Translate

1/08/2009

தண்ணீர்

பனி ரெண்டாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் மாலை நேரம், விளையாட்டு மைதானத்தில் இரண்டு மணி நேரமாக விளையாடி விட்டு சக மாணவிகளுடன் வீட்டுக்கு திரும்பும் வழியில் ஒரு சக மாணவியின் வீடு, தாகம் அதிகமாக இருந்ததால் எல்லோரும் எங்கள் பள்ளிக்கு சற்று அருகில் இருந்த அவள் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு போகலாம் என்று அந்த பெண்ணுடைய வீட்டுக்குச் சென்றோம், என்னுடன் 7 அல்லது 8 மாணவிகள் இருந்தனர், அந்த வீட்டில் இருந்த மாணவியும் என்னுடன் இருந்த மாணவிகளும் பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள், நான் மட்டும் பிராமணர் அல்லாதவள், எனவே அந்த மாணவி மற்ற எல்லோருக்கும் தண்ணீரை கொடுத்தாள், அவள் எனக்கு மட்டும் கொடுக்க மாட்டாள் என்று நான்எதிர்பார்க்கவில்லை, எனக்கு அவர்கள் எல்லோரும் பிராமணர்கள் என்பதும் நினைவில் இல்லை,

என்னை
தவிர மற்றவர்கள் அனைவரும் தண்ணீர் பருகிய பின்னர் அவளது வாசலை விட்டு வெளியே வர, நான் மட்டும் ஒன்றும் விளங்காமல் அவர்கள் பின் நடந்தேன், ஒருவரும் ஒன்றும் பேசவில்லை, எனது வீடு அதிக தொலைவில் இருந்ததால் அவள் வீட்டிலேயே தண்ணீர் அருந்தி விட்டு செல்லலாம் என்று நான் நினைத்தேன், தாகத்துடன் வீட்டிற்க்கு வந்தவுடன் தண்ணீரை நிறைய குடித்தேன், வயரும் நிரம்பிற்று, அபோதும் யோசிக்கவில்லை அந்த பெண் எனக்கு எதனால் தண்ணீர் கொடுக்காமல் விட்டு விட்டாள் என்பதை பற்றி,

சில நாட்கள் சென்றன, ஒரு சக மாணவியுடன் பேசிக்கொண்டே பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தோம், வரும் வழியில் என்னுடன் வந்த அந்த பிராமண பெண் "அன்றைக்கு உனக்கு அவள் எதனால் குடிக்க தண்ணீர் கொடுக்கவில்லை தெரியுமா"? என்றாள், எனக்கு சுத்தமாக மறந்து போய்விட்டிருந்தது அந்த சம்பவம், "யாரை பற்றி சொல்லுகிறாய்"? என்று நான் கேட்க அவள் அந்த சம்பவத்தை நினைவுபடுத்தினாள், "ஆமாம்...சொல்லு எதற்கு?" என்று நான் நினைவுபடுத்திக்கொண்டேன், அவள் தொடர்ந்தாள்... "நாங்கள் எல்லோரும் பிராமணர்கள் நீ மட்டும் பிராமண வகுப்பை சார்ந்தவள் அல்ல அதனால் தான் அன்று அவள் உனக்கு தண்ணீர் கொடுக்கவில்லை" என்றாள்.

இந்த சம்பவம் அன்று முதல் எனது நினைவில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகி நிற்கின்றது....இன்னும் எனது இது போன்ற அனுபவங்களை இங்கு நான் தொடர்ந்து எழுதுவேன் .........

தொடரும்
உண்மைகள்.....