Translate

2/07/2009

நடிகர் நாகேஷ் - அஞ்சலி


திரு நாகேஷ் அவர்களின் மறைவு கேட்டு அதிர்ச்சி அடைந்தேன், அவருக்கு அஞ்சலி செலுத்த தாமதம் ஆனதும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள சிறிது அவகாசம் தேவைப்பட்டது. அவரது திறமைக்கு நிறைய படங்கள் இருந்தாலும் மனதில் அவரை நினைத்தவுடன் கண் முன் நிற்ப்பது முதலில் "சர்வர் சுந்தரம்" தான். உணர்ச்சிகளின் உச்சிக்கு கொண்டு செல்லும் அவரது குணசித்திர நடிப்பு, இந்த படத்தில் பல சிறப்புகள் இருந்தாலும் அவரது நடன திறமையை ஒரு பாட்டில் பார்க்க முடியும், அவருக்கு நடன வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால் மைகேல் ஜாக்சன் பிரபு தேவா இருவரையும் நிச்சயம் தோற்க்கடிதிருப்பார், அத்தனை நடன திறமை கொண்டவர்.

எனது அப்பாவின் தம்பியுடன் தென்னக ரயிலில் குமாஸ்தாவாக பணி புரிந்தவர், எனது சித்தப்பா ( தற்போது உயிருடன் இல்லை ) கர்நாடக இசையில் பயிற்ச்சி பெற்றவர், நல்ல குரல் வளம் கொண்டவர், அவர்கள் அலுவலகத்தில் அமெச்சூர் நாடகங்கள் நடத்தப்படுவது உண்டு, அவ்வாறு நடத்தப்பட்ட "சுசீலா" என்ற நாடகம் பெரிய அளவில் பேசப்பட்டது அதில் திரு நாகேஷ் அவர்கள் நடித்த வேடத்திற்கு என் சித்தப்பா பின்னணி பாடியதை எங்களிடம் சொல்லுவது உண்டு.

ஒரு முறை . வி. எம். இல் திரு எஸ் . பீ. முத்துராமன் அவர்களின் இயக்கத்தில் "நிம்மதி நிம்மதி உங்கள் சாயிஸ்" என்ற தொலைக்காட்சி தொடருக்காக திரு நாகேஷ் அவர்கள் நடித்து கொண்டிருந்தபோது பார்த்தேன், ஒரு நல்ல மனிதர், வாழ்கையின் உயர்வு தாழ்வுகளை நன்கு அறிந்த பண்பட்ட மனித நேயம் மிக்கவர்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் அதிகமான பண நஷ்டத்தில் அவதிப்பட்டு நிறைய குடித்து குடிக்கு அடிமையாகி உயிரிழந்து விடுவார் என்ற நிலையில் செய்திகள் வெளிவந்தன, தெய்வாதீனமாக அவர் உடல் நலம் தேறி சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்து பின்னர் திரு கமலஹாசன் அவர்கள் கொடுத்த பட வாய்ப்பு மூலம் மீண்டும் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து மறுபடியும் சிறந்த நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்தார்.

மற்றவர்களை மகிச்சியடைய வைக்கும் நகைச்சுவை நடிகர்கள் வாழ்க்கை என்றுமே சோகத்தில் தான் இருந்து வந்துள்ளது இதற்க்கு பல நடிகர்கள் உதாரணம் சொல்லலாம், திரு என்.எஸ்.கே. அவர்கள் திரு சந்திரபாபு அவர்கள் திரு சுருளி ராஜன் திரு வி. கே. ராமசாமி அவர்கள் சார்லி சாப்ளின் இன்னும் பல பேர் வரிசையில் திரு நாகேஷின் வாழ்விலும் சோகம் விட்டு வைக்க தவறவில்லை, அவரது மகன் ஆனந்தபாபு அவரும் ஒரு நல்ல நடனமாடக்கூடியவர் நடிகர் ஆனால் அவரும் நடிப்பில் புகழ் பெறாமல் போனது துரதிஷ்டவசமானது.

ஒரு நல்ல கலைஞ்சன் என்று மக்களிடையே அங்கீகாரம் கிடைத்திருந்தாலும் அவரது நடிப்பு திறமைக்கு ஒரு அவார்டும் கொடுத்து கௌரவப்படுத்தவில்லை என்பது என்னை போன்ற அவரது ரசிகர்களின் ஆதங்கமாக இருப்பது நியாயமே.

அவர் மறைந்தாலும் அவரது புகழ் மறையாது இன்னும் வரும் தலைமுறைகளும் பார்த்து ரசிக்கும் ஒரு முன்னோடி கலைஞனாக என்றென்றும் அவர் மக்கள் மனங்களில் வாழ்வார் என்பது உறுதி.

அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

சினிமா உலகத்தில் புகழோடு வாழ்ந்து பலர் மறைந்திருந்தாலும் பெரும்பாலானோரை சினிமா உலகம் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கின்றது என்பது மறைந்திருக்கும் பெரிய உண்மை, எத்தனை பெரிய ஜாம்பவான்களையும் இருக்குமிடம் தெரியாமல் ஆக்கி விட்டது இந்த சினிமா உலகம், ஒரு காலத்தில் ஓஹோ என்று கொடி கட்டி இருந்தவர் வாழ்ந்த இடம் தெரியாமல் ஆக்கியுள்ளது இந்த சினிமா உலகம்.

ஒரு புறத்தில் பலரை மகிழ்ச்சியடைய செய்யும் இயந்திரமாக இருந்தாலும் அதன் பின்னணியில் எத்தனை பேரின் கண்ணீர் !!!!! எத்தனை பேரின் வேதனைகள் !!!!!......அது ஒரு மாய உலகம்.......சிலரை உயர தூக்கி கிழே எறிந்து விட்டிருக்கிறது சிலரை கீழிருந்து மேலே தூக்கி விட்டிருக்கிறது, விட்டில் பூச்சிகளாய் எத்தனை எத்தனை பேர் அதன் பள பளப்பில் மயங்கி விழுந்து மாண்டனர் !!!!!!!!....கதைகள் ஏராளம் உண்டு அவை சொல்லப்படாத வேதனை கதைகள் !!!!!!!!!!