சயம் இறந்தே ஆக வேண்டும் என்பது யாவரும் அறிந்ததே, அதற்கான நாளும் நேரமும் மட்டும் நம்மால் தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பதால் தான் நாம் நிம்மதியுடன் அதைப் பற்றி நினைக்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்,

அப்படி நான் இறந்து போனாலும் எனது இந்த பதிவுகளை என் வாரிசுகள் தொடர்ந்து
எழுதுவார்கள் அல்லது பராமரிப்பார்கள், அவர்களுக்கு தொடர்ந்து எழுத விருப்பம் இல்லை என்றால் விட்டு விடலாம், கட்டாயம் என்பது ஒன்றும் கிடையாது.

ஆனால் இந்த பதிவுகளை அவர்கள் ஒரு போதும் அழிக்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.

20ஆம் நூற்றாண்டின் பாப் பாடகனுக்கு வேதனையுடன் அஞ்சலி...

1958 -- 2009 .......அறை நூற்றாண்டு இசை சகாப்த்தம் -- மைகேல் ஜோசப் ஜாக்சன்

ஏற்கனவே பாப் இசையிலும் நடனத்திலும் புதிய ஈர்ப்பை மக்களின் மனதில் ஏற்ப்படுத்தி மறக்க முடியாத இடத்தை பிடித்து, 42 வயதிலேயே மரணமடைந்த, எல்விஸ் ப்ரஸ்லியின் மரணமும் இன்னும் மனதை விட்டு நீங்காத இடத்தை பிடித்துள்ளது, இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பாப் இசை கலைஞன், மூன் வாக் என்ற புதிய நடனம் புதிய பாணியை தன் நடனத் திறமையாலும் பாட்டு திறமையாலும் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்த பாப் இசைப் புயல் தனது ஐம்பத்து வயதில் மரணத்தை சந்தித்தது வேதனையான செய்தி.

பல குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டு வழக்குகள் போடப்பட்டிருந்தது பின்னர் குற்றங்களுக்கு நீங்கலாகி, தனது உருவ அமைப்பில் மாற்றத்தை ஏற்ப்படுத்திக் கொண்டது போன்ற செய்திகள் இவரது பெயரை மேலும் பிரபலமடைய வைத்தது, இவரது மரணத்திற்கு 7 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளும், தோலின் நிற மாற்றத்திற்கு இவர் மேற்கொண்ட சிகிச்சைகளும் காரணமாக இருக்கலாம். இவர் மாரடைப்பால் காலமாவதற்கு காரணம் அதிக வீரியமுள்ள வலி நிவாரிணிகளை உட்கொண்டார் என்ற தகவல் வெளிவத்துள்ளது, எல்விஸ் ப்ரஸ்லியும் இதேபோன்று போதை மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டு மரணம் அடைய நேரிட்டது மறக்க முடியாதது.

எல்விஸ் ப்ரஸ்லியின் மகளை திருமணம் செய்து கொண்ட இவர் இரண்டு வருடம் கூட ஒருமித்து வாழாமல் பிரிந்தனர். அடுத்து இவர் திருமணம் செய்த பெண்ணிற்கு இரண்டு குழந்தைகளும், கடைசியாக வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையும் இவருக்கு உண்டு.

வரும் மாதம் ஐரோப்பா முழுவதுமாக நடக்கவிருந்த இவரது கடைசி கலை நிகழ்ச்சிகளுக்கு பிறகு இவரது கலை பயணம் முடியும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மரணம் இவரது வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியானது.

இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இவரது குடும்பத்தினர் சொல்லியிருப்பது இவரது ரசிகர்களின் மனதை இன்னும் வேதனைக்குட்படுத்துவதாக உள்ளது.

அன்னாரின் ஆத்துமா சாந்தியடைய இறைவனை வேண்டும் ரசிகை......6/26/2009

மீன்கள் இல்லாத கடல்........

கடல் அல்லது சமுத்திரம் என்ற ஒன்றை பார்க்கும் போது பிரமிப்பு ஏற்ப்படுவது இயற்க்கை தானே? இந்த மாதம் எட்டாம் தேதி கடல் தினம் அனுசரிக்கப்பட்டது. இதை அனுசரிக்கும் விதமாக மக்களுக்கு சமுத்திரத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியை எழுப்புவதற்காக அதிகமாக கடலில் மீன் பிடிதலினால் கடலில் வாழ் உயிரினங்கள் அழிக்கப்படுவதைப் பற்றிய ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படிப்பட்ட கடல்வாழ் உயிரினங்களின் அழிவினால் 2050 ஆம் ஆண்டுக்குள் கடல் உயிரினங்கள் அற்ற மீன்களற்ற நிலைமை ஏற்ப்பட போவதாக கண்டுபிடிக்கப்பட்டு சினிமாவின் மூலமாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

சுமார் ஐம்பத்து மில்லியன் சதுர கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பசிபிக் மகாசமுத்திரத்தில் உள்ள பதினேழு தீவுகளுக்கு bluefin டியுனா என்கிற ஒருவகை கடல்வாழ் மீன் வகையை அழிவிலிருந்து மீட்ப்பதற்காக, மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

மீனற்ற சமுத்திரம் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று, சமுத்திரம் என்பது மனிதர்களின் வாழ்வில் எத்தகைய முக்கிய இடம் பெறுகிறது என்பதனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் " ஒரே சமுத்திரம், ஒரே சீதோஷ்ணநிலை, ஒரே எதிர்காலம் " என்ற நோக்கம் கொண்டதாக இந்த வருடத்திய சமுத்திர நாள் துவக்கப்பட்டது.

The End of the line என்ற ஆங்கிலப் படம் ஒன்றும் வெளியிடப்பட்டது இதில்
சமுத்திரம் என்பது மனிதனுக்கு உணவு தயாரிக்கும் ஒரு தொழிற்ச்சாலை கிடையாது, சமுத்திரமும் அதன் ஆதாரங்களும், கணக்கிலடங்காத அதன் சுற்றுப்புற சூழ்நிலையும் மனிதனுக்கு எந்த அளவுக்கு அவசியம் என்பதை இந்த சினிமாவை தயாரிக்க உதவிய புத்தக எழுத்தாளர் சார்லஸ் க்ளவோர் என்பவரின் சிந்தனைகளும் படமாக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடகாலமாக உலகின் பல இடங்களில் உள்ள சமுத்திரங்களிலும் பரம்பரை மீனவர்களிடமும் பல கடல் மற்றும் மீன், கடல் வாழ் உயிரினங்களை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளையும், சமுத்திர ஆராய்ச்சியாளர்களையும் அவர்களது நீண்ட ஆராய்ச்சிகளின் தொகுப்புகளையும் உள்ளடக்கிய ஒரு
திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு முதன் முதலில் சமுத்திரத்தில் உள்ள மீன்கள் அதிக அளவில் உணவுக்காக
பிடிக்கப்பட்டு மீன் இனமே அழிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 75% வகையான மீன்கள் அழிந்துவிட்டதாக கூறும் சார்லஸ் இதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் வரும் தலை முறையினர் மீன்கள் என்ற உயிரினத்தை கண்களால் பார்க்க கூட முடியாத நிலை ஏற்ப்படும் அபாயம் இருப்பதாக சார்லஸ் க்ளோவர் தனது புத்தகத்தில் கூறியுள்ளார் இதை கொண்டு தான் the End of the line என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

தின்று தீர்த்து விட்டோம் சமுத்திர உயிரினங்களை..........6/24/2009

யாரை நம்பி....

சாலையோரத்தில் அமர்ந்து பிச்சையெடுக்கும் பிச்சைக்காரன் சாலையில்அவனைத் தாண்டி இப்படியும் அப்படியும் அவனுக்கு காசு போடாமல் நடந்து போய் கொண்டிருக்கும் ஜனங்களைப் பார்த்து இவர்களும் பிச்சைகாரர்கள் தான் போலிருக்கிறது அதனால் தான் நமக்கு காசு கொடுக்க முடியவில்லை என்று நினைத்துக் கொள்வானாம்.

புதிய பதிவர்கள் எழுதும் பதிவுகளுக்கு யாருமே பின்னூட்டம் எழுதவில்லை என்றால் பதிவுகள் எழுதுவதை விட்டு துரத்தி விடலாம் அல்லது வெறுத்துப் போய் தானாகவே ஓடிவிடுவார்கள் என்று சில பதிவர் திட்டம் போடுவது மேல் சொன்ன பிச்சைக்காரனை நினைவுப் படுத்துகிறது.

எங்களுக்கு யாராவது பின்னூட்டம் என்ற பெயரில் ஜால்ரா போட்டுக்
கொண்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கிடையாது, இவர்களுக்கு இவர்களது எழுத்துக்கள் ஒரு அர்த்தமும் இல்லாமல் இருந்தால் கூட சூப்பர் என்று யாராவது பின்னூட்டம் போட்டுக் கொண்டிருந்தால் தான் மனசு நிம்மதி, அது போலவே மற்றவர்களும் இருப்பார்கள் என்று நினைத்து விடாதீர்கள், எல்லோரும் உங்களைப் போலவே இருக்க மாட்டார்கள்......

புதிதாக பதிவு எழுத துவங்கும்
போது, எழுதப் போகும் பதிவுகளை படிப்பவர்கள் பின்னூட்டம் எழுதி நம்மை திக்கு முக்காடச் செய்ய போகிறார்கள் என்று நம்பித்தானா பதிவு எழுதத் துவங்கினோம்??? இல்லையே !!!!!

நீங்கள் படியுங்கள் படிக்காமல் விட்டு விடுங்கள், முடிந்தால் மற்ற பதிவர்களை ஒன்று சேர்த்து இந்த இந்த பதிவர்களின் பதிவுகளை படிக்காதீர்கள், அப்படியே படித்தாலும் பின்னூட்டம் எழுதி விடாதீர்கள் என்று வேண்டுமானாலும் தண்டோரா போடுங்கள், உங்களை நம்பியா நாங்கள் இங்கே பதிவுகளை எழுதிக்
கொண்டிருக்கின்றோம்??????

இந்த பனங்காட்டு நரி எந்த சல சலப்புக்கும் அஞ்ஜாதுங்கோ.......

6/23/2009

பயிரை மேயும் வேலி....

தலைநகர் டெல்லியில் நடந்து வரும் தொடர் கற்பழிப்பு சம்பவங்கள் திகைக்க வைக்கின்றது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெரிந்த விஷயமே, ஆனால் பாது காவலுக்கு வேலை பார்ப்பவர்களே பெண்களை கற்பழித்து வரும் தொடர் சம்பவங்கள் போதிய கவனம் எடுக்கப் படாததையே காட்டுவதாகஉள்ளது.

ற்ப்பழிப்பவர்களுக்கு சட்டம் கொடுக்கும் தண்டனைகள் கடுமையாக்கப்படாதது தான் மேலும் பல குற்றவாளிகளை உருவாக்குகிறது. வளைகுடா நாடுகளில் பெண்களை அவதூறு செய்வது நடக்காத விஷயம், அங்கே இருக்கும் தண்டனைகளும் மிக கடுமையானவை.

குற்றங்களை செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் மிக கடுமையானதாக இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்காதபடி காக்க முடியும்.


6/19/2009

பால் கவர்கள்....ஒரு எச்சரிக்கை

பல வீடுகளில் பழைய பொருட்க்களை விற்கும் பழக்கம் இருந்து வருகிறது, அயல் நாடுகளில் எந்த பொருளானாலும் அவற்றை குப்பையில் போடுவதும் குப்பையை எடுத்துச் செல்பவர்கள் அவற்றை வகைப்படுத்தி தனித்தனியே குப்பைகளில் கொண்டு போய் சேர்த்து விடுவர்.

அங்கே பழைய பொருள்கள் பெரும்பாலும் திரும்பவும் பயன்படுத்துவது கிடையாது. இதற்க்கு முக்கிய காரணம், ஒரு பொருள் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து குறிப்பிட்ட நாள்வரை தான் உபயோகப் படுத்தப் பட வேண்டும் என்பது சுகாதாரத்திற்காக விதிக்கப் பட்டிருக்கும் விதி.

இத்தகைய விதிகளை மீறி அந்த பொருளை பயன் படுத்துவோம் என்றால் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என்பதற்காக சொல்லப்பட்டுள்ளது. நமது நாட்டில் உதாரணத்திற்கு பால் இப்போதெல்லாம் பிளாஸ்டிக் உரைகளில் கிடைக்கிறது, இதிலிருக்கும் பால் எப்படி குறிப்பிட்ட நாளுக்குள் பயன் படுத்தப்படவில்லை என்றால் கெட்டுப் போகிறதோ அதே போல அந்த பாலை கொண்டிருக்கும் பிளாஸ்டிக் பையும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுத்துவதற்காக தயாரிக்கப் பட்டது என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை.

பல படித்தவர்கள் வீடுகளில் கூட பாலை உபயோகப் படுத்திவிட்ட பின்னர் அந்த பிளாஸ்டிக் உரையை சேர்த்து வைத்து விற்ப்பனை செய்கின்றனர், அப்படி வாங்கி செல்லும் பிளாஸ்டிக் உரைகளை என்ன செய்கிறார்கள் என்பது பற்றி யாரும் யோசிப்பது இல்லை. சமூக விரோதிகள் அந்த பிளாஸ்டிக் உரைகளை அரைகுறையாக கழுவி அவர்கள் தயாரிக்கும் பாலை நிரப்பி மறுபடியும் விற்ப்பனைக்கு கொண்டு வரப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

பழைய செய்தித்தாள்களை விற்ப்பனை செய்யும்போது அது மனிதனின் சுகாதாரத்திற்கு எந்த விதத்திலும் கேடு விளைவிப்பதில்லை. மருந்து குப்பிகள் போன்ற மனிதனால் உட்கொள்ளப்படும் எந்த பொருளும் திரும்பவும் போலிகளை விற்ப்பனைக்கு கொண்டுவர நாமே உறுதுணையாகி வருகிறோம் என்பதை யாருமே நினைவு கூறுவது கிடையாது.

எந்த பொருளை பயன் படுத்தினாலும் குப்பையில் போடும் போது அதனை நன்றாக சிதைத்தப் பின்னரே போடவேண்டும், இல்லையென்றால் அவை மறுபடியும் போலிகளை உருவாக்க மிகப் பெரிய உதவியாக இருந்துவிடும்.

போலிகளை கண்டு பிடிப்பது எளிதல்ல, இதனால் இத்தகைய பயன்படுத்தப் பட்ட பாடில்கலையோ, பிளாஸ்டிக் உரைகளையோ, தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களோ வேறெந்த பொருளானாலும் உபயோகபடுத்தியப் பின்னர் அதனை அப்படியே குப்பையில் எறிவதை நிறுத்தி
விடுங்கள், அப்படி செய்வதால் நாம் போலிகளுக்கு இடம் தருவதை ஓரளவு குறைக்க முடியும்.

6/17/2009

புதிய கண்டுபிடிப்பு.....

அலெக்சாண்டர் பர்கேன்சே என்பவரால் 1862 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் கண்டு பிடித்தவரின் பெயராலேயே பர்கேன்சே என்று அழைக்கப்பட்டது. செல்லுலோஸ் என்ற வேதியல் பொருளிலிருந்து எடுக்கப்பட்ட ஆர்கானிக் பொருள் தான் பிளாஸ்டிக்.

முதன் முதலில் 1868 ஆம் ஆண்டு யானையின் தந்தத்திலான பில்லியர்ட் பந்துகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் பில்லியர்ட் பந்துகளை உருவாக்க இயற்க்கை வேதியல் பொருட்களின் மூலம் உருவாக்கிய பிளாஸ்டிக் பந்துகள் தான் முதல் பிளாஸ்டிக் பொருள், ஆனால் இதனை செல்லுலாய்டு என்று தான் அழைத்தனர். அடுத்ததாக ஸ்டில்
போடோக்ராப் பிலிம், இதை பிளாஸ்டிக் என்று கூறாமல் செல்லுலோஸ் என்ற வேதியல் பொருளில் இருந்து எடுக்கப் பட்டதால் செல்லுலாய்டு பிலிம் என்று சொல்லப்பட்டது, 1900 ஆம் வருடம் ஜான் வெஸ்லி என்பவர் சினிமா தயாரிக்கும் பிலிம் சுருள்களை தயாரித்தார்.

1897 ஆம் ஆண்டு முதன் முதலில் செல்லுலோஸ் நைட்டிரைட்டை முன்னேறிய டெக்னாலஜியின் உதவி கொண்டு முதல் முதலில் தயாரிக்கப்பட்டது கரும்பலகைகள் இதனை பிளாஸ்டிக் என்று சொல்லப்பட்டது. 1978 ஆம் ஆண்டுமுதல் பாலிதீன் வெகுவாக மார்கெட்டில் நிறையத்
தொடங்கியது.

பாலிதீனின் உபயோகமும் கூடிக்கொண்டே போனது, ஆனால் ஒரு கட்டத்தில் பாலிதீனை குப்பைகளில் கொட்டியபோது அது மக்காமல் இருந்ததின் மூலம் பாலிதீனின் உபயோகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை கொண்டு வரப்பட்டு பின்னர் பாலிதீன் தயாரிப்பாளர்களால் நிறுத்தப்பட்டு விட்டது ( இந்தியாவில் ).

பாலிதீனை எப்படி அழிப்பது என்பது ஒரு பெரிய சவாலாக மாறியது, தீ வைத்தாலும் தீயில் கருகாமல் இருக்கும் பிளாஸ்டிக் ஒழிக்க முடியாதா என்ற போராட்டம் இருத்து வரும் இந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவன் இதற்கான தீர்வு கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளான்.

வேதியல் பொருட்க்களின் மூலம் பாலிதீனையோ பிளாஸ்டிக்கையோ அழித்தால் அதில் வேறு ஒரு வேதியல் பொருள் உருவாகும் அது
மட்டுமில்லாது அதனால் கார்பன் வெளியேற்றப்படும் போது சுற்றுப் புறச் சூழலில் கலந்து சுகாதார கேட்டை விளைவிக்கும் என்பதால் அந்த முயற்சி ஏற்கனவே கைவிடப்பட்டு விட்டது.

இந்த புதிய மாணவனின் கண்டு பிடிப்பு ஒரு நுண்கிருமி என்பதால் இதனைக் கொண்டு பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் என்ற அரக்கனை அழிக்க வழி பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அழிந்து வரும் நீலத் திமிங்கலம்

நீலத் திமிங்கலம் பாலூட்டி வகையை சேர்ந்த உலகிலேயே மிகப் பெரிய உயிரினம், இதன் எடை 150 டன், இதன் நீளம் 100 அடி. இது ஒரு பெரிய போயிங் விமானத்தின் அளவில் காணப்படுகிறது. இதன் இருதயம் ஒரு காரின் அளவு. இதன் நாக்கில் சுமார் 50 பேர் உட்காரும் அளவு கொண்டது.

நீலத் திமிங்கலங்கள் சுவாசிப்பதற்கு அதன் தலையின் மீது இரண்டு பெரிய துவாரங்கள் காணப்படுகின்றன, சில திமிங்கலங்களுக்கு ஒரு துவாரம் இருப்பதும் உண்டு. மனிதனை போல தானாக சுவாசிப்பது கிடையாது, இவை தனக்கு தேவையான போது மட்டும் சுவாசிக்கின்றன. இதற்க்கு காரணம் திமிங்கலங்கள் சுவாசிப்பதற்காக நீரின் மேல் மட்டத்திற்கு வருகின்றன. சில நிமிடங்கள் நீரின் மேல்மட்டத்திற்கு வந்து காற்றையும் நீரையும் வெளியேற்றி விட்டு தூய்மையான காற்றை உள்ளிழுத்து கொண்டு மறுபடியும் நீரினுள் மூழ்கி விடுகின்றன.

நீலத் திமிங்கலங்களை
மீன் என்று சொல்வது கிடையாது இது பாலூட்டி வகையை சேர்ந்தது என்ற காரணம் மட்டுமில்லை, இவற்றிக்கு மீன்களைப் போல சுவாசிப்பதற்கு செதில்கள் கிடையாது மனிதர்களைப் போல நுரையீரல்கள் உள்ளன. இதன் குட்டிகளுக்கு இவை பாலூட்டுகின்றன. இதன் பால் மீன்எண்ணெயை போன்ற சுவை கொண்டது.

மங்கனிச ஆக்சைடு நிரம்பியுள்ள இதன் பாலை இதன் குட்டிகள் ஒரு நாளைக்கு 50 கேலன் வரை குடிக்கின்றன. ஒரு நாளைக்கு 10 பவுண்ட் வளர்ச்சியடையும்
இதன் குட்டிகள் பின்னர் ஒரு நாளைக்கு 200 பவுண்ட் வரை வளர்ச்சியடைகின்றன. சுமார் ஆறு மாதங்களுக்குப் பின்னர் இதன் குட்டிகள் க்ரில் ( krill ) என்று சொல்லக் கூடிய இறால் வடிவத்தில் உள்ள கடல் வாழ் உயிரினத்தை சாப்பிட தொடங்குகின்றன. நல்ல வளர்ச்சியடைந்த பின் ஒரு நாளைக்கு 4 லிருந்து 6 டன் க்ரில்களை சாப்பிடுகின்றது.

இவ்வளவு அதிகமான க்ரில்களை விழுங்குவதற்காக 50 டன் நீரையும் சேர்த்து
விழுங்கி பின்னர் அதன் தாடையிலிருக்கும் சீப்பை போன்ற எலும்புகளின் வழியே நீரை வெளியேற்றி க்ரில்களை சாப்பிடுகின்றன.

திமிங்கலங்களுக்கு இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றார் போல தன்னை மாற்றி கொள்ளும் தன்மை கொண்டுள்ளதால் சமுத்திரத்தில் இயல்பாக வாழ முடிகிறது. திமிங்கலங்கள் ஆழ்ந்த உறக்கம் கொள்வது கிடையாது, அப்படி உறங்கினால்
இவை வாழ்வது அரிதாகி விடும் என்பதால் நீரின் மேல் மட்டத்தில் சிறிது இளைபாற்றிக் கொள்ளும்.

இதன் தோலின் மீதுள்ள ஒருவகை அடுக்கிய திசுக்களைப் போன்ற அமைப்பு கடுமையான
குளிர்ச்சியிலிருந்து மிதமான சூடான வெப்ப நிலையை இதன் உடல் பராமரிக்க உதவுகிறது. போலார் கடல் பகுதியில் கடும் குளிரிலிருந்து தன்னையும் தனது குட்டிகளையும் பாதுகாத்து கொள்வதற்காக திமிங்கலங்கள் மிதமான வெட்ப்பம் நிலவும் கடல் பகுதியை நோக்கி பயணிப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இவை எப்படி பயணிக்கின்றன என்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் காரணம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது, திமிங்கலங்கள் ஒரு வகை சப்தம் எழுப்புகின்றன, அப்படி சப்தம் எழுப்பும் போது அதன் எதிரொலி
யைக் ( echo ) கொண்டு தரை மட்டத்தை உணருகின்றன என்று கூறுகிறார்கள். ஆனாலும் பல அதிசயங்களை பற்றிய கண்டு பிடிப்புகள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்த சப்தங்களைக் கொண்டு தனது ஜோடி திமிங்கலத்திடமும் தனது குட்டிகளுடனும் தொடர்பு கொள்வதாக கூறப்படுகிறது.

எப்படி இந்த பிருமாண்டமான உயிரினத்தை அழிவிலிருந்து மீட்டு எடுக்கப் போகிறார்கள் என்பதை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை.


6/16/2009

அழிந்து வரும் குயில்கள்

மழை மேகம் திரண்டு வரும் காலங்களில் குயிலின் குரலை கேட்க்க முடிந்த காலங்கள் இப்போது மாறி வருவது இயற்கையை மனிதன் மாற்றியதற்கு சான்று என்றே கூறலாம்.

குயில்கள் கருமை நிறத்தில் சிறிய உடலமைப்பை கொண்டதாக இருந்தாலும் அதன் குரல் இனிமை பிரசித்தம். மழைக்காலம் என்பது எப்போதும் போல வரவேண்டிய காலத்தில் வர தவறுவதால் தான் குயில்கள் கூவ மறந்துவிட்டனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால் குயில்களின் இயல்பை பற்றி பார்க்கும் போது குயில்கள் முட்டைமட்டும் தான் இடும் குஞ்சு பொரிக்கத் தெரியாத பறவை, தனக்கென ஒரு கூடு
கட்டிக் கொள்ள தெரியாத பறவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் குயில்கள் காக்கையின் கூண்டில் சென்று முட்டைகள் இட்டு வைத்து
விட்டு போய் விடும், காகம் அந்த முட்டைகள் தன்னுடைய முட்டைகள் என நினைத்து அதன் மீது அமர்ந்து அடைகாத்தால் மட்டுமே குயில் குஞ்சுகள் வெளிவர வாய்ப்பு உண்டு, இல்லையென்றால் அந்த முட்டைகள் பொறிக்கப் படாமல் வீணாகி விடும்.

காகத்தின் முட்டைகள் ஏற்கனவே இருக்கும்
கூண்டில் குயில்கள் முட்டைகளை இட்டால் மாத்திரமே குயிலின் குஞ்சுகள் நிச்சயமாக பிறக்கும் வாய்ப்பை பெறுகின்றன. இதனால் குயிலின் இன பெருக்கம் அதிக அளவில் குறைந்துவிட்டது என்பது தான் உண்மை.

இப்போது குயில்களின் குரலை கேட்பதே மிக குறைவாகத்தான் உள்ளது. இதற்க்கு காரணம் அடர்ந்த மரங்கள் வெட்டப்பட்டு விட்டதும் அடர்ந்த மரங்கள் இருந்த இடங்களில் பெரிய கட்டிடங்கள் பெருகி வருவதும் மிக முக்கிய காரணம்.

பறவைகளை அழிவிலிருந்து மீட்க்க சில அமைப்புகள் உருவாகியுள்ளது மனதிற்கு ஆறுதல் தரும் செய்தி , அழிவிலிருந்து பல பறவை இனங்களை மீட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் நிம்மதி தருவதாக உள்ளது. பல பறவை இனங்கள் இல்லாமல் போய்
விட்டதும் உண்டு. இப்போது அழிவிலிருக்கும் பறவைகளை காப்பாற்றும் சுயநிதி தனியார் ஸ்தாபனங்கள் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்புகள் குயிலையும் இன பெருக்கம் செய்து அழிவிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.6/15/2009

உலகம் வெப்பமயமாதல் - குளோபல் வாமிங்

[ தயவு செய்து பதிவுகளை திருடி பத்திரிகைகளுக்கு ' ஆர்டிகிள் ' எழுதாதீர்கள் அப்படி செய்வதைவிட கேவலம் வேறு இல்லை. உங்கள் புத்தியையும் நேரத்தையும் செலவு செய்து திறமையை வளர்த்துக் கொண்டு பின்னர் 'ஆர்டிகிள் ' எழுத முயற்சி செய்யுங்கள், அதுதான் முன்னேறுவதற்கு வழி ]

சூரியனிலிருந்து வெளியேறும் வெப்பம் ஆகயமண்டலத்தை கடந்து பூமிக்கு வந்தடைகிறது, இப்படி சூரியனிலிருந்து வெளியேறும் வெப்பம் பூமியின் தட்ப்பவெட்ப்ப சீதோஷ்ண நிலையை சரிசமமாக வைக்க உதவுகிறது, இந்த வெப்பம் வெளி ஏற்றப்படவில்லை என்றால் பூமி முழுவதும் கடும் குளிரும் பனி மலைகளும் தான் இருக்கும் இப்போது வாழும் பல உயிரினங்களும் மனிதனும் தாவரங்களும் வாழ இயலாத சீதோஷ்ண நிலை இருக்கும்.

சூரியனிலிருந்து வெளியேறும் வெப்பம் பூமியை நோக்கி வரும் வழியில் ஆகாயமண்டலத்தில் காணப்படும் கார்பன் துகள்களின் வழியே ஊடுருவுவி வெளியேறுவதால் அதன் உஷ்ண
நிலையின் அளவு அதிகரிக்கிறது, இதனால் 1975 ஆம் ஆண்டிற்கு பிறகு சீதோஷ்ண நிலையில் பெருமளவு மாற்றம் ஏறப்படிருப்பதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

இப்படி சீதோஷ்ண
நிலையில் வெப்பம் அதிகரித்து வருவதால் உலக சீதோஷ்ணநிலையில் பெருமளவு மாற்றங்கள் ஏற்ப்படுகிறது பருவகாலத்தில் பெரிய மாற்றங்கள் உருவாவதால், மழைக் காலம் கோடைக்காலம் என்று ஏற்கனவே இருந்த நிலை மாறுவதால் பயிர்கள் விளைச்சல் பெருமளவு பாதிப்பை உருவாக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பறவைகளும் விலங்குகளும் வசிப்பதற்கும் தாவரங்கள் வளரவும் ஏற்ற சீதோஷ்ணம் மாறுவதால், பறவைகள் விலங்குகள் தாவரங்கள் அழியக் கூடிய அபாயம் ஏற்ப்படுகிறது.

இந்நிலை நீடித்தால் வரும் 2100 ஆண்டுக்குள் இன்றைய உலகில் வாழ்ந்து வரும் பல உயிரினங்களும் தாவரங்களும் அழிந்து
விடுவதோடு நிலச்சரிவுகள் பூமியின் நீர்மட்டம் வெகுவாக குறைதல், எரிமலைகளின் சீற்றம் புயல் மற்றும் சூராவளிகளினால் ஏற்ப்படும் அழிவுகள் என்று ஒட்டு மொத்த வான் நிலையே சீர்கெடும் என்றும் கூறுகின்றனர்.

சில ஆராய்ச்சிகளுக்குப் பின் ஆகாய மண்டலத்தில் கார்பனின் துகள்கள் அதிகரிந்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளனர். இதனால் காற்றில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரித்திருப்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதற்க்கு
காரணமான இயற்க்கை எரிபொருட்களின் பயன்பாடு அதிகரித்திருப்பது மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

பெருகி வரும் மக்கள் தொகையால் அழிக்கப் படும் காடுகள் இதற்க்கு அடுத்த மிக முக்கிய
காரணமாக சொல்லப்படுகிறது. காடுகளினால் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடின் அளவை அதிக அளவில் குறைக்க முடியும் என்பதை ஏற்கனவே அறிவியல் நிருபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் வெப்ப மயமாதலை கட்டுப்படுத்தும் முறைகள் : அதிக அளவில் காடுகளை பராமரிக்க வேண்டும் , எரிபொருட்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் முக்கியமாக பெரிய ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகைமண்டலத்தை மாசு கட்டுப் பாட்டு வாரியம் தடை செய்ய வேண்டும், உலகிலேயே மிக அதிக அளவில் கார்பனை கழிவாக வெளியேற்றும் நாடுகளான சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகள் ஒருமித்து
கோரிக்கை அனுப்ப வேண்டும்.

மிக முக்கியமாக பாதிப்பிற்கு உள்ளாகும் இந்தியா போன்ற அதிக உஷ்ண சீதோஷ்ண நிலையை கொண்ட நாடுகள் கவனம் கொள்ளவதுடன் சம்பந்தப்பட்ட நாடுகளிடம் வலியுறுத்த வேண்டும் . காடுகளை அழிவிலிருந்து மீட்க்க நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும், புதிதாக மரங்களை நட அரசு உத்தரவு பிறப்பித்து செயல் படுத்த பட வேண்டும். பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதை சொல்லி தெரிந்து கொள்ள அவசியமில்லை.

6/14/2009

தண்ணீர் தரு.......[ என்னை ] வியக்க வைக்கும் இயற்க்கை.

ஆப்ரிக்கா ஆஸ்த்ரேலியா இநதியா சுடான் இலங்கை ஜிம்பாபே போன்றநாடுகளின் அடர்ந்த காடுகளில் வளரும் இந்த வகை மரங்களை ஆங்கிலத்தில் baobab என்ற பெயர் சொல்லுகிறார்கள்,

இந்த அறிய வகை மரத்தின் முக்கிய சிறப்பு சுமார் 4.5 ஆயிரம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி தன்னுள்ளே சேமித்து வைத்து, வறண்ட காலங்களில் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் தண்ணீர் விநியோகிக்கும் தண்ணீர் தடாகமாக திகழும் வினோத குணமுடையது.

சுடான் நாட்டில் சுமார் 30,000 மரங்களிலிருந்து தண்ணீரை எடுத்து பல நூற்றாண்டுகள்
குடி நீராகவும் மற்றும் எல்லாவித தேவைகளுக்கும் உபயோகப்படுத்தி வந்துள்ளனர் என்பது வியக்கத்தக்க செய்தி. இந்த மரங்களின் மூலம் கிடைக்கும் தண்ணீரை நம்பி ஆப்பிரிக்காவின் பல பகுதி மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இம்மரத்தை 'உயிருள்ள அணை ' என்று சொல்வதும் உண்டு.


காட்டில் வாழும் யானைகளும் நீர் நிலைகளில் தண்ணீர் வற்றிய பின் இம்மரத்தின் தன்மை அறிந்து இம்மரத்தின் மேல் துளையிட்டு நீரை உறிஞ்சி குடித்து உயிர் வாழும் என்றும் கூறப்படுகிறது.


இம்மரங்களின் பூக்கள் இலைகள் காய்கள் பழங்கள் கொட்டைகள் என்று எல்லா பாகங்களுமே மனிதர்களுக்கு சாப்பிடவும் பயன்படுவது மேலும் இதன் சிறப்பு.

இந்த மரத்தின் மேல் பட்டைகளிலிருந்து கயிறுகள் கார்க் என்று சொல்லப்படும் மூடிகள் பாய்மரங்கள் முதலானவை செய்ய பயன் படுகிறது,

இந்த மரம் தலை கீழாய் வளர்வது போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது. இதற்க்கு காரணம் இதன் வேர்கள் மரத்தின் மேல் பகுதியில் காணப்படுவது மேலும் வியப்பூட்டுவதாய் அமைந்துள்ளது.

இதன் ஆயுட் காலம் பல ஆயிரம் வருடங்கள், இதன் வளர்ச்சி மிகவும் குறைவு என்பதால் ஐந்து மீட்டர் வளர ஓராயிரம் ஆண்டு காலம் ஆகிறது. மரத்திலிருந்து சுமார் 45 மீட்டர் வரை இதன் வேர்கள் மரத்தின் மேல் புறத்தில் வானை நோக்கி வளருகின்றன.

மரத்தின் கீழ் புறத்தில் வாசல்களை போன்ற வடிவத்தில் வழிகள் உருவாகி மரத்தின் உட்புறம் குகை போன்ற வடிவத்திலும் காணப்படுகிறது இதனால் ஒரு அழகிய மர வீடு போன்ற உருவ அமைப்பை இயற்கையாகவே இம்மரங்கள் ஏற்ப்படுத்துவதால் இதில் காட்டு விலங்குகள் மனிதர்கள் வீட்டில் தங்குவதைப் போல தங்கி வாழ முடிகிறது.

இதன் தோல் பகுதி கார்க் போன்ற தன்மையுடையதாக இருப்பதால் மழை தீ என்று பாதிப்புக்கள் அதிகம் ஏற்ப்பட வாய்ப்புகள் குறைவு, ஆனால் இடி மின்னல் தாக்கி சில மரங்கள் கருகி விடுவதும் உண்டு.

அழிந்து வரும் காடுகளில் இது போன்ற அறிய வகை தாவரமும் ஒன்று என்பது வருத்தத்தை அளிப்பதாக உள்ளது, இவ்வகை மரங்களை ஒரு காலத்தில் மதுகுப்பிகளுக்கு கார்க் செய்வதற்காகவும் காகிதம் செய்வதற்காகவும் வெட்டி அழிக்கப்பட்டு இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மனிதனாலும் உலகம் வெப்ப மயமாவதாலும் இன்னும் பல்வேறு காரணங்களினாலும் காடுகள் அழிந்து வருவதால் இது போன்ற அறிய வகை தாவரங்களும் அழிந்து வருவது வேதனைக்குரிய செய்தி, இதனை கட்டுப்படுத்த தவறினால் அண்ட சராசராசரங்களிலேயே பூமியில் தான் உயிரினங்களும் தாவரங்களும் தண்ணீரும் உள்ளது என்பது போய் இங்கும் வறண்டவெட்டாந்தரையும், பாலைவனமும் மலைகளும் வெப்ப மயமான சூழலும்உருவாகும் என்பது உறுதி.

6/12/2009

இந்தியா ஒரு வல்லரசு...

எடுத்ததுக்கெல்லாம் அரசாங்கத்தை உதவிக்கு எதிர் பார்த்திருந்தால் நாடும் உருப்படாது, வறுமையை எதிர்த்து போராடவும் முடியாது, வறுமைக்கு தீர்வும் காண முடியாது.

அரசாங்கப் பள்ளியோ தனியார் பள்ளியோ எதுவாக இருந்தாலும் கல்வியை இலவசமாக கொடுப்பது கடமை என்று நினைப்பது இல்லை, சுகாதரமோ கல்வியோ எதுவாக இருந்தாலும் லாபம் சம்பாதிக்கும் ஸ்தாபனமாக நடத்துவது பெருகி வருகிறது, இந்தியா போன்ற நாடுகள் இது போன்ற லாப நோக்குடைய ஸ்தாபனங்களை முற்றிலும் அழிக்க வேண்டும், தரமான கல்வியும் சமமான பாட திட்ட முறையும் கட்டாயப் படுத்த வேண்டும்,

சுகாதார நிலையங்களிலும் கல்வி ஸ்தாபனங்களிலும் லாப நோக்குடைய ஸ்தாபனங்களை முற்றிலும் தடை செய்யவேண்டும், அடுத்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாற்ற முடியாத சட்டங்களை கொண்டு வரவேண்டும், இப்படி பட்ட மாற்றங்கள் இந்தியாவைப் போல வறுமை கோட்டுக்கு கீழ் அதிகம் மக்கள் வாழும் நாட்டிற்கு மிக முக்கியம்.

படித்து முன்னேறியவர்கள் தான் மட்டும் முன்னேறி
விட்டால் போதும் என்று வாழ தொடங்காமல் தன்னை போல தனக்கு பின் உள்ள படிக்க வசதி வாய்ப்புகள் குறைவாய் இருப்போரை இலவச கல்வி போதிக்க அல்லது தன்னால் இயன்ற உதவிகளை செய்து உதவிகரம் கொடுத்து உதவ முன் வர வேண்டும்.

மாற்றங்கள் வந்தால் மட்டுமே வருங்கால இந்தியா செழிப்பை காண முடியும், எல்லாவற்றிற்கும் அரசை எதிர் பார்த்து காலம் கடத்துவது வீண்.
நம் நாட்டில் வறுமையிலும் நோயிலும் போராடி கொண்டிருக்கும் ஒரு பெரிய சதவிகித மக்களை மறந்து களிப்புருவதில் எந்த வித பெருமையும் இல்லை. இருபத்துரெண்டாம் நூற்றாண்டில் வாழுகிறோம் , அறிவியலில் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்து விட்டோம் என்று என்று வரப் போகும் சந்ததியினர் பெருமை பேசுவது எத்தனை முட்டாள்தனம் யோசியுங்கள்..

சாதிக்கும் மதத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதர்களுக்கு கொடுக்க ஏன் விட்டு விடுகிறோம்? கட்சிகள் தோற்ற ஜெயித்த கணக்கு வழக்குகளைப் பற்றி கவலை படுகிறதே தவிர, ஒரு வேளை சோற்றுக்கும் படிப்புக்கும் வழி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஏழைகளை கனவிலும் நினைக்க நேரம் இருப்பதில்லை. ஏழைகள் ஏழைகளாகவே பிறந்து இறக்க வேண்டும் பணம் படைத்தவர்கள் மேலும் பணத்தை பெருக்கிக் கொண்டே வாழ வேண்டும் என்ற தலையெழுத்தை மற்ற வேண்டும்.

நடிகர்களை தெய்வமாக நினைப்பது அவரவர் சொந்த விருப்பமாக இருக்கலாம், சாதியையும் மதத்தையும் முக்கியம் என்று சினிமா எடுத்து காண்பிக்கும் ஒரு நடிகன் உண்மையான கலைஞ்சனாக இருக்க முடியாது, கருப்பு சட்டை அணிந்தவரெல்லாம் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் என்பதோ , வெள்ளை சட்டை அணிந்தவரெல்லாம் பெரியாரை புறக்கணிப்பவர் என்பதோ கிடையாது. கருப்பு சட்டை அணிந்து பெரியாருக்கு எதிரான கொள்கை உடையவர்கள் இப்போதெல்லாம் அதிகம் காணபடுகிறார்கள், கேட்டால் ' கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலருன்னு' பதில் சொல்லும், கரும்நாகங்கள், பெரியார் ஸ்டைலில் சொன்னால் கருப்பு சட்டை போட்ட நல்ல பாம்புகள்.

கலையையும் பொழுது போக்கும் சாதனத்தையும் சாதி வெறி மத வெறியை தூண்டும் விதத்தில் படமெடுப்பவர், மனித நேயமற்றவர். அப்படி பட்ட கலைஞ்சனை மக்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும், அப்படி பட்டவரை புறக்கணிக்க வேண்டும், சாதி மதத்தின் பால் தன்னை பாழடித்து கொள்வது மடமை என்பதை புரிந்து கொள்ளுதல் தான் சமுதாயத்தில் சீர்திருத்தம் ஏற்ப்பட வழி வகுக்கும்.

நல்ல பாம்பு கூட பார்க்க அழகாகத்தான் இருக்கிறது, பார்க்க அழகாய் இருப்பதெல்லாம் நல்லதா என்று சிந்தித்து செயல் படுவது தான் சிறந்த போக்கு.

இத்தனை காலம் சென்ற பின்னும் நமது நாட்டில் பிராமண பெண்ணை பிராமணர் அல்லாதவர் திருமணம் செய்து கொண்டால் ஏதோ வானிலிருந்து வந்த தேவதை தன் வீட்டிற்க்கு வானிலிருந்து இறங்கி வந்ததை போன்ற பெருமிதம் அடைகின்றனர், என்ன இருந்தாலும் ' ஐயங்காரு வீட்டு பெண்ணாச்சே ' என்று புகழாரம் வேறு சூட்டுகிறார்கள்.

இதை பார்க்கும் போது, இது போன்றவர்கள் இன்னும் இருப்பதால் தான் சிலர் தங்களை மிகவும் உயர்ந்தவர்களாக நினைத்துக் கொள்வதும் மற்றெல்லாரும் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை வளர்ப்பதாக இருந்து வருகிறது. எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாத ஜென்மங்கள். எதை எதை எங்கே வைக்க வேண்டுமோ அதை அங்கே வைக்க வேண்டும் இல்லையென்றால் அதுகள் நம்மை கொண்டு போய் சுடுகாட்டில் வைத்து விடும்.

இந்திய தேசம் வல்லரசு ஆகப் போகிறது என்பதை சொல்லி கொள்வதில்
இருக்கும் பெருமை அதே சமயத்தில் வறுமையையும் நோயை ஒழிக்கும் முறை பற்றியும், அதற்காக தனி மனிதனின் ஒத்துழைப்பு என்ன என்பதையும் சிந்திப்பதோடு நில்லாமல் செயலில் காட்ட வேண்டும். அப்போது தான் இந்தியா வல்லரசு என்று பெருமை பட்டுக் கொள்வதில் நேர்மையும் அர்த்தமும் இருக்க முடியும்.

இந்தியா வல்லரசு ஆகிறதோ இல்லையோ, வறுமையற்ற, சாதி இன மத பேதமற்ற, படித்த பண்புள்ளோர் நிறைந்த நாடாக மாற்றப் பட வேண்டும், இதற்க்கு மிக முக்கிய பங்காளர்கள் இன்றைய இளைஞ்சர்கள் தான் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.

வாழ்க இநதியா.........! ! ! வளர்க இந்திய சமுதாயம் ! ! !


ஐந்து வருடத்திற்கு ....தேர்தல் முடிவுகள் வெளி வந்து ஆட்ச்சியில் காங்கரஸ் கட்சி " மைனாரிட்டி " என்று எந்த எதிர்கட்சியினரும் ஏக தாளத்தில் ஏளனம் பேச முடியாமல் மகேசன் தீர்ப்பு அளித்தாயிற்று.

இனி ஐந்து வருஷத்திற்கு நிம்மதி பெரு மூச்சு விடலாம். காங்கரஸ் கட்சி ஜெயித்ததை கூட சிலரால் இன்னும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இதற்கும் கூட இயந்திர கோளாறு தான் காரணம் என்று சொல்லுவார்களோ?

ஒட்டு மொத்த இந்தியாவின் ஓட்டுப் பதிவையே சந்தேகிக்கிரார்களோ?

எது எப்படியோ இன்னும் இரண்டு வருஷத்துக்கு நிம்மதி பெரு மூச்சு விட்டுக் கொண்டிருக்கலாமே !!!!!


ராஜாஜி காமராஜரின் ஆட்சி மட்டும் தான் தமிழகத்தில் சிறப்பாக இருந்தது என்று சொல்லி தனது தோல்வியை சமன் படுத்திக் கொள்ளும் சிலரை நினைத்தால் பாவமாக இருக்கிறது, இன்னும் சில வருடங்களுக்கு பின் கருணாநிதியின் ஆட்சி தான் சிறப்பாக இருந்தது என்ற சொல் தான் எங்கும் நிறைந்திருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது, இப்போது கருணாநிதியின் ஆட்ச்சியை குறை சொல்பவர்கள் எண்ணிக்கை கூட மிக குறைவு தான்,

அந்த குறைவானவர்கள் சொல்லும் குறை கூட நிஜமற்றது, தமிழ் நாட்டிற்குத் தான் கருணாநிதி முதல்வர், இந்தியதேசத்திற்கு அல்ல. தமிழகத்திற்குத் தேவையானவற்றை செயல்படுத்த தான் மக்கள் தி. மு. கவை ஒட்டு போட்டு ஜெயிக்க வைத்திருக்கின்றனர், தான் ஆட்சிக்கு வந்தால் எதையெல்லாம் செய்வோம் என்று மக்களுக்கு தேர்தல் வாக்குறிதியாக கொடுக்கப் பட்டதோ அவற்றை செய்வதில், நிறைவேற்றுவதில் கருணாநிதி ஒருபோதும் குறை வைக்கவில்லை, இதை மக்கள் அறிவர்.

தமிழகத்தின் தேவைக்கு அப்பால் பட்டவற்றை கருணாநிதி கண்டு கொள்ளவில்லை என்பது, இலங்கை தமிழர்களை பற்றி சொல்லப் படும் குற்ற சாட்டு, இதில் கருணாநிதி என்பவரால் என்ன செய்ய முடியுமோ அவற்றை செய்து கொண்டு இருக்கிறார் என்பதில் மாற்று கருத்துகள் இருந்தாலும், அவரது முயற்சிகள் இன்னும் முடிந்து விடவில்லை, என்பதுவும் குறிப்பிட தக்கது. நம்பி ஒட்டு போட்ட தமிழக மக்களுக்கு ஒரு முதலமைச்சராக என்னென்ன திட்டங்கள் வகுத்து செயல் படுத்த முடியுமோ அதை தவறாமல் செய்து கொண்டிருப்பவர் கருணாநிதி.

தமிழன் தானும் வாழாமல் வாழுபவனையும் வாழ அனுமதிக்க இயலாத எண்ணம் கொண்டவன் என்பதை இயக்குனர் வசந்த் அவர் இயக்கிய சினிமாவில் தமிழ் நண்டு கதை சொல்லியிருப்பார், அந்த கதைதான் நினைவிற்கு வருகிறது.

தமிழர்களே முடிந்தால் உங்களை விட கீழிருப்போர் உயர உதவி செய்யுங்கள், இல்லையென்றால், வாழ்பவனை வாழ விடுங்கள்.

தமிழன் முன்னேறாமல் போவதற்கு தமிழன் தான் காரணம். வாழ்பவரை கண்டு வயிற்றெரிச்சல் படுவதால் வயிறெரிச்சல் தான் கூடும்.

6/09/2009

நிலவில்......

[ முழுக்க முழுக்க கற்ப்பனையே ]

அழகிய நிலவும்
அருகே பூத்து
குலுங்கும்
மல்லிகை பந்தலும்
மோகம் கொண்ட
நீயும்
உன்மார்பின் மீது
நானும்.....

உன் அகன்ற
கருத்த கண்களில்
காமத்தின் உச்சம்
சிவந்த அழகிய
இதழ்களில் கொட்டி
கிடக்கும் கவர்ச்சி
எடுப்பான நாசி
காண்போரை கவரும்
உன் தோற்றம்

மந்த மாருதம்
தழுவி சூடேறிய
நம் மூச்சுக்
காற்றை
குளிர செய்து
தோற்றுப் போனது

உன் இறுக்கம்
தளராமல்
நான் சொக்கி
கிடக்க

வானில் நிலவை
மேகங்கள் சூழ
காற்றும் குளிர்ந்து
வீச லேசாக
மழை துளிகள்
நம் மீது
தெளிக்க

உன் அணைப்பிலிருந்து
விலக முடியாமல்
நாழிகை செல்வதை
மறந்தேன் ....

இப்படியே வாழ்ந்து
ஆயுட் காலம்
தீர்ந்து விடாதா
பேராசை எனக்கு

இறுகிய உனது
கைகள் உடல்
முழுதும் தழுவ......
ம்ம் .....

உன் கைகளில்
எனது மேனி
முழுதும்
வீணையானது

என்னை
கட்டித் தழுவியது
உன் கரங்கள்
உன் இதழோடு
இதழ் இணைத்தாய்

என் இடையை
கொடிபோல
வளைத்து
என்னுள் நீயும்
உன்னுள் நானும்....
சொர்க்கம்
இது தானோ....

உன் காம
பிடியில்
என்னை மறக்கச்
செய்தாய்
உலகை மறக்கச்
செய்தாய்

காணாத சொர்க்கம்
கண்டேன்
நீ என்னருகில்
இருந்த போது

இன்றும் அதே
நிலவு வானில்
மல்லிகையின் மணம்
இனிய மந்த
மாருதம்
என் அருகினில்
நீ இல்லை

நாம் வாழ்ந்த
நினைவுகள் நெஞ்சில்
நினைவுகளில் மட்டும்
நீயும் நானும்.......

6/06/2009

காதல் என்பதுபெண்ணுக்கு திருமண வயது இருபத்து ஒன்று, ஆணுக்கு வயது ?, போகட்டும், மருத்துவ ரீதியாக ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்ளவும் உடலுறவு கொள்ளவும் ஏற்ற வயது இருபத்து ஒன்று என்று நமது அரசாங்கம் இப்படி ஒருஅறிவிப்பை கொடுத்துள்ளது , சிறந்தது, ஆனால் அந்த காலத்தில் இந்த அறிவிப்பு இல்லாமல் பல பேர் பதினாறு வயதிலும் பன்னிரண்டு வயதிலும் திருமணம் செய்து கொண்டு பத்து பதினாறு குழந்தைகளை பெற்றுக் கொண்டு வாழ்ந்துள்ளனர், இதில் வேறு ஒரு கொடுமை, முதல் குழந்தை பெண்ணாக இருந்து விட்டால், அந்த பெண் குழந்தை வளர்ந்து பூப்பெய்தி இருக்கும் அதேசமயத்தில் தாயும் குழந்தை பெற்று எடுப்பாள், அத்துடன் மட்டும் நில்லாது மகளுக்கும் திருமணம் செய்து வைத்து மகளும் தாயும் ஒரே சமயத்தில் கருவுற்று குழந்தை பேரு நடக்கும் அதிசயங்களும் நமது நாட்டில் இருந்து வந்துள்ளது.

இந்த நிலை தலை கீழாக மாறி இப்போதுள்ள பெண்கள் கல்யாணமே இருபத்தேழு முப்பது என்று தள்ளி போட்டுக் கொண்டே போகிறார்கள், குழந்தையை பெற்று எடுக்க வேண்டிய அவசியம் இல்லாதவர்கள் என்ற நிலையையும் இக்கால பெண்கள் உருவாக்கி கொள்ளுகிறார்கள். இந்த நிலை இப்படியே போகுமானால் கற்பபையில் சில கோளாறுகள் ஏற்ப்பட வாய்ப்பும் மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்கிறது மருத்துவம், எந்த நிலையிலும் ஆபத்தை நாம் தேடிக் கொள்ளாமல் ஆபத்து நம்மையும் தேடி வராமல் பார்த்துக் கொள்வதற்கு நாம் கற்ற கல்வி உத வேண்டும், கல்வி என்பது பணம் சம்பாதிக்கும் கருவி மட்டுமில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

ஒரு இளவயதுப் பெண் இப்படி சொல்லுகிறாள் தன் காதலனிடம் :

எங்கே நீ

என்னருகில் வந்தால்
என்னுள் எரிந்து
கொண்டிருக்கும்
காமத்தீயில்
நாம் இருவரும்
கருகி விடுவோமோ
என்னருகே வராதே
என்னுயிரே.....

என்னுள் என்னை
தின்று கொண்டிருக்கும்
காதல்
உன்னுள்
புதைந்து கிடக்கும்
அன்பின் இறுக்கத்தில்

உன் கண்களின்
கடையோர பார்வை
என்னை
களங்கம் செய்கிறது


நான் இதுவரை
காத்த
விரதம்
விரக தாபமாய்
என்னை
பொசுக்கிவிட
உன் அணைப்பில்
என் தீயை
அணைத்து
விடு

பயமாய் இருக்கிறது
என் முடிவுகளில்
நீ சங்கமித்து
என்னை
மாற்றி விடுவாயோ
என்று......

........ ...... இதிலிருந்து என்ன தெரிகிறது, இக்கால பெண்களும் பெண்களுக்குரிய ஆசா பாசங்கள் நிறைந்தவர்கள் தான், ஆனால் ஏதோ ஒரு குறிக்கோள் என்ற பெயரில் தன் வாழ்க்கையை பற்றி அவர்கள் மனதில் போட்டுக் கொண்டிருக்கும் கோடு, அந்த கோட்டை தாண்டி வர கூடாது என்ற அவர்களது தன்னிச்சையான முடிவு, இயற்கைக்கும் செயற்கையான எண்ணங்களுக்கும் இடையே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அவர்களது மனம்...........

ஒரு மூன்றாவது ஆளாய் நின்று இவற்றை அவர்களால் பார்க்க முடிந்தால் அவர்களது இயற்க்கைக்கு எதிரான முடிவு தேவையற்றது என்பது விளங்கும். வாழ்க்கை சுமையாகமல் சுவையாகும்.

மனதளவில் ஒரு ஆணோ பெண்ணோ உடலுறவுக்கு தயாராகி விட்டாலே அயல்நாடுகளில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள், இதனால் நாற்ப்பது வயதாவதற்குள் அவர்கள் பாட்டி தாத்தாவாகி பேர குழந்தைகளையும் பார்த்துவிடுகின்றனர்.

நம் நாட்டிற்கு குழந்தை பேரு அவசியம் இல்லைதான், தனி மனித நலம் பற்றி சிந்திக்கும் போது, தேவையற்ற தனிமை காக்கும் விரதமும் அவசியமற்ற ஒன்று.6/05/2009

கோடைகால கவிதை

திருமணம் என்றவுடன்
சந்தோசம்
மாபிள்ளைக்கு விடுமுறை
ஏப்ரல் மே
வேறு வழியில்லை
சுட சுட
சூடாக
திருமணம் முடிந்தது

சென்றல்ய்ஸ்ட் .சி.
அறையில் முதலிரவு
கல்யாண உடை
நெருப்பாய் சுட

தாலி கட்டிய
என்னவளை
கட்டி
பிடிக்க
ஆசை

சி அறைதான்
என்றாலும்
கொட்டும் வியர்வையில்
அவள் முகத்தில்
பூசியிருந்த
ஒப்பனை வழிந்து
போக

மணமேடையில்
தேவதையாய் காட்சி
தந்த என்னவள்
முகம்
இருண்ட வானம்
போல்

அரபு நாட்டின்
வாசானை திரவியத்தில்
என்னை கிறங்க
செய்த
என்னவள் இப்போது
வியர்வை நாற்றத்தில்

வேனிற்
கால
திருமணத்தில்
கட்டியணைத்து
காதல் மழையில்
நனைய நினைத்து
வியர்வை மழையில்
வெறுத்து போனான்
.6/04/2009

முத்து B.E. (Mech)

முத்துவிற்கு மூன்று அக்கா, பிள்ளையோ பிள்ளையென்று தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை, முதல் அக்காவிற்கு காதல் திருமணம், இரண்டாவது அக்காவிற்கும் மூன்றாவது அக்காவிற்கும் பெற்றோர் பார்த்து நடத்திய திருமணம், முத்து மெக்கானிகல் இன்ஜினியரிங் படித்து விட்டு பெங்களுருவில் ஒரு கம்பனியில் வேலை பார்த்து வந்தான், சரியான கஞ்சன், எச்சை கையில் காக்காய் ஓட்டாதவன், தனது முதல் அக்காள் காதலித்து திருமணம் செய்து கொண்டு, பொருளாதார நெருக்கடியில் அடிக்கடி தன் அப்பாவிடமிருந்து பணம் வாங்கி கொண்டு போவது முத்துவிற்கு மிகவும் எரிச்சலூட்டுவதாக இருக்கும், இதனால் தான் ஒரு காலமும் காதலித்து திருமணம் செய்வது கிடையாது என்று முடிவில் இருப்பவன், அக்காள் யாராவது முத்துவிடம் உதவி என்று கேட்டு விட முடியாது, அப்படிப்பட்ட முத்துவுக்கு உடல் சுகம் என்பது என்ன என்ற அந்த வயதிற்கே உள்ள நெருக்கம் ஏற்ப்பட ஆரம்பித்தது,

அவன் வாழ்க்கையில் சல்லாபம் செய்ய கிடைத்த பல இனிய சந்தர்ப்பாங்களை அவன் எப்படியெல்லாம் நழுவ விட்டான் என்பது பற்றி முதலில் பார்க்கலாம் பள்ளியில் முத்து ப்ளஸ் டு படித்துக் கொண்டிருந்த சமயம், இவனுடன் படித்து கொண்டிருந்த ஒரு நண்பனின் மூலமாக கிடைத்த ஒரு விபசாரியிடம் முதலில் உடல் சுகம் என்ன, பெண் என்றால் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆசையில் அந்த விபசாரியிடம் போனான், அவள் ஐந்நூறு ரூபாய் கேட்டபோது தன்னிடமிருத்த பணத்தையும் தன் நண்பனிடமிருந்து கடன் வாங்கிய பணத்தையும் சேர்த்து அவளிடம் கொண்டு போன போது, அனுபவம் இல்லாத முத்துவை அவளால் சமாளிக்க முடியவில்லை, விபசாரிக்கு நேரமாகி விட்டது, அவள் குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் போய் விட்டாள், முத்துவின் கையிலிருந்த பணம் போனதுதான் மிச்சம், தான் நினைத்தபடி எக்ஸ்பெரிமென்ட் ஏதும் செய்ய முடியாமல் போனது பற்றி மிகவும் வருத்தப் பட்டான் முத்து.

அடுத்தது முத்து கல்லூரியில் படிக்கும் போது கிடைத்த வாய்ப்பு, அங்கேயும் சில குளறுபடிகள், [குளறுபடிகளைப் பற்றி விரிவாக எழுத வேண்டுமென்று தோன்றுகிறது, ஏற்கனவே பின்னூட்டங்கள் இல்லாத ஒண்டிக் கட்டையாய் இருக்கிற என்னையும் என் எழுத்துக்களையும் பலரும் புறக்கணித்து விடுவார்கள் என்பதால் எழுதவில்லை ] கையிலிருந்த காசு தான் செலவாகிறதே தவிர அவனால் அவன் நினைத்தபடி ஒன்றையும் பார்க்கவோ செய்யவோ முடியவில்லை.

ஒரு வழியாக முத்து ஒரு முடிவிற்கு வந்தான், தனது நண்பன் ஒருவன் எப்போதுமே திருமணமாகிய பெண்களுடன் காசு ஏதும் கொடுக்காமல் உடலுறவு வைத்துக் கொள்வதை கேள்வி பட்டு இருந்தான் தானும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் காசு செலவு செய்யாமல் ஒரு எக்ஸ்பெரிமென்ட் செய்து பார்க்கும் திட்டம் போட்டான், முத்துவிற்கு கல்யாணம் ஆகிய பெண்களுடன் உறவு வைத்து கொள்வது கொஞ்சமும் பிடிக்காத விஷயம், ஆனால் வேறு வழி இல்லாமல் இப்படியொரு முடிவெடுத்தான், ஒரு முப்பது வயதிற்குள் ஏதாவது பெண்கள் கிடைப்பார்களா என்று காத்திருந்தான், கிடைத்தது, ஆனால் செலவு அதிகமாகியதே தவிர வேலைக்கு ஒன்றும் ஒத்து வரவில்லை. முத்து மகா கஞ்சனுக்கு பர்ஸ் காலியாவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

முத்துவிற்கு இருபத்து ஐந்து வயது, நாற்ப்பது வயதில் ஒரு பெண்
கிடைத்தாள், கல்யாணமான பெண்களை முத்துவிற்கு கொஞ்சமும் பிடிக்காது அதிலும் இத்தனை வயதான பெண்ணோடு உடலுறவு என்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை ஆனால் வேறு வழி இல்லைகிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது என்ற முடிவில் இருந்தான், இந்த முறை எப்படியாவது நினைத்ததை செய்து விட வேண்டும் என்ற குறிக்கோளோடு அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு ஒரு இடம் கண்டுபிடித்து கூட்டி சென்று தான் நினைத்த எக்ஸ்பெரிமேன்டை ஆரம்பித்தான், அந்த பெண்ணிற்கு கோபம் வந்தது, இந்த மாதிரி சின்னத்தனமான வேலை செய்யும் சின்ன பசங்களோடு வெளியே வருவதே மிக பெரிய தப்பு என்று முத்துவை திட்டி விட்டு அந்தப் பெண் கிளம்பி போய் விட்டாள்,

நீண்ட தேடலுக்குப் பின் முத்துவிற்கு ஒரு முப்பத்திரெண்டு வயது விதவை பெண் கிடைத்தாள், அந்த பெண்ணிற்கு கல்யாண ஆசை, தனியாக வாழ பிடிக்காமல் அவதி பட்டு கொண்டிருந்தாள், அவளிடம் தான் அவளை கல்யாணம் செய்து கொள்வதாக ஒரு பொய்யை சொல்லி முடிந்தவரை அவளை ஏமாற்றி, ஒரு வழியாக தனது எக்ஸ்பெரிமேன்டை முடித்தான் முத்து,
பின் அவள் இவனது சுயரூபம் தெரிந்து கொண்டு ஒதுங்கி விட

இப்போது
முத்துவிற்கு வயது முப்பது ஒன்று, அந்த விதவை பெண் அவளது சொந்தத்தில் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு குடியேறினாள், ருசி கண்ட பூனையாக முத்து பெங்களூரு வேலையை விட்டு விட்டு சென்னையில் வேலை தேடி, வேலையும் கிடைத்து விட , இப்போது சென்னையிலேயே செட்டில் ஆகி விட்டான், அந்த பெண்ணின் கணவன் இல்லாத சமயங்களில் 'தன்னால் அவளை மறக்க முடியவில்லை ' என்ற பாட்டை பாடிக் கொண்டு அவளிடமே "சங்கமித்து" வருகிறான், இதற்க்கு முக்கிய காரணம் காசு செலவில்லாமல் கதை ஓடுகிற வரைக்கும் ஓடட்டும் என்று போய் கொண்டு இருக்கிறது இந்த ஏமாத்து வேலை,

முத்துவிற்கு திருமணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் கடந்த ஏழு எட்டு வருடங்களாக, கிடைக்கின்ற வரன்களில் குலம் கோத்திரமெல்லாம் ஒத்து வந்தால் அந்த பெண்ணிடமிருந்து கிடைக்கும் வரவு குறைகிறது, வரதட்சிணையும் படிப்பும் நினைத்தபடி இருந்தால் குலம் கோத்திரம் ஒத்து வரவில்லை ,

அவனுடன் படித்த எல்லாருக்கும் திருமணம் முடிந்து குழந்தையும் இருக்கிறது, இப்போது முத்துவிற்கு முப்பத்து ரெண்டு வயது, கடைசியாக முத்துவிற்கு ஒரு வரன் ஒத்து வந்திருக்கிறது, அவன் செல்போனில் அந்த பெண்ணுடன் பேசுவதெல்லாம் கல்யாணத்திற்கு பின் எங்கு வீடு வாங்குவது எந்த மாதிரி பண வரவை அதிகரித்து கொள்வது என்பது பற்றித்தான், அந்த பெண்ணும் இவனை போன்ற குணமுடையவளாக இருந்து விட்டால் பிரச்சினை இருக்காது, இப்போவாவது முத்து "இலவசத்தை" தேடி போகாமல் இருப்பான் என்பது சந்தேகமே. "ஓசி" என்பது தேடும் போது சுலபமாக கிடைத்து விட்டால், ருசி கண்ட பூனையாகி விடுபவர்கள் இந்த முத்துக்கள்......