Translate

3/28/2009

முதல் முத்தம்

ஒரே கம்பனியில் இருவருக்கும் வேலை, அவளுக்கு வயது 20 நிரம்பவில்லை, அவனுக்கு வயது 24. அவன் மாநிறம் என்றாலும் மூக்கும் முழியுமாய் அந்த வயதிற்கே உரித்தான சுறுசுறுப்புடன் இருப்பான், இருவரும் சென்னை கடற்க்கரை - தாம்பரம் செல்லும் லோக்கல் ரயிலில் தான் தினமும் அலுவலகம் வருவர், அவன் தாம்பரத்திலிருந்து கிண்டிக்கு வருவான் அவள் பழவந்தாங்கலில் இருந்து கிண்டிக்கு வருவாள், அவள் நல்ல அழகி, சிவந்த நிறம், நீண்ட அடர்த்தியான கூந்தல், நீண்ட கரிய புருவம், நீண்ட மீனை போன்ற துரு துரு கண்கள், அவள் கன்னம், தொட்டு பார்க்க தூண்டும் அழகு.

தினமும் ஒரே ரெயிலில் வந்தாலும் எப்போதுமே இருவரும் பேசியது இல்லை, இருவரும் வேறு வேறு department என்பதால். ஒரு நாள் இவன் வந்து இவளிடம் சிறியதாக மடிக்கப்பட்ட ஒரு காதல் கடிதத்தை கொடுத்து சென்றான், அதை அவன் போனவுடன் படித்தாள், அதில் அவன் இவளை நேசிப்பதாகவும், அவளுக்கு அவனை பிடிக்கவில்லை என்றால் கடிதத்தை யாருக்கும் காண்பிக்காமல் கிழித்து போட்டு விடும்படியும் கேட்டுகொள்வதாகவும் எழுதி இருந்தான்.

ஏறக்குறைய ஒருவருடம் முடியும் தருவாயில் கம்பெனியில் union போராட்டம் துவக்கியது, ஆட் குறைப்பு செய்தது நிர்வாகம், இதில் கம்பெனியில் இருந்து 75% ஊழியர்களை நீக்கம் செய்தது நிர்வாகம், அப்போது அவளும் கம்பனியை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டாள்.

அவனை மறந்தே போனாள், மூன்று நான்கு மாதங்களுக்கு பின்னர் இவளுடைய வீட்டு விலாசத்திற்கு இவனிடமிருந்து கடிதங்கள் வர ஆரம்பித்தன, அவனுக்கு பதிலேதும் போடாமலே காலம் கடத்தி வந்தாள், ஒரு நாள் அவனது கடிதத்தில் ஒரு தொலைபேசியின் எண் கொடுத்து அதற்க்கு தொடர்பு கொண்டு பேசுமாறு எழுதி இருந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க ஆரம்பித்தனர்.

அவன் ஒரு புது இருசக்கரவாகனம் வாங்கி இருப்பதாக சொல்லி அவளை ஒரு வார இறுதியில் ஒரு சனிக்கிழமை மஹாபலிபுரம் கூட்டிச்சென்றான், இருசக்கர வாகனத்தில் முதன் முதலில் ஒரு ஆடவனோடு பயணம் செய்வது அவளுக்கு மிகவும் பயமாக இருந்தது. மலை மீதுள்ள கோயிலுக்கு கூட்டிச்சென்றான், மஹாபலிபுரம் போவதும் அவளுக்கு அதுவே முதல் முறை, குன்றின் மீது ஏறி சென்ற பின் அங்கிருந்த கோவிலின் வாசலில் அவளை உட்காரும்படி சொன்னான், அவளும் அவனுடன் உட்கார்ந்து கொண்டாள், அவனை அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்க ஆரம்பித்திருந்த சமயம் அது, அவள் எதிர்பார்க்கவே இல்லை, அவன் அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி ஒரு முத்தம் கொடுத்தான், இதழோடு இதழ் சேர்ந்த முதல் முத்தம், வாழ்க்கையில் அவளால் என்றுமே மறக்க முடியாத முத்தம்.

அவள் அவனை நம்பினாள், அவன்தான் தன் கணவன் என முடிவும் செய்தாள், அவன் மீது காதல் கரை புரண்டு ஓட ஆரம்பித்தது, அவன் அவளை சந்திக்கும் போதெல்லாம் வித்தியாசமான முறையில் நடந்து கொள்வான் அது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது, அவன் ஒரு அறிவு ஜீவி, கடற்கரைக்கு கூட்டிச்சென்றால் வானுக்கும் கடலுக்கும் ஏன் நீல நிறம் வந்தது தெரியுமா என்பான், சொல்லேன் என்பாள் இவள், ஏன் என்றால் அவன் B.E. Mech. படித்திருந்தான் அவளோ B.A.( economics) படித்திருந்தாள், அவளுக்கு அவன்பால் அதிக மரியாதையும் கூட, கடலைகள் காலில் மோதியடிக்கும்போது அவன் கேட்பான் அவளிடம், கடலில் ஏன் அலைகள் ஏற்படுகின்றன தெரியுமா என்று, அவனுக்கு தெரியாத ஒன்று கவிதைகள் எழுதுவதும் அதை ரசிப்பதும் தான்.ஆனால் இவள் எழுதும் கவிதைகளை கேட்டு 'இவளவு அழகாய் எழுதுகிறாயே' என்று குதூகலிப்பான். இந்த ஒன்றைத்தவிர வேறு ஒன்றும் அவளுக்கு அவனிடம் குறை இருப்பதாக தெரியவில்லை.

ஒரு நாள் அவள் வேலை செய்து கொண்டிருந்த இடத்திலிருந்து அவளை தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொள்ளுமாறு வற்ப்புறுத்தி வீட்டுக்கு திரும்பி அழைத்து வந்து கொண்டிருந்தபோது, வழியில் வண்டியை நிறுத்தி விட்டு காப்பீ சாப்பிட ஒரு சிற்றுண்டிக்கு அழைத்து போனான், அங்கே இவளின் மாமாவும் அப்பாவும் ஏற்கனவே அமர்ந்து தேநீர் அருந்தி கொண்டிருந்ததை இருவருமே கவனிக்கவில்லை, இருவரும் தேநீர் அருந்திவிட்டு வெளியே வந்தனர், கையும் களவுமாக பிடிபட்டு விட்டனர்.

அவளின் அப்பா அவனிடம் இவளை திருமணம் செய்து கொள்வதானால் உன் பெற்றோரை கூட்டி வா என்று சொல்ல அவனோ என் பெற்றோர் இதற்க்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று சொல்ல அப்படியானால் இவளை இனி பார்க்க முயற்சி செய்யாதே என்று அவள் அப்பாவும் மாமாவும் சொல்லிவிட, வேறு மாப்பிள்ளை வீட்டார் பெண் கேட்டு வந்தனர், இவள் அவனது விலாசத்திற்கு சென்று பார்த்த போது , அவன் வீட்டை காலி செய்துவிட்டு மதுரை போய் விட்டதாக தகவல், வேறு வழி இன்றி பெற்றோர் பார்த்த மாபிள்ளைக்கு கழுத்தை நீட்டினாள்.

இவளது கணவன் இவளுக்கு முத்தமே தருவது இல்லையாம், ஏன் என்று கேட்டேன், அதுவும் ஒரு காதல் கதையாம், அவருடைய காதலியிடம் சத்தியம் செய்து கொடுத்தாராம், உன்னை தவிர நான் யாரையும் முத்தம் செய்ய மாட்டேன் என்று, என்ன கொடுமை இது, இவளுக்கு கிடைத்த "எதிர்பாராத" முத்தத்தை தவிர வேறு முத்தம் வாழ்வில் இனி இல்லையாம்.