Translate

4/19/2009

நான் ஏன் பிறந்தேன் ........

நான் பிறப்பேன் என்று சொல்லி வைத்தா பிறந்தேன், அதிலும் இந்த ஊரில் இந்த பெற்றோருக்கு ஒரு பெண்ணாக பிறக்க வேண்டும் என்று நான் நினைத்து செய்தேனா? அல்லது எனது பெற்றோர் நான் தான் மகளாய் பிறக்க வேண்டும் என முடிவு செய்து நான் பிறந்தேனா?

" நான் " என்னும் நான் யார், எதற்காக ஒரு குறிப்பிட்ட ஊரில் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட பெற்றோருக்கு மகளாக பிறந்தேன்?, விடை தேடும் முயற்சி செய்யவில்லை, மாறாக " ஏதோ பிறந்தேன், ஏதோ வாழ்கிறேன் " என்ற நினைவிலும் வாழவில்லை, ஆனால் இந்த பிறப்பும் அதன் பின்னணியும் என்ன என்று சிந்திக்க வைக்கிறது என்னவோ உண்மை.

உலகமும் அதன் உயிரினங்களும் கூட ஒரு அர்த்தமுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறதே, அந்த உயிரினங்களை போலவே " பிறந்தேன், மரணமடைந்தேன்" என்று மனிதனும் இருக்கலாமா, முடிவு கிடைக்காது என்ற நோக்கில் வாழ்ந்தால் முடிவும் காரணங்களும் அறிந்து கொள்ள இயலாமலே போய் விடும், அறிய ஆவல் கொள்ளும் போது இந்த தேடலுக்கான பதில் ஏதோ ஒன்றின் மூலமாக நம்மை வந்து அடைகிறதை நம்மால் நிச்சயம் காண முடியும்.

" என்னை நான் தேடி தேடி, உன்னிடம் கண்டு கொண்டேன் " என்பது போல.

வாழ்வு என்பது பிறந்து வளர்ந்து பின் " வாழ்க்கையில் செட்டில் ஆகணும் " பின்னர் கடவுள் கொடுத்த குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து நல்ல இடத்தில் கல்யாணம் செய்து வைத்து, காலம் வரும் போது கண்ணை மூடணும் என்பது வாழ்க்கை இல்லை, அல்லது ஒரு லட்சியம் ஒரு குறிக்கோளுடன் வாழ்ந்து அதை அடைவதற்கான முயற்ச்சியில் இறங்கி வெற்றி தோல்விகளை கண்டு பின் இறுதி மூச்சு போகும், இதுவும் வாழ்வல்ல, பின்னர் எது தான் வாழ்வு?

இந்த கேள்வி தான் வாழ்க்கையின் துவக்கமே, கேள்வி எழும் போது பதிலை தேடி அலை பாயும் மனம், அப்போது அதற்கான பதில் எந்த முறையில் எதன் மூலமாக வந்தடைய வேண்டுமோ அவ்வாறு வந்தடையும்.

" தாம் பெற்றதை பெருக இவ்வையகம் " என்ற பேராசை தோன்றுமானால் ( தோன்ற வேண்டும் ) நாட்டில் உள்ள ஏனைய சகோதர சகோதரிகளுக்கும் தனது " இந்த வாழ்க்கை அனுபவத்தை " பற்றி எடுத்து சொல்லி, பேரருள் பெற, மனம் ஏங்குமே அது தான், அதற்குத்தான் இந்த பிறப்பு, இந்த வாழ்க்கை.

பலருக்கு பைத்தியமாய் தோன்றும் இந்த கருத்துக்கள், ஆனால் யாரொருவர் இந்நிலை அடைகிறாரோ அவர் பேரு பெற்றவர் என்பதுடன், அவருக்கெல்லாம் என் கூற்றின் உண்மை புரியும்.

தம்பி !!! ....... உனக்கொரு உண்மை தெரியவில்லை, உடலென்று உன் உயிர் மீது போர்த்தபட்டிருக்கும் இந்த போர்வை உடம்பு இருக்கிறதே அது, கருப்பு அல்லது சிவப்பு அல்லது மாநிறம் என்று எந்த நிறமாக வேண்டுமானாலும் இருக்கலாம், உடல் உயரம் அல்லது நடுத்தரமாகவோ குள்ளமாகவோ இருக்கலாம், இந்த மேற் போர்வை இத்து போகும், இந்த போர்வைக்கு expiry date மிகவும் குறைவு, ஒன்றும் இல்லாமல் மண்ணோடு மண்ணாக அழியும், உள்ளே இருக்கிறதே உன் " ஆன்மா " அதன் நிறம் என்னவென்று தெரியுமா அதன் உயரம் என்னவென்று தெரியுமா, அந்த " ஆன்மாவிற்கு " அழிவு இல்லவே இல்லை .

அந்த அழிவில்லாத ஒன்றை பற்றி நாம் அறிய வேண்டிய அவசியம் அதிகம் இருக்கு, வெளித்தோற்றம் பற்றிய மாயை ஒன்றுக்கும் பிரயோஜனம் அற்றது, அழிவில்லாத ஒன்றை பற்றி அக்கறை கொள்ளு. அக்கறை கொள்ள முயற்சித்தால் மட்டும் போதும் அது உன்னை வந்து அடையும். அப்போது வாழ்வின் முழு பயனை அடைவாய், நீ பயனடைவதோடு உன்னை சுற்றியுள்ளவர்கள் மீதும் அக்கறை ஏற்ப்படும், அப்போது " நான் " என்ற நீயும் " நான் " என்ற " நானும் " யார் எதற்கு பிறந்தோம் என்று அறிந்து அதற்கேற்ப செயல் படுவோம்.