Translate

3/30/2009

முக்கிய நண்பர்கள்

அவன் என் நண்பன், அவனை எனக்கு அறிமுகப்படுத்தியது என் தகப்பனார், என் தெருவிற்கு அடுத்த தெருவில் புதிதாய் குடி வந்தவன், தெருவிளக்குகளை நம்பி இரவில் தனியே நடந்து வீட்டிற்கு வர முடியாதபடி ஊர் மிகவும் மோசமாக இருந்ததால் என் அப்பாவின் நண்பரான அடுத்த தெருவிற்கு புதிதாய் வந்திருந்தவரின் மகனும் சுருக்கெழுத்து கற்க போவதை அறிந்த என் தகப்பனார் அவனுடன் சேர்ந்து வரும்படி என்னை அவனுக்கு அறிமுகப்படுத்தினார்.

அவனுடன் பேசிக்கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது அதனை ஹாஸ்யம் இருக்கும் அவனது பேச்சில், அவனது ஆண் நண்பர்களின் செயல்களை சொல்லி வயிறு வலிக்க சிரிக்க வைப்பான், என்னையும் அவனது மற்ற ஆண் நண்பர்களை போலவே நினைத்து பழகுவான், மணி கணக்கில் என் வீட்டிற்கு வந்து பேசி கொண்டிருப்பான்.

ஒருநாள் அவன் அம்மா எங்கள் வீட்டிற்கு வந்து இப்படி மணி கணக்கில் பேசிக்கொண்டிருந்தால் என்னை பெண் பார்க்க வருபவர்களிடம் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் என் மீது அவதூறு சொல்லி என்னை யாரும் கல்யாணம் பண்ணவிடாமல் செய்து விடுவர் என்று சொன்னவுடன் அம்மாவிடம் சண்டை போட்டுக்கொண்டு இரவோடு இரவாக ரயிலேறி அவர்களது சொந்த ஊர் சென்று அவனது தாய் மாமாவிற்கு தெரியாமல் அவரது மகளை அழைத்து கொண்டு போய் ஒரு தாலியை கட்டி வேறு நண்பன் வீட்டில் தங்கி இருந்து விட்டான்.

பின்னர் வீட்டிற்கு வந்து bank recruitment டெஸ்ட் எழுதி வேலை கிடைத்து செட்டில் ஆகிவிட்டான். அவன் எனது நண்பன், முழுக்க முழுக்க நல்ல நண்பனாக மட்டுமே பழகியவன். ஒரு போதும் என்னை ஒரு பெண் என்ற கோணத்தில் பார்க்காத அருமையான நண்பன்.

என் பெரியப்பா எனக்கு அறிமுகப்படுத்திய ஒரு நண்பன், இந்த நண்பனை நினைத்தாலே எனக்கு அலர்ஜிதான் ஒரு முறை நான் வேலை பார்த்து வந்த அலுவலகத்திற்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு "typist" இருக்காங்களா என்று கேட்ப்பதற்கு பதில் "typewriter" இருக்காங்களா என்று டெலிபோன் operator இடம் திரும்ப திரும்ப கேட்டு அவள் வந்து என்னிடம் ' என்ன இப்படி போன்ல பேசற நண்பர்களை வைத்து கொண்டிருக்கிறாயே" என்று கேட்டு என் மானத்தை வாங்கி விடடாள், எங்கு வேலைக்கு போனாலும் அங்கேயே வந்து நின்று விடுவான், இவனை கட்டு படுத்தவே முடியாது, சரியாக படிப்பும் ஏறாது, பணக்கார வீட்டு "பொருக்கி" பையன்.

இன்று வரை அவன் மாறவே இல்லை, அவன் நினைக்கும் நேரத்தில் என் வீட்டிற்கோ நான் வேலை செய்து கொண்டிருக்கும் இடத்திற்கோ வந்து நின்று விடுவான், வீட்டிற்கு வந்தால் இவனுக்கு தண்ணீரை தவிர வேறு ஒன்றையுமே நான் கொடுக்க மாட்டேன், பிரிட்ஜ் ஐஸ் வாட்டர் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவையும் குடித்து விட்டு போவான். சரியான விவஸ்த்தை கெட்ட ஜென்மம், என்னோட கணவர் இருக்கும் போதும் திடீரென்று வந்து உட்கார்ந்து விடுவான், 'போய் சமையல் செய்து ஏதாவது கொண்டு வா என்பான்' நான் சொல்லுவேன் 'என் வீட்டில் நாங்கள் எல்லோரும் உணவு கட்டுபாட்டில் இருப்பதால் ஒன்றும் செய்வதற்கில்லை' என்று சொல்லி துரத்தி விடுவேன், இங்கிதம் தெரியாதவன்.

நண்பர்களில் கூட பல வகை உண்டு, அதில் மேல் குறிப்பிட்ட இந்த இரண்டு நண்பர்களும் நேர் எதிர் துருவங்கள்.