Translate

1/14/2009

தொடரும் நினைவுகள்......நினைவிருக்கும் வரைஎனக்கு பதி மூன்று வயதிருக்கும், அப்போது இருந்த பேஷன் தான் இப்போ மறுபடியும் வந்திருக்கு, கொஞ்சம் வித்தியாசமாக , நீண்ட பாவடை, பாவாடையில் இருக்கும் ஏதேனும் ஒரு நிறத்தில் மேற்சட்டை, பட்டன்கள் பின்புறம் இருக்கும். நிறைய நிறங்களில் பாவடை சட்டை விரும்பும்போதெல்லாம் அணிந்து கொள்ள மிகவும் ஆசை, பட்டு பாவடை ஜிமிக்கி, கழுத்தில் அழகான டாலர் வைத்த நெஞ்சுவரை தொங்கும் செயின், குதி உயர்ந்த காலணி, குதி உயராத காலணி, கையில் தங்க வளையல்,கண்ணாடி வளையல், காலுக்கு மெல்லிய தங்க கொலுசு, விரல்களுக்கு வங்கி மோதிரம், இப்படியெல்லாம் ஆசைகள், ஆனால் மேற் குறிப்பிட்ட ஒன்று கூட கிடைக்கவில்லை எனபது வருத்தமான செய்தி,

என் அப்பாவிடம் நான் ஒரு நாள் கேட்டேன் " நான் தவமிருந்து பெற்ற உங்கள் குழந்தை ஆயிற்றே, எனக்கு நன்றாக உடுத்தி அழகு பார்க்கவே உங்களுக்கு விருப்பம் இல்லையா?" என்று, அதற்க்கு என் அப்பா சொல்வார், " அதிக விருப்பம் இருக்கிறது, பணம் தான் இல்லை". என்பார்.

எனக்கு பத்தொன்பது வயதிருக்கும் அப்போது, என் அப்பாவுடன் சினிமாவிற்கு போவதுண்டு, அப்படி நாங்கள் பார்த்த சினிமா "தில்லான மோகனாம்பாள்" முதல் தமிழ் படம் நானும் என் அப்பாவும் புரசைவாக்கம் அருகில் அப்போது உமா தியேட்டர் இருந்தது, இப்போது அந்த இடத்தில் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் உள்ளது, நங்கநல்லூர் இருந்து உமா தியேட்டர் ( பஸ்ஸில் ) சென்று அந்த படத்தை பார்த்து விட்டு வந்தோம், வரும் வழி நெடுக மனம் கிடந்து தவியாய் தவித்தது.....வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு, படத்தை அத்தனை ரசித்து பார்த்துவிட்டு வந்தோம்,


என் அப்பாவிடம் சினிமாவை பற்றி நிறைய கேள்விகள் கேட்டேன், அவரும் சளைக்காமல் பதில் சொல்லுவார்., டெக்னிகல் ஆகவும் சொல்லித்தருவார். அவருடன் படம் பார்ப்பதில் தான் எனக்கு மன நிறைவு ஏற்ப்படும். "அவள் ஒரு தொடர் கதை", "அவளுக்கென்று ஒரு மனம்"., "ராமு", "காவியத்தலைவி", "டீச்சரம்மா", பாலைவன ரோஜா , அவர்கள், நிழல் நிஜமாகிறது , சித்தி, வஞ்சிக்கோட்டை வாலிபன், நீர் குமிழி, வெண்ணிற ஆடை, ஆயிரத்தில் ஒருவன், "நெஞ்சத்தை கிள்ளாதே", இன்னும் நிறைய படங்கள்....

எனக்கு பழைய படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் பழைய சினிமா திரையரங்கில் வந்தவுடன் என் அப்பாவிடம் சொல்லிவிடுவேன் இந்த வார கடைசியில் கூட்டம் குறைந்து விடும் நாம் நிச்சயம் பார்த்தே ஆகவேண்டும் என்று, அருகில் இருந்த திரையரங்கில் வேலை செய்து வந்த ஒருவனை என் அப்பாவிற்கு பழக்கம், அவனிடம் என் அப்பா முன்னாடியே சொல்லி வைத்து விடுவார், பழைய படம் என்பதால் சில படங்களை வாரம் முழுவதும் ஓட்ட முடியாமல் கூட்டம் குறைவாகி விடும் அப்போது, அந்த பையன் வந்து என் அப்பாவிடம் சொல்லிவிடுவான், இந்த படம் ஒரு வாரம் ஓடாது அதனால் சீக்கிரம் வந்து பார்த்து விடுங்கள் என்று, இப்படி நானும் என் அப்பாவும் சேர்ந்து பார்த்த பழைய திரைப்படங்களின் எண்ணிக்கை சொல்லி முடியாது, திரையரங்கு வீட்டிலிருந்து மிகவும் அருகாமையில் இருந்தது எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

மதராஸ் சிட்டியில் எங்கேயெல்லாம் நல்ல சினிமா வருகிறதோ அங்கேயெல்லாம் என்னை கூட்டி கொண்டு போவார் என் அப்பா. பள்ளிக்கு பங்க் என்பதற்கே இடமிருக்காது, ஏனென்றால் ஆறிலிருந்து ஒன்பது வரை உள்ள காட்சிக்குத்தான் பெரும்பாலும் அழைத்துச் செல்வார். வீட்டருகிலேயே பார்ப்பது என்றாலும் அதே காட்சிக்குத்தான் பெரும்பாலும் போவோம்.

"காவியத்தலைவியில்" சவுகார் ஜானகியம்மாவின் நடிப்பு உச்சகட்ட உணர்ச்சிகளை கொட்டி நடித்து நம்மை கலங்க வைக்கும் படம், "அவள் ஒரு தொடர் கதை" படம் புதியவர்கள் நடித்த வெற்றி படம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் என்பதால் பார்த்த படம், சுஜாதா அறிமுகமான படம், தொடர்ந்து "அன்னகிளி" இளையராஜாவை அறிமுகம் செய்து வைத்த படம் என்பதால் பார்த்து ரசித்தோம்,

ஒவ்வொரு படத்தை பார்த்த பின் வீட்டில் அதை பற்றிய விமர்சனம் நடக்கும், என் அப்பாவும் அவருடைய சகோதரரும் என் அம்மாவும் கர்நாடக இசை படித்ததுடன் நன்றாக படுபவர்கள், சுர ஞானம் இருப்பதால் மெட்டுக்களை அலசி ஆராய்ந்து கொடிருப்பர்கள், நான் சுவாரசியமாக கேட்டு கொண்டு இருப்பேன்.

இதில் ஒரு காமெடி என்னவென்றால் சில சினிமாக்களை பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது, (இரவு நேர காட்சிகள் என்பதால் வீட்டின் அருகே இருந்த சினிமா தியேட்டேருக்குத்தான் போவோம் ) வீதி முழுவதும் அமைதியாக இருக்கும், யோசனை முழுவதும் பார்த்து விட்டு வந்த படதினுள்ளே வாழ்ந்து கொண்டிருக்கும், சாப்பிட்டு முடித்து படுக்கையில் படுத்த பின்னரும் சினிமாவின் காட்சிகள் தான் கண்ணிலும் நினைவிலும் இருக்கும், வீட்டில் படுத்திருப்பதும் சாப்பிட்டது சுத்தமாக மறந்து விடும், இன்று நினைத்தால் வியப்பாக உள்ளது, ( இந்த வியப்பை பற்றி பின்னால் எழுதுவேன்) ,

"நெஞ்சத்தை கிள்ளாதே" படம் பார்த்து விட்டு வந்து என் அப்பா மிகவும் ரசித்த காட்சிகளை சொல்லி கொண்டிருந்தார், அதை கேட்டு கொண்டிருந்த ஒரு சில அண்டை வீட்டு பெண்கள் "அந்த படத்தை போய் பார்த்துட்டு வந்து இருக்கீங்களே, அசிங்கம்" என்றனர், எனக்கும் என் அப்பாவிற்கும் ஒரே வியப்பு, "ஏன் அந்த படம் என்ன அசிங்கம்" என்றார், அங்கிருந்த பெண்களில் ஒருத்தி சொன்னாள் " நாங்கள் யாரும் அந்த படம் பார்க்க போக மாட்டோம் , நெஞ்சத்த கிள்ளறதா, எவ்வளவு அசிங்கமான வார்த்தை அது" என்றனர்,

அத்தனை படிப்பறிவு போதாத நாடு நம்ம நாடு, என் அப்பா அவர்களிடம் அதனுடைய அர்த்தத்தை எடுத்து சொன்னார், அப்போதும் அவர்களுக்கு என் அப்பாவின் பதில் திருப்தி அளிக்கவில்லை, இப்படி ரசிகர் கூட்டம் இருக்கும் போது, சில பேர் நம்ம ஊரு சினிமா தரம் உலக சினிமா அளவு உயரணும் என்று பேசிகொண்டிருகிறார்கள், உலக தரத்திற்கு சினிமாவை உயர்த்த வேண்டும் என்று யாருக்கு தான் ஆசை இல்லை, உள்ளூரில் பொருள் அறிந்து கொள்ளவே ஆடியன்ஸ் இல்ல உலக தரத்திற்கு மட்டும் ஒரு தயாரிப்பாளர் படம் எடுப்பார் என்றால் நிச்சயம் எடுக்கலாம்,.

நிறைய புத்தகம் படிக்க ஆசை, அப்போது எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்து விட்டு கல்லூரியில் சேர இடைவெளி இருந்த சமயம், புத்தகம் நிறைய படிக்க கிடைத்த நல்ல சந்தர்ப்பம், வீட்டின் அருகே புத்தக லைப்ரரி கிடையாது, தெரிந்தவர்களிடமெல்லாம் புத்தகம் இருக்குமா என்று கேட்டு பார்த்த போது, அருகில் இருந்த ஒருவரிடம் "கல்கி" யில் தொடராக "பொன்னியின் செல்வன்" வெளி வந்த போது சேமித்து வைத்து ஐந்து பாகங்களும் பயிண்டு செய்து வைத்திருந்தது கிடைத்தது, ஆஹா !!! அருமை, படித்து முடிக்கும் வரை தூக்கம் பசி வேறு எந்த நடவடிக்கைகளும் கிடையாது,

அவர் நம்மையும் சம்வம் நடக்குமிடத்திற்கு கூட்டிச்செல்வார், நாம் கதையை நேரில் பார்ப்பது போல் பரம திருப்தி ஏற்ப்படும் , அப்படியொரு எழுத்தை இனி எழுத ஒரு "கல்கி" பிறந்து வரவேண்டும்,

சாண்டில்யனின் "கடல் புறா" , இந்துமதி, சிவசங்கரி, வாஸந்தி இன்னும் சிலரோடு வாழ்ந்தேன் என்றே சொல்வேன் அப்படியொரு அருமையான கதைகள்.