Translate

3/30/2009

முக்கிய நண்பர்கள்

அவன் என் நண்பன், அவனை எனக்கு அறிமுகப்படுத்தியது என் தகப்பனார், என் தெருவிற்கு அடுத்த தெருவில் புதிதாய் குடி வந்தவன், தெருவிளக்குகளை நம்பி இரவில் தனியே நடந்து வீட்டிற்கு வர முடியாதபடி ஊர் மிகவும் மோசமாக இருந்ததால் என் அப்பாவின் நண்பரான அடுத்த தெருவிற்கு புதிதாய் வந்திருந்தவரின் மகனும் சுருக்கெழுத்து கற்க போவதை அறிந்த என் தகப்பனார் அவனுடன் சேர்ந்து வரும்படி என்னை அவனுக்கு அறிமுகப்படுத்தினார்.

அவனுடன் பேசிக்கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது அதனை ஹாஸ்யம் இருக்கும் அவனது பேச்சில், அவனது ஆண் நண்பர்களின் செயல்களை சொல்லி வயிறு வலிக்க சிரிக்க வைப்பான், என்னையும் அவனது மற்ற ஆண் நண்பர்களை போலவே நினைத்து பழகுவான், மணி கணக்கில் என் வீட்டிற்கு வந்து பேசி கொண்டிருப்பான்.

ஒருநாள் அவன் அம்மா எங்கள் வீட்டிற்கு வந்து இப்படி மணி கணக்கில் பேசிக்கொண்டிருந்தால் என்னை பெண் பார்க்க வருபவர்களிடம் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் என் மீது அவதூறு சொல்லி என்னை யாரும் கல்யாணம் பண்ணவிடாமல் செய்து விடுவர் என்று சொன்னவுடன் அம்மாவிடம் சண்டை போட்டுக்கொண்டு இரவோடு இரவாக ரயிலேறி அவர்களது சொந்த ஊர் சென்று அவனது தாய் மாமாவிற்கு தெரியாமல் அவரது மகளை அழைத்து கொண்டு போய் ஒரு தாலியை கட்டி வேறு நண்பன் வீட்டில் தங்கி இருந்து விட்டான்.

பின்னர் வீட்டிற்கு வந்து bank recruitment டெஸ்ட் எழுதி வேலை கிடைத்து செட்டில் ஆகிவிட்டான். அவன் எனது நண்பன், முழுக்க முழுக்க நல்ல நண்பனாக மட்டுமே பழகியவன். ஒரு போதும் என்னை ஒரு பெண் என்ற கோணத்தில் பார்க்காத அருமையான நண்பன்.

என் பெரியப்பா எனக்கு அறிமுகப்படுத்திய ஒரு நண்பன், இந்த நண்பனை நினைத்தாலே எனக்கு அலர்ஜிதான் ஒரு முறை நான் வேலை பார்த்து வந்த அலுவலகத்திற்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு "typist" இருக்காங்களா என்று கேட்ப்பதற்கு பதில் "typewriter" இருக்காங்களா என்று டெலிபோன் operator இடம் திரும்ப திரும்ப கேட்டு அவள் வந்து என்னிடம் ' என்ன இப்படி போன்ல பேசற நண்பர்களை வைத்து கொண்டிருக்கிறாயே" என்று கேட்டு என் மானத்தை வாங்கி விடடாள், எங்கு வேலைக்கு போனாலும் அங்கேயே வந்து நின்று விடுவான், இவனை கட்டு படுத்தவே முடியாது, சரியாக படிப்பும் ஏறாது, பணக்கார வீட்டு "பொருக்கி" பையன்.

இன்று வரை அவன் மாறவே இல்லை, அவன் நினைக்கும் நேரத்தில் என் வீட்டிற்கோ நான் வேலை செய்து கொண்டிருக்கும் இடத்திற்கோ வந்து நின்று விடுவான், வீட்டிற்கு வந்தால் இவனுக்கு தண்ணீரை தவிர வேறு ஒன்றையுமே நான் கொடுக்க மாட்டேன், பிரிட்ஜ் ஐஸ் வாட்டர் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவையும் குடித்து விட்டு போவான். சரியான விவஸ்த்தை கெட்ட ஜென்மம், என்னோட கணவர் இருக்கும் போதும் திடீரென்று வந்து உட்கார்ந்து விடுவான், 'போய் சமையல் செய்து ஏதாவது கொண்டு வா என்பான்' நான் சொல்லுவேன் 'என் வீட்டில் நாங்கள் எல்லோரும் உணவு கட்டுபாட்டில் இருப்பதால் ஒன்றும் செய்வதற்கில்லை' என்று சொல்லி துரத்தி விடுவேன், இங்கிதம் தெரியாதவன்.

நண்பர்களில் கூட பல வகை உண்டு, அதில் மேல் குறிப்பிட்ட இந்த இரண்டு நண்பர்களும் நேர் எதிர் துருவங்கள்.

3/29/2009

கற்பு

கற்பு என்றவுடன் எனக்கு நினைவிற்கு வருவது பெண்களை அல்ல.

பல ஆண்களைத்தான், அத்தனை சீக்கிரத்தில் ஒருத்தியிடம் அடிபணிய மாட்டான், அவள் அழகியோ பணக்காரியோ படித்தவளோ கலைகளில் உயரிய நிலையில் இருப்பவளோ, யாராக இருந்தாலும் சரி, எப்போதும் எதற்கும் நெகிழ்ந்து போகாத, மனதை பரி கொடுக்காத குணமுடையோன், அவன் நேர் கொண்ட பார்வையும் தனது காரியத்தில் மட்டும் முழு சிரத்தை கொண்டு சிறப்புற செயல் படுபவன், அவனை அடைய பல மங்கையரும் விரும்புவர். ஆனால் அவனோ அவற்றையெல்லாம் ஒரு பொருட்டென மதிக்க மாட்டான்.

திறந்த மார்பில் அவனை காணும்போது ஆண் அழகானாய் இருக்க வேண்டுவது மட்டும் இல்லை, அவனது வைராக்கியமான குணமும் சேர்ந்தால் ஒரு பெண்ணை வசீகரிக்க வேறு ஆயுதம் தேவை இல்லை.

சரியான உயரமும், உடற்பயிற்ச்சி செய்த உடலும் அதன் மீது அவன் அணியும் சீருடையோ அல்லது வேறு கச்சிதமான உடைகளோ ஒரு பெண்ணை கவரும் உடற்வாகு.

கடமையே கண்ணாக இருப்பதும் ஆணின் அழகுகளில் ஒன்று.

சில ஆண்களை நான் கண்டதுண்டு, எத்தனை வைராக்கியம் இவர்களுக்கு, இவரை சிலர் திமிர் பிடித்தவன் என்றும் சித்தரிப்பதுண்டு. ஒன்றுக்கும் வளைந்து கொடுக்காத இவர்களின் நேர்ப்பார்வை, எதிலும் ஆராய்ந்து அறியும் நுண்ணறிவு திறன். ஆற்றல் மிகுந்த அறிவுத்திறன், அடுத்தவரை பற்றி எடை போடும் யுக்தி, ஆச்சர்யப்பட வைக்கும் முன் யோசனை, திட்டமிடுதல், எதிரியை நண்பனாக்கும் திறமை.

இவரின் கற்பு என்பது இவைகள் தான். இந்த கற்ப்பை விலை பேச யாராலும் கூடாது, பெண்ணை மயக்கும் இந்த மாய சக்திகள் ஒரு முழுமையான ஆணுக்கு உள்ளது. வியப்படையச்செயும் இந்த ஆண்களை ஒரு நாளும் எதனாலும் மயக்க முடியாது,( such a strong attitude, a female surrender herself to him without any complications.). அப்படிப்பட்ட ஆண்களைத்தான் பெண்களும் விரும்புகிறார்கள்,
.

3/28/2009

முதல் முத்தம்

ஒரே கம்பனியில் இருவருக்கும் வேலை, அவளுக்கு வயது 20 நிரம்பவில்லை, அவனுக்கு வயது 24. அவன் மாநிறம் என்றாலும் மூக்கும் முழியுமாய் அந்த வயதிற்கே உரித்தான சுறுசுறுப்புடன் இருப்பான், இருவரும் சென்னை கடற்க்கரை - தாம்பரம் செல்லும் லோக்கல் ரயிலில் தான் தினமும் அலுவலகம் வருவர், அவன் தாம்பரத்திலிருந்து கிண்டிக்கு வருவான் அவள் பழவந்தாங்கலில் இருந்து கிண்டிக்கு வருவாள், அவள் நல்ல அழகி, சிவந்த நிறம், நீண்ட அடர்த்தியான கூந்தல், நீண்ட கரிய புருவம், நீண்ட மீனை போன்ற துரு துரு கண்கள், அவள் கன்னம், தொட்டு பார்க்க தூண்டும் அழகு.

தினமும் ஒரே ரெயிலில் வந்தாலும் எப்போதுமே இருவரும் பேசியது இல்லை, இருவரும் வேறு வேறு department என்பதால். ஒரு நாள் இவன் வந்து இவளிடம் சிறியதாக மடிக்கப்பட்ட ஒரு காதல் கடிதத்தை கொடுத்து சென்றான், அதை அவன் போனவுடன் படித்தாள், அதில் அவன் இவளை நேசிப்பதாகவும், அவளுக்கு அவனை பிடிக்கவில்லை என்றால் கடிதத்தை யாருக்கும் காண்பிக்காமல் கிழித்து போட்டு விடும்படியும் கேட்டுகொள்வதாகவும் எழுதி இருந்தான்.

ஏறக்குறைய ஒருவருடம் முடியும் தருவாயில் கம்பெனியில் union போராட்டம் துவக்கியது, ஆட் குறைப்பு செய்தது நிர்வாகம், இதில் கம்பெனியில் இருந்து 75% ஊழியர்களை நீக்கம் செய்தது நிர்வாகம், அப்போது அவளும் கம்பனியை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டாள்.

அவனை மறந்தே போனாள், மூன்று நான்கு மாதங்களுக்கு பின்னர் இவளுடைய வீட்டு விலாசத்திற்கு இவனிடமிருந்து கடிதங்கள் வர ஆரம்பித்தன, அவனுக்கு பதிலேதும் போடாமலே காலம் கடத்தி வந்தாள், ஒரு நாள் அவனது கடிதத்தில் ஒரு தொலைபேசியின் எண் கொடுத்து அதற்க்கு தொடர்பு கொண்டு பேசுமாறு எழுதி இருந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க ஆரம்பித்தனர்.

அவன் ஒரு புது இருசக்கரவாகனம் வாங்கி இருப்பதாக சொல்லி அவளை ஒரு வார இறுதியில் ஒரு சனிக்கிழமை மஹாபலிபுரம் கூட்டிச்சென்றான், இருசக்கர வாகனத்தில் முதன் முதலில் ஒரு ஆடவனோடு பயணம் செய்வது அவளுக்கு மிகவும் பயமாக இருந்தது. மலை மீதுள்ள கோயிலுக்கு கூட்டிச்சென்றான், மஹாபலிபுரம் போவதும் அவளுக்கு அதுவே முதல் முறை, குன்றின் மீது ஏறி சென்ற பின் அங்கிருந்த கோவிலின் வாசலில் அவளை உட்காரும்படி சொன்னான், அவளும் அவனுடன் உட்கார்ந்து கொண்டாள், அவனை அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்க ஆரம்பித்திருந்த சமயம் அது, அவள் எதிர்பார்க்கவே இல்லை, அவன் அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி ஒரு முத்தம் கொடுத்தான், இதழோடு இதழ் சேர்ந்த முதல் முத்தம், வாழ்க்கையில் அவளால் என்றுமே மறக்க முடியாத முத்தம்.

அவள் அவனை நம்பினாள், அவன்தான் தன் கணவன் என முடிவும் செய்தாள், அவன் மீது காதல் கரை புரண்டு ஓட ஆரம்பித்தது, அவன் அவளை சந்திக்கும் போதெல்லாம் வித்தியாசமான முறையில் நடந்து கொள்வான் அது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது, அவன் ஒரு அறிவு ஜீவி, கடற்கரைக்கு கூட்டிச்சென்றால் வானுக்கும் கடலுக்கும் ஏன் நீல நிறம் வந்தது தெரியுமா என்பான், சொல்லேன் என்பாள் இவள், ஏன் என்றால் அவன் B.E. Mech. படித்திருந்தான் அவளோ B.A.( economics) படித்திருந்தாள், அவளுக்கு அவன்பால் அதிக மரியாதையும் கூட, கடலைகள் காலில் மோதியடிக்கும்போது அவன் கேட்பான் அவளிடம், கடலில் ஏன் அலைகள் ஏற்படுகின்றன தெரியுமா என்று, அவனுக்கு தெரியாத ஒன்று கவிதைகள் எழுதுவதும் அதை ரசிப்பதும் தான்.ஆனால் இவள் எழுதும் கவிதைகளை கேட்டு 'இவளவு அழகாய் எழுதுகிறாயே' என்று குதூகலிப்பான். இந்த ஒன்றைத்தவிர வேறு ஒன்றும் அவளுக்கு அவனிடம் குறை இருப்பதாக தெரியவில்லை.

ஒரு நாள் அவள் வேலை செய்து கொண்டிருந்த இடத்திலிருந்து அவளை தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொள்ளுமாறு வற்ப்புறுத்தி வீட்டுக்கு திரும்பி அழைத்து வந்து கொண்டிருந்தபோது, வழியில் வண்டியை நிறுத்தி விட்டு காப்பீ சாப்பிட ஒரு சிற்றுண்டிக்கு அழைத்து போனான், அங்கே இவளின் மாமாவும் அப்பாவும் ஏற்கனவே அமர்ந்து தேநீர் அருந்தி கொண்டிருந்ததை இருவருமே கவனிக்கவில்லை, இருவரும் தேநீர் அருந்திவிட்டு வெளியே வந்தனர், கையும் களவுமாக பிடிபட்டு விட்டனர்.

அவளின் அப்பா அவனிடம் இவளை திருமணம் செய்து கொள்வதானால் உன் பெற்றோரை கூட்டி வா என்று சொல்ல அவனோ என் பெற்றோர் இதற்க்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று சொல்ல அப்படியானால் இவளை இனி பார்க்க முயற்சி செய்யாதே என்று அவள் அப்பாவும் மாமாவும் சொல்லிவிட, வேறு மாப்பிள்ளை வீட்டார் பெண் கேட்டு வந்தனர், இவள் அவனது விலாசத்திற்கு சென்று பார்த்த போது , அவன் வீட்டை காலி செய்துவிட்டு மதுரை போய் விட்டதாக தகவல், வேறு வழி இன்றி பெற்றோர் பார்த்த மாபிள்ளைக்கு கழுத்தை நீட்டினாள்.

இவளது கணவன் இவளுக்கு முத்தமே தருவது இல்லையாம், ஏன் என்று கேட்டேன், அதுவும் ஒரு காதல் கதையாம், அவருடைய காதலியிடம் சத்தியம் செய்து கொடுத்தாராம், உன்னை தவிர நான் யாரையும் முத்தம் செய்ய மாட்டேன் என்று, என்ன கொடுமை இது, இவளுக்கு கிடைத்த "எதிர்பாராத" முத்தத்தை தவிர வேறு முத்தம் வாழ்வில் இனி இல்லையாம்.

3/26/2009

பிரச்சினை

பிரச்சினைகளே இல்லாத மனிதன் இல்லை, என்றாலும் பிரச்சினைகளே மனிதர்களாய் மாறிவிடுவது தானே பிரச்சினை!!!!

கவிஞ்சர் வைரமுத்து அவர்களின் முத்தான இந்த வரிகள் நினைவுக்கு வருகிறது "சிலர் தான் பிள்ளைகளை பெறுகிறார்கள் பலரும் பிரச்சினைகளைத்தானே (பிள்ளைகளாய்) பெறுகிறார்கள்" என்று.

பிள்ளைகள் பலரும் பெற்றோருக்கு பிரச்சினை ஆகி விடுவது துரதிஷ்டம் தான், ஆனால் யாருக்காவது தெரிந்து தான் "பிரச்சினை பிள்ளைகளை " பெற்றுக்கொள்ள போகிறார்களா என்ன.

கடவுள் கொடுத்த வரம் என்று நினைக்கிறோமே, அப்படி ஒரு வரமோ சாபமோ தான் இந்த "பிரச்சினை பிள்ளைகளும்" போல தோன்றுகிறது.

எனக்கு தெரிந்த ஒரு வாலிபர் அவரது கலியாணத்திற்கு முன்பு இப்படி என்னிடம் சொல்லுவார் "என் அம்மாவை போல யாருமே இருக்க முடியாது, அவங்கள பிரிஞ்சு என்னால இருக்கவே முடியாது"ன்னு.

மற்றொரு நண்பர் சொல்லுவார் "என் அப்பாவை போல ஒருவரை கிடைப்பது அரிது" என்று.

இதே நண்பர்களை பல ஆண்டுகள் சென்ற பிறகு பார்த்த போது உங்கள் அம்மா நலமா, உங்கள் அப்பா நலமா என்று விசாரிக்கும் போது அவர்கள் இருவரும் அப்படியே தலை கீழாக பதில் சொன்னது எனக்கு வியப்பு ஏதும் ஏற்ப்படுத்தவில்லை. நான் எதிர் பார்த்த பதில்கள் தான் அவை, என்றாலும், ஏன் அவர்கள் இப்படி மாறி போனார்கள், தவறு என் நண்பர்கள் மீது மட்டும் தானா, என்றால், சூழ் நிலையும் ஒரு காரணம் என என்னால் ஊகிக்க முடிந்தது, மாறுவது இயல்பு என்றாலும், அன்பும் பண்பும் மாறிவிடுமா என்பது எனக்கு கேள்வி குறியாகத்தான் இருக்கிறது.

என் அப்பா சொல்லுவார், அவருடைய அம்மா என் அப்பாவிடம் சொல்லுவாராம், 'அம்மா அம்மா' என்று இப்போது சுற்றி சுற்றி வருவாய் மனைவி வந்து விட்டால் கொஞ்சம் குறைந்து விடும் அம்மாவிற்கு 50% மனைவிக்கு 50% என்று பங்கு போடவேண்டியதாகி விடும், ஒரு குழந்தை பிறந்த பின் அம்மாவிடம் இருந்தும் மனைவி இடமிருந்தும் 25% எடுத்து 50% குழந்தை மீது அன்பை செலுத்துவாய், இன்னொரு குழந்தை வந்து விட்டால் இன்னும் இருக்கும் அம்மாவின் பங்கில் 20% மனைவியிடம் இருந்து 10%, முதல் குழந்தையிடமிருந்து 20% எடுத்து பிறந்த புதிய வரவிடம் அன்பை செலுத்துவாய். இது தானே இயற்க்கை, இதை புரிந்து கொண்டு நான் தான் விட்டு கொடுத்து போக வேண்டும், என் பிள்ளை, நான் பெற்ற பிள்ளை என்னிடம் 100% அன்பை செலுத்த வேண்டும் என்று நான் எதிர் பார்ப்பது தவறாகும், என்பாராம்.

ஆனால் என் அப்பா என் பாட்டி தாத்தாவிடம் வைத்திருந்த அன்பு என்றுமே குறைந்ததில்லை, அவர்கள் இறந்த பின்பும் கூட என் தகப்பனாரும் என் தாயாரும் அவர்கள் பெற்றோரிடம் வைத்திருந்த பாசமும் மரியாதையையும் கண்டு நான் பூரித்து போவேன், வாழையடி வாழையாக நானும் என் பெற்றோரிடம் இன்றும் என்றும் அதே குறையாத பாசமும் மரியாதையும் நிலைத்திருக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

இது சாத்தியம் தானே, என்னளவில் இது சாத்தியமே.

எப்போது ஒருவருக்கு இன்னொருவர் பிரச்சினையாகிறோம் என்பதனை பற்றி யோசிக்கும் போது முதலாவதாக எனக்கு தோன்றுவது எதிர் பார்ப்பு என்பது, என் மகனிடமோ மகளிடமோ அல்லது மகனோ மகளோ என்னிடமோ ஒன்றை எதிர் பார்க்கும் போது அது கிடைக்காத பட்சத்தில் ( அன்போ பணமோ பாசமோ மரியாதையோ சொத்தோ) ஒருவருக்கொருவர் பிரச்சினையாக தெரிகிறோம், சிலரின் வாழ்க்கையில் பிரச்சினைகளே பிள்ளையாக பிறந்து விடும்போது வாழ்க்கையே நரகமாகி விடுகிறது பெற்றோர்களுக்கு.

சில வீடுகளில் பிள்ளைகளுக்கு அவருடைய அப்பாக்கள்தான் பிரச்சினை என்பார்கள், தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வருகிறார், சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குடித்தே செலவு செய்து விடுகிறார், வீட்டிற்கு வந்து பிரச்சினை செய்கிறார் என்று வேதனை படும் பிள்ளைகளும் உண்டு. இதுவும் கொடுமைதான், வீட்டில் இருப்பவர்களின் நிம்மதியை கெடுக்கும் அப்பாக்களும் உண்டு, இதற்க்கு எனக்கு தெரிந்த ஒரே வழி முடிந்தால் அவருடன் வேறு யாரையாவது வைத்து பேச செய்து குடி பழக்கத்தில் இருந்து அவரை மீட்டு எடுக்க முயற்சி செய்வது, முயற்ச்சியில் வெற்றி பெற்றால் குடும்பத்தில் மீண்டும் நிம்மதி திரும்பும், அல்லது ஊரை விட்டு வேறு ஊருக்கு குடிபெயர்ந்து அவருக்கு தெரியாமல் போய் விடுவது, வேறு என்ன வழி இருக்க முடியும் என்பது எனக்கு தெரியவில்லை.

வயதான பெற்றோர்களை ஒரு பிரச்சினையாக எண்ணி அவர்களை வயதானவர்களின் இல்லங்களில் சேர்த்து விடுவது என்பது சில பிள்ளைகளின் பிரச்சினை, சேர்க்கிறதும் சேர்கறீங்க ஒரு நல்ல இல்லத்தில் கொண்டு போய் சேர்த்து விடுங்கள், மூன்று வேளை சாப்பாடு உறங்க நல்ல இடம், தேவையான மருத்துவ வசதிகள் இருக்கிறதா என்று பார்த்து சேருங்கள் பாவம் உங்களை பெத்த கடன் அப்படியாவது அடைக்க படட்டும்.

சில பிள்ளைகள் தனது பெற்றோரை பார்த்து "உன்னை யார் என்னை பெத்துக்க சொன்னது" என்று கேட்பார்கள், இதை மட்டும் பாவம் அந்த பெற்றோர்களை பார்த்து கேட்டு விடாதீர்கள், நீங்க பண்ணற பாவத்திலேயே அப்படி கேட்பது தான் பெரிய பாவமுங்க. அவங்க மனசை வேதனை படுத்தி பார்க்கும் எண்ணம் தயவு செய்து உங்களுக்கு இருக்க வேண்டாம். எனக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது, பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை சென்னை பூங்காவிலுள்ள அரசு மருத்துவ மனையில் ஒருவரை சக்கர நாற்காலியில் வைத்து ஒரு செவிலியர் கூட்டி வந்துள்ளார், அவரை x'ray எடுக்கும் அறைக்கு முன்பு நிறுத்தி விட்டு சென்றுவிட்டார் அந்த செவிலியர், அப்போது காலை 10 இருக்கும் மாலை 5 மணிக்கு திரும்பவும் நான் அந்த பக்கம் வந்த போது அவரை அங்கேயே பார்த்தேன், அவரால் பேச முடியவில்லை, அவரிடம் சென்று "உங்களுடன் யாரும் வரவில்லையா" என்று கேட்டேன், அவரால் பேச இயலாத நிலை, கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது, ஒரு வார்ட்பாய் இடம் கையில் 10 ரூபாயை கொடுத்து இவரை எங்காவது கொண்டு படுக்க வையுங்கள் என்று சொல்லிவிட்டு, கையிலிருந்த காசில் ஒரு பன்னும் டீயும் ( அது தான் அப்போது கிடைத்தது) அவரிடம் கொடுக்க சொல்லி கொடுத்து விட்டு வார்ட்பாய் இடம் விசாரித்த போது தெரிய வந்தது அவர் தனியாகத்தான் அங்கு வந்து சேர்ந்தார் என்பது, இது போன்று லட்ச கணக்கானோர் இருக்கிறார்கள் என்றாலும், மனசு கிடந்தது தவிக்குது இவருக்கும் மகன்களும் மகள்களும் மனைவியும் இருப்பார்களே, பாவம் என்ன காரணத்தினாலோ இப்படி அநாதையாக்கப்பட்டு வேதனைகளை சந்திக்கிறார் என்று, நம் ஒருவரால் எல்லா வேதனைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு கொடுத்து விடும் சக்தி இருந்தால் எத்தனை நலமாய் இருக்கும் என்று தோன்றுகிறது.